கேரள மாநிலம் கொண்டோட்டியிலுள்ள மாப்பிளா கலா அகாடமியின் மொக்ரால் கிளையின் சார்பாக மொக்ரால் பள்ளிக்கூடத்தில் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். ஞாயிற்றுக்கிழமை திருமண நிகழ்வுகளும் பொது நிகழ்வுகளும் நிறைந்த நாள் என்ற போதிலும் தொலைவிலிருந்து வரும் எங்களுக்காக துரித ஏற்பாடொன்றைச் செய்திருந்தனர்.
காசர்கோடு மாவட்டம் என்பது நதிகளும் கோட்டைகளும் மொழிகளும் நிறைந்த பகுதியாகும். சப்த பாஷா சங்கம பூமி என்றழைக்கப்படும் அழகிய மாவட்டம். ஏழு மொழிகள் சங்கமிக்கும் நிலப்பகுதி என்றழைக்கப்பட்டாலும் பத்திற்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன. இப்பகுதியின் மலையாள பேச்சு வழக்கு முற்றிலும் வேறுபட்டது. உன்னிப்பாக கவனித்தால் கேரளத்தின் மற்ற பகுதிகளில் இல்லாத தமிழ்ச் சொற்கள் சிதைந்தும் மருவியும் பேசப்படுவதை உணர முடியும்.
காசர்கோடு மாவட்டத்திலுள்ள மொக்ரால் கிராமம் மாப்பிள்ளை இலக்கியத்தின் விளைநிலம். திருமணம், பொழுது போக்கு போன்ற நிகழ்ச்சிகளின் தாளங்கள் இவ்வூர் மக்களின் உணர்வுகளில் ஒன்றியதாக உள்ளது. பாட்டுக் கூட்டம் இல்லாமல் இவ்வூர் இல்லை எனலாம். இக்காரணத்தால் மொக்ரால் "இஸல் கிராமம்" என்று அழைக்கபப்டுகிறது. தமிழின் 'இயல் ' என்பதே 'இஸல்' என்று மாறியதாக மாப்பிள்ளைப் பாட்டு ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மாப்பிள்ளைப் பாடல்களில் பெரும்பாலனவை சமயம் சார்ந்ததாக இருக்க மொக்ராலின் பாடல்கள் திருமணம், விளையாட்டு போன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்ததாகவும் உள்ளன.
பாட்டுக்கூட்ட நிகழ்ச்சிகளில் தமிழ்ப் பாடல்கள் பாடப்படும் வழமை இங்கு நெடுங்காலம் நடைமுறையில் இருந்தது. தமிழகத்திலிருந்து சென்ற சூஃபி ஃபக்கீர்கள் வழியாக முஸ்லிம் தமிழ்ப் பாடல்கள் செல்வாக்கு பெற்றன. இங்கு நடைபெற்றக் கவியரங்குகளில் தமிழகத்திலிருந்து சென்ற புலவர்கள் பலர் பாடல்களை அரங்கேற்றினர். கோட்டாற்றுப் புலவர்கள் மலைபாரில் பாட்டுப் பாடச் செல்வது குறித்த செய்திகள் செவிவழிச் செய்தியாக உள்ளது. அதில் மொக்ராலும் அடங்கும்.
மொக்ராலின் முக்கிய கவிஞர்களாக ஸாவுக்கார் குஞ்ஞி ஃபகீஹ் என்பவரும் அவருடைய மகன் பாலாமுப்னு ஃபகீஹும் விளங்குகின்றனர். முஸ்லிம் தமிழ்ப் புலவர்களை நாட்கணக்கில் தங்க வைத்து போற்றிய பெருமை இவர்களுக்கு உண்டு.
