இராமேசுவர
நெடுஞ்சாலையில் அப்படியொன்றும் நெரிசலில்லை. ஓட்டுநர் தனது டூரிஸ்டர் வண்டியை மெதுவாகத்தான் ஓட்டி வந்தார்.
பெரியபட்டினத்தில் உள்ளே தள்ளிய பொரித்ததும் ஆக்கியதுமான பாறை மீன் சாப்பாட்டின் கிறக்கத்திலிருந்து
அவர் இன்னும் விடுபட்டிருக்கவில்லை. பழகிய இடங்களின் மீதான அலட்சியத்துடன் கொப்பளிக்கும்
வெப்பமும் கூட ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.
வெய்யிலின் ஆதிக்கத்திற்கு கடல் காற்று மட்டுமே விதி விலக்காகியிருந்தது.
கமருத்தீன்
தலைமையில் இராமநாதபுரச் சீமையை பார்க்கக் கிளம்பிய பதினைந்து பேர்கள் கொண்ட பயணக்குழுவில்
ஆய்வாளர்,வணிகர்,மாணவர்,எழுத்தாளர், மருத்துவர்,பதிப்பாளர்,உயர் தரத்துக்கும் நடுத்தரத்துக்கும்
இடைப்பட்ட வாழ்க்கை வாய்க்கப்பெற்ற மனிதர்கள் என எல்லாக் கலவையும் உண்டு.
வைப்பாறு
செய்யது ஷம்சுத்தீன் தர்கா தொடங்கி வேதாளை கடலோரத்திலுள்ள போர்த்துக்கீசியரின் போர்
தடங்கள் வரை பார்த்த பின்னர் பயணத்தின் இறுதிக்கட்டமாக
இராமேசுவரத்தையும் தனுஷ்கோடியையும் நோக்கி சென்றுக் கொண்டிருந்தனர்.
“ பெயிண்ட்
டப்பா உடம்புல கவுந்த மாதிரி இங்க உள்ள முக்கால்வாசிப்பேர் ஏன் இவ்ளோ கறுப்பாயிருக்கிறாங்க?”.
தன் கேள்விக்குள் தோயும் நிற வாத நச்சை டாக்டர் ரபீக் அறியாமலில்லை. பெரும்பாலும் மூளையின்
மேல் நெளியும் புழுவிற்குத்தான் வெற்றி.
“ இங்கே முப்போகமும்
விளயுறது வெய்யிலுங்கறதுனால அதத் தாங்குற அமைப்புக்கு ஆட்களயும் ஆண்டவன் கறுப்பாவே
படச்சிட்டான். வெள்ளயா உள்ளவங்களுக்குத்தான் வெய்யிலும் வேர்வயும். இதுக்கு மேலயும்
வெள்ளய அழிக்க முடியாதுங்கறதுனால கருப்பா உள்ளவங்கள வெய்யிலால எதுவும் செய்ய இயலாது.“
தான் கேட்ட
கேள்விக்கு அலெக்ஸ் சொன்ன மறுமொழியை சரி பார்க்க
அவன் முகத்தையே உற்று நோக்கிக் கொண்டிருந்தான் டாக்டர் ரபீக். அலெக்ஸோ பாம்பன்
பாலத்தை வேடிக்கை பார்க்கத் தொடங்கியிருந்தான்.
புதிய இரயில்
பாலத்திற்காகக் கட்டப்பட்ட தூண்களுக்கிடையே கடல் இளம் பச்சை நிறங்கொண்டு கிடந்தது.
சரிகை பிணைந்த தீ நிறக்கொடி கொண்ட இராஜஸ்தான்
பதிவெண் வண்டியை பாலத்தின் நடுவில் ஒதுக்கி
நிறுத்தியிருந்தனர்.
நான்கு மணிக்கு
பிறகு தனுஷ்கோடிக்குள் ஊர்திகளை காவல்துறை உள்ளே விடாது என்பதால் வண்டிக்குள்ளிருந்த
யாருக்குமே இராமேசுவரம் தீவின் நிலப் புதினங்களை
கவனிக்கத் தோன்றவில்லை.இலக்கை சென்றடையும்
அவசரம் எல்லோரையும் ஓசையின்றி கவ்வியிருந்தது. இராமேசுவரம் நகரின் பரபரப்பு அடங்கி
தனுஷ்கோடிக்கான தார்ச்சாலையின் இரு பக்கவாட்டுகளில் குவிந்து கிடக்கும் வெண் மணல் குன்றுகளிலிலிருந்து
இசையூற்றாக பீறிடும் மௌனம்.
ஏகாந்த வானமும்,
பூச்சி முள் காடுகளும் உப்பு வனத்தை படைத்திருந்தன. எவ்வளவு பேர்கள் சூழ்ந்திருந்தாலும் சரி அதையெல்லாம் கணக்கிலெடுக்காமல்
பாய்வதற்கான தருணங்களுக்காக மட்டுமே காத்திருக்கும் வேட்டை விலங்கின் முன் தனித்து
விடப்பட்ட ஒற்றை மனிதனின் நிராதரவை மட்டுமே
தரும் ஈரமற்ற வனம்.
துருவின்
மணம், கறுப்பு வெள்ளை திரைப்படக்கால பாடல்களின் ஏக்கம் தகிக்கும் தாளம், வெளிச்சத்திலிருந்து
வேறுபட்டு நிற்கும் இரவின் தனிக்கண்டம், திணிக்கப்பட்ட பல பத்தாண்டுகளின் தனிமை என
அனைத்தின் கீழுமாக மொத்த மணல் வனம்.
