Friday, 21 February 2025

பேரா.மு.அப்துர்ரஜ்ஜாக் – நிலைத்த ஓட்டம்

 


நேற்றிரவுதான் கடந்தும் நிறைந்தும் போன மனிதர்களைப்பற்றியக் குறிப்பு எழுதித் தீர்வதற்குள் பேராசிரியர் மு.அப்துர்ரஜ்ஜாக்கும் நேற்றுக்குள் போய் புகுந்துக் கொண்டார்.


சம நிலை சமுதாயம் மாத இதழ் வழியாகத்தான் அறிமுகமானார் என நினைவு. அடிக்கடி அவருடன் தொடர்பு கொள்வதில்லையென்றாலும் எந்த நிமிடத்திலும் எந்தத் தொடர்பும் விட்டுப்போகவில்லை என்பதைப்போல எப்போதும் பேசிக் கொள்ள முடியுமான உறவு எனக்கும் அவருக்குமிருந்தது.

உயிரைக் கையில் பிடித்தபடி ஓடுகிறேன் என்ற  வரிகளுள்ள கவிதைச்சீட்டை தன் சட்டை மடிப்பில் சுருட்டியிருந்தபடி மரித்துக்கிடந்த கேரளக்கவிஞர் அய்யப்பனைப் பற்றி அப்துர்ரஜ்ஜாக் எழுதியிருந்த கட்டுரையைப் படித்த பிறகுதான் “ஆள் சராசரியில்லை “ எனத் தோன்றியதிலிருந்து அவருடனான உறவு ஆழங்கண்டது.

அதன் பிறகும் பெரிதாக எல்லாம் பேசிக் கொள்வதில்லை. ஏற்காட்டில் நடந்த ஓர் இலக்கிய அமர்வில் அவரும் வந்திருந்தார். அவர் பேசும்போது என் பெயரையும்  குறிப்பிட்டு என்னைப்போன்ற நண்பர்களை பார்ப்பதற்காகவும் தான் அங்கு வந்திருப்பதாகச் சொன்னார்.

மீலாது, பெருநாளையொட்டி அகில இந்திய வானொலியின் சென்னை நிலையத்தில் செறிவான உரை நிகழ்த்துவார்.அதற்காக அவரை அழைத்துப் பாராட்டியிருக்கிறேன்.

வைக்கம் முஹம்மது பஷீரைப்பற்றி எங்கு வாய்ப்புக் கிடைத்தாலும் புதிய செய்திகளை பகிராமல் விடமாட்டார் அப்துரஜ்ஜாக். வைக்கம் பஷீரின் வீடுகளுக்கும், ஓவி விஜயன் நினைவகத்திற்கு சென்று வந்ததையும் பற்றி நான் எழுதியக் கட்டுரைகளை மிகவும் சிலாகித்தவர் தனது பணி நிறைவுக்காலத்தில் தொங்கு பையுடன் என்னுடன் அலையப்போவதாக சிரிப்புடனும் ஈடுபாட்டுடனும் சொன்னார்.

வைக்கம் முஹம்மது பஷீரின் மீதான நேசமும் அது குறித்த எனது எழுத்தின் தாக்கமாகக் கூட இருந்திருக்கலாம். அவர் சென்னை புதுக்கல்லூரியில் தமிழ்த்துறை தலைவராக இருக்கும்போதே எனக்கான ஒரு பாராட்டு விழாவை மார்ச் 11,2021 அன்று  கல்வியில் மலர்தல் என்ற தலைப்பில் ஏற்பாடு செய்து சென்னை புதுக்கல்லூரியில் நடத்தி என்னை அவரும் அவரது தமிழ்த்துறையும் சிறப்பித்தனர்.

பெருந்தொற்றுக்காலத்தில் இடதுசாரிகள் நடத்திய மாப்பிளா எழுச்சி பற்றிய மெய்நிகர் கூட்டத்தில் நிறைய புதுத் தகவல்களை பகிர்ந்துக் கொண்டார். சீர்மை பதிப்பகத்தை அவருக்கு அறிமுகப்படுத்தும் முகமாக சென்னையிலுள்ள அவரது  இல்லத்திற்கு நண்பர் உவைசுடன் சென்றிருந்தேன். புழுங்கிய நேந்திரம்பழத்தை நறுக்கி அதன் மேல் நெய்யும் சர்க்கரையும் தேங்காய்ப்பூவும் தூவி தேநீருடன் எங்களை விருந்தோம்பினார். அவசர அடிக்கான கன்னியாகுமரி சிறுகடி என்று அவர் விளக்கிய பிறகு அதை நான் வீட்டிலும் செய்து பார்த்தேன். இச்சந்திப்பிலும் மாப்பிளாக்களின் போர் உத்திகள் பற்றிய எனக்கு புதிய தகவல்களைப் பகிர்ந்துக் கொண்டார்.

