எங்கள் குழுவிலுள்ள வரலாற்றுப் பேராசிரியர் ஹஸனால் இரண்டாம் நாள்தான் வந்திணைய முடிந்தது. அவர் வந்து சேர்ந்து அணியமாகிய பிறகு தங்கியிருந்த விடுதியின் கணக்கை தீர்த்து விட்டு மங்களுருவிலுள்ள உள்ள கர்நாடக பியாரி சாஹித்ய அகாதமி அலுவலகத்திற்குச் சென்றோம்.
![]() |
பியாரி சாஹித்ய அகாதமியின் தலைவர் உமருடன் |
தேவகவுடாவின் மகன் குமாரசாமி கர்நாடக முதல்வராக இருந்தபோது பியாரி சாஹித்ய அகாதமியை அமைப்பதற்கான அரசியல் அறிவிப்பு வெளிவந்தாலும் அதற்காக அலைந்து திரிந்து அரசு உத்தரவாக்கிப் பெற்று சாத்தியமாக்கியது உமர்தான்.
மங்களுருவின் பியாரி சமூகம் பற்றியும் பியாரி மொழி தொடர்பான முன்னெடுப்புக்கள் குறித்தும் அவருடன் சிறிது நேரம் உரையாடிக் கொண்டிருந்தோம்.
இன்றைய கேரளத்தின் வடக்கு காசர்கோடு முதல் கர்நாடகத்தின் பார்கூர் வரையிலான நிலப்பரப்பே பழைய துளு நாடாகும். இந்நாட்டின் கடற்கரையோரங்களில் செறிவாகவும் உட்பகுதிகளில் பரவலாகவும் வாழும் ஆதி குடி முஸ்லிம்கள் பியாரிகள்(பியாரிங்ஙா) என்று அழைக்கப்படுகின்றனர். பியாரி(Beary) என்பது சமூகத்தையும் மொழியையும் குறிக்கும் ஒரே பெயராக உள்ளது.
காசர்கோடு சந்திரகிரி முதல் தேவஸ்தானங்கள் நிறைந்த (பிரம்மாவரம்) பார்கூர் வரை பியாரி சமூகத்தினர் பரவலாக உள்ளனர். குறிப்பாக தட்சிண கன்னடா(தென் கர்நாடகா) மாவட்டத்தின் உள்ளாள் முதல் முல்கி வரை நிறைந்து வாழ்கின்றனர். குடகு, சிக்மகளூர், மைசூரு, பெங்களூரு, மும்பை பகுதிகளிலும் இவர்கள் உள்ளனர். இவர்களின் மொத்த எண்னிக்கை பதினைந்து இலட்சங்களாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
அரபிக்கடலையும் மேற்கு தொடர்ச்சி மலையையும் அரண்களாகக் கொண்ட துளுநாடு இயற்கை வனப்பு மிக்கது. சேரநாட்டிற்கு வடக்கே உள்ள இப்பகுதி ஒருகாலத்தில் தமிழ் பேசும் நிலப்பரப்பாக இருந்தது. இப்பகுதியை ஆண்ட நன்னர்களைப் பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. இவர்களின் ஆட்சி காலம் வரை தமிழ் இங்கு செல்வாக்கு பெற்றிருந்தது.
சேரநாட்டின் பேச்சு வழக்காக கொடுந்தமிழ் இருந்தது போன்று துளு நாட்டிலும் தமிழின் மாறுபட்ட பேச்சு வழக்கு இருந்து வந்தது. இவ்வழக்கு காலப்போக்கில் சிதைந்தும் மருவியும் துளு என்ற தனி மொழியாக மாறியது. சேரநாடு தமிழ் கூறும் நல்லுலகிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்கு வெகுகாலத்திற்கு முன்னரே துளுநாடு தன்னை விடுவித்துக் கொண்டது.
அரசியல் காரணங்களால் சேரநாட்டு கொடுந்தமிழ் பரிணாம வளர்ச்சியடைந்து மலையாளம் என்ற தனிமொழியாக மாறியது போன்று துளுவும் தனிமொழியாக மாறியது. இம்மொழி தனி மொழியாக மாறிய காலகட்டத்தை வரையறுக்க முடியவில்லை. பியாரி மொழியின் உருவாக்கத்தில் துளுவும் மலையாளமும் தலையாய பங்கு வகிக்கின்றன.