மங்களூருக்கு செல்லும் பாதையில் மொக்ரால் இருப்பதால் வணிகத்திற்காகச் செல்பவர்களுக்கும் ஃபக்கீர்களுக்கும் வழித்தங்கலாகவும் இவ்வூர் இருந்தது. மாப்பிள்ளை இலக்கியத்தின் முடிசூடா மனனராகத் திகழ்ந்த மகாகவி மோயின் குட்டி வைத்தியர் பாடல்களை அரங்கேற்றுவதற்காக பலதடவை இங்கு வந்துள்ளார். இங்கு தங்கிய காலங்களில் கிடைத்த தமிழ்ப் புலவர்களின் தொடர்பும் இவரின் பாடல்களின் தமிழ்ச் செல்வாக்கிற்குக் காரணமாக உள்ளது எனலாம்.
ஏராளமான கவிஞர்களை வாரி வழங்கிய கிராமமாக இவ்வூர் உள்ளது. இன்றும் பாடகர்கள் நிறைந்த பகுதியாகவே உள்ளது. சூஃபிக் கவிஞரான இச்ச மஸ்தான் என்றழைக்கப்படும் இச்ச அப்துல் காதர் மஸ்தான் மொக்ராலின் மறுகரையிலுள்ள மொக்ரால் புத்தூர் எனும் ஊரைச் சார்ந்தவர் என்பது ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
கண்ணூர் வளப்பட்டினத்தில் பழைய பொருட்கள் வணிகம் செய்துக் கொண்டிருந்த இச்ச மஸ்தான் அவர்களுக்கு காயல்பட்டினத்தின் உமர் அல் காஹிரி அவர்கள் இயற்றிய பிரபலமான அல்லஃபல் அலிஃப் பைத்தின் ஓலைச்சுவடி கிடைத்திருக்கிறது. அந்த பாடலின் சிறப்புக்களை அன்று கண்ணூரில் வாழ்ந்திருந்த மாப்பிள்ளை லெப்பை ஆலிமவர்கள் இச்ச மஸ்தானுக்கு விளக்கியதன் தொடர்ச்சியாக இச்ச மஸ்தான் மேற்கல்விக்கு காயல்பட்டினம் ஸாஹிபு அப்பா தைக்காவில் வந்து தங்கிப் பயின்றதாகவும் கூறப்படுகின்றது.
மொக்ரால் புலவர்களின் பாடல்கள் மற்ற மாப்பிள்ளைப் பாடல்களின் மொழிநடையிலிருந்து மாறுபட்டிருப்பது துளுநாட்டின் மாறுபட்ட மொழி வழக்கினாலும் தமிழ்ப் புலவர்களின் செல்வாக்கினாலும் ஏற்பட்டதாகும்.
மொக்ரால் மாப்பிளா கலா அகாடமியின் பொறுப்பாளர்களில் ஒருவரான இஸட்.ஏ என்றழைக்கப்படும் ஜூல்ஃபிகர் அலீயின் ஒருங்கிணைப்பில் நிகழ்ச்சி செவ்வனே நடந்தேறியது.
இன்றையத் தலைமுறைப் பாடகர்களுடன் தங்கள் முதுமையின் சிரமத்தைப் பொருட்படுத்தாமல் முந்திய தலைமுறைப்பாடகர்களும் நிகழ்விற்கு வந்திருந்தனர். ஒவ்வொருவரும் மிகுந்த ஈடுபாட்டுடன் பாடினர்.இவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு வாழ்க்கைப் பின்னணியைச் சார்ந்தவர்கள். பாட்டுக் கேட்டல் என்பது முற்றிலும் எண்ணியல் கருவி சார்ந்ததொன்றாக மாற்றப்பட்டு கச்சேரிகள் பெருமளவில் மறக்கப்பட்ட காலகட்டமிது.
என்னுடைய சிறிய வயதில் விடிய விடிய பாட்டுக்கச்சேரிகளை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடக்கக் கண்டிருக்கிறேன். இன்று தமிழகத்தைப் பொறுத்தவரை போலி செய்தல் அடிப்படையில் நாகூர் ஹனீஃபாவைப் பின்தொடரும் நிழல் பாடகர்களைத் தவிர புதிய குரல்கள் இல்லை. சொந்தத் திறனிலும் குரலிலும் வளர்ந்த பாடகர்களின் தொடர்ச்சியானது 2020இல் மண் மறைந்த பாடகர் குமரி அபூபக்கர் அவர்களோடு விடைபெற்று விட்டது.
