Thursday, 8 May 2025

ரிஹ்லா துளுநாடு -- மொழிகளின் நிலம் 1

மலபாரின் வடக்கெல்லை துளுநாடு எனக் கேள்விப்பட்டிருந்ததினால் கொஞ்ச வருடங்களாகவே இப்பகுதிக்கு வரும் வாய்ப்பை எதிர்பார்த்திருந்தோம். ஒவ்வொன்றும் ஒவ்வொரு மூலை என இப்பயணத்தில் போக விரும்பிய பகுதிகளைப்பற்றி முன்னர் நினைத்திருந்தோம்.திட்டமிடும்போது எல்லாம் அருகருகே வந்து ஒட்டி திரண்டு விட்டன.

திப்புசுல்தான் கண்காணிப்புக் கோபுரத்தின் சுடும் துளை


துளுநாடு ரிஹ்லாவில் முதன்முதலாக சென்றது மங்களூர் நகரத்தின் மையத்தில் உள்ள செய்தலீ பீவி தர்கா. இதனை ஒட்டி மங்களூரு காவல்துறை ஆணையர் அலுவலகம் உள்ளது.

இக்காவல்துறை அலுவலகத்திற்கும் இந்த தர்காவை பராமரிப்பதில் பங்குண்டு என சொன்னார்கள். எதார்த்தத்தில் தர்காவின் வக்ஃபு நிலத்தில் தான் காவல்துறை ஆணையர் அலுவலகம் உள்ளது.

மேற்கண்ட செய்தி ஒரு பெரிய நிகழ்வின் படிவம் போல விளங்கியது.பயணத்தின் முதல் நாள் வெள்ளிக்கிழமை. ஜுமுஆ தொழுகைக்குப் பிறகு இந்துத்துவ நாஜிச ஒன்றிய அரசின் வக்ஃபு திருத்த சட்டத்தை எதிர்த்து இலட்சக்கணக்கில் உள்ளூர் முஸ்லிம்கள் திரண்டு போராட்டம் நடத்தினர்.
கர்நாடகாவில் பலமுறை இந்துத்துவ நாஜிச அரசு அமைந்த பிறகும் தங்களுடைய இருப்பையும் வாழ்வையும் தொடர்ந்து நிலை நிறுத்தி வரும் மங்களூரு முஸ்லிம்களின் உறுதிப்பாடு மனம் கொள்ளத்தக்கது.
காலனியாதிக்கத்தை தீரமாக எதிர்த்துப் போரிட்ட ஹைதர் அலீ, திப்பு சுல்தான் நிறுவிய கண்காணிப்புக்கோபுரம் அமைந்துள்ள சுல்தான் பத்தேரிக்கு சென்றோம். கர்நாடக மண்ணில் பிறந்து தென்னகம் முழுமைக்குமான சிங்கங்களாக விளங்கியவர்களின் எச்சத்திலும் ஒரு நிமிர்வு.
இந்தியாவின் மிகப் பழமையான பத்து பள்ளிவாயில்களில் ஒன்றும் கர்நாடகத்தின் இரண்டாவது பழைய பள்ளிவாசலுமான மாலிக் தீனார் பலிய பள்ளி என்ற ஜீனத் பக்ஸ் பள்ளிவாசலுக்கு ஜுமுஆ தொழச் சென்றோம்.
இப்பள்ளியில் தான் மங்களூர் நகர காழி செயல்படுகிறார்.
பிரபல பயண இலக்கிய எழுத்தாளரும் வரலாற்று ஆசிரியருமான இப்னு பதூதா தனது ரிஹ்லத் நூலில் இப்பள்ளியின் காழியாக(நீதிபதி) பொது ஆண்டு 14 ஆம் நூற்றாண்டில் பதுருதீன் மஅபரி அவர்கள் பணியாற்றியுள்ளார் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மஅபர் என்பது தமிழ்நாட்டை அதிலும் குறிப்பாக காயல்பட்டினத்தை குறிக்கும் என்பது வரலாற்றை அறிந்தவர்களுக்கு நன்கு தெரியும்.
கேரளத்துக்கும் முன்னரேயே துளு நிலத்துக்கு தமிழ் மண்ணின் வழியாகத்தான் இஸ்லாம் சென்றடைந்துள்ளது.

