காயல்பட்டினமும் அதன் கடற்கரை மணலும் வெப்பக் காற்றும் இரவின் குளிர்மையும் அங்கு வாழும் மக்களும் அவர்தம் சமய நம்பிக்கைகளும் அவர்களைப் பிணைக்கும் பள்ளிவாசல்களும் அவ்வப்போதைய பயணங்களும் வாசிப்பும் அபூவுக்குப் போதுமானதாக இருக்கின்றன. ஒவ்வொருவனும் சம்பாத்திய வாழ்வின் பின் ஓடித்தான் ஆக வேண்டுமா! என் பூமி அதற்காகப் படைக்கப்பட்ட ஒன்றன்று என உறுதியாக இருக்கிறான். ஆனால் அப்பாவின் வியாபார வீழ்ச்சியும் சமூகத்தின் எள்ளல் பேச்சுகளும் அறிவுரைகளும் அவனைப் பொருளீட்டு எனத் துரத்துகின்றன. தான் அமர்ந்து வாசிக்கும் நூலகபடியையும், கடலின் நீலத்துடன் அமையாது பேசிக்கொண்டிருக்கும் அலைகளையும் விட்டு விரட்டப்படுகிறான் அபூ.
புனைவில் புழங்கும் லாட்டரி சீட்,
வானொலி சத்தம், கடிதங்களின் தேதி, பயணத்திற்குத்
துணையாகும் சேரன் போக்குவரத்துக் கழகம் மற்றும் கட்டபொம்மன்
போக்குவரத்துக் கழகம், தோற்ற விவரணை உள்ளிட்டவை இக்கதையின்
காலம் எண்பதுகளில் தொடங்குவதைப் புலப்படுத்துகிறது.
அபூ தனது ஊர் நூலகத்தில் ‘தெங்கபழ
வைத்தியர்’ என்ற சிறுகதையை வாசிக்கிறான். அக்கதை
கலையோடியாக அலையவும் பொருளாசையின்றி வாழவும் வேண்டும் என்கிற அவனது மனச்சாய்வுக்கு
வலுசேர்ப்பதாக உள்ளது. ஒரு மாயவாதப் பிரதியாகவும் தோற்றந்தருகிறது.
மூக்கு டப்பி ஹசன் என்கிற மனிதரின் வாழ்க்கை அக்கதையில் சிதறலாகச் சொல்லப்படுகிறது.
அவரது அமானுஷ்ய உலகத்தில், ஆன்மிகச் சித்தாட்டங்கள் நிகழும் வாழ்நிலத்தில் வாசகனான
அபூவை அகப்படச் செய்கிறது. நாவலில் தனித்துத் தெரியும் பாத்திரமாக
இருக்கிறது, தெங்கம்பழ வைத்தியரின் வார்ப்பு.
அசாதாரணங்கள் சாதாரண ஒன்றாகவே
நிகழ்கின்றன. மெல்ல அவை நிகழ்ந்து முடிந்து மறைந்து காலம் தாழ்ந்து,
பின் அசைபோட்டுப் பார்க்கையில்தாம் நிகழ்ந்தவை அற்புதம் என்ற தெளிவே உறைக்கிறது.
பத்துப் பக்கங்களுக்கு மேல் நீளும் தெங்கம்பழ வைத்தியரின் கதையும் அதுபோல் ஒன்றாகத்தான்
உள்ளது. ஆனால் அது தொடரவில்லை. சில
முதன்மையான கதைமாந்ந்தர்களும் கதையின் இழுவிசையை இழுத்துப் பிடித்துச் சீர்படுத்தும் பலரும்
திடீரென மறைந்துபோவதை, நாவலாசிரியர் விழிப்புடனே
செய்திருக்கலாம். ஆனால் அப்படிச் செய்யாமல் அக்கதைமாந்தர்களை
மேலும் வளர்த்திருந்தால் இன்னுமாய் நாவல் அடர்த்தி
கொண்டிருக்கும். உரையாடலில் கலந்துள்ள காயல் வட்டார
வழக்கின் சொற்பொருள்கள் அடிக்குறிப்புகளாக
வழங்கப்படுவது, நாவலுடன் அணுக்கமாக உதவுகிறது.
1. வெண்
மணற்பரப்பில் வரிக்குதிரையின் உடல்தடம்போலத் தன்னை வரைந்து சென்றிருந்தது காற்று.
2. கடல்
ஓர் ஊழி உண்டியைப் போன்றது.