இந்நிலையில் பழையதைப் பற்றிக் கொண்டே புதிய பாடல்களையும் புனைவதும் பாடுவதுமாக விரையும் இசையானது மொக்ராலில் ஊர்மயப்பட்டிருப்பது கொண்டாடப்பட வேண்டிய ஒன்று. புதிய இலௌகீக தேவைகள்,சுவைகள்,விருப்பங்களுக்கேற்ப பாடல்கள் கட்டப்படுவதும் இசைக்கப்படுவதுமானது ஒரு நெடிய பாடல் மரபு வரும் தலைமுறைகளுக்குக் கையளிக்கப்படுவதையும் அதன் நீடித்தத் தன்மையையும் உறுதிப்படுத்துகிறது.
மொக்ராலின் அஹ்மது இஸ்மாயீல் சாஹிப் அவர்கள் புதிய நிக்காஹ் மாலையை இயற்றியதோடு பல நவீனப் பாடல்களை இயற்றியுள்ளார். கால் பந்தாட்டத்தைக் குறித்து இவர் எழுதிய பாடல்கள் பிரபலமானவை. தென் கர்நாடகத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் குறித்தும் பாடல்களை இயற்றியுள்ளார்.
அகீதா மாலை என்ற ஆன்மீக காவியத்தை ஸாவுக்கார் குஞ்ஞு ஃப்கீஹ் இயற்றியுள்ளார். இவருடைய மகன் பாலாமுப்னு ஃபகீஹும் கவிஞராவார். இவர் தந்தை இறப்பதற்கு முன்னரே இளம் வயதில் இறந்து விட்டார்.
"அங்கணத்தில் அஞ்சு தாளம் ஆறும் கூடி பாடடா!
அக்குலச்ச அச்சிதப்பூ அம்பலத்தில் உண்டடா!
அங்கணத்தில் தாளமிட்டு தானமானம் நேடடா!
தட்டகெட்டி பிட்டுறுட்டி தச்சிகார் பொலிக்கடா!"
போன்ற வரிகள் பாலாமுப்னு ஃபகீஹின் கவித்திறனை எடுத்துக் கூறுகிறது.
நிகழ்ச்சியில் குணங்குடி மஸ்தான் ஸாஹிபின் “இணங்கும் மெய்ஞ்ஞான பேரின்பக்கடலின்” என்ற பாடலின் ஒரு பகுதியை தன் நடுங்கும் குரல்களால் பாடிக் காட்டிய முதியவர் ஏ.கே.அப்துர் ரஹ்மான் ஸாஹிபு மொக்ராலிலும் அதைச்சுற்றியுள்ள ஊர்களிலும் கல்யாணங்களில் தமிழ்ப் பாடல்களைப் பாடி வந்ததை பல செவ்விகளில் கூறியுள்ளார். மொக்ராலின் தமிழ்ப் பாடல்களையும் இஸல் மரபையும் நன்கறிந்த கடைசிக் கண்ணியான இவர் கவிஞர் மர்ஹூம் ஏ.கே.அப்துல் காதிர் அவர்களின் தம்பியாவார்.
எம்.ஏ.ரஹ்மான் மாஸ்டர் இயக்கிய ‘இசல் கிராமம் மொக்ரால் “ ஆவணப்படத்தில் ஏ.கே.அப்துர்ரஹ்மான் ஸாஹிபு வலிவும் பொலிவுமாகப் பாடுவதைக் காண முடிகிறது.
திருமணங்களிலும் கலைநிகழ்ச்சிகளிலும் மன மகிழ்ச்சிக்காக அன்றி பொருள தேடும் நோக்கில் பாடியதில்லை என்பதையும் மன நிறைவுடன் கூறுகிறார் ஏ.கே.அப்துர் ரஹ்மான் ஸாஹிபு. மொக்ராலின் பாடல் மரபு இன்றும் நிலை நிற்பதற்கு இதுவும் காரணமாகும்.
பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து இசையில் திளைக்கும் இக்கிராமத்தை மீளக் கண்டுபிடித்து தமிழுலகிற்குச் சொல்லியவர் மறைந்த எழுத்தாளர் தோப்பில் முஹம்மது மீரான் காக்காதான். மொக்ராலுக்கு வந்து விட்டுப் போன கடைசி தமிழ்ப்படைப்பாளியினுடைய கண்ணியைப்பற்றிக் கொண்டு மங்க விடாமல் செய்தவர். இக்கிராமத்திற்கான எங்களது ரிஹ்லா குழுவின் வருகையே தோப்பில் காக்காவிலிருந்து எங்களுக்குக் கடத்தப்பட்டு சாத்தியமானதுதான்.
மொக்ராலின் பாடகரும் ஆய்வாளருமான யூசுஃப் கட்டத்தடுக்கா இந்நிகழ்வில் அன்பளிப்பாக வழங்கிய ‘வடக்கின்றெ இஸலுகள் “என்ற நூல் வடக்கு காசர்கோடு,மொக்ரால் புலவர்கள் இயற்றிய பாடல்களின் தொகுப்பாகும். இந்நூலுக்கு தோப்பில் காக்கா அணிந்துரை வழங்கியுள்ளார்.இப்பாடல்களில் நிறைந்து நிற்கும் தமிழ்ச் சொற்களை எங்களால் விளங்கிக் கொள்ள முடியவில்லை என்பதால் தமிழ்ச் சொற்களுக்கான பொருளை விளங்க உதவி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் எங்களிடம் அவர் முன் வைத்தார்.
மொக்ராலில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் தோப்பில் காக்கா பங்கெடுத்துள்ளதை யூசுஃப் கட்டத்தடுக்கா பெருமிதத்துடன் குறிப்பிட்டார். தமிழ்ப் பாடல்களின் மீதுள்ள ஈர்ப்பால் நாகூர் ஹனீஃபாவையும் பாட்டுக் கூட்டங்களில் பாடவைத்துள்ளதோடு அவரை இக்கிராமத்திற்கு வரவழைத்து சிறப்பித்ததாகவும் சொன்னார்கள்.
அந்த இரு பெரும் தமிழ் முஸ்லிம் கலைஞர்களின் மொக்ரால் வருகைக்குப் பிறகு மரபையும் கலையையும் தடமொற்றி வந்தது ரிஹ்லா துளுநாடு குழுவாகத்தான் இருக்கும்.
“இது அவசரக் கோலத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி. ஒரு நாள் முழுக்கப் பாடினாலும் கொள்ளாத அளவிற்குப் பாடல்கள் உள்ளன. இனியும் வாருங்கள்” என்றவாறு விடையளித்தனர் நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள்.
முகநூலில் பழகி தொலைபேசியில் மட்டுமே உரையாடிக் கொண்டிருந்த மொழிபெயர்ப்பாளர் ஏ.கே.ரியாஸையும் மொக்ராலின் நிமித்தமாக சந்திக்கக்கிட்டிற்று.ரியாஸ் காசர்கோட்டுக்காரன்.தன் ஆர்வத்தில் தமிழ் பயின்று தமிழக,இலங்கை தமிழ்ப் படைப்புக்களை சொந்த விருப்புக்காக மொழியாக்கம் செய்து வருகிறார்.மலையாளம்,கன்னடம் என்ற இரு மொழிகளிலும் மொழியாக்கம் செய்கிறார்.
ரிஹ்லா துளுநாட்டின் இறுதிக்கட்ட செல்கையாக உதுமவில் வசிக்கும் எம்.ஏ.ரஹ்மான் மாஸ்டரையும், காசர்கோடு மாலிக் பின் தீனார் பள்ளிவாயிலையும் காண்பது என்ற பயண நிரலின்படி எம்.ஏ.ரஹ்மான் மாஸ்டரைக்கான உதுமவிற்குச் சென்றோம்.
எங்களின் வரவைக் கனப்படுத்தும் விதமாக அண்மையில் வெளிவந்த தனது நூலான “பொசங்கடி ஒரு அன்வேஷன ரிப்போர்ட்” ஐ ரஹ்மான் மாஸ்டர் ரிஹ்லா துளுநாடு குழுவினரை வைத்து வெளியிடும் சடங்கொன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தார்.