இப்னு பத்தூதாவின் நூல் "ரிஹ்லா இப்னு பத்தூதா" என்று அறியப்படுகிறது. நூலின் முழுப் பெயர் تحفة النظار في غرائب الأمصار وعجائب الأسفار (துஹ்ஃபத்துன் னுள்ளார் ஃபீ கராஇபில் அம்ஸார் வ அஜாஇபில் அஸ்ஃபார்) என்பதாகும்.
இப்னு பத்தூதா தனது ரிஹ்லா நூலில் மங்களூரு பற்றி குறிப்பிடுவதாவது:
“ஃபாக்கனூர் (பார்கூர்) மன்னரிடமிருந்து விடைபெற்று மூன்று நாட்கள் விடாது பயணித்து நாங்கள் மஞ்சறூர்(மங்களூரு) அடைந்தோம்.மங்களூரு மலைபாரில் பிரபலமான துறைமுகப் பட்டினங்களில் ஒன்றாகும். அங்கு சுக்கும் மிளகும் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. பாரசீக, ஏமன் வணிகர்கள் இங்கிருந்து சுக்கும் மிளகும் கொள்முதல் செய்கின்றனர்.ராமது (ராமதேவர்) என்ற பிரபல மன்னர் மங்களூருவை ஆளுகிறார்.
அங்குள்ள மக்கள் தொகையில் கணிசமான எண்ணிக்கையில் முஸ்லிம்கள் உள்ளனர். ஒரே பகுதியில் நாலாயிரம் முஸ்லிம்கள் வசிப்பதைக் கண்டேன். அங்கு நடைபெறும் வணிகம் மூலம் மன்னருக்கு நல்ல ஆதாயம் கிடைப்பதால் அவர்களுக்கிடையில் பிணக்கு ஏற்பட்டால் சுமுகமாக தீர்த்து வைக்க மன்னர் கவனம் எடுத்துக் கொள்கிறார்.

அங்கு காழியாக இருக்கும் பத்றுத்தீன் அல் மஅபரி அவர்களை சந்திக்க நேர்ந்தது. அவர் அங்கு காழியாகவும் மார்க்கம் பயிற்றுவிப்பவராகவும் உள்ளார். நாங்கள் பயணித்த கப்பல் மங்களூருவை அடைந்த போது அவர் அன்புடன் வரவேற்று எங்களை உடன் வருமாறு அழைத்தார். ஆனால் அவ்வழைப்பை ஏற்று எங்களால் அவருடன் செல்ல முடியவில்லை. மன்னரின் மகன் அதிகாரப் பூர்வமாக வந்து எங்களை வரவேற்று தரையிறங்க இசைய வேண்டும் என்பதே அதற்கு காரணமாகும்.

எங்களின் வருகையை அறிந்த மன்னர் தன் மகனை அனுப்பி அரண்மனைக்கு அழைத்துச் சென்றார். மன்னர் அரச மரியாதை அளித்து எங்களை கண்ணியப்படுத்தினார். அவரின் அரண்மனையில் மூன்று நாட்கள் தங்கினோம்.”
கோழிக்கோடு,மலப்புரத்தோடு சுருக்கிப் பார்க்கப்படும் இன்றைய மலைபார் என்றழைக்கப்படும் பகுதி உண்மையில் பண்டைய காலத்தில் தேங்காய்ப்பட்டினத்திலிருந்து மங்களூரு வரை உள்ள பகுதிதான்.தமிழ் முஸ்லிம் நிலத்தோடு அதாவது மஅபரோடு மங்களுருக்கு உள்ள தொடர்பு பற்றி பேசப்படவேயில்லை.

தென்னகத்தில் எனக்கு பார்க்கக் கிடைத்த மர செதுக்கு வேலைப்பாடுகளுள்ள பள்ளிவாயில்களில் சிறந்தது கவரத்தியிலுள்ள உஜ்ரா பள்ளிவாயில். அதற்கடுத்த இடத்தைப் பெறுவது மங்களூருவின் ஜீனத் பக்ஸ் பள்ளிவாயில்தான்.

இப்பள்ளி அமைந்திருக்கும் பந்தர் பகுதி (துறைமுகப்பகுதி) தமிழ் முஸ்லிம் புலவர்களை கண்ணியப்படுத்தியப் பகுதியாகும். மாப்பிளா பாடல்களின் பிதாமகனான மோயின் குட்டி வைத்தியரும் இங்கு தனது பாடல்களை அரங்கேற்றியுள்ளார்.

காலத்தின் முனைகளில் பற்றியிருக்கும் தேனடைகள் போன்ற தலைக்கு மேலிருந்த மர வேலைப்பாடுகள் பழந்தேனில் திளைத்த உணர்வை வழங்கிக் கொண்டேயிருந்தது.

