Friday, 13 December 2024

மழை ரிஹ்லா –வேணுவனத்தில் ஒரு பகல்

 திருநெல்வேலி மாவட்டத்தை மூன்றாக வகிர்ந்த பிறகும் இன்னும் திருநெல்வேலி மாவட்டக்காரராகவே நீடிப்பவர் ஏர்வாடி காஜா காதர்மீறான் பந்தே நவாஸ்.

வருவாய் நிர்வாக அடிப்படையில் நான் தூத்துக்குடி மாவட்டத்துக்காரன் என்றாலும் பிறந்ததோ பிரிக்கப்படாத அகன்ற தாம்பாள திருநெல்வேலிச் சீமையில்தான். நிர்வாகப்பிரிவினைக்கு அப்பால் உணர்வாலும் நிலத்தாலும் தூத்துக்குடி,தென்காசி மாவட்டத்துக்காரர்கள் நெல்லையான்கள்தான்.

காயல்பட்டினம்/ஏர்வாடி வாசிகளுக்குமருத்துவ தேவைகளுக்கான அல்லது நெடும் பயணங்களுக்கான இடைவழி நகரமாகவே இருந்து வந்த திருநெல்வேலி நகரத்தை குறுக்கும் நெடுக்குமாக காலாற வேண்டும் என்ற அவா திடுமென தோன்ற எப்போதும் பயணத்திற்கு பின் நிற்காத  ஏர்வாடி காஜா காதர்மீறான் பந்தே நவாஸை தொடர்பு கொண்டேன். இரண்டு நாட்களுக்கு முன்னதாக தகவல் சொல்லுங்கள் காக்கா என்றார். இப்படியான திடீர் பயணங்கள் செய்யும் திட்டம் ரிஹ்லாவின் கையிலிருப்பதால் இங்கிருந்து தொடங்குவோம் என பேசிக் கொண்டோம்.

பாளையங்கோட்டை புனித சேவியர் கல்லூரி வளாக நாட்டார் வழக்காற்றியல் துறைக்கு போவது உட்பட நான்கைந்து சந்திப்புகள்  கைவசமிருந்தது.

ஒற்றை நாள் ரிஹ்லா என பெயர் வைக்கலாமா? என ஏர்வாடியாரிடம் கேட்ட போது 12/12/2024 வியாழனன்று கனமழை எச்சரிக்கை விடப்பட்டிருப்பதால் மழை ரிஹ்லா என்றழைப்போம் என அவர் பகர அவ்வாறே முடிவெடுக்கப்பட்டது.

வியாழன் காலை வீட்டிலிருந்து கிளம்பும்போதே மழை முன்னுரை கூறத் தொடங்கியிருந்தது. கடையில் காலை பசியாறை வாங்கிக் கொண்டிருக்கும்போது இரண்டாம் கியருக்கு(கியரை பல்லிணை எனப் தமிழாக்கி அடிவாங்க அணியமாக இல்லை) மாறியிருந்தது. தயக்கம் உள்ளில் கீற்றடித்தது. முன் வைத்த தலையை பின் வைப்பதில்லை. மழைக்கு ஏன்அஞ்ச? அதுவும் நம்மை மாதிரி இன்னொரு படைப்பு. அதன் கடிவாளத்தைப் பிடிக்குமாறு அதையும் என்னையும் படைத்தவனிடமே கேட்போம் எனத் தோன்றியது. ஈற்றில் அங்ஙனமே நடந்தேறியது.

திருநெல்வேலி சந்திப்பிற்கு செல்லும் காலை ஏழரை மணி பனங்காட்டு எக்ஸ்பிரஸ்ஸிலும் இதுதான் நிலை.உள்ளும் வெளியிலுமாக மழை. ஏர்வாடியார் எந்ந நிலையில் இருக்கிறார் என்றறிய விளித்தபோது தலைவர்  பாதி தொலைவு வந்து விட்டார். நிலையத்தின் தகரத்தலையில் மழையின் பெருந்தாளம். வீறாப்புக்கு புறப்பட்டு வந்து விட்டாலும் எப்படி வெளியே போவது என்ற சிறிய கேள்வி. குடையும் மழையங்கியும் கையிலில்லை.