பொசங்கடி ஒரு அன்வேஷன ரிப்போர்ட்(பொசங்கடி – ஒரு விசாரணை அறிக்கை) கேரளியரின் புலம் பெயர் வாழ்க்கையின் தாக்கங்களும் விளைவுகளும்தான் இந்நாவலின் மையக்கருத்து. இந்நாவலை எம்.ஏ.ரஹ்மான் மாஸ்டரின் நண்பரும் சாஹித்ய அகாதமி விருது பெற்ற மலையாள எழுத்தாளருமான குமரன் உதும வெளியிட எங்கள் அணியின் சார்பாக வரலாற்றுப் பேராசிரியர் ஹஸன் அதனைப் பெற்றுக் கொண்டார்.
வைக்கம் முஹம்மது பஷீரின் குரலில் ஆங்கிலத் துணைத்தலைப்புக்களுடன் கூடிய முப்பத்து மூன்று நிமிடங்கள் ஓடக்கூடிய ‘பஷீர் தி மேன்‘ என்ற பெயரிலான மலையாள ஆவணப்படமெடுக்கப்பட்டு அரை நூற்றாண்டுகள் ஆகி விட்டன. வைக்கம் முஹம்மது பஷீர் பற்றி முறையான ‘அதிகாரப்பூர்வமான’ ஆவணப்படம் என்று கூடச் சொல்லாம். அதை எடுத்தவர் எம்.ஏ.ரஹ்மான் மாஸ்டர். சில வருடங்களுக்கு முன்பு அப்படத்தை வலையொளியில் காண நேர்ந்தது.
அதன் பிறகுதான் இந்த அரிய முயற்சிக்காக எம்.ஏ.ரஹ்மான் மாஸ்டருக்கு நன்றி சொல்லி தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். போன வருட தொடக்கத்தில் காசர்கோடு கும்பளாவில் பதிப்பக சந்திப்பொன்றிற்காக போன சமயமும் எம்.ஏ.ரஹ்மான் மாஸ்டரை சந்திக்கவியலாமல் போய் விட்டது. அதற்கிடையில் கேரளத்தின் குறுக்கும் நெடுக்குமாக பல பயணங்கள் போயும் மாஸ்டரை சந்திக்கும் வாய்ப்பு கூடவே இல்லை. இறைவன் அந்த சந்தர்ப்பத்தை ரிஹ்லா துளுநாட்டின் பயணத்தில்தான் நடத்த வேண்டும் எனத் தீர்மானித்திருந்திருக்கிறான்.
வைக்கம் முஹம்மது பஷீரை அவருடைய சொந்த உருவத்தில் குரலில் அவரின் பாவனைகளுடன் குறைவின்றி அறிய இந்த ஆவணப்படம் உதவுகிறது.ஆனால் இந்நிறைவிற்கும் குதூகலத்திற்கும் அப்பால் தான் ஏன் எழுத வந்தேன் என்பதற்கு வைக்கம் முஹம்மது பஷீர் கூறும் காரணம், முஸ்லிம்களுக்கும் முஸ்லிமல்லாத படைப்பாளிகளுக்கும் இன்றும் உயிருடன் நிற்கும் தலையாய வாக்குமூலமாகும்.அதை நீங்கள் ஆவணப்படத்தை பார்த்து தெரிந்துக் கொள்வதுதான் வைக்கம் முஹம்மது பஷீருக்கும், எம்.ஏ.ரஹ்மான் மாஸ்டருக்கும் நாம் காட்டும் சிறிய கூட்டொருமை.
பஷீர் த மேன் ஆவணப்படம் எடுக்கப்பட்ட காலகட்டம்,அதன் பின்னணியில் உள்ள செய்திகளை நிகழ்வின் இடைவெளியில் கிடைத்த சில மணித்துளிகளில் பகிர்ந்துக் கொண்டார் எம்.ஏ.ரஹ்மான் மாஸ்டர்.