3. இருளுக்குள்
பதுங்கிவரும் வேட்டை விலங்கின் கண்ணாகி கங்கு ஒளிர்ந்தது
போன்ற உவமைகளும்
எண்ணற்ற படிமங்களும் சொலவடைகளும் பஷீரின் புனைவுமொழியைக்
கட்டமைக்கின்றன.
ஒரு புத்தகத்தைக் கையிலேந்தும்
அபூவுக்கு,
‘வரிகளின்மேல்
இதற்கு முன்னர் வாசித்தவர்களின் கண்கள் ஒட்டியிருப்பதுபோல ஒரு தோன்றல்.’
என்ற கவித்துவமான சிந்தை வந்துவிழுகிறது.
நாவலெங்கும்
இரவை அபூ வர்ணனையால் கொண்டாடுகிறான். ‘இரவுகள் எனக்கு
மிகப் பிடித்தமானவை. எல்லாவற்றையும் வேறுபாடின்றி மூடிவிடும் மகா போர்வை,’
(ப.57)
என்கிறான். இரவு அர்த்தமுள்ளது; ஆழமானது;
கசடுகளை வழியச் செய்வது; அழுகைக்கான அமைதிப் புகலிடம்; தனிமையின்
ராஜாங்கம் என இரவோடு தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறான்.
ஒரு பிடிமானத்தை எட்டிடாத இளைஞனுக்கு
இருள் அடைக்கலம் தருகிறது. ஒளியைப் போற்றுகிறோம்; ஒளியின்
நிழலின் செயல் புரிகிறோம், ஒளியால் நிலைக்கிறோம் ஆனால் இரவால்தான் வாழ்கிறோம்.
அதன் மடியில்தான் காயங்களுக்குக் களிம்புகள் பூசப்படுகின்றன.
இரவின் கொடையான ஓய்வே பகலின் படோடோபத்தில் உயிர்த்திருக்க
வைக்கிறது. அபூ மட்டும் அதற்கு எப்படி விதிவிலக்காவான்.
பஷீர், இரவையும் கலையையும் x பகலையும்
அன்றாடத்தையும் பிணைத்தே இப்புனைவை வளர்த்தெடுக்கிறார்.
ஒவ்வொரு முக்கியக் கட்டத்திலும் இரவு அபூவின் நிழலாய்
தொடர்கிறது. வாப்பா அவன்
மெட்ராஸுக்குக் கிளம்பியே தீர வேண்டுமென்றபோதும், ரயில்
பயணத்தில் விடியலுக்கு முன்னான வெளிச்சத்தைச் சந்திக்கும்போதும்,
தான் மண்ணடியில் வேலை பார்க்குமிடத்தில் இருந்து வெளியேறத்
துடிக்கும்போதும் இருளே முடிவெடுக்கும் சாதனமாக அமைகிறது.
அவனை அரவணைக்கும் அன்னையின் கரங்களாகவே இருள்
வருகிறது. பகல் ஒரு குறுகிய வசந்தகாலம்; இரவே
இயல்பான பருவம். இருளே உயிரியல்பு. அவ்வுயிரில்
உள்ள கசடுகள் நீங்கி மறைதலே ஒளியாம் பகல்.
என்பதாக உணர்கிறான் அபூ.
கோவைக்குச் செல்லும் அபூ புதிய தோழர்களைச் சந்திக்கிறான் அவனுக்கு இந்தியாவில் இஸ்லாமின் சமயக் கட்டுமானம் சிதையாமல் தாங்கிப் பிடித்த செய்யித் அஹ்மத் ஷஹீத் ராய்பரேலி போன்ற வரலாற்று ஆளுமைகளைப் போதிக்கின்றனர். இந்தியாவில் தீவிரமடைந்துள்ள மதவாதப் போக்குகளை முன்னுணர்ந்து சொல்லக்கூடியனவாக அவ்வுரையாடல்கள் அமைகின்றன. ஆனாலும் அபூவால் ஒரு முழுநேர இயக்கவாதி ஆகமுடியவில்லை. அபூவின் வெட்டலும் ஒட்டலுமான வாழ்க்கையே பேசப்படுகிறது. ஏனெனில் அவனுக்கு எழுத்து, ஓவியம், இசை முதலான கலைகளைக் கொண்டாட வேண்டும். அதன் திளைப்பிலே வாழ வேண்டும். மனித வாழ்வே அதற்காக உண்டாக்கப்பட்டதுதான் என்கிறான்.
