Monday 23 October 2023

மூன்றாம் கண்ணான சிகரி மார்க்கம் - நூல் மதிப்புரை

 


எனது வீட்டினருகே உள்ள வெட்டையில் பருவ மழைக் காலத்தில்  நாட் கணக்கில் தண்ணீர் கட்டுவது வழமை. அப்படியானதொரு மழைப்பொழுதில்  நீரளைந்து கொண்டிருந்த எனது மகன்களின் கையில் ஒரு பறவைக்குரிய படபடப்புடனிருந்த பருத்த கெளுத்தி மீனொன்று சிக்கியது.


காயல்பட்டினம் கடற்கரைப்பகுதியாக இருந்தாலும் என் வீட்டிற்கருகில் எவ்வித நீர் நிலைகளுமில்லை. மீனின் வரவு புதினமாகப்படவே இதை வினாவாக்கி முக நூல் பக்கத்தில்  பகிர்ந்தேன். அதற்கு நண்பரொருவர், நீர் நிலைகளிலிருந்து  நீரெடுக்கும் கார் முகில், மீன் முட்டைகளையும் குஞ்சுகளையும் சேர்த்தே உறிஞ்சுவதினால் இவ்வாறு ஏற்படுகிறது. எனவே உங்கள் வீட்டருகில் உள்ள கட்டாந்தரையில் மீன் துள்ளுவது குறித்து நீங்கள் வாய் பிளக்க வேண்டியதில்லை என்றார்.

நீரும் அதன் அதன் அரசாட்சியும்  எங்கும் போய் ஒளிந்து கொள்வதில்லை. அதுவொரு பெரும் சுழற்சி வளையத்தின் கண்ணி  என்பதின் அண்ட பிண்ட சாட்சியாகி நிற்கும் மீன்களின் நுழைவும் வெளியேற்றமுமான சித்தரிப்பை அட்டைப்படமாக சிகரி மார்க்கம் கொண்டிருக்கிறது. ரியாசுடைய கதைகளின் தீர்ந்து போகாத நீடித்த குணத்தின் குறியீடு இது.

மலாய் நில தமிழர்களின் வாழ்க்கை குறித்த ப.சிங்காரத்தின் அறிக்கை பாணியிலான இரு படைப்புக்களின் அங்கத கூர்மையானது  வலிமை மிக்கதெனினும்  அவற்றில் தமிழ் முஸ்லிம் வாழ்க்கையைப்பற்றிய சித்திரமொன்றுமில்லை என்ற ஏமாற்றமும் கூடவே  எழுவதை தவிர்க்க இயலுவதில்லை.

தமிழகத்தின் சோழமண்டலக்கரை, சேது, சீது ரஸ்தா என்றழைக்கப்படும் கிழக்கு கடற்கரையோர முஸ்லிம் ஊர்களின் பெரும்பாலான வாழ்க்கை பல நூற்றாண்டுகளாக மலாய்  தீபகற்பம், இந்தோனேஷியக்கரை, சரந்தீப் என்றழைக்கபடும் இலங்கைக்கரைகளினிடையே பங்