₹25,000/= க்கு மாதத்தவணையில் வாங்கல். பதிநான்கு வருட ஓட்டம். ஏழாவது வருடத்தில் உன் தரவுகளை சேமித்துக் கொள் என தனது இறுதியை எதிர்வு கூறியது. கூறிய சில நாட்களில் இரைச்சலுடன் தன் மூச்சை நிறுத்திக் கொண்டது.பின்னர் தாய்ப்பலகை மாற்றப்பட்டு ஆயுள் நீட்டித்து அளிக்கப்பட்டது.
இடையில் மின்கலம் மாற்றம்,வருடத்திற்கொரு முறை கிருமித்தாக்குதல் காப்புக்கான வாய்க்கரிசி. உதிரி கருவிகள் அவ்வப்போது வாங்கியதை மாற்றியதை இவன் கணக்கில் சேர்க்கவியலாது.
அதன் பிறகு மின்கலத்தை மாற்றவேயில்லை.மின்சாரம் வந்தால் வேலை செய்யும்.நின்றால் சில நொடிகளுக்குள் இதுவும் நின்று விடும். அதற்குள் அடித்துப் புரண்டு,வேலை நடந்துக் கொண்டிருக்கும் கோப்புக்களை சேமிக்க வேண்டும். இதில் வேறு நான்கைந்து குமிழ்கள் எந்த உணர்வையும் வெளிக்காட்டாமல் நிரந்தர மட்டையாகி விட்டிருந்தன. இதையும் உதிரி விசைப்பலகை போட்டுத்தான் சமாளிப்பு.
இடையில் என்னையறியாமல் இதன் மேல் சுமை ஏதோ பட்டிருக்கும் போல. திரையில் முதலில் ஒரு வண்ணக்கோடு. பிறகு வெவ்வேறு நிறத்தில் நான்கைந்து கோடுகள் வண்ணப்பட்டையாகி சேர்ந்து கொண்டன. தட்டச்சும்போது ஓரிரண்டு எழுத்துக்கள் மறைக்கும். கம்மியர் சொன்னார், “ போகப்போக மொத்த திரையும் இந்த வண்ணக்கோடுகளால் மறைக்கும்”. ஆனால் இறுதி வரைக்கும் அவ்வாறு நிகழவில்லை.
நீட்டிக்கப்பட்ட ஆயுளுக்கு மீண்டும் இரண்டாம்ஏழாம் வருடத்தில் இறுதி மூச்சுக்கான முன்னறிவிப்பு குறுஞ்செய்தி வடிவில் வந்தது. இம்முறை ஆயுள் நீட்டிப்பிற்கு வாய்ப்பில்லை என்றறிந்தவுடன் அதை தனது விளையாட்டுப்பொருளாகத்தருமாறு
என்னிடம் கேட்டாள் பெயர்த்தி. காசு அல்லது கருவி என வாக்களித்தேன் அவளுக்கு.
தினசரி கண்டம் முழு ஆயுள் என்ற வாழ்வின் நிலையாமையை உணர்ந்து கம்மியரிடம் பழைய விலைக்கு பேச்சு நடந்தது. அய்ந்நூறு ரூபாய்த் தரலாம் என்றார். ‘பாத்து செய்யுங்க’ என்றவுடன் இருநூறுத்தாளுமாக எழுநூறு ரூபாய்கள் கைக்கு வந்தன. கொடுத்த வாக்கைப்பேண உடன் வந்த மகனுக்கும் பெயர்த்திக்கும் தின்பண்டம், வேறு பொருட்கள் பழுது நீக்க செலவு போக ஒரு ஈரேழு ஆண்டுகளும் ஒற்றை நூறு ரூபாயாக கையில் எஞ்சுகிறது.
ஜப்பானிய தயாரிப்பான தொஷிபா மடிக்கணினிதான் இக்கதையின் நாயகன்.மூன்று நூல்கள்,ஒரு வலைப்பூ,இன்னும் வரவிருக்கும் நூல்களுக்கான எழுத்துக்கள், தரவுகள்,பணிக் கோப்புக்கள்,ஒளிப்படங்கள், ஏராளமான திரைப்படங்கள் வெவ்வேறு இசை, இணைய வானொலி கேட்பு, நேரலை வகுப்புகள் , மின்னூல்கள் என பத்தும் இரண்டுமான
வருடங்கள் வாழ்வாங்கு வாழ்ந்து விட்டுத்தான் போயிருக்கிறான்.கூறாய்விற்காக உடல் கொடையளிக்கப்படுவது போல உதிரி பகுதிகளுக்காக அதனை கம்மியர் பிரிக்கப் போகிறார்.வேறு கணினிகளில் வாழப்போகிறான்.
தொஷிபா(2010-2024) எங்கிருந்தாலும் மறப்பதற்கில்லை.
No comments:
Post a Comment