பியாரி என்பதை naknik + malaame- அதாவது நக்னிக்கும் மலாமெயும் கலந்த கலவை எனலாம்.பியாரியை பொதுவாக நக்னிக் மொழி என்பர்.எனக்கு (நக்கு),உனக்கு(நிக்கு) என்ற பியாரி பேச்சு வழக்கை அடையாளமாகக் கொண்டது தான் நக்னிக்(நக்குனிக்கு).
மலையாண்மையை கொடுந்தமிழாகவும் கொள்ளலாம்.பழந்தமிழின் பேச்சு வடிவமான கொடுந்தமிழுடன் (மலையாமை - மலாமே) வைதீக மொழியான சமஸ்கிருதம் சேர்க்கப்பட்டு உருவானதே மலையாளம் கொடுந்தமிழுடன்(மலாமே) துளு கலந்து உருவானதே நக்னிக் பியாரியும் மலாமெ பியாரியும்.
மலையாளம் ஓர் இளைய மொழி என்பதால் பியாரியில் பிற்காலத்தில்தான் மலையாள செல்வாக்கு ஏற்பட்டது.. அதற்கு முன்னர் தமிழ்தான் செல்வாக்கு செலுத்தியது.
அறபு, உர்தூ, கன்னடம் முதலான மொழிச் சொற்களும் பியாரியில் கலந்துள்ளன.தமிழ் போன்று சமஸ்கிருத ஆதிக்கம் மிகாத மொழியாக பியாரி உள்ளது. இம்மொழி பேசுவோர் அனைவரும் முஸ்லிம்கள் என்பதால் சமஸ்கிருத சொற்களின் தேவை ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.மாப்பிள்ளை இலக்கியத்தில் தமிழ்ச் செல்வாக்கு மிகைத்து நிற்பதற்கு மலாமே பாஷ என்ற மலையாம் மொழி வழக்கு முக்கிய காரணமாகும்.
பியாரி மொழியில் நக்னிக் பியாரி , மலாமே பியாரி என்ற இரு வடிவங்கள் உள்ளன. இன்றைய காசர்கோடு மாவட்டத்தின் கும்பளா போன்ற பகுதிகளிலும் காசர்கோடு மாவட்டத்தை ஒட்டிய தட்சிண கர்நாடக (தென் கர்நாடகா) மாவட்டத்தின் தலப்பாடி, கின்யா, மஞ்சனாடி, முடிப்பு, விட்லா, புத்தூர் போன்ற பகுதிகளிலும் பேசப்படும் பியாரி மொழி மலாமே பியாரி வகையைச் சார்ந்ததாகும். இரண்டு வழக்காறுகளுமே பியாரி தான்.
பியாரி மொழி(Beary Bashe) துளுவ மொழியின் இலக்கண அமைப்பையும் ஒலிப்பியல் அமைப்பையும் கொண்டதாகும். இம்மொழி மலையாளத்துடனும் நெருங்கிய பிணைப்பைப் பெற்றுள்ளது. ஐம்பது விழுக்காட்டிற்கும் மேல் துளு மொழிச் சொற்கள் நிறைந்துள்ள இம்மொழியில் மலையாளம், தமிழ்,கொடவா, அரபி, ஃபார்ஸி, உர்தூ,கன்னடம்,கொங்கணி முதலிய மொழிச் சொற்களும் கலந்துள்ளன. ஏனைய திராவிட மொழிகளில் சமஸ்கிருத ஆதிக்கம் மேலோங்கியிருக்க தமிழ் போன்று சமஸ்கிருத ஆதிக்கம் மிகாத மொழியாக பியாரி உள்ளது.