ஜுமுஆத் தொழுகைக்குப்பிறகு தேவைப்படுவோர் மதிய உணவுக்கான அட்டைகளை தன் அறையில் வந்து பெற்றுக் கொள்ளும்படி கத்தீப் அறிவித்தார். புரவலர்கள் கத்தீபிடம் இவ்வட்டைகளுக்கான பொருளுதவி செய்கின்றனர்.பெறுபவர்களின் கண்ணியமும் பாதிக்கப்படாமல் கொடுப்பவர்களின் நோக்கமும் சிதையாமல் நிறைவேறும் நல்லதொரு ஏற்பாடு.

ரிஹ்லா போகுமிடங்களில் அந்தந்த ஊர்களின் தனித்துவமான உணவை அருந்துவது வழமை. மங்களுருவின் சிறப்புணவு மீன் என எங்கள் ஊர்தியின் ஒட்டுநர் சொல்லவும் மீன் உணவிற்காகப் பெயர் பெற்ற நாராயணா உணவகத்திற்கு சென்றோம். பாதையோரம், ஏணிப்படிகள் என கிடைக்குமிடங்களிலெல்லாம் ஆட்கள் காத்துக் கிடக்க வெளியில் போய் எங்களுக்கு வாய்த்த மாட்டிறைச்சி வறுவலையும் குஸ்காவையும் உண்டோம்.

கர்நாடக துளு சாஹித்ய அகாதமியில் சந்திப்புக்கு மாலை மூன்று மணியளவில்ஏற்பாடாகியிருந்தது. திராவிட மொழிக் குடும்பத்தின் பழைமையான மொழிகளில் ஒன்றான துளு மொழியின் இருப்பு,அறைகூவல்,வளர்ச்சி குறித்த ஓர் அறிதலுக்கான கூடுகையாகத் திட்டமிட்டிருந்தோம்.

அங்கு இருபது நிமிடங்கள் தாமதமாக போய்ச்சேர்ந்தோம்.எங்களை வாயிலில் நின்று வரவேற்றார் அகாதமியின் தலைவர் தாராநாத் கட்டி காப்பிக்காடு. நல்லதொரு கட்டிடம். தூய்மையும் நேர்த்தியும் மிக்க அமைப்பு.நூலகம்,கூட்ட அரங்கு,கேளரங்கு என எல்லாம் றாஹத்தாக இருந்தன. துளு அகாதமிக்கு வருடத்திற்கு எழுபது இலட்சங்கள் வரை கர்நாடக அரசு நிதி ஒதுக்கீடு செய்கிறதாம்.

நிகழ்ச்சியை துளு மொழியோடு குறுக்கி விடாமல் கொங்கணி,பியாரி மொழிகளின் சாஹித்ய அகாதமி பொறுப்பாளர்களையும் அழைத்திருந்தார் தாரா நாத். இப்பகுதிகளின்பழங்குடியான குரகர் சமூகப் பேராளர் ஒருவரும் அழைக்கப்பட்டிருந்தார்.

தென்னகத்தில், மொழியை கண்மூடித்தனமான வெறியாக மாற்றிப்பார்க்கும் ஒரே பகுதியான கர்நாடகத்தில் துளு,கொங்கணி,பியாரி உள்ளிட்ட சிறுபான்மை மொழிகளின் நிலையை அறிவதும் சங்க காலத்திலேயே தமிழுடனான தனது உறவை பிரிய வேண்டி வந்த துளு மொழியின் இன்றைய நிலையைப் புரிவதும் எங்கள் பயணத்தின் தலையாய நோக்கங்களில் ஒன்றாக இருந்தது.

மொழி வாரி மாநிலப்பிரிவினையின் தாக்கத்தையும் விளைவுகளையும் அறிவதற்கான சோதனைக்களம்தான் துளுநாடு பகுதி என்பதை இந்த ரிஹ்லா உணர்த்தியது. திருவிதாங்கூர் பயணத்தில் களியக்காவிளையிலும் இது போன்றதொரு பட்டறிவைப் பெற்றோம்.