அவனை ஆனந்தமாக்கும் கலைக்குப் பங்களிப்புச் செய்ய வேண்டும் என்றுகூட அவன் நினைப்பதில்லை. அவற்றை உச்சிமுகர்வதே கலைக்குச் செய்யும் தொண்டுதான் என நினைக்கிறான். அப்படியானவனுக்குக் குடும்பக் கடமைகளும் லோக சம்பாத்தியப் பெருமைகளும் வீணானவை என்று தோன்றுவதில் ஆச்சர்யமில்லை. நாவலின் இறுதிப் பகுதியில் அபூ தன் உலக வாழ்க்கை தோல்வியடைவில்லை என்று பேசும் தருணத்தில்தான், தன்னை ஓர் எழுத்தாளனாக நண்பர்களாகிய சுலைமான் மற்றும் மம்மாலியிடம் பெருமையுடன் காட்டிக்கொள்கிறான். அத்தகைய ஆவேசத்திற்கான நியாயத்தைக் கதையோட்டத்தில் இன்னும் பதிவாக்கியிருக்கலாம். இடைப்பட்ட பகுதிகளில் அவனுடைய எழுத்து வாழ்க்கை எங்குமே பதிவு செய்யப்படவில்லை என்பதாலே அக்கூற்று வெளிப்படுத்திய மனோபாவத்துடன் ஒன்ற முடியாமலே போய்விடுகிறது.
ஸ்பெயினை ஒருங்கிணைத்து இஸ்லாமியர்களான மூர்களை தேசத்தை விட்டு விரட்டிய ஃபெர்டினாண்ட் இஸபெல்லா குறித்துப் பேசுமிடங்கள் மதத்தூய்மைவாதத்தின் வேரிலிருந்துதான் காலனியம் தொடங்குகிறது என்று சுட்டிக்காட்டுகின்றன. இந்தக் கோணத்தில் பார்க்கும்போது இது காலணியத்திற்கு எதிரான நாவலாகவும் திரண்டிருக்கிறது எனலாம்.
ஏனோ இந்நாவலில்
பெண்களது முகங்களைக் காணமுடியவில்லை. அபூவின் உலகில் அவன் உம்மாவைத்
(அம்மா) தவிர வேறு பெண்களுக்கு இடமில்லை
போலும். ராக்கா (அக்கா) சில இடங்களில் ஒரு நிழலாகத் தெரிந்தாலும்,
பேசுவதில்லை. சுவரில் யாரும் பொருட்படுத்தாத சிறுசிறு கறைகளைப் போலத்தான்
பெண்கள் இப்புனைவில் இருக்கிறார்கள்.
பாலி நிலத்துப்
பெண்ணை மணமுடிப்பதை யாசித்த பிரார்த்தனை மீது (ப.121)
– என்ற ஒரு வரியைத் தவிர்த்து, முதிர்ந்த அபூ தன் காதல் குறித்து
விரிவாகச் சொல்லவில்லை. இளமையின்
நினைவுகளை முதிர்ந்தபின் எழுதுவதால் நேரும்
விளைவுகளாக இருக்கக்கூடும்.
அபூவின் வாசிப்புப் பின்னணி,
இஸ்மாயில் தேவருடனான சந்திப்பு, அரசியல் நாட்டம்
என நாவல் ஆழப்பட்டிருக்க வேண்டிய தருணங்களைத்
துரிதப்படுத்தி கடந்துவிடுகிறார் ஆசிரியர். அது புனைவின் தளத்தில்
மாறுதலைத் தராமல், முந்தைய கதைக்கோட்டிலே இழுத்துச் செல்ல வைக்கிறது.
இதற்குக் காரணம் நாவல் முழுக்க தன்னிலையில் எழுதப்பட்டதால் இருக்கலாம்.
அல்லேல் வாப்பா, நூருல்லா, சொதை மௌலானா,
கொட்டு அலி மாமா, தாவூதப்பா போன்றோர் இன்னும் நன்கு துலங்கியிருப்பர்;
பன்முகக் கோணம் வாய்த்திருக்கும். இக்குறைபாடுகளையும் கடந்து அபூவின்
மனம் தணலுக்குள் தணல் வந்து அமையாத பொழுது புனல் வந்து பொருந்துவதாய்
(ப.77) வாசக
மனதின் பகுதியாக மாறவே செய்கிறது.
அபூவிடம் முழுமை இல்லை.