பயண ஏற்பாட்டாளர்கள்
வாட்சப்பில் அனுப்பியிருந்த தனுஷ்கோடியின் வரலாற்றை வண்டியிலிருந்த எல்லோருமே வாசித்திருந்தபடியால்
அனைவருக்குள்ளும் ஐம்பத்தொன்பது வருடங்களுக்கு முன் நடந்த அந்த கடற்கோள் துயரம் ஏதோ
ஒரு விகிதத்தில் பற்றிக்கொண்டிருந்தது. இறந்தவர்களை
எண்களின் கூட்டலாகச்சொல்லித்தான் அன்று செய்திகள் கடந்திருக்கும். ஒவ்வொரு மனிதரும்
எண்களுக்குள் குறுக்கவியலாத ஓரோர் உலகமல்லவா?
கடலின் பேரலைகளில்
அடித்து செல்லப்பட்ட பாசஞ்சர் இரயிலுக்கு கடைசியாக
சமிக்ஞை அளித்த நிலைய அலுவரின் நேர்காணல், இரவும் பகலும் நீடித்த மழை புயல் கடல் சீற்றத்தில்
மாட்டிய ஆயிரக்கணக்கானோரில் சில பத்து பேர்களை மட்டுமே காப்பாற்ற முடிந்த நீச்சல் காளியின்
கதை, கண்டி மகராசன் என்ற பாசத்தினாலேயே எம் ஜி ஆரின் புதுப்படம் வெளியானவுடன் அதைப்பார்ப்பதற்காக
கழுத்தில் எம் ஜி ஆர் பாணியில் துண்டைக்கட்டிக் கொண்டு தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடிக்கு
நீந்தியே வந்த கல்லாறு தோட்டக்காட்டான், என அந்த பெருந்துயரத்திலிருந்து கிளைத்த விதம் விதமான கதைகளிலிருந்து 1995இல் நடந்த கூரியூர் ஜின்னா கொலைப்படலம் வரை
யாருக்குமே பேசித்தீரவில்லை. “இந்தக்கதய்கள பேசுறதுக்கே பல தடவ தனுஷ்கோடிக்கு வரணும்
போல” வண்டிக்குள்ளிருந்து ஒலித்தது ஒரு குரல்
.
அந்திக் கதிரவனின் மஞ்சள் ஒளியினாலும் கூட மணல் திட்டுக்களின் வெண்மையை குன்ற வைக்க இயலவில்லை. வழியில் இரண்டு கட்டணச்சாவடிகளைக் கடந்த பிறகே ஓட்டுனர் வாய் திறந்தார். சிகரெட்டை பற்ற வைத்துக் கொண்டே “ பொரிச்ச மீனுக்கும் தேங்காப்பால் ரசத்துக்கும் சொக்கலேன்னா அவனோட ஒடம்புல ஏதோ ஒன்னு சரியில்லேன்னுதான் அர்த்தம்”. வண்டிக்குள் நிலவும் உலகத்திற்கும் அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை பறைசாற்றும் சொற்கள்.
தனுஷ்கோடியின்
விளிம்பை எட்டி விட்டதற்கு அடையாளமாக நிறைய சாலையோர சர்பத் கடைகள் நின்றிருந்தன. ஓட்டுநர்
வண்டியை ஓரங்கட்டுவதற்குள் வாசலுக்கு விரைந்த கமருத்தீன் இரு கைகளாலும் வண்டியைப்பிடித்துக்
கொண்டு வெளியில் தொங்கியவாறே தன் இரு கால்களையும்
வெண் மணல் பரப்பில் பூவாகப் பதித்தான். “ தொங்கறதுலாம் சர்த்தான் சக்கரத்துக்குள்ள
போய்ராதீங்க. அப்றம் பழய துணிய பிச்சி எடுக்கற மாதிரிதான் எடுக்கணும்.” என்ற ஓட்டுநர்
மீதி சொற்களை தனக்குள் முணுமுணுத்தார்.
மணலில் தன்
இரு பாதங்களையும் சேர்த்து வைத்ததின் தடங்களை
செல்பேசியில் படம் பிடித்தவாறே ‘ இராமர் பாதம் சீதை பாதம் மரைக்காயர்பாதம் சேவியர்
பாதம் வரிசயில இதோ இங்கே இந்த கமருத்தீன் பாதம். எம் பாதவடி நோக்கியவருக்கு செக்கர்
சொக்கன் சித்திக்கும்” என வண்டியிலுள்ளோரைப் பார்த்து சிரித்தான் கமருத்தீன். அந்த
பாத தடங்களின் தலையில் வண்டிக்குள்ளிருந்து காறலுடன் எச்சில் போய் விழுந்தது. “ பாத
காணிக்க சரியாத்தான் உழுந்திருக்கு போல” என்ற ஓட்டுநரின் உற்சாகக் குரலை ஒட்டு மொத்த பயணக்குழுவே வண்டியதிர
வழிமொழிந்தது.
அரிச்சல்
முனை வரை போய் கடலில் கால் நனைக்கும் முன்னர் புனித ஆண்டனி தேவாலயத்தின் இடிபாடுகளுக்கருகில்
கொஞ்ச நேரம் உட்கார்ந்து பேசி விட்டு செல்லலாம் எனத் தீர்மானமாகியது.