இந்த ஆவணப்படம் எடுக்கும்போது அவருக்கு வயது 22. முறையாக ஒளிப்படக்கலையெல்லாம் கற்கவில்லை. வைக்கம் முஹம்மது பஷீர் மீதான ஆர்வம் மட்டுமே அவரை வழிநடத்திச் சென்றிருக்கிறது.தன் குடும்பத்துப் பெண்களின் நகைகளை வைத்து பணம் திரட்டி ஒளிப்பதிவு வேலைகளைத் தொடங்கியிருக்கிறார். கடலுக்கும் பாலைக்கும் சேர்த்தே காற்று பரவுவது போல படப்பிடிப்பு நடக்கும் செய்தியால் பொறாமைக் கொண்ட உள்ளங்கள் கனன்றிருக்கின்றன. படப்பிடிப்பு முடிந்து வீட்டிற்கு வந்து சேர்ந்து அடுத்தாற் போல வைக்கம் முஹம்மது பஷீரிடமிருந்து “எடோ! உனது கேமிரா மேனின் தகுதியென்ன?” என்ற ரீதியில் கடிதம் வரும். இம்மாதிரி பல இடையூறுகளால் படமெடுக்கத் தொடங்கியதற்கும் வெளியிடுவதற்குமிடையில் பத்து வருடங்கள் மலை போல நின்றிருந்திருக்கின்றன.
ஆவணப்படம் பிரபலம் ஆனவுடன் ஒன்றிய சாஹித்ய அகாதமியினர் அதை வாங்கியிருக்கின்றனர். அவர்கள் கொடுத்த பொருளுதவி ஆவணப்பட உருவாக்கச் செலவை ஈடுகட்டவில்லையென்றாலும் அவர்கள் வாங்கி அங்கீகரித்ததில் ஒரு நிறைவு என்றார் எம்.ஏ.ரஹ்மான் மாஸ்டர்.படைப்பாளி கணக்குப் பார்த்தாலும் மிஞ்சுவது ஒன்றுமில்லைதான்.
அறபி மலையாளத்தின் தடங்கள் அர்வியில் இருப்பதையொட்டியும், மலைபார் மஅபர் தொடர்புகளினடிப்படையிலும் பல வருடங்களுக்கு முன்பு எம்.ஏ.ரஹ்மான் மாஸ்டரின் தலைமையில் ஒரு குழுவினர் பேருந்தில் காயல்பட்டினம் வந்துள்ளனர்.அந்த பயணம் பற்றிக் கேட்டபோது அதுவொரு நல்ல பட்டறிவாக இல்லை என்ற ஒற்றைச் சொல்லில் முடித்துக் கொண்டார்.
காசர்கோடு மாவட்டத்தில் முந்திரி உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் மீது வானூர்தி மூலம் தெளிக்கப்பட்ட என்டோசல்ஃபான் நச்சு வேதிப்பொருளினால் உடலும் உயிரும் குலைக்கப்பட்ட மக்களுக்கு உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடி இழப்பீடு பெற்றுக் கொடுத்தவர் எம்.ஏ.ரஹ்மான் மாஸ்டர் என்ற செய்தியையும் இந்நிகழ்வில்தான் கேள்விப்பட்டோம்.
எம்.ஏ.ரஹ்மான மாஸ்டர் இயற்கை ஆர்வலர் என்பதால் பெரிய ஆர்ப்பாட்டங்களின்றி நிற்கிறது அவரது வீடு. தனது வளவை அதற்கேற்ப சோடித்துள்ளார். தலைச்சுற்றல் சிக்கலிருப்பதால் வீட்டை விட்டு வெளியே எங்கும் செல்வதில்லை.ஆனாலும் தொடர்ந்து புத்தகங்களைக் கொண்டு வருவதில் முனைப்புடன் உள்ளார்.
காசர்கோடு மாலிக் பின் தீனார் பள்ளிவாயிலைக் கண்டு விட்டு அவரவர் கூடு நோக்கிக் கிளம்பினோம்.
No comments:
Post a Comment