தோப்பில் முஹம்மது மீறான் காக்காவிற்குப் பிறகு  தமிழ் – மலையாள ( மஅபர் – மலைபார் ) முஸ்லிம் பண்பாட்டு, இலக்கிய துறைகளில் ஒரு இணைப்பு வாயிலாக நீங்கள் விளங்க வேண்டும். அதற்கான தகைமை உங்களுக்கிறது என அழுத்திச் சொன்னேன். ஆனால் அவரின் குவிமையம் அதுவாக இல்லை என்பதை புரிந்துக் கொண்டேன்.

எல்லையோர தேங்காய்ப்பட்டினத்தில் பிறந்தவராதலால் தமிழ்,மலையாள இலக்கியங்களில் ஆழ்ந்த ஈடுபாடும் அறிவுங்கொண்டவர்.எழுத்தும் பேச்சும் சமனாக வழங்கப்பெற்றவர். அவரின் இளமைத் தோற்றத்தைக் கண்டு நானும் கவிஞரும் ஊடகவியலாளருமான ராஜகம்பீரனும் உரிமையோடு ஒருமையில் அழைப்போம். இனிமையும் நெருக்கமும் கொண்டவர்.

பணி நிறைவிற்குப்பிறகு திருவனந்தபுரத்தில் வீடு கட்டி குடியேறவிருப்பதாகச் சொன்னார். நானும் திருவனந்தபுரம் அகில இந்திய வானொலியில் கதை சொல்லப்போகும்பேதெல்லாம் அவரை அழைப்பதுண்டு. அவரும் நான் சென்னையிலிருக்கிறேன்.மும்பை மகன் வீட்டிலிருக்கிறேன் என்பார். இளைய மகனுக்காக சென்னையிலும் இருக்க வேண்டியுள்ளது என்பார்.

ஒரு வழியாக அவரை திரூவனந்தபுரத்தில் வைத்து பிடித்து சந்தித்தது மே18,2023. அதன் பிறகு அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு இல்லாமலே ஆகி விட்டது.வானொலியில் கதை சொல்லி விட்டு இறங்கி வரும்போது பைக்கில் வந்து சந்தித்தார். இருவரும் வெறுந்தேயிலைக் குடித்தோம். சில மாதங்களுக்கு முன்புதான் வீட்டை கட்டி முடித்திருப்பதாகச் சொன்னார். அவசர வேலைகள் இருப்பதால் வீட்டிற்குக் கூட்டிப்போக முடியவில்லை என வருந்தி விட்டு நான் திருவனந்தபுரம் வரை வந்து நான் கதை வாசிப்பதன் நோக்கமென்ன என்றுக் கேட்டார்.சொன்னேன்.அது அவருக்கு புதினமாகப்பட்டிருக்கும் போல. அடுத்த நாளே தனது முகநூலில் என்னைப்பற்றி தனது மனஓட்டத்தைப் பதிவிட்டிருந்தார்.

அவர் அப்பதிவில் எனக்களித்த ‘விசித்திரர் ‘ பட்டம்தான், எனக்கும் அவருக்குள்ளுமிருக்கும் அந்த விசித்திரம்தான் ஒற்றைச் சரடில் கட்டி வைத்திருந்தது. நாமெல்லோருமே விசித்திரம்தானே.ஒருவரின் மர்ம முடிப்பு அவிழும் முன்னரே அவர் புறப்பட்டு விட்டால் அதை எதனால் வர்ணிக்கவியலும்?

கடந்த ஒரு மாத காலத்திற்குள் இரு முறை திருவனந்தபுரம் போக வேண்டி வந்தது. அதில் முதல் பயணத்தில் இரு தடவை அழைத்தும் அவர் எடுக்கவில்லை. கடந்த 15ஆம் தேதி சனிக்கிழமை அதாவது போன வாரம் காலை 08:15க்கு அவரை அழைத்தேன்.எடுத்தார். மும்பையிலிருப்பதாகச் சொன்னார்.குரல் தொய்ந்திருந்தது.பயணம் முடியும் நேரமாக இருந்ததால் எனக்கும் அதைப்பற்றி கூடுதல் சிந்திக்க இயலவில்லை. இப்போதுதான் தெரிகிறது. அவர் ஆறு மாத காலம் நோய்ப்பட்டிருந்தார் என்று.

நள்ளிரவில் அவரது பிரிவு செய்தி அறிந்ததிலிருந்து ஏற்பட்டிருக்கும் பளுவை அவரைப்பற்றி எழுதியும் பிரார்த்தித்தும் தான் கடக்க வேண்டும்.

அவர் சமுதாய இதழ்களில் தொடர்ந்து எழுதி வந்தார். இலக்கியத்தைப்போலவே அவரது அரசியலும் தெளிவானது.சமூக வாழ்விற்காக இலக்கியத்திற்காக தனது அரசியலிலும் இறை பற்றுறுதியிலும் எந்த விட்டுக் கொடுத்தலையும் அவர் செய்துக் கொள்ளவில்லை.

மற்ற நற்செயல்களுடன் இதுவும்  உங்களின் ஈருலக வெற்றிக்கான கட்டமுதாக அமைய வேண்டுகிறேன் அப்துர்ரஜ்ஜாக்.

 

No comments:

Post a Comment