டாக்டர் ரபீக்
அருகிலுள்ள கடைக்கு போய் அனைவருக்கும் சர்பத்துக்கு சொல்லி விட்டு வர தனுஷ்கோடியுடனான
தனது பழைய நினைவுகளை பகிரத் தொடங்கினான் அலெக்ஸ் . தனுஷ்கோடியின் மீது விழுந்து இறுகியிருக்கும்
உப்பும் மணலுமேறிய முடிச்சுக்களை முழுதாக அவிழ்த்தவர்
என எவருமில்லை. தனுஷ்கோடியை தின்று தீர்த்த கடற்கோளின் செய்தியே அரசின் தலைக்கு மூன்று
நாட்கள் கழித்துதான் எட்டியிருக்கிறது.
முழு நிலவு
நாளாகப்பார்த்துதான் தனுஷ்கோடிக்கு வர வேண்டும். அப்படியான ஒரு நாளில்தான் கடலுக்கும்
கரைக்கும் வித்தியாசமிருக்காது. அழிவும் அழிவினால் தின்னப்பட்டவனும், மானும் புலியும் அருகருகே அமர்ந்து சொன்ன கதைகள் எதுவும் அச்சிலும்
செவியிலும் உள்ள கதைகளுக்கு நிகரில்லை. ஒரு முழு நிலவு நாளில் தான் இங்கு வந்திருந்தபோது கட்டிட மிச்சங்களும் கடலின் தீரா
முழக்கமும் ஒரு வகை நனவு மயக்கத்தை தனக்கு உண்டுபண்ணியதாக கூறிய அலெக்ஸ் “நரை முடிக்கு கருஞ்சாயமடிப்பதைப்போல அரசாங்கம்
தார் ரோட்டப்போட்டு எல்லாத்தயும் இல்லாம ஆக்கிடுச்சி” என்ற பெரும் விஷயத்தை சிறு சலிப்பாக
குறுக்கிச் சொன்னான்.
ஏழு வருடங்களுக்கு
முன்பு முகுந்தராயர் சத்திரம் வரை மட்டுமே சாலை இருந்தது. அங்கிருந்து தனுஷ்கோடிக்கு
மரப்பலகை இருக்கைகளும் பிடிமான கயிறும் கட்டிய டிரக்குகளில்தான் போக வேண்டும். பள்ளமும்
மேடுமான கெட்டிப்பட்ட மணல் தடங்களில் ஒட்டகத்தைப்போலவே அசைந்து செல்லும் அந்த டிரக்குகளும்
தனுஷ்கோடியிலிருந்த கடற்படை கண்காணிப்புக்
கோபுரம் வரைதான் செல்லும். அதன் பிறகு நிலத்தின் ஒடுக்கம்.
பகல் பொழுதுகளில்
மண்ணும் நிலமுமாக காட்சியளிக்கும் பகுதிகளில் பகல் மீது கவிழும் இருள் திரையின் அதே
கால அளவிலும் துல்லியத்திலும் .கடல் நீர் படர்ந்து விலகும் அர்த்த அத்வைதம்.
காலங்காலமாக
தன் மீது ஊர்ந்த மனிதர்களை வெண்ணெய்யில் இழுபடும் மயில் பீலியாக உணர்ந்திருந்த கடலின்
நெருப்பு முகம் அந்த ஓரிரவில் என்றுமில்லாதபடிக்கு வெளிப்பட்டது. கடலொன்றும் சட்டென கோபம் காட்டிடவில்லை.
இரண்டு நாட்களாகவே கடலுக்கு குணக்கம். வந்த
வேகத்திலேயே நீங்கி விடக்கூடிய குழந்தையின் சள்ளமை என இலேசாக அதை எடுத்துக் கொண்ட தனுஷ்கோடிக்காரர்களின்
நினைப்பிலேயே இரண்டு காலைகளும் இரவுகளுமாக பொழுதுகள் கடந்திருக்கின்றன.
பேரழிவின்
இரவில் கடலின் குரல் பெருத்த மாற்றம் கண்டிருந்தது. ஆயிரம் வேட்டை விலங்குகளின் தகிக்கும்
மூச்சையும் கூர் வளை நகங்களையும் கொண்ட ஆங்காரம். மதம் சொரிந்த புனல் துளைகள். மக்களின்
இராத்தூக்க உன்மத்தம் தெளிவதற்குள் நீர் மேலாகவும் நிலம் கீழாகவும் புரண்டிருந்தன.
இரை முழுவதுமாக வீழ்ந்திருந்தது. அந்த இறுதி
இரவில் கூனி மாரியம்மன் கோயில் மணல் குன்றில் ஏறியவர்கள் மட்டுமே மிஞ்சினர்.
அலை வட்டம்
போல பழைய கதைகளை ஒவ்வொருவரிடமிருந்தும் தொட்டு தொட்டு பேச்சு விரிந்து கொண்டிருந்தது. தோசியின் புளிப்பும் இனிப்புமான நினைவுகள். சிதிலமடைந்த
தேவாலயத்தின் முன் மண்டியிட்டு பிரார்த்தித்துக் கொண்டிருந்த நடுத்தர வயதுக்காரரிடமிருந்து
விசும்பலொன்று எழுந்து அடங்கியது.
வானம் பார்த்துக்கொண்டிருந்த
தேவாலய மாடத்தின் அழகிய கண்ணாடி குடுவைக்குள் காற்றையும் வெளிச்சத்தையும் சமன்படுத்திக்
கொண்டிருந்த மெழுகுத்திரிச்சுடர்.
