எம்.வி.வியுடன்
தனது எழுத்து வாழ்க்கைக்கு சென்னை திருவல்லிக்கேணியில் நடந்த அவமானத்தை எழுத்தாளர்
அசோகமித்திரன் மேற்கண்டவாறு கூறி முடித்திருப்பார். நூலினுள் நம்மை இழுக்க இந்த ஒரு
சொல் கொக்கி போதும்.
தமிழ் நாளிதழொன்றில்
நூல் விமர்சகர் சரவணன் மாணிக்கவாசகம் அன்பின் நறுமணம் எம்.வி.வி.யும் நானும்… என்ற ரவிசுப்பிரமணியத்தின் இந்த நூலைப்பற்றி பதிவொன்று
இட்டிருந்தார்.
நான் பொதுவே
வாழ்க்கைக் குறிப்புகளை வாசிப்பவனில்லை. எம்.வி.வி. என்றழைக்கப்படும் மறைந்த எழுத்தாளர்
எம்.வி.வெங்கட்ராமையும் வாசித்ததில்லை.
ஆனால் அணுக்க
நண்பரும் படைப்பாளியும் கலை திறனாய்வாளருமான ரவி சுப்பிரமணியனின் நூல்கள், ஆவணப்படங்கள்
எதையும் தவற விடுவதில்லை.ஜெயகாந்தன்,திருலோகசீதாராம் என தமிழின் தலையாய மூத்த இலக்கிய
ஆளுமைகளைப்பற்றி எழுத்திலும் ஒளியிலும் ரவிசுப்பிரமணியன் பதிந்தவை தவறவிடப்படக்கூடாதவை.அதற்காகவே
இந்நூலை வாசித்தேன்.
பாரதியும்
புதுமைப்பித்தனும் பிரமிளும் வைக்கம் முஹம்மது பஷீரும் கொடும் பசிக்கும் வாட்டும் வறுமைக்கும்
தங்களை உண்ணத் தந்தவர்கள்.அதனால்தான் அவர்களின் படைப்புக்கள் காலத்தின் பற்களிலிருந்து
தப்பி நிற்கின்றன.
படைப்புலக
முன்னோடிகளின் படைப்புக்களை வாசிக்கிறோமோ இல்லையோ தங்கள் எழுத்தில் நேர்மையையும் நீடித்தத்
தன்மையையும் ஆசிப்பவர்கள் இம்முன்னோடிகளின்
வாழ்க்கையை கண்டிப்பாக பயில வேண்டும்.
தற்சமயம்
தமிழின் மூத்த படைப்பாளிகள் என தங்களைப் பட்டியலிடுவோர் செய்து தீர்த்திருக்கும் அபத்தங்களிலிருந்து
தன் கட்டுமானங்களிலிருந்து தப்பிக்கவாவது இவ்வகையான
நூல்களின் வாசிப்பு தவிர்க்க முடியாததாகிறது.
இலக்கியத்திற்காக
வாழ்வின் வசந்தங்களை பலியிட நேர்ந்தாலும் பட்டினியில் குடல் வெம்பி கருகினாலும் தங்களின்
அறத்தையும் மானிட நேயத்தையும் கையொழுகாத பெரிய மனிதர்களில் எம்.வி.வியும் உண்டு என்பதற்கு
தன்னை சாட்சியாமாக்கியிருக்கிறார். ரவிசுப்பிரமணியன். ஏனென்றால் அவரும் இலக்கியத்திற்காக
தன்னை பலி கொடுத்தவர்தான்.
ரவிசுப்பிரமணியன் |
எம்.வி.வியின் தொடக்க கால எழுத்தின் மீது எழுத்தாளர் பிச்சமூர்த்தியின் பாராட்டும்,திருத்தலும் சேர்ந்த நேர்மையான திறனாய்வுதான்எம்.வி.வியை எழுத்தில் நிலைக்க வைத்திருக்கிறது. தி.ஜானகிராமனும் அவரது குடும்பமும் கரிச்சான் குஞ்சும் எம்.வி.வியைப்போற்றிய விதத்தை இந்நூலில் கண்ணீரோடு அல்லாமல் கடக்கவியலாது.
“பொதுவாகவே
எம்.வி.விக்கு ஏராளமான கனவுகள் வரும்.அதைப் பற்றி, இரவோ பகலோ தூங்குகையில் எனக்கு நிறைய
கனவுகள் வருகின்றன.இறந்தவர்கள் மட்டுமல்ல…இருப்பவர்களும் சொப்பனங்களில் பங்கு கொள்வார்கள்.
நவரசங்களும் அவற்றில் வழியும்.யதார்த்தத்துக்கே ஓடி ஒளிகிற ஒரு சமுதாயத்தில் கனவுகளுக்கு
செலாவணி ஏது? எனக்கோ வாழ்க்கையின் ஒரு முக்கியப் பகுதி கனவுகள்.என் கனவுகளின் மூலஸ்தானம்
வாழ்க்கை” _ நூல் பக்கம்:80
அன்பின் நறுமணம் எம்.வி.வி.யும் நானும்…
ஆசிரியர்: ரவிசுப்பிரமணியன்
நூல் கிடைக்குமிடம்
விஜயா பதிப்பகம்
20, ராஜ வீதி,
கோயம்பத்தூர் - 641 001.
+91 422 238 26 14
+91 90 470 870 53
பக்கங்கள் : 148
புத்தக விலை : ₹185/=
No comments:
Post a Comment