இது எப்படியிருந்தாலும் நம்ம ஊரு இது.  புரிந்து கொண்ட கூட்டாளனாய் மழை சற்று நகர்ந்து இடந்தரும். அப்படியே போக முடியலேன்னா காரமும் மதுரமும் காஃபியுமாக அடித்து விட்டு அடுத்த வண்டியில் ஊருக்கு திரும்பலாம் என்ற நினைப்பும் நிதானத்தைத் தந்தது.

ஒன்பதரை மணியளவில் ஏர்வாடியார் நிலையம் வந்து விட்டார். மழையங்கி இருந்தால் போகலாம் என கடையில் போய்  விலை கேட்டால் கழுமரமாகி ஆயிரத்தை தொட்டு நிற்கிறது.. என்னருமை மழையை ஆயிரங்கொடுத்தா தொலைவில் நிறுத்துவது?

தாமிரபரணியில் குளிப்பதற்கென  எடுத்து வந்திருந்த  துவாலையை தலையில் சுற்றிக் கொண்டு  பைக்கில் புறப்பட்டோம். ஏர்வாடியார் மழைக்கான மேலங்கி மட்டும் அணிந்திருந்தார்.

எங்கள் உலா பட்டியலின்படி கட்டுமானத்துறை தொழிலதிபரும் பிரமிள் நூலகத்தின் நிறுவனருமான மயன் ரமேஷ் அவர்களை சந்திக்கச் சென்றோம். பெரு நிறுவனமொன்றை கட்டி எழுப்பி வெற்றிகரமாக இயங்கி வரும் தன்னைப்போன்ற மனிதர்களில் மயன் ரமேஷ் தனித்துவமிக்கவர். இலக்கியத்தின் ஆழ்ந்த ஈடுபாடும் தொடர் வாசிப்பும் சமூக நல்லிணக்க கண்ணோட்டமும் ஒருங்கே அமையப்பெற்ற மனிதர். நீண்ட கால  நண்பர் ஆர்.ஆர்.சீனிவாசன் வழியாக இவர் எனக்கு அறிமுகமானார்.

மயன் ரமேஷை சந்தித்து விட்டு வெளியேறும்போது ஏர்வாடியாரின் குடும்ப மருத்துவரான அக்யூஹீலர் ஒருவரின் மருத்துவகம் தென்பட்டது.மருத்துவர் கெட்டிக்காரர் என்றும் தான் இவரிடம் எதிர்பார்க்காவிதத்தில் நல்ல குணமடைந்திருப்பதாகவும் ஏர்வாடியார் நம்பிக்கையூட்டினார் . என் நண்பர்கள் அக்யூஹீலர்களாக உள்லனர். அவர்கள் மூலம் நடந்த பல வெற்றிக்கதைகளை கேட்டுள்ளேன். எனவே துணிவை உண்டாக்கிக் கொண்டு எனது நீண்ட நாள் சிக்கலொன்றிற்காக அவரிடம் காட்டியுள்ளேன். தினசரி  மருந்துகளை விடச்சொல்லியிருக்கிறார்.சில வாழ்வியல் மாற்றங்களையும் பரிந்துரைத்திருக்கிறார். பார்ப்போம். வல்லோனை துணையாக்கி முயல்கிறேன். பயணங்கள் இது போல புதிய வாயில்களை எதிர்பாராவிதமாக திறந்திடும்.

பட்டியலில் உள்ள தலையாய இடங்களில் ஒன்றான பிரமிள் நூலகத்திற்கு செல்லலாம் எனப் பார்த்தால் அது சற்றுத் தொலைவிருக்கிறது. அத்தொலைவிற்கு  மழை தடையாக வந்து நின்றது. எனவே அடுத்த இலக்குகளை நோக்கி நகரத் தீர்மானித்தோம்.

தமிழகத்தில் அறியப்பட்ட கவிஞர்களில் ஒரு சிலரைத்தவிர்த்து பெரும்பாலானவர்கள் அரசியல் நீக்கம் செய்யப்பட்டவர்கள். சிவராமலிங்கம்,தருமு சிவராம் என்றபிரமிள், இலங்கையின் திருகோணமலையில் பிறந்திருந்தாலும் தமிழக அரசியல் போக்குகளில் அவருடைய கருத்துக்களை துணிவாக கவிதைக்கு வெளியே பேசியவர். கவிதையை கலையை மொத்த மானுடத்திற்குமானது என ஆழ்ந்து நம்பியவர்.

