ஹூசைனுக்கு மாணிக்கக்கல் தரகுதான் தொழில்.அவன் வாப்பாவுக்கும்
அதுதான் தொழில்.
அவனுக்கு கல் நோட்டம் பெரிதாக தெரியாது. வாப்பாவும் மகனும்
தனித்தனியாக தொழில் பார்த்தாலும் அவ்வப்போது தரகிலும் நயம் விலைக்கு வரும் கல்லை வாங்குவதிலும் பங்கு சேர்ந்துக் கொள்வர்.
வாங்குபவருக்கு கல் பிடித்து விட்டால் போதும். விற்பவரைப்பற்றி
பெரிதாக யோசிக்காமல் இங்கு இரண்டு அங்கு இரண்டு என தனது நான்கு சதவிகித தரகை மட்டுமே
நெற்றியில் நிறுத்தி வணிகத்தைத் தீர்ப்பான் ஹூஸைன்.
தீர்ப்பது என்றால் இருவருக்கும் பொதுவான விலையை சொல்லி
இருவரின் கைகளையும் கூட்டி அதில் தன் கையை வைத்து அடித்து விடுவது. அவனின் நல்ல நசீபுக்கு
பெரும்பாலும் வணிகம் குதிர்ந்து விடும். ஆட்டை அறுக்கும் முன்னர் புடுக்கை சுட்டுத்தின்னுவது
போல உடனே தனது தரகை கழற்றி விடுவான்.
ஹூசைனின் ஒத்த வயதுக்காரனும் பெரிய மாணிக்க வணிகனுமாகிய
ரயீஸுக்கு ஹூசைனின் வாப்பா கையிலிருந்த பத்து காரட் துடியான தெளிவான பழுதற்ற நீலப்பச்சைக்கல்லின்
மேல் ஒரு நாக்கு. இங்கே கண் என சொல்லாமல் நாக்கு என சொல்லக் காரணம் உணவைக்கண்டதும்
நாவூறுவது போல் சங்கு சாமானை அதாவது நல்ல கல்லைக் கண்டால் நாயை விட மோசமாக துப்பாணி
விடுவான்.
அந்த பத்து காரட் நீலப்பச்சைக்கல்லை அதன் முழுப் பெறுமதிக்கு
மேல் நல்ல ஆதாயம் சொல்லி வாப்பாக்காரரிடம் கேட்டுப்பார்த்தும் அவர் கொடுக்கவில்லை.
காரணம் அவர் பழைய நரி. இரண்டு வருடங்கழித்து கல்லுக்கு என்ன விலை வருமோ அந்த விலையின்
முக்கால் விலைக்குத்தான் அவர் கல் விற்பார்.
எனவே பழைய நரியைத்தாண்டி புதிய நரி தந்திரம் செய்தது. சுபஹ் தொழுகைக்குப்பிறகு
தேநீரருந்தும் இந்தியன் டீக்கடையில் ஹுஸைனைப்பார்த்து விட்ட ரயீஸ் ஒரு முட்டை போண்டாவை
கையிலெடுத்துக் கொண்டு ஹுஸைன் கையில் திணித்ததோடு அவனுக்குரிய தேநீர் காசையும் இவனே
கொடுத்து விட்டான்.
தேநீர்க்கடையில் வைத்தே ஹுஸைனிடம் பேச்சைத் தொடங்கினான்.
அவனது வாப்பா கையிலிருக்கும் பத்து காரட் நீலப்பச்சைக்கல்லை எப்படியாவது வாங்கிக் கொடுத்தால்
அவனுக்கு இரட்டித் தரகு அதாவது எட்டு சதவிகிதம் தருவதாக வாக்குறுதியளித்தான்.
வாப்பாவிடம் சென்று ரயீஸும் ஹூஸைனும் கல் பார்த்துக் கொண்டிருக்கவே
இவர் பாத்திஹா ஓதியவாறே சைக்கிள் பிராண்ட் சந்தனக்குச்சியை ஏற்றி வைத்தார்.
கல்லுக்கான விலையை கால்குலேட்டரில் ஹூஸைன் வழியாக ரயீஸிடம்
அடித்துக் காட்டினார் வாப்பா. வழமை போல இரண்டரை வருடம் தாண்டிய விலைதான்.ரயீஸ் உடனே
ஒரு விலையை கால்குலேட்டரில் அழுத்தினான். அந்த விலை என்பது கல்லின் உண்மை மதிப்பின் கால் விலை. வாப்பாவின்
முகம் சந்தனக்குச்சியின் நிறத்திற்கு கருத்தது. அவர் ஏற்கனவே செங்கருப்பு நிறத்தவர்தான்.
ஒரு சொல் கூட சொல்லாமல் கையோடு கொண்டு வந்த
தினத்தந்தி செய்தித்தாளை பிரித்து படிக்கத்தொடங்கினார்.
ஹுஸைனை வெளியே கூட்டிக் கொண்டு போய் தான் கேட்ட விலையிலிருந்து
இரட்டிப்பாக்கி சொன்னதோடு தான் ஹூஸைனுக்கு வாக்களித்த எட்டு சதவிகித தரகையும் நினைவூட்டினான்
ரயீஸ்.
உள்ளேயிருந்து துள்ளி வந்த ஹூஸைன், வாப்பாவின் கையை இழுத்தெடுத்து
ரயீஸின் கையையும் கேட்டு வாங்கி ரயீஸ் சொன்ன விலைக்கு அடித்து விட்டான். நாற்காலியின்
மேல் துள்ளி ஏறிய வாப்பாக்காரர் “ அடேய் உனக்கென்ன பைத்தியமா புடிச்சிருக்கு. கல்லுக்கு
அடிச்சி உடுறியா அல்லது சாணிக்கு அடிச்சு உடுறியா முட்டாப்பயலே “என சீறினார்.
“கோபப்பட்டா எப்புடி வியாபாரம்னா அப்பிடித்தான் வாப்பா”
என சமாதானம் சொல்லி இந்த முறை சேர்த்து செய்வதாக சொல்லி ரயீஸ் கேட்ட விலைக்கு மேல்
பத்து ரூபாயை சேர்த்து அடித்து விட்டான்.
விலை அடித்து முடியும் முன்னர் தன் காலிலுள்ளதைக் கழற்றி
ஹுஸனை நோக்கி வீசினார் வாப்பா. பேரம் உடைந்து சூடு தணிந்த இரண்டாம் நாளில் ஓன்றுந்தெரியாதது
போல் வாப்பாவிடம் போய் சூட்டிற்கான காரணத்தைக்கேட்டான் ரயீஸ். அவர் முதுமை அண்டாத குரலில்
விளக்கினார்.
“தம்பி நீ வாங்குறவன். என்ன வெலய்க்கும் கேட்டா நான் கோவப்படக்கூடாது.
கட்டுனா தருவேன் இல்லாட்டி இல்ல. ஆனால் இவனப்பாரேன். அசல் வெலய்லேந்து அர வெலய்க்கு அடிச்சது மட்டுமில்ல தம்பி. நானும்
அவனும் பங்கில் வாங்கிய கல்லு அது. அவன் ஒடமக்காரனும் கூட. அந்தக்கல்ல அவன்தான் காங்கயம்
யாபாரிட்டேந்து வாங்கீட்டும் வந்தான். இவன வச்சு செத்த நாய் யாபாரம் கூட பண்ண ஏலுமா
தம்பி?”
No comments:
Post a Comment