வட காசர்கோட்டில் பேசப்படும் மலாமே பியாரியில் மலையாளச் செல்வாக்கு கூடுதலாக இருக்கும்.தட்சிண கன்னட மாவட்டத்தின் மைக்கால (மஙகளூர்), உள்ளாள (உள்ளாள்), பண்ட்வால, உப்பினங்கடி,, உச்சில், பெளுத்தங்கடி போன்ற பகுதிகளில் பேசப்படும் பியாரி மொழி நக்னிக் வகை பேச்சு வழக்காகும். இவ்வழக்கில் துளுவின் செல்வாக்கு மிகுதியாக உள்ளது.
அறபு தந்தையர்களுக்கும் துளு தாய்மார்களுக்கும் இடையே நடந்த திருமண உறவில் உருவான மக்களே பியாரிகள்.இஸ்லாம் துளுநாட்டில் பரவிய பின்னர் கடல் வாணிபம் தழைத்தோங்கிய காலகட்டத்தில் இக்கலப்பு சமூகத்தினர் உருவாயினர். இவர்களுடன் இம்மண்னில் வாழ்ந்த பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருடன் பல சமூகத்தினர்களிலிருந்தும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களும் இணைந்து உருவான முஸ்லிம்கள் பினனர் ஒட்டு மொத்தமாக துளுநாட்டில் பியாரிகளாக அறியப்படுகின்றனர்.
பியாரி மொழி பேசுபவர்கள் நூறு விழுக்காடு முஸ்லிம்களாக உள்ளனர். துளுவிலும் கன்னடத்திலும் வைதீகமயமாக்கமுள்ளது.பியாரி மொழியில் வைதீகமயமாக்கமும் வடமொழிக்கலப்பும் அறவே இல்லாததால் திராவிட மொழிக்குடும்பத்திற்கு ஒரு புது வரவெனலாம்.
சொந்தத் தொழில்,வெளிநாடு வேலைவாய்ப்பு,கல்வி என வளர்ச்சியின் பாதையில் மங்களுருவின் பியாரி சமூகம் தன்னை நிலை நிறுத்திக் கொண்டு வருகிறது.தங்கள் சமூக தேவைகளுக்காக அவர்கள் உண்டாக்கிய கல்வி நிறுவனங்களால் கேரளம்,தமிழகம் உள்ளிட்ட பகுதிகளிலுள்ளவர்களுக்கும் பயன் விளைகிறது. அங்கிருந்து நிறைய மாணவர்கள் இங்கு மருத்துவம் துணை நிலை மருத்துவ படிப்புக்களை பயில்கின்றனர்.
உமரிடம் பியாரி மொழி தொடர்பான புத்தகங்களைப்பற்றி கேட்டபோது அவர் அலுவலக மேலாளரான பஷீர் என்பவரை “பஷீராக்கா” என விளித்தார். கேரளத்தில் இதையே பஷீர்க்கா அல்லது பஷீர் காக்கா என விளிப்பர். ஆனால் காயல்பட்டினம்,கீழக்கரை,அதிராம்பட்டினத்தில் பஷீர் காக்கா என்றும், சேர்த்து அழைக்கும்போது “பஷீராக்கா” என்றும் விளிப்பர். காக்கா எங்கேயிருந்தெல்லாமோ பறந்து வந்து இலக்கு பார்த்து வந்து ஒட்டிக் கொள்கிறது.
ஒரு வழியாக பஷீராக்கா படாதபாடுபட்டு பியாரி மொழி தொடர்பான ஆங்கில புத்தகங்களைக் கொண்டு வர உமர் அதனை எங்களனைவருக்கும் வழங்கியதோடு எதிர்காலத்தில் தமிழகத்திலிருந்து ஆய்வு/கூட்டு முயற்சிகளுக்காக வருபவர்களுக்கு ஒத்துழைப்பை நல்க அணியமாகவிருப்பதாகவும் தெரிவித்தார்.
மங்ளூருக்கு அருகிலுள்ள பழைமையான உள்ளாள் நகரத்துக்கு சென்றோம்.பியாரி ஆய்வாளரான இஸ்மத் பஜீரை உள்ளாளின் மையமான செய்யது முஹம்மது மதனி வலிய்யுல்லாஹ் தர்காவில் வைத்து சந்திப்பதாக திட்டம்.