தேவாலயத்தின்
அருகிலிருந்த வீசா அலுவலகத்தில் முத்திரை குத்துவதற்கு
முன்னர் அலுவலரின் வாயிலிருந்து ஊறிய செந்நிற எச்சிலுடன் வெற்றிலை சக்கையும் துளி நேர இடைவெளியில் கடவுச்சீட்டின்
மேல் ஒன்றன் பின் ஒன்றாக விழ கப்பல் பயணி சிங்க
வெறியுடன் அலுவலர் மீது பாய்ந்து இருவரும்
கட்டி உருண்டிருக்கின்றனர். இதனாலேயே தலை மன்னாருக்கான ஆர்எம்எஸ் இராமானுஜம்
படகு புறப்படுவதில் அரை நாள் தாமதம்.
“ போலோ ராமச்சந்திர
மூர்த்தி ஜீ க்கீ…” என வெள்ளி துல்லிய இராகத்துடன் இழைந்த ஒற்றைக்குரலை “ஜய்“ என பின்
தொடர்ந்தன கொத்துக்குரல்கள். வேட்டியை இழுத்து பின்புறம் செருகியிருந்த இந்திக்காரர்களின்
பக்தி முழக்கத்தில் உரையாடல் தடைப்பட, பயணக்குழுவின் மொத்தக் கவனமும் அக்கும்பலின்
பக்கம் திரும்பியது. குழுவின் தலைவன் என்பதால் பேச்சின் சுவாரசியங் கலைந்ததின் எரிச்சலை
தொண்டைக்கு கீழாக இறக்கி மடித்து வைத்துக் கொண்டான் கமருத்தீன்.
கடலை நமஸ்கரித்து
விட்டு அதன் நீர்ச் சொட்டுகளை தலையிலும் நாவிலும் தெளித்து விட்டு கையிலிருந்த செப்புக்
கலயத்தில் அலையின் நுரையை முகர்ந்த இந்திக்கார ஆண்களில் சிலர் கடலில் இறங்கி தீர்த்தமாட முனைந்தனர். அவர்களை
பணியிலிருந்த காவலர்கள், தங்கள் கைகளாலும்
விரல்களாலும் சவத்திற்கான சைகையை பலமுறை காற்றில் வரைந்து காட்டி தடுத்தனர்.
இவை எல்லாவற்றையும்
வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த இந்திக்கார இளைஞர் ஒருவரைக்கூப்பிட்டு அலெக்ஸ் உரையாடத்தொடங்கினான்.
இந்தி பெண்களோ குழுமி நின்று கடலைப்பார்த்துக் கும்பிட்டுக் கொண்டே முரண்பட்ட இராக
இலயங்களுடன் பஜனைகளை பாடத்தொடங்கினர்.
“பாய் சாஹிப்
நமஸ்கார்!
“ஹா ஜீ நமஸ்கார்”
“எந்த ஊரு?”
“ரோஹ்தக்”
“மாநிலம்?”
“ஹரியானா”
“ஒங்க ஊர்ல
கடல் உண்டா?”
“இல்ல”
“ஏன் இல்ல?”
“கடல் இல்லேனா
இல்லேதான்”
“ஏதாவது ஏற்பாடு
பண்டக்கூடாதா?”
“ நாம்போ
ஒண்டியா என்னா பண்ட முடியும்? சர்க்கார்தான்
ஏற்பாடு பண்டனும்’
“கடல ஒங்க
வாழ்நாள்ல எத்தன வாட்டி பாத்திருப்பீங்க?”
“அஞ்சு தடவ”
“அஞ்சு தபாவும் இங்க வந்தா பார்த்தீங்க?”
“இல்லல்ல.
கேரேளாவுலயும் பாத்தோம்”
“ இப்படி
ஒவ்வொரு தடவயும் இவ்ளோ தொலைவு வந்து கடல் பாக்குறதுக்கு ஒங்க ஊர்லயே ஒரு கடல வெட்ட
ஜீயிடம் சொல்லலாமே”?
தீவிரம் குன்றா செவலை ஏறிய முகத்துடனிருந்த அந்த இந்திக்காரர்
“ நாங்க சொன்னாலும் சொல்லாட்டியும் ஜீ கட்டாயம்
அத செய்வார்”.
அடுத்த அரை
மணி நேரமும் இதைச்சுற்றியே கிண்டலும் சிரிப்புமாக
வளர்ந்த பேச்சுக்களின் முத்தாய்ப்பாக டாக்டர் ரபீக் சொன்னான்” விறகு நன்கு காய்ந்திருப்பதினால்தான்
நெருப்பு நின்று எரிகிறது”. கொத்தாக எழுந்து ஆமோதித்தது சிரிப்பு
கமருத்தீனுக்கு
இந்த வலுக்கட்டாய பகடி பிடிக்கவில்லை. தற் கணத்தின் அம்பை எய்பவன் அவன். பயணத்தின்
நோக்கம் திசை திரும்புவதாகத் தோன்றியது. யாரையும் ஓரளவிற்கு மேல் கட்டுப்படுத்தவியலாது.
முடிவில் பயணத்தின் மகிழ்ச்சி குலைந்து விலகல் மட்டுமே மிச்சமென்றாகி விடலாகாது என்பதில்
கவனமாக இருந்தான். இக்கூட்டத்திலிருந்து அவன் சற்று தள்ளி நின்றவனாக கடலலைகளின் முட்டுதலை
புதியதாக பார்ப்பது போல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.