குலவணிகர்புரத்திலுள்ள காதர் அவுலியா ஜுமுஆ பள்ளிவாயிலில் தொழுதோம்.அப்பள்ளி வளாகத்தில்தான் சதக்கத்துல்லாஹ் அப்பா என்ற சதக்கத்துல்லாஹில் காஹிரி வலியுல்லாஹ்வின் மகனார் அடங்கப்பெற்றுள்ளார்கள்.

உணவருந்தி விட்டு பாளையங்கோட்டை புனித சேவியர் கல்லூரி வளாகத்திற்கு சென்றோம்.. தொடர் அலுவல்களுக்கு நடுவிலும் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையத்தில்  பேராசிரியர் கார்மேகம் எங்களுக்காகக் காத்திருந்தார். மையம் உண்மையிலேயே நாட்டாராகத்தான் இருந்தது. கல்லூரி துறையொன்றிற்குள் நுழைந்த மாதிரி இல்லாமல் சிறிய கலைக்கூடத்திற்குள் நுழைந்த உணர்வு. மூங்கில்,உலோகம்,மண் போன்றவற்றினால் செய்யப்பட்ட பதுமைகளுடன் கோட்டோவியங்களும் பொருட்களும் இடம் பெற்றிருந்தன.



சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் வரலாற்றுத்துறைப் பேராசிரியரும் வாசிப்பும் தேடலும் கொண்ட நண்பர் சாகுல் ஹமீது மூலமாக  பேராசிரியர் கார்மேகம் அறிமுகம். இனிய மனிதர். நல்லவர்கள் மேலும் நலவுகளையே கொண்டு வந்து இணைப்பார்கள்.



சில மணித்துளிகள் மட்டுமே உரையாடக் கிடைத்தது.அங்குள்ள விற்பனையகத்தில் பண்பாட்டு வேர்களைத் தேடி,ஈர்ப்பு விசை—பயன்பாட்டு நாட்டுப்புறவியல் ஆய்வுகள்,வழக்காறுகள் காட்டும் வாழ்வியல் முதலிய நூல்களை வாங்கிக் கொண்டோம். திருநெல்வேலிச் சீமையின் நாட்டாரியல் வழக்காற்றுத்தொகுப்பிற்காகவும் அங்கு சென்றோம். ஆனால் இதுவரை அப்படி தொகுக்கப்படவில்லை என சொன்னார்கள்.

பாளையங்கோட்டை புனித சேவியர் கல்லூரியின் நாட்டாரியல் வழக்காற்றியல் துறை புகழும் தனித்துவமும் பெற்ற துறை. இத்துறையிலிருந்து நெல்லைச்சீமையின் வழக்காறுகள்,தொன்மங்கள்,வாய்மொழி மரபுகள் தொகுக்கப்பட்டால் தேடுபவர்களுக்கு உதவிகரமாக இருக்கும்.

அடுத்ததாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தின் அருகிலுள்ள செயின்ட் மார்க் சாலையில் அமைந்திருக்கும் திருநெல்வேலி மாவட்ட அருங்காட்சியகத்திற்கு சென்றோம். ஆதிச்சநல்லூரின் விடயங்கள் கொஞ்சமிருந்தன. பாண்டியர்களின் வணிகத்தலைநகரமானகொற்கையில் கிடைத்தவைகள் எதுவுமில்லை. கட்டபொம்மனின் சகோதரர் ஊமைத்துரையை சிறைப்பிடித்து ஆங்கிலேயர் அடைத்து வைத்திருந்த இடம் என ஓர் அறை உள்ளது.காணொளிக்காட்சி காண்பிக்கப்படும் என்ற அறிவிப்புப் பலகை வேறு. உள்ளே விளக்கவோ வழிகாட்டவோ ஒருவருமில்லை. காணிப்பழங்குடிகளின் பண்பாட்டு மாதிரிகள் மனங்கவருகின்றன.நுழைவுச்சீட்டு வழங்குமிடத்தில் மட்டும் மூவர் அமர்ந்து கதைத்துக் கொண்டிருந்தனர். இந்த அருங்காட்சியகம் தெருவில் வெளிப்பார்வைக்கு உள்ளொடுங்கி கிடக்கிறது.ஆர்வலர்கள் மட்டுமே தேடி வரவியலும்.