முழுமையை அவன் யாசிக்கவும் இல்லை. ‘எல்லாப்
பூவுலயும் ஒக்காந்து ஒக்காந்து ஒன்னு பறக்குமே. அதான்
நான்?’ (ப.69)
என்கிறான். அனைத்திற்கும் மேல் நாவலின் மையச்சரடான அபூவின்
கலைத்தாகமே கூட இன்னும் ஆழமாகப் பதிவுச் செய்யப்படவில்லை. எத்தனை
தடுமாற்றம். ஆனால் அதை மீறியும் அபூவை உணரமுடிகிறது. தடுமாற்றங்கள் இல்லாத
நேர்க்கோட்டிலான தீர்க்கமான வாழ்விற்குப் புனைவில் என்ன இடம் என்று கேட்க வைக்கிறது.
ஐம்பதைக் கடந்த நடுத்தர அபூவிடம் அத்தகைய தடுமாற்றங்கள்
இல்லை. தனது அலைக்கழிப்பான இளமை காலத்தை
அவன் அரவணைக்கத் தவறவில்லை. அபூவின் வார்த்தைகளில்,
வாழ்க்கை என்பதே மறந்தவைகளாலும் தவறியவைகளாலும் நிரம்பியதுதான்.
அதனால் அவனிடம் தன்னுடைய இறந்தகாலம் பற்றிய புகாரில்லை.
எதை எழுத வேண்டும்?
எது புனைவாக வேண்டும் என்பது எழுத்தாளரது தீர்மானமே. அச்சுதந்திரம்
எழுத்தைக் காட்டிலும் வேர்ப்பிடிப்புள்ளது. சமரசத்திற்கு
வாய்ப்பு தராதது. ஆனால் இந்நாவலைச் செலுத்தும் விசையாகவே அபூவின் சுதந்தர
உணர்வும் கலை ஈடுபாடுமாக இருப்பதால், இளமையில் உழைப்புக்கு
அஞ்சித்தான் அபூ தன்னைப் புத்தகத் தாளினுள் புதைத்துக்
கொண்டானோ என்று தோன்ற வைக்கிறது. இறுதியில்,
மீறுதல் நிகழ்த்த ஆளில்லாதபோது ஏன் மீளவேண்டும்
என்ற நிலைக்கு (ப.117)
அபூ சென்றுவிடுவதையும் பொருத்திப் பார்த்தால், அவனது இளமைக்கால சுதந்தர
ஆவேசங்கள் அந்தந்தக் கணத்திற்கான தப்பித்தலாகவே உள்ளது.
நாவல் முழுவதும் அன்றாட வாழ்க்கையில்
உழலுபவர்களை சராசரிகள், வாழத் தெரியாதவர்கள் என்ற வசையை அபூ தொடர்ந்தாலும்,
கலையை பிடிமானமாகக் கொண்டோரை தேவைக்கு அதிகமாகப் பணம் சேர்க்கவிரும்பாதவரை,
பயணத்தில் நாட்டமுள்ளோரை பொதுச் சமூகம் பிழைக்கத் தெரியாதவன் என்று சொல்வதற்கான
மாற்றுக் குரலாகவே, அவன் சாடுகிறான் என்பதை உணரலாம்.
கசபத்துடன் கூடவே சாளை
பஷீரின் ‘தோந்நிய யாத்ரா’
என்ற பயண நூலையும் வாசித்தேன். அதை
அவர்: பணிய மறுத்தலின் முதல் குரலான எரப்புங்கல் தற்காப்புக் கலை
ஆசான், சூஃபி, பள்ளி
ஆசிரியர், வைத்தியர், பொன்னானி
அபூபக்கர் மாஸ்டர் என்ற ஆசான் அபூ சாஹிப்பிற்கு என்ற ஒருவர்க்கு
சமர்ப்பணம் செய்திருக்கிறார். அபூ, ஒரு புனைவின் குரலோ, ஆட்டோ
பிக்ஸன் கதாப்பாத்திரமோ மட்டுமல்ல என்பதற்கான சான்றாக அது உள்ளது.
கலைஞன் சமூகத்தின் சொத்து; அப்படிப்பட்டவனை சமூகமே தன் ஆஸ்திகளால் நிறைத்து மென்மேலும்
நிறைய சமூகப் பங்களிப்பில் ஈடுபட உதவ வேண்டும் என அழுந்தச் சொன்ன பிரதியாக உள்ளது,
கசபத். கசபத் என்றால் சம்பாத்தியம். அபூ எதிர்பார்க்கும்
சம்பாத்தியமும் அதுதான்.
நன்றி: மணல் வீடு, இதழ் எண்:53, அக்டோபர் - நவம்பர் - டிசம்பர் 2014
No comments:
Post a Comment