லிங்க வடிவில்
அமைக்கப்பட்டிருந்தது சாலையின் முடிவு. அதன் பீட இதழின் கீழ் பக்கம் உள்ள சிறிய இடைவெளியின்
வழியே ஆட்கள் கடல் பக்கம் இறங்கிக் கொண்டிருந்தனர். அது அரிச்சல் முனையின் கடைசி புள்ளி.
நிலமும் கடலும் தொடங்கும் முட்டுச் சந்தி. முத்திசையின் வடக்கு பக்கம் மட்டுமே அமைதி கொள்ள கிழக்கும் தெற்கும் தலையை சிலிர்த்துக்
கொண்டு காளைகளின் மூர்க்கத்தோடு பொருதிக் கொண்டிருந்தன. ஒரு பார்வைக்கு ஒன்றையொன்று
துரத்தி களி கொள்ளும் வெறிநாய்க் குட்டிகளின் முகச்சாயலுங் கூடத்தான்.
கடற்கரை மணலை
அள்ளி தன் கை முட்டிகளுக்குள் குலுக்கினான் கமருத்தீன். கதிரவன் தன் ஒளிக் கடிகைகளில்
இறுதி சொல்லை நழுவ விட்டுக் கொண்டிருக்க உறக்கம் கெட்ட நள்ளிரவில் வாசித்த ஒரு கவிதை
மணல் வெளியில் படர்ந்தது.
‘’தனிமையில்
விரியும்
சொற்களுக்கு
மூச்சே
எழுத்து
கடல்
மடிப்புகளே
ஏடுகள்
அடுக்கி
அடுக்கி
கடல்
அளைகிறது
நுழைவுக்குப்
பின்
சந்தம்
இரு
மருங்கிலும்
மணல்
வளர்க்கிறது
குடுமிகளாய்
மரங்கள்
காற்றின்
வேகத்தோடு
மூச்சை
மறக்கிறது
தனிமையின்
நிழல் மெல்லும்
ஒளி
ஒரு
சூரியப்பருவதமாய்
என்
குறுக்கே
சரிகிறது’’
பஞ்ச பூதங்களை அவிழ்த்து பார்த்தாலும் சொற்கள் மட்டுமே எஞ்சும். ஆனால் மனிதர்கள் நிற்கும் நிலத்திற்குள் மட்டும்தான் அத்தனை வாழ்க்கைகள் செறிந்திருக்கின்றன.
மரமானது காற்றை வருடி வெய்யிலை உண்டு நீரருந்தினாலும் அதன் வேர் நிலத்தில் மட்டும்தானே
ஊன்றியிருக்கிறது. தன் ஆதிக்க எல்லைக்குள் கடல் ஆர்ப்பரிப்பதைப்போல நிலம் கூத்தாடுவதில்லைதான்.
தனுஷ்கோடி ஒரு அழிவின் மணல் புத்தகம். அதன் உள்ளே முடிவில்லாத கதைகள் எழுதப்பட்டிருக்கின்றன என்ற ஓர் எழுத்தாளனின் சொல்
சத்திய வாக்காக அல்லவா பலித்திருக்கிறது?
சுனாமியின்
போது தனுஷ்கோடியில் கடல் பின் வாங்கியிருக்கிறது.
அது முன்னர் உண்டு செரித்ததின் தடங்களில் அறுபது வருடங்களுக்குப்பிறகு கதிரவனின் வெளிச்சம் விழவும் . “ அய்யோ! ஏன் ராசா குளிச்ச
கெணறு.” என தலையிலும் முகத்திலும் மார்பிலும் மணலையும் நீரையும் வாரியிறைத்த எழுபத்தைந்து
வயது கிழவிக்கு அதன் பிறகு சித்தம் தெளியவேயில்லை.
இராமனுடைய
வில்லால் கீறப்பட்ட நிலம், ஆதம் பாவா மலையை
நோக்கி நீளும் ஆதம் பாலம், ஒன்றரை தலைமுறையை சாட்சியாக்கிய இலங்கைப்போர், கரை ஒதுக்கப்பட்ட
ஏதிலிகள், மாசி தொடங்கி மாணிக்கம் வரை அக்கரையில் விற்று இக்கரைப்படகை நகர்த்திய தமிழ் நாட்டு வாப்பாமார்கள்.
இலங்கை வானொலியையே
கேட்டு வளர்ந்தவர்களுக்கு அகில இந்திய வானொலி ஓர் அந்நிய ஒலி மாசு.இக்கரையில் ஒருத்தி
வருடங்களை நாட்களாக்கிக் காத்திருக்க அக்கரை ஒருத்தியின் கை வளைவிலிருந்து ஒரு போதும்
விடுவிக்கப்படாத மாப்பிள்ளைகள்/வாப்பாக்கள்.தேயிலைத்தூளின் மணமேறிய ராணி சோப்பு, பட்டை
கருவா பழுப்பு காகித சுருளுக்குள் ஒளித்துக் கிடக்கும் கண்டோஸ் சாக்லேட் வில்லைகளிலான
உலகங்களுக்கு சென்னை இன்னொரு நாடுதான்.
எத்தனைக்
கதைகள் எத்தனை வாழ்க்கைகள். அக்கரை வாழ்க்கையின் ஒரே இக்கரை சாட்சியான தனுஷ்கோடிக்கு
எத்தனை முகங்கள்?இன்றிருக்கும் கடலுக்கு இந்த செய்திகளும் கதைகளும் தெரிந்திருக்குமா?எல்லாவற்றையும்
தின்று செரித்து விட்டு ஒன்றும் அறியாதவனைப்போலக் கோலம் .