எட்டாம் நூற்றாண்டு பாண்டியரின் அற்புத கருங்கல் கோட்டையின் கிழக்கு வாயிலைத்தான் மாவட்ட அருங்காட்சியகமாக்கியுள்ளனர்.  கூரைகளில் மீன் சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது.திறந்த வெளி அரங்கொன்று அருங்காட்சியக வளாகத்திலேயே இருக்கிறது. அதற்கான பயன்பாட்டுக்கட்டணம் என தனியாகக் கிடையாது. அலுவலக நேரங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம் என அங்குள்ளவர்கள் தெரிவித்தனர்.

சிற்பத்தோட்டத்தை உள்ளடக்கிய செப்பு போன்ற இடம் செம்மையை  பூசிக்கொண்டு நிற்கிறது.மாவட்டத்தின் சிறப்புக்கேற்ப  அருங்காட்சியகமில்லை. ஒருவேளை புதியதாக உருவாக்கப்படும் பொருநை அருங்காட்சியகத்தில் நாம் எதிர்பார்க்கக்கூடியவை இடம் பெறலாம் என நம்புவோமாக.

மாவட்ட தொல்லியல் துறை அலுவலகம் பாளையங்கோட்டையிலேயே இருக்கிறது.அதைக்காண இன்னொரு நேரமெடுத்து வர வேண்டும் இன்ஷா அல்லாஹ்.

பயண காலத்தை இரண்டு மணி நேரத்திற்கு முன்னரே முடித்துக்கொள்வோம் என தீர்மானித்து இறுதிச் சுற்றாக திருநெல்வேலி நகரத்தின் முன்னொட்டான ஹலுவாவைத் தேடி சென்றோம். இருட்டுக்கடை அலுவா. அலுஆ என்ற அறபிச்சொல்லின் மரூஉதான் அல்வா,அல்வாவாகியிருக்கிறது.

திருநெல்வேலி சந்திப்பிலும்,நகரத்திலும் அலுவா விற்காதவன் பாவி என்னும் அளவிற்கு ‘சாந்தி,நியூ சாந்தி,நெல்லை சாந்தி’ஹலுவாக்கடைகள்.முதல் ‘சாந்தி’ இன்னும் வரைக்கும் சாந்தியடைந்திருக்க மாட்டாள் போலிருக்கிறது.ஆனால் சந்திப்பில் முதல் சாந்திக்கடையை வாடிக்கையாளர்கள் சரியாக தேடிப்போய் பிடித்த இனிப்பு,கார வகைகளையும் வாங்கிக் கொள்கிறார்கள்.

திருநெல்வேலி நகரத்திலுள்ள ‘இருட்டுக்கடை அலுவா’தான் திருநெல்வேலி அலுவாவிற்கு தொடக்கமாம்.1930களில் இராஜஸ்தானிலிருந்து வந்தவர்கள்தான் இதைத் தொடங்கியிருக்கின்றனர்.

உண்மையான இருட்டுக்கடை ஹலுவாவின் சுவைக்கு இரண்டு காரணங்களைச் சொல்கிறார்கள். முதலாவது அலுவாவிற்கான மூலப்பொருளான கோதுமை மாவை இவர்கள் கையால்தான் திரிப்பதோடு அலுவாவையும் கையால்தான் சமைக்கிறார்கள்.பொறிகளை பயன்படுத்துவதில்லை. இரண்டாவது காரணம், இதன் உருவாக்கத்துக்கு தாமிரபரணி நீரை பயன்படுத்துவது..

மேற்சொன்ன இரு காரணங்களுமே உண்மையாகவிருக்க வாய்ப்புகள் கூடுதல். திருநெல்வேலி அலுவாவின் சுவையில் தமிழகத்தின் வேறெந்த மாவட்டத்திலும் நான் சாப்பிடக் கிடைத்ததில்லை. நாங்கள் போன சமயம் பிற்பகல் மூன்றரையளவில் இருக்கும். எங்களுக்கு உண்மையான இருட்டுக்கடை அல்வாவை உள்ளூர்க்காரரொருவர் உடன் வந்து அடையாளங்காட்டினார். கிருஷ்ணாசிங் சுவீட் ஸ்டால்(இருட்டுக்கடை) மூடியிருந்தது.அதிலுள்ள அறிவிப்பு பலகையில் “கடை மாலை ஐந்தரை மணிக்கு திறக்கப்படும்.அதுவரை அருகிலுள்ள எங்கள் சார்பு நிறுவனமான விசாகம் சுவீட்சில் எங்கள் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்’ என்றிருந்தது.

