Thursday, 16 January 2025

ஒளியின் பட்டவர்த்தனங்களில் மறைந்திருக்கும் ரூபங்கள் - பெருநெஞ்சன் நூல் மதிப்புரை

 

சென்னை புத்தகக்காட்சி2025 ஐ முடித்து விட்டு ஊருக்கு வண்டியேறுவதற்காக உறவினர் இடத்தில் காத்திருந்தேன். அங்கு என்னை உபசரித்து உரையாடிக்கொண்டிருந்த விசைப்பொறிஞர், தன்னுடைய குடும்ப துயரங்களைப்பற்றி விவரித்து விட்டு நிறைவில் கண்ணீர் முட்டியவாறு இவ்வாறு சொன்னார்: “இறைவன் உன்னை நேசிக்கிறான். உன்னோடு நெருக்கமாக இருக்கிறான். அதனால்தான் உனக்கு இவ்வளவு சோதனைகள் என  எனது துயரங்களுக்கு ஆறுதல் சொல்பவர்கள் என்னைத்தேற்றுகிறார்கள். இறைவன் நெருக்கமாக இருந்தால் மகிழ்ச்சியை அல்லவா நான் உணர வேண்டும்? ஆனால் மாற்றமாக அல்லவா நடக்கிறது?. எனவே இறைவன் சற்று தொலைவிலிருந்தால் நல்லதோ என எனக்குத் தோன்றுகிறது”.

அவருக்கு சொல்லப்படும் ஆழ்ந்த ஆறுதல் எதுவும் அவரை இன்னும் கீழே தள்ளிடுமோ என்ற அச்சமிருந்ததால் எளிய  ஆறுதலை மட்டும் கைமாறி விட்டு  ஜார்ஜ் ஜோசப்பின் பெரு நெஞ்சன் சிறுகதை தொகுப்போடு ஊருக்கு வண்டியேறினேன்.



அத்தொகுப்பிலுள்ள பட்டயம் கதையில் ஒரு பத்தி இவ்வாறு வருகிறது “ நீ அவரையே வேணாம்னு சொல்லுற நிலைவரை உன்னை இழுத்துப் போட்டு உடைப்பார். தெய்வத்துக்கு ரொம்பப் பிடிச்சமான  விளையாட்டே மனுசன் மனசை உடைக்கிறதுதான் போல. உடைந்த பாத்திரத்தால ஒருபோதும் முந்தைய நிறைவைக் காட்ட முடியாது. திரும்பவும் அதுல பரம குயவன் கைய வைக்கணும். ஆனா அவனா வச்சாத்தான்!”

ஒவ்வொரு ஆன்மாவின் முன்னிலும் பேரகழியொன்று அவர்களின் வாழ்நாளின் ஒரு முறையாவது  குழித்து உண்டாக்கப்படும். அதன் மருங்குகளிலே மயங்கி மருண்டு சமைந்து போவோரும் உண்டு. ஓர் ஆட்டின் கால் கொண்டு எளிய துள்ளலில் அதைக்கடப்போரும் உண்டு.

என்னை உபசரித்தவர் அதன் மருட்சியில் உழல்கிறார் என்றால் ஜார்ஜ் கோசப்பின் பட்டயம் கதையில் வரும் ரவிதாசன் மீட்பருக்கும் நாகமுகச் சிற்பத்துக்கும் இடையேயான ஊசலின் ஆழ்ந்த மறைவிடத்தில் போய் பதுங்கிக் கொள்கிறார்.

வாழ்வின் எளிய, கனத்த ,புரிந்துக் கொள்ளக்கூடிய, மர்ம பக்கங்களால்  ஜார்ஜ் ஜோசபின் ஒன்பது கதைகளும் நிரம்புகின்றன.சில கதைகள் நம்மை இறகின் எடை கொண்டவர்களாக்குகின்றன. வேறு சில பெரும் பளுவை நம் மீது சுமத்தி விட்டு அருவத்திற்குள் கரந்து  வாசகனை வேடிக்கைப்பார்க்கின்றன.

இளவல் ஜார்ஜ் ஜோசப்பின் எழுத்துக்கள் கால நெடுங்கயிற்றின் தொங்கலில் அலையாமல் அவை தன் உன்னதங்களை நோக்கி விரைகின்றன. மொழியாக்கம்,கவிதை,கதை,திறனாய்வு,உரை என எல்லாத் திசைகளிலும் கொடி கட்டுகிறார். ஜார்ஜ் ஜோசப்.

கிறித்தவ அன்றாடங்களிலிருந்து எழும்  ஜோ டி குரூஸின் படைப்புகளுக்குப்பிறகு எனக்கு வாசிக்கக் கிடைத்தவை எளிமையும் ஆழமும் ஒருங்கேறிய ஜார்ஜ்  ஜோசப்பின் கதைகள்..”என்னணா? காபடி அரிசி கூட வைக்கப்போறேன்.அது முடியாதா என்ன?” என்ற பெருநெஞ்சனின் வரியும் “ நீங்க செனை மாடுக பின்னாடி சுத்தாம பத்திரமா வீடு போய்ச் சேருங்க”என்ற  ‘நெடி’ கதையின்  வரிகளுமாக பாசாங்கற்ற மனித மனங்களின் கருணையும் பகடியும் சிறுமையுமான இடுக்குகள் துருத்தலின்றி தங்களை உரிய இடங்களில் பொருத்திக் கொள்கின்றன.ஆங்காங்கே ஒலிக்கும் தத்துவக் குறிப்புக்கள்  முடிவற்ற தேடலுக்குள் நம்மை செலுத்துகின்றன.

சிறுபான்மை சமூகங்களிலிருந்து எழுந்து வரும் படைப்பாளிகள் பலரும் ஞான மரபு இலக்கிய மடாதிபதியிடம் ஏற்பை வேண்டி நிற்கும் அவலத்தருணமிது. தஜ்ஜாலாகிய (எதிர்க்கிறிஸ்து)  அந்த வேஷ பிராமணனனுக்கு அம்பெய்யும் அரசியல் தெளிவினாலும் நிமிர்கிறார் ஜார்ஜ் ஜோசப். தனது தொடர் எழுத்துக்களாலும் துடிப்பான செயல்பாடுகளினாலும் உன்னதமும் உயரமும் ஒருங்கமைந்த இடத்திற்கு அவர் நகரட்டும்.


பெருநெஞ்சன் நூலை வாங்கிட

 

3 comments:

  1. மிக்க நன்றி காக்கா

    ReplyDelete
  2. சிறப்பு

    ReplyDelete
  3. மிகச்சிறப்பான அறிமுகம்!

    ReplyDelete