கடல் கோள்
நிகழ்ந்ததிலிருந்து நான்கு ஆண்டுகளுக்கு பிறகு
பிறந்த கமருத்தீனுக்கோ தனுஷ்கோடி என்பது அவனது
ஒளி மங்கிய இளம் வயது வாழ்வின் மறையா சாட்சி.
உம்மாவின் இருபத்தைந்தாம் வயதில் பயணம் சொல்லி விட்டு தனுஷ்கோடி வழியாக இலங்கை சென்ற வாப்பாவை கம்பு ஊன்றிய காலத்தில் காத்தான்குடியில்
பார்த்ததாக ஒருவர் வந்து சொல்லவும் வெள்ளைப்புடவை உடுத்தி இத்தா இருந்த உம்மா. அப்போது
அவனுக்கு வயது எட்டு. காற்றின் வேகம் பெருகி எங்கும் மண் சொரியலாயிற்று. அலைகள் நுரைத்தும் ததும்பியும்
கொண்டிருந்தன.
மேகத்திலிருந்து
பாய்ந்திறங்கும் நீர்ப்பறவை கடலின் அலை மடிப்புக்குள்ளிருக்கும் தங்களின் பளபளப்பேறிய
மஞ்சள் சொண்டால் மீனைக் கொத்துவது போல எல்லாக்கதைகளிலிருந்தும் கமருத்தீனின் மனம் நல்லதோ கெட்டதோ வாப்பாமார்களின் கதையைத்தான் தேர்வு கொள்ளும். உம்மா
கட்டிக் கொடுக்கும் தட்டளவுள்ள இடியாப்பத்திற்கு கூனி மாசி வைத்து கட்டிய பொட்டலத்துடன்
புறப்படும் வாப்பா தோணியேறிப் போன காலங்களின் மங்கிய நினைவு,சென்னை எழும்பூரிலிருந்து
கொழும்பு கோட்டை வரை போட் மெயிலில் ஒற்றை பயணச்சீட்டில் தொடர்ந்த பயணங்கள், அப்பயணங்கள்
ஊட்டிய எத்தனையோ வாயும் வயிறுகளும்.
தன் சொந்தக்
கசப்பு திரவத்திற்குள் மனத்தை ஊற விடாமல் இருளும் ஒளியும் ஒரே வில்லையின் இரு பக்கம்
என்ற தத்துவார்த்த உண்மையைக் கொண்டு அதை மீட்கும் அளவிற்கு வாழ்க்கை கமருத்தீனை முதிர
வைத்திருந்தது.
என்றாவதொரு
நாள் இங்குள்ள தரை,மண்,நீர் இவையனைத்தையும் எழுத வேண்டும் என அருகிலிருக்கும் ஒருவரிடம்
சொல்வது போல் சொன்னான் கமருத்தீன்.நினைப்பிற்கு சொல் சாட்சி.சொல்லிற்கு அருவம் சாட்சி.
எழுதப்படாமலிருக்கும் எழுதப்படவிருக்கும் கதைகள் அவ்வளவுமே அருவங்கள்தான். மனிதனுக்கு
மனிதன் சாட்சி அருவமானாலும் உருவமானாலும் கதைகளுக்கு கதைகள்தான் சாட்சி. தனது சொல்லை
செப்பு சேகர நீராக பத்திரப்படுத்திக் கொண்டான் அவன்.
கடல் கோளுக்குப்பிறகு
எஞ்சிய வாழ்வு,சாவு கதைகளை தார்ச்சாலை போட்டு
அரசு கொன்ற விதம் அவனின் நெஞ்சுக்குழி வரை
கசந்தது. இதற்குப்பிறகு இங்கு வருவதற்கில்லை என்ற திடத்துடன் தார்ச்சாலை மினுமினுப்பின்மீது
எச்சில் கூட்டி உமிழ்ந்தான்.
இருள் ஏற
ஏற அலைகள் மூர்க்கங்கொள்ளவும் அலைவாய்க்கரையில் நின்றவர்களை காவலர்கள் ஊதல் ஒலித்து
கரையேறுமாறு அழைத்தனர். அமாவாசை இரவுகளில்
தலைமன்னாரின் கலங்கரை வெளிச்சம் தனுஷ்கோடிக்கு தெரியுமாம். “ இப்ப வெளிச்சம் தெரியுதோ
இல்லியோ, இந்தா பாரு செல் போன. சிலோன்ட டயலாக், மொபிடெல் டவர் காட்டுது. டெக்னாலஜிக்கு
கடலாவது மணலாவது” என டாக்டர் ரபீக் தன் ஒளிரும்
செல்பேசி திரையை எல்லோருக்கும் காட்டினான்.
இராமநாதபுரத்தில்
இரவுணவோடு பயணம் நிறைவதற்குள் தன் கைவசமிருக்கும்
மீதமுள்ள இலங்கைக் கதைகளை அவிழ்த்து விட தீர்மானித்தான் கமருத்தீன். காலத்தில் சொல்லப்படாத
கதைகளுக்கு பழங்கஞ்சியின் கதிதான்.
வண்டியின்
நடுவே நின்றவனாக “ஒயா கவுஸ் நானாகே புதானே?”