கொஞ்சம் அலுவாவும் மிளகு காராபூந்தி,மிளகு காரச்சேவும் வாங்கிக் கொண்டோம். இவற்றில்  கரித்து திகட்டும் \ இனிப்பும், நெய் சேர்க்கையும்(எண்ணெய்) இல்லை.கணக்காக மென்மையாக வாசனையுடன் தரமாக உள்ளன.நல்ல நினைவை உண்டாக்கும். திருநெல்வேலியின் தனித்துவங்களின் ஒன்றினை பெற்ற நிறைவில் ஊருக்குக் கிளம்பினோம்.




எழுத்தை நிறைவுக்கு கொண்டு வர வேண்டுமே என்பதால் ‘கிளம்பினோம்’ என்ற சொல்லை பயன்படுத்த வேண்டி வந்தது. உள்ளபடி இங்கிருந்து கிளம்புவது என்ற சொல்லுக்கு வேலையில்லை.காரணம் இது சொந்த திணை அல்லவா?

மழைக்குள் இருக்கும் ஒரு பயணத்திற்காக விருப்பப்பட்டது  2015சென்னை வெள்ளப்பேரழிவு ஏறபடும் வரைக்கும்தான்.பிறந்ததிலிருந்து வாழ்வு இனிமையின்  ஒரங்கமாக இருந்த விண் மழை இன்று வரை அச்சமூட்டுகிறது.

திருநெல்வேலி சுற்றலுக்கு கிளம்பும்போது தொடங்கிய மழை ஊருக்கு வண்டியேறும் வரைக்கும் ஊர் வந்த பின்னரும் பொழிந்து கொண்டுதானிருந்தது..பதினோரு மணி நேரம் மழைக்குள்ளும் ஈரத்துக்குள்ளும்தான் இருந்துள்ளோம்.உள்ளங்கி,வெளியங்கி எல்லாம் ஈர மயம்.கைகளிலும் கால்களிலும் வெள்ளை பூத்த ஒரு சடலக்களை.. என் வாழ்வில் இவ்வளவு நேரம் மழை ஈரத்துக்குள் இருந்ததில்லை. விரும்பியது நடப்பதற்கும் ஒரு விலை இல்லாமல் இல்லையே.காய்ச்சலும் நீர் ஒவ்வாமையும் இருமலும் உறுதி எனத் தோன்றியது. இறை வேட்டல் பலன் தராமல் போகாது.அன்றிரவு  முழுமையாகக் கழிந்து வைகறை அதன் முழுமையுடன்  புலர்ந்தது.உடல் முழு நலம். இணக்கத்தைக்கொண்டு மழை ஏவப்பட்டிருக்கும்போது ஏவலை மீறும் துணிவு அடியானுக்கு வராதல்லவா?.

இப்பதிவை எழுதி கொண்டிருக்கும் சமயம்  தாமிரபரணியில் 94,000 கன அடி அளவிற்கு தண்ணீர் அணைகளிலிருந்து திறக்கப்பட்டுள்ளது. ஆயிரம் மத யானைகளின் அணிவகுப்பைப்போல தாமிரபரணி இரு மருங்குகளையும் தொட்டுக் கொண்டுப் புரள்கிறது. கலியாவூர் முதல் புன்னக்காயல்வரையிலான ஆற்றின் கரையோர ஊரார்களை  வீடுகளிலிருந்து  பாதுகாப்புக்கருதி வெளியேற்றிக் கொண்டிருக்கிறது மாவட்ட நிர்வாகம்.இழப்பையும் சேதத்தையும் அச்சத்தையும் விட்டு இறைவன் நம்மனைவரையும் காக்கட்டும்.

 

#மழைரிஹ்லா #RAINRIHLA #VENUVANAM #வேணுவனம்

No comments:

Post a Comment