Thursday, 20 February 2025

கஹான் கயே ஓ லோக்?


 தொலைவிலுள்ள வீட்டு மாடியிலோஅல்லது பெயர் தெரியாத ஒரு மலைக்குன்றின் மீதிலோ எரியும் தனித்த ஒற்றை விளக்கைப்போல செவ்வாய் கோள் மிக அண்மையில் சிவந்து தெரியும் நாட்களின் ஓரிரவில்தான் இம் மாதிரியான தனித்த நினைவுகள் எழுகின்றன.

வாழைப்பழத்தில் ஒருவன் வைத்துக் கொடுத்த போதை மாத்திரையின் கிறக்கத்தில் யாரோ ஒருவரின் வீட்டு செத்தையில் தன்னை ஆடு என நினைத்து தலையை புகுத்திக் கிடந்த டில்லியப்பா.

 மாத இதழொன்றுக்கு ஆண்டுத்தொகை பிரிப்பவராக மட்டுமே அறிந்திருந்த அவர், முஅத்தின் இல்லாத ஒரு நாளில் பள்ளிவாயிலில் மீண்டும் ஒலித்திராதா? என ஏங்க வைக்கும் சுவை குரலில் பாங்கொலித்த  அஹமது ஹாஜி.

சிறிய  வயதில் காடையராக பார்த்து பிற்றை நாட்களில் சாயம் போன பஞ்சு மிட்டாயாக  காட்சியளித்த சாட்டை நாய் போன்ற மனிதன்.

யானைத்தந்தம் போல கண்ணாடி அணிந்து வலது காலை சரித்து நடந்தவாறே அறிந்தவர் அறியாதவர் என எல்லோரிடமும்  இன் முகங்காட்டும் மனிதர்,

 கடைசி வரைக்கும் சட்டையும் செருப்பும் அணியாமலேயே தலாவில் இறைத்து குளித்து  வாழ்ந்து மறைந்த டப்பாஸ் அப்பா.

 வருமான வழியின் எச்சுவடும் தெரியாமலேயே சட்டையும் வேட்டியும் அணிந்த முழு மனிதனாக வாழ்ந்து முடிந்தவர்க்ள்

நேசித்த,வெறுத்த,பொறாமைப்பட்ட பெயரும் தெருவும் தெரியாமல் வெறும் தோற்றங்களாகவே கண்டுணர்ந்த, கண்டு கொள்ளாமல் கடந்து சென்ற மனிதர்கள்.

 அறுபதை நெருங்கும் எனக்கு  அதில் ஐந்து வருடங்களை கழித்து விட்டு மீதமுள்ள ஐம்பத்தைந்து ஆண்டுகளை புரட்டிப்பார்த்தால்  இவ்வளவு பேரையும் நேற்றைக்குள் விட்டு விட்டு இங்கு வந்து நிற்கிறேன் என்ற நினைப்பே பெரும் மலைப்பாக உள்ளது.அந்த பெருந்திரள் மனிதர்களால் மட்டுமே நிரம்பிய நேற்றானது  இன்றைய பெருங்கடலுக்குள் யாருமறியாத அன்னியனாகி நிற்கிறது.

 எங்கு சென்றார்கள் அவர்கள்?

 நம்மையும் அவர்களையும் பிரித்திருக்கும் பாதையானது நெடுந்தொலைவுக் கொண்டது போலாகும் ஒரு தோற்ற மயக்கத்தின் துண்டுதான்.உண்மையில் ஒரு கணத்தின் அரையங்குமொன்றின் இடைவெளிதான் அது

நிரந்தர உள்ளமை ஒன்றிலிருந்து புறப்பட்டு இடையில் மலர்ந்து வீழ்ந்து மீண்டும் அந்த என்றென்றைக்குமான உள்ளமை நோக்கிய மீளல் என்ற தீராத பெருஞ்சுழற்சியில்தான் அவர்களும் நாமும்.அந்த ஓட்டத்தில்  ஒரு அரைக்காற்புள்ளியாகக்கூட நாமும் அவர்களும் இல்லை.சாசுவதத்தை முறுகப்பிடித்து ஒற்றைப்படுத்தலை அத்திரவத்தில் கரைத்தழிப்பதைத் தவிர பிறிதொரு வழியுண்டோ கண்ணே ரகுமானே?

 

No comments:

Post a Comment