இதை மூன்று முறை திரும்ப திரும்ப ஒலித்தான் கமருத்தீன். வித்தைக்காரரின் இலாகவத்துடன்
ஒலித்த குரலில் எல்லோரின் கவனமும் அவன் பக்கம்
திரும்பியவுடன் கதை அதன் போக்கில் ஒழுகத்தொடங்கியது.
தொப்புள்
வரை நீண்டிருந்த தன் தாடியின் நிறத்திற்கேற்ப தலைப்பாகையும் அணிந்திருந்த கமருத்தீனுக்கு
சிங்களத்தில் காற்புள்ளி கூடத் தெரியாது.தனது வாப்பாவைத்தான் ஏதோ அவள் கேட்கிறாள் என்பதை
ஊகித்தவனாக மொத்த சதுரமும் குலுங்க “ ஹாங் ஹாங் “ என்றான்.
தேங்காய்
நெற்றுக்களை உரித்துக் கொண்டிருந்த அந்த சிங்கள மாதுக்கு வயது எழுபதைத் தாண்டியிருக்கும்.
அவள் கைப்புஜ நாண்களின் புடைப்பையும் தணிதலையும் இரக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தவனை
ஓலைத்தட்டிக்குள் கிடந்த புட்டுவத்தை இழுத்து
போட்டு ‘இந்த கன்ன மொதலாளி” என தலை தணித்து
வியப்புடன் புன்னகைத்தாள்.
கையிலிருந்த
தேங்காய் நெற்றைத் தரையில் போட்டவள் தலை முகம்
கழுத்தின் வியர்வையை கழுத்தில் கிடந்த துவாலையால் துடைத்தாள். ‘ ஒங்கட வாப்பாவ
மிச்ச காலமா தெரியும். அவர் எங்கட சொந்த ஆள்” என தன் கண்களை அகல விரித்தவள் அடுத்த
சொல்லைத் தொடங்குவதற்கு முன் மாங்காய் படம் போட்ட மூட்டாத தன் சாரத்தை விரிய அவிழ்த்து
உதறி கட்டினாள். தலை புரண்ட கமருத்தீன் அப்படியே முழு வட்டமடித்து சூரியனைப்பார்த்து
திரும்பி நின்றான். அந்த சமயத்தில் தனக்கு அடித்த நாறப் பாக்கின் வாசம் இன்னும் தன்
மூக்குக்குள் ஒட்டிக்கொண்டிருப்பதை இப்போதும் பின்னாட்களில் பல முறையும் நினைவு கூர்ந்தான்.
கொழும்பிற்கும்
கண்டிக்கும் போகும் வழியிலுள்ள கேகாலையில்தான் கவுஸ் நானா, அதாவது கமருத்தீனின் வாப்பா
பலசரக்கு கடை வைத்திருந்தார். யாளி கூரை வேயப்பட்ட இரண்டு கடைகள் அவருடையது. இன்னொன்றை கிட்டங்கியாக
பாவித்து வந்தார். தேங்காய், பாக்கு உள்ளிட்டவற்றை கொள்முதல் செய்து கொழும்பில் போய் விற்ற கையோடு மளிகைப் பொருட்களை வாங்கி உள்ளூரில்
விற்பார். வாப்பா சிலோனை விட்டு வந்து கன காலமானாலும் அங்குள்ள கதைகளின் மங்காத கீர்த்தியினால்
உந்தப்பட்டு வாப்பாவின் நிழலுக்குள் மறைந்திருக்கும் கதைகளைத் தேடி கமருத்தீன் சென்ற
போது நடந்ததுதான் இந்த பாக்கு வாச நிகழ்வு.
வேலைக்கு
வரும் பெண்களிடம் கவுஸ் நானா மிகவும் இரக்கமானவர் என்றும் கைமாற்று வாங்கினால் கூட
அதை சம்பளத்தில் கழிக்க மாட்டாரென்றும் அவர் பற்றிய செய்திகளை சரம் சரமாக இறக்கி விட்ட
சிங்கள மாது, “ அவர் அந்த வயசுல எவ்ளோ அழகா ஈப்பார் தெரியுமோ?”. வாள் வீச்சு போல உயரம்,
பிடரியில் விழும் சிங்க முடி, தமிழ்ச்சுவையோடு சிங்களம் பேசும் அழகு என சொல்லிக் கொண்டே
போனவள் “ அவர் எங்கட ஊட்டுல செய்யுற பால் மீன் ஆணத்ததான் ரொம்ப இஷ்டமா சாப்புடுவாரு”
என அரை நொடியின் வெட்டில் நாணி மீண்டாள்.
கமருத்தீனுக்கு
வரும் திருமண பேச்சுக்கள் தட்டிப்போகும்போதெல்லாம் அவன் உம்மா தன் கணவரிடம் “ நீங்க
சிலோன்ல செஞ்சுட்டு வந்த பாவங்கள்னால ஏம்புள்ள கண் கிருஸாயிட்டு” என நாள் முழுக்க சண்டையிட்டு ஓய்வாள்.
வாப்பா செய்த
மீதி பாவம் என்ன என்று வாப்பா மீது உம்மா கடுங் கோபமாயிருந்த ஒரு நாளில் கேட்டான் கமருத்தீன்.
கொழும்பிற்கு அனுப்பி வைத்த தேங்காய்களுக்கான
கணக்கைக் கூட்டும்போது கணக்குத்தாளில் உள்ள தேதியையும் சேர்த்தே கூட்டி கூட்டிதான்
வாப்பா குலசேகரப்பட்டின வீட்டை கட்டினதாக உம்மா அவிழ்க்கக்கூடாத கதையொன்றின் முடிச்சை
அவிழ்த்தாள்.