![]() |
இஸ்மத் பஜீருடன் |
ஐந்தாம் அப்பாக்கா அரசியான ராணி அப்பக்கா சௌட்டாவின் நகரம் உள்ளாள். போர்த்துக்கீசியர்களால் உள்ளாள் ஆக்கிரமிக்கப்பட்ட சமயம் உள்ளூர் முஸ்லிம்கள்,குஞ்ஞாலி மரைக்காயர்களுடன் இணைந்து அவர்களை எதிர்த்து தீரமாக போரிட்ட அரசி ஐந்தாம் அப்பக்கா. வழமை போல் இவ்வரலாறும் பரவலாகப் பேசப்படுவதில்லை.
பெரும்பான்மையான தமிழகத்து நினைவிடங்களைப்போலல்லாமல் செய்யது முஹம்மது மதனி அவர்களின் தர்காவில் தூய்மைப் பேணப்படுகிறது. இரவும் பகலும் கேரளம்,கர்நாடகத்திலிருந்து மக்கள் வருகை புரிகின்றனர். என்னைக் கடந்து போன ஒரு மாது தமிழில் அவரது உறவினருடன் பேசிச் சென்றார்.
கஞ்சிச்சோற்றுக்கு பருப்புக்கறியுமாக இலவச மதிய உணவு அனைவருக்கும் வழங்கப்படுகிறது. கடந்த பத்து வருடங்களாக இந்த நடைமுறை இருக்கிறதாம். றமளானில் மட்டும் விடுமுறை.
இலவச உணவு ஏற்பாடு என்பது பண்டு தஸவ்வுஃபுடைய கான்காஹ்களில் இருந்த நடைமுறைதான்.இடையில் வழக்கொழிந்திருக்கிறது.இதை வாய்ப்புள்ள ஏனைய பகுதிகளிலுள்ள வசதியுள்ள தர்காக்களும் பள்ளிவாயில்களும் நடைமுறைப்படுத்திப் பார்க்கலாம். குறிப்பாக உதிரிகளும் ஏதிலிகளும் நிறைந்த நகரங்களில் இதை முயலலாம்.
சீக்கிய சமயத்தவர்களின் பெரிய குருத்வாராக்களில் லங்கர் எனப்படும் சமூக அடுக்களையில் மூவேளை இலவச உணவு அளிக்கும் திட்டம் இன்றளவும் நடைமுறையிலிருக்கிறது. நன்கு தூய்மை பேணப்படும் சமையலறையில் ரொட்டியும் பருப்பும் காய்கறியும் சூடாக சமைக்கப்பட்டு அனைவருக்கும் பரிமாறப்படுகின்றன.
நாங்கள் தர்கா சென்றடைந்த சிறிது நேரத்தில் இஸ்மத் பஜீரும் வந்தார்.பியாரி மொழி,சமூகம்,அதன் நடைமுறைகள் ஆகியவற்றை அவர் எங்களுக்கு பேசியும் தேவைப்படும்போது நிகழ்த்தியும் காட்டினார். சமூகம் பண்பாடு,வரலாற்றுத்துறைகளில் தேடலும் ஆய்வும் செய்து வருபவர். மதிப்பார்ந்த பல கருத்தரங்குகளில் அவ்வப்போது பங்கெடுத்தும் வருகிறார்.
பியாரி குறித்து இக்கட்டுரையின் முன் பகுதிகளில் இடம் பெற்றிருப்பவைகள் நண்பரும் ஆய்வாளரும் ரிஹ்லாவின் வழிகாட்டிகளில் ஒருவருமான மிடாலம் அன்சாரும், ஆய்வாளர் இஸ்மத் பஜீரும் தெரிவித்தவைகளின் சுருக்கம்தான்.இவர்களின் ஆர்வத்திலும் வழிகாட்டலிலும் ரிஹ்லா துளுநாடு செறிவாகியது.
மஅபர்,மலைபார் ஆய்வாளர்களுக்கும், திராவிட ஒற்றுமையையும் அதனடிப்படையிலான அரசியலையும் முன்னெடுப்பவர்களுக்கும் துளு நாடும்,பியாரியும் நல்லதொரு களம்.