நிகழ்ச்சி தொடங்கியது. கொங்கணி மொழியின் முன்னணி எழுத்தாளரான மங்களா பட் உரையாற்றினார். கௌட சரஸ்வத் பிராமணரான அவர், “கொங்கணிகள் தென்னிந்தியர்கள் என வடக்கிந்தியர்களாலும் வடக்கிந்தியர்கள் என தென்னிந்தியர்களாலும் வேறுபடுத்திப் பார்க்கப்படுகின்றனர். கோவா மாநிலத்தின் மொழி என மஹாராஷ்டிரா,கர்நாடகம்,கேரள மாநிலங்களாலும் பிராமண மொழி என பிற சாதிக்காரர்களாலும் நாங்கள் ஒதுக்கப்படுகிறோம்.. ஆனால் கொங்கணி மொழியோ தெற்கிலும் வடக்கிலும் கோவா,மஹாராஷ்டிரம்,கர்நாடகம்,கேரளம் எனப்படும் மாநிலங்களிலும் எல்லா மத, சாதிக்காரர்களாலும் பேசப்படும் மொழி என்பதுதான் உண்மை. என்றார்.

கொங்கணி மொழிப்பாடல்களை இளைஞி மேகா பய்யவரூ சுருதி சேர்த்து இசைபட பாடினார்.

இரு பியாரி மொழி பாடல்களை எங்களுக்காகப் பாடிய கலைஞர் முஹம்மது பட்டூரு எழுத்தாளர்,நடிகர்,கன்னடம்,துளு,பியாரி,உர்தூ மொழிகளில் கவிஞர், தற்காப்புக்கலைகளைக் கற்றவர் என்ற மினுங்கும் பல பட்டடைகளைக் கொண்டவர். வயது எண்பதைத் தொட்டு நின்றாலும் தோற்றத்தில் பத்து வயது குறைவுதான்.

குரகர் என்ற பட்டியலின பழங்குடியிலிருந்து இரமேஷ் மஞ்சக்கல் வந்திருந்தார். அவர்களின் மொழியில் எங்களுக்கு பேசியும் பாடியும் காண்பித்தார். குரகா மொழியும் திராவிட மொழிக் குடும்பம்தான். துளு,கொங்கணி,பியாரி மொழிகளுக்கு சாஹித்ய அகாதமி இருக்கும்போது குரகர் மொழிக்கு என ஒரு சாஹித்ய அகாதமி ஏன் இல்லை எனவும் கேள்வியெழுப்பினார்.

குரகர்களின் மொழியைக் கேட்டால் சாபம் கிட்டும் என ஆதிக்க சாதி ஹிந்துக்களால் ஒதுக்கப்பட்டிருந்த இப்பட்டியலின பழங்குடியினருக்கெதிராக இப்போதெல்லாம் நேரடி தீண்டாமை இல்லையென்றாலும் தங்களின் அடையாளம் பிற சமூகத்தினருக்கு தெரிய வந்தால் தாங்கள் ஒதுக்கப்படுவோம் என்ற அச்சமிருப்பதால் வெளியில் தங்களின் மொழியை குரகர்கள் பேசுவதுமில்லை. தங்களை குரகர் என அடையாளப்படுத்திக் கொள்வதுமில்லை.

முதலாம் நூற்றாண்டில் ஹபஷிகா என்ற அரசனைப் பெற்றிருந்த இச்சமூகம் இன்று ‘குறிப்பிடப்பட்ட அழியும் நிலையிலுள்ள பழங்குடியினராக’ வகைப்படுத்தப்பட்டுள்ளனர். 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 16,000 ஏன்ற எண்ணிக்கையிலிருந்த குரகர் சமூகம் 2011 ஆம் ஆண்டைய கணக்கெடுப்பின்படி 1,500 என்ற எண்ணிக்கைக்கு சுருங்கியிருக்கிறது. ஆயுதமெடுத்து ஒரு சமூகத்தைக் கொன்றொழிக்க வேண்டுமென்பதில்லை. நால் வருண தீண்டாமையையும் இன ஒதுக்கலையும் கடைப்பிடித்தாலே போதும்.

நிகழ்ச்சியில் பேசிய பிராமணப் படிப்பாளியும் பதவியாளியுமான பேராசிரியர் ஒருவர் திப்பு சுல்தானால் துளுநாட்டின் தொன்மங்கள் சூறையாடப்பட்டன என போகிற போக்கில் கணையொன்றை எறிந்து விட்டுப் போனார்.

குரகர் சமூகத்தின் மஞ்சக்கல் இரமேஷ் பேசும்போது “நாங்கள் பொதுக்கிணற்றில் குடிநீரெடுக்க ஆதிக்க சாதி ஹிந்துக்கள் மறுத்தபோது திப்பு சுல்தான்தான் எங்களுக்கு அவ்வுரிமையை மீட்டுத்தந்தார் என்றார்.