உள்ளும் புறமும்
துப்புரவாக வெந்த முட்டைக்கோழி றோஸ்ட், காடை புரியாணி,கொத்து ரொட்டி, இறைச்சி சமூசா,
ஃபாலுதா உள்ளிட்ட நாக்குக்கு உருசியான தமிழ்நாட்டின் கிழக்கு கடற்கரையோர உணவு வகைகளை கொழும்பில் முதன்முதலில் அறிமுகப்படுத்தியது
ரிக்கற் சல்லி கூட எடுக்காமல் கவுஸ் நானா கூட்டிக் கொண்டு போன ஆறாம்பண்ணைக்கார கோக்கிதான்.
கவுஸ் நானாவின்
மவ்த்திற்கு ஃபிளைட் ரிக்கற் போட்டு வந்த ஓட்டமாவடி
ஈட்டிங்க் ஹவுஸின் உரிமையாளர், கவுஸ் நானாவின் மூன்றாம் நாள் கத்தத்தில் பங்கெடுத்தவர்களுக்கு
துரியான் பழச்சாறுடன் கைமடக்காக ஓரோர் ஆளுக்கும்
இந்திய சல்லியை உறையிலிட்டுக் கொடுத்தார்.அந்த உறையானது மாலு பன் கனத்திற்கு
இருந்தது.
கேகாலைக்கு
போன இடத்தில் வாப்பாவைப் பற்றிய புதிய பால்
மீன் ஆண கதையொன்றை அறிய வந்த கமருத்தீனுக்கு ‘ இவ்ளோ தொலய்வு வந்துட்டு அங்க போவலன்டா
சரிவராது” என தீர்மானித்தவனாக கூட்டமில்லாத நேரமாகப்பார்த்து ரம்புக்கனபுகையிரத நிலையத்திற்கு சென்று மட்டக்கொழும்புக்கு
என டிக்கட் கேட்டிருக்கிறான்.
கவுண்டரில்
இருந்தவர் சிங்களத்தில் ஏதோ சொல்ல இவன் ஆங்கிலத்தில் சொல்லும்படிஅவரிடம் கூறவும் மட்டக்களப்பு
என்பது கிழக்கில் உள்ள இடம். கொழும்பு என்பது
நாட்டின் தலைநகரம். இரண்டும் வெவ்வேறு
நகரங்கள் என்பதையும் இரண்டிற்குமிடையே முன்னூறு கிலோ மீட்டர்களுக்கு மேல் தொலைவு
என்பதையும் கண்ணிலிருந்த புன்னகை மாறாமல் அவனுக்கு விளக்கினார் அவர்.
வண்டி இராமநாதபுரம்
பழைய பேருந்து நிலையத்தின் வாயிலருகில் ஆட்களை இறக்கும்போது கமருத்தீனை அருகே அழைத்த
ஓட்டுநர் “ தனுஷ்கோடிலேந்து ராம்நாட் வரய்க்கும் இப்போ நான் ஓட்டி வந்தது கப்பல்தேன்”
என அவனுக்கு மட்டும் விளங்கும்படி சொல்லி விட்டு இருக்கையில் போடப்பட்டிருந்த வெண்
துவாலையை துடுப்பின் இலாகவத்துடன் உருவியெடுத்து உப்பு நீர் திவலைகள் தெறித்திருந்த
தன் உருண்டு கறுத்த நெய் பன் முகத்தினை அழுந்தத் துடைத்தார்.
சொல் விளக்கம்
சள்ளைமை – நோய்
தோசி – உப்பு, மிளகாய்த்தூளிட்ட புளிப்பும் இனிப்புமான பிஞ்சு பழக் கலவை
இத்தா -- கணவனை இழந்த பெண்ணின் காத்திருப்பு காலம்
கூனி மாசி
– உலர்த்தப்பட்ட கூனி இறாலில் தேங்காய்ப்பூ, வற்றல்,உப்பு,வெங்காயம் சேர்த்து செய்யப்படும்
தொடுகறி
“ஒயா கவுஸ் நானாகே புதானே?” -- “ நீங்கள் கவுஸ் நானாவின் மகன்தானே”? சிங்களச்சொல்.
சதுரம் — உடல்
புட்டுவம் -- நாற்காலி
“இந்த கன்ன மொதலாளி”— இங்கே அமருங்கள் முதலாளி. சிங்களச்சொல்.
நானா – அண்ணன்
கைமாற்று -- கடன்
பால் மீன் ஆணம் – தேங்காய்ப்பால் கூடுதலாக விட்டு ஆக்கப்படும் மீன் கறி
சாரம்- லுங்கி, கைலிக்கான Sarong என்ற மலே மொழிச்சொல்லின் திரிபு.
வாப்பா – தந்தை
உம்மா -- தாய்
கிருஸ் கண் – மாறுகண், criss cross என்பதன் மரூ
கோக்கி – சமையலர், Cook என்ற ஆங்கில சொல்லின் மரூ
ரிக்கற் சல்லி – டிக்கட் காசு
மவ்த் -- இறப்பு
துரியான் – முள் நாறி பழம், தென் கிழக்காசியாவை பிறப்பிடமாகக் கொண்ட பழம்
கைமடக்கு -- அன்பளிப்பு
மாலு – மீன், சிங்களச்சொல்.
----------------------------
No comments:
Post a Comment