துளு நாட்டின் கர்நாடகப் பகுதியிலிருந்து புறப்படும் நேரம் நெருங்கியபடியால் உள்ளாளை விட்டு துளு நாட்டின் கேரளப்பகுதியாகிய காசர்கோட்டு மாவட்டத்துக்கு பேருந்தில் புறப்பட்டுச் சென்றோம். மங்களூரு பேருந்து நிலைய வளாகத்திலிருந்த கர்நாடக அரசின் பால் கூட்டுறவு நிறுவனமான நந்தினியில் மைசூர் பாக் பொட்டலங்களை குளச்சல் அஸ்கர் அலீ பயண நினைவாக வீட்டுக்கு வாங்கிக் கொண்டார். நறு நெய் பொழியும் பாக். மைசூர் பாக்கை அதன் பிறந்த நிலத்தில் வாங்கவில்லையென்றால் அதோர் இனிய குற்றம்.
மங்களூரு நகரத்தின் சிறப்புகளை சொல்லாமல் இங்கிருந்து புறப்பட்டு போவது சரியில்லை. இங்குள்ள குறைந்தபட்ச ஆட்டோ கட்டணம் முப்பத்தைந்து ரூபாய்கள் மட்டுமே. நகராட்சி அந்தஸ்து ஏய்ப்பால் நகரமாக்கப்பட்ட காயல்பட்டினத்தில் குறைந்த பட்ச ஆட்டோ கட்டணம் ஐம்பது ரூபாய்கள். அதுவும் ஒரு தெருவின் வழியாக கூடுதலாக போக வேண்டி வந்தால் அதற்கு பத்து ரூபாய்கள் கூடுதல் கட்டணம்.
தெருக்களும் சாலைகளும் நல்ல அகலம்.போக்குவரத்து நெரிசலில்லை. மங்களூருவின் பந்தர்(துறைமுகம்) பகுதியைக் காணும்போது கோழிக்கோடு,கொச்சி,மும்பை,கொல்கத்தா,கொழும்பு நகரங்களின் சாயல் தெளிகிறது.கடைசியாக வெளியேறிய காலனியாதிக்கர்களின் தடமும் நெடியும் எஞ்சத்தானே செய்யும்.
இங்குள்ளவர்களிடம் தமிழில் பேசினால் அவர்களிடம் எதுவும் அசௌகரியம் தோன்றுவதில்லை. தங்களால் முடிந்த அளவு தமிழில் விடையிறுக்கின்றனர்.மூன்றரை வருடங்களுக்கு முன்பு பட்கலுக்கு போயிருந்த போது உத்தர கன்னட மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் போய் முழுத் தமிழில் வழி கேட்டேன். கொஞ்சமும் சுணங்காமல் தெளிவாக வழிகாட்டினர்.கேரளத்தை விட கர்நாடகத்தின் வடக்கு,தெற்கு கன்னட மாவட்டங்களில் தமிழ் அந்நியமில்லை.
இருட்டிய பிறகு காசர்கோட்டின் இச்சிளங்கோடு கிராமத்திற்கு வந்தடைந்தோம். இரவு இங்குள்ள கான்காஹ்வில் தங்கல். பதினைந்து மாணவர்கள் தங்கி பயிலும் மத்ரஸாவும் பள்ளிவாயிலும் கான்காஹ்வுடன் இணைந்துள்ளன. நெடிய உரையாடல்களுக்குப்பிறகு உண்டோம். பத்திரி,பராத்தாவுடன் மீன் ஆக்கியும் பொரித்துமான இரவுணவு.கசிந்துருக்கும் வெக்கையை பின்னிரவு மழை தணித்தது.
இவ்வூரிலும் மாலிக் பின் தீனார் பெயரில் ஜுமுஆ பள்ளிவாயில் அமைந்துள்ளது.அவரின் உறவினர்கள் இங்கு அடங்கியுள்ளனர்.பள்ளியைக் கண்ட பிறகு நேராக மொக்ரால் இசல் கிராமத்திற்கு பயணப்பட்டோம்.
No comments:
Post a Comment