Friday, 25 October 2024

இந்த பைக் அந்த பைக் இல்லையென்றால் இது எந்த பைக்?


நேற்று ஓடும் நதி இன்றில்லை என கண் முன்னே ஓடிக்கொண்டிருக்கும் நதியைப்பற்றி யாரோ தத்துவம் உதிர்த்ததாக நினைவு.

 பக்கவாட்டு தலை முடியிழை போல ஊதாப்பட்டை நிறங்கொண்ட ஹீரோ ஹோண்டா ஸ்பளண்டர்  பைக்கை இருபது வருடங்களுக்கு முன்பு வாங்கும்போது அதன் விலை ₹ 45,000/=. சில வருடங்கள் ஓய்வு. பல வருடங்கள் ஓட்டம். சென்னைத் தேவைக்காக வாங்கியது. அங்கு தேவை தீர்ந்தவுடன் ஊர் வந்து சேர்ந்தது.

 என்னையும் உற்றோரையும் புதியவர்களையும் சுமந்து சென்ற பைக்கின் அதிர்வு தாங்கிகள், கைப்பிடி,இருக்கை,உருளி,பக்கவாட்டுப் பேழை, தாங்கி, விளிம்புச்சட்டம்,எண்ணெய்க் கலன்,பொறி,பக்க விளக்குகள், தடைக்குளம்பு என அன்றிருந்த எதுவும் இன்றில்லை. இரு பத்தாண்டுகளில் பைக் தன் உறுப்புக்களை உதிர்ந்தும் இணைத்தும் கண்ட மாற்றங்கள்.

 அன்றிலிருந்து இன்று வரை நீடிக்கும் பைக்கின் தொடக்க கால ஒரே உறுப்பு முகப்பு விளக்கு மட்டுமே. இப்போது எதை அன்றைய பைக் எனச் சொல்வீர்?பழமையைச் சுட்டி அந்த குமிழ் விளக்கை அன்றைய பைக் என சொல்வதா? இல்லையா? விலகச்சொன்னது ஆன்மாவையா? உடலையா? நேற்றிருந்த நதி இன்றைக்கில்லை.

 இன்றைய பைக்கின் இன்றைய மறு விலை சில ஆயிரங்கள் மட்டுமே. இதை பழையதை எனக் கைகழுவி விட்டு பவிசாக வாங்க விழையும் புதியதின் விலை ஒற்றை இலட்சத்தைத் தொட்டு நிற்கிறது.. இதுதான் பருண்மை சூத்திரம். ஆயிரமும் அதுவே இலட்சமும் அதுவே.இருப்பில் ஆயிரம்.இல்லாமையில் இலட்சம்.

 அதுவா இது? இதுவா அது? என்ற தத்துவ உசாவல்களைத்தாண்டி தலைமைப்பேயனின் ஆட்சியில் அடங்க மறுக்கும் எரிபொருளுக்கான பணம்தான் என் முன் உள்ள ஒரே கரிசனம்.

 பதினோறாம் வகுப்பு படிக்கும் என் இளைய மகன் அப்துல்காதிர் ஜியாதுக்கு அரசு கொடுத்த முக்காலளவு விலையில்லா மிதி வண்டியை ஓராயிரம் பணம் செலவாக்கி ஒக்கிட்டு நிலைப்படுத்தி வைத்திருக்கிறது. மூத்தவனுக்கும் மூத்தவளுக்கும் முழு வண்டியைக் கொடுத்தவர்கள், இந்த வண்டியை மட்டும் ஒரு காலை குறைத்து முக்கால் வண்டியாக்கி விட்டார்கள். இப்போது அதில்தான் ஓட்டம்.துரித கதிக்கும் வெய்யிலுக்கும் தொலைவுக்கும் மட்டுமே பைக்.

புதுசுக்கு புசுக் புசுக் என மிதிவண்டியை அன்றாடம் அங்குலம் அங்குலமாக  நான் துடைப்பது கண்டு குளித்து மாதங்களான என் பழையவன் மௌன நகைப்பில் திளைத்து நிற்கிறான்.

No comments:

Post a Comment