வெட்டென இக்கூற்றை மறித்த அப்பிராமணர், “ பார்கூர் பகுதியில் குரகர் சமூக தலைவனான நந்தராயன் வழங்கிய அன்னதானத்தை தீட்டு என பிற சாதியினர் ஒதுக்கவே அங்கு வந்த சைவ சமய யோகியொருவர் அந்த குரகர் இனத்தலைவனை ஒரு குளம் தோண்டச் சொல்லி அக்குளத்தை குரகர் இன மக்களுக்கு புனிதமாக்கிக் கொடுத்தார். எல்லா சாதியினரும் பாசனத்திற்காக இக்குளத்து நீரைப்பயன்படுத்தி நெல் விளைவித்து பயன்படுத்தினர்” என ஒரு கதையை அவிழ்த்தார்.

அதோடு திப்பு பற்றி இரமேஷ் மஞ்சுக்கல் மேற்கொண்டு சொல்ல வந்தது தடைப்பட்டு போயிற்று.அந்த பேராசிரியரிடம் மேற்கொண்டு கேட்டதில் குரகர் இனப் பேராளர் சொன்ன திப்பு சுல்தானின் கிணற்று அனுமதி செய்தியை மறுத்தார். நந்தராயன் வெட்டிய குளத்தின் நீரை பிற சாதியினர் புனிதமாகக்கருதி பயன்படுத்தவாவது செய்கின்றனரா? எனக் கேட்டதற்கு ‘இல்லை’ என ஒற்றைச் சொல்லில் மறுமொழி வந்தது.

பிரபல திரைப்பாடகி சகோதரிகளான லதா மங்கேஷ்கரும் ஆஷா போஸ்லேயும் தேவதாசிக் குடும்பத்தில் பிறந்தவர்கள் எனவும் இலவச இணைப்பாக ஒரு தகவலை அவையோருக்கு வழங்கி விட்டு சென்றார் அப்பிராமணர்.

இவர்நாட்டாரியல்,அருங்காட்சியகவியல்,வரலாறு,கலை,பண்பாடு துறைகளில் பல உயர்பதவிகளை வகித்தவர். திரிப்பும் ஒளிப்பும் திறப்புமான ஆட்டத்திற்காகத்தான் இத்தனை துடுப்புகள் போலும்.

நிகழ்ச்சியின் நிறைவில் மொழிவாரி மாநிலப்பிரிவினையில் கர்நாடகத்தின் துளு நாடுக்கு என்ன நேர்ந்தது? எனக் கேட்டபோது துளுநாட்டின் ஒரு பகுதியாக விளங்கிய காசர்கோடு மாவட்டம் கேரளத்தோடு இணைக்கப்பட்டு மலையாளத்தின் ஆதிக்கத்தில் மொழி வாரியான நெருக்கடிகளை சந்திப்பதாகக் கூறினர்.

கர்நாடகத்தின் அலுவல்&பெரு மொழியான கன்னடத்திலிருந்து துளு,பியாரி,கொங்கணி மொழிகளுக்கு அறைகூவல்கள் எதுவுமுண்டா? எனக் கேட்டதற்கு அப்படியொரு சிக்கலை சந்திக்கவில்லை என்றனர். மாநிலத்தின் அலுவல் மொழியாக கன்னடம் இருந்த போதிலும் துளு,பியாரி,கொங்கணி மொழியினர் தங்களுக்கிடையே துளுவில்தான் உரையாடிக் கொள்கின்றனர் என்ற செய்தி வியப்பூட்டியது.

நடப்பில் இம்மூன்று மொழிகளுக்குமிடையில் கொடுக்கல் வாங்கல் ஏராளமாகத் தென்படுவதோடு அது இம்மூவரையும் செழுமைப்படுத்தவே செய்திருக்கிறது.

பெரிய இலக்கிய சாதனைகள் இல்லாதிருந்தும் இரண்டாயிரம் வருடங்களாய் கன்னடம்,மலையாளம் என்ற இரு மாமத யானைகளுக்கிடையே நசுங்கி விடாமல் இங்கு கிளைத்து நிற்கும் ஏனைய வட்டார மொழிகளுடனும் உறவாடித் தழைக்கும் துளுவுக்கு வாழ்த்துக்கள்.


மொழி வழி தூய்மைவாத, மொழி மேலாதிக்க வம்படியாளர்களுக்கு துளு நாட்டின் மொழிப்பன்மையும் நல்லிணக்கமும் ஒரு கண் திறப்பாக அமையட்டும்.

No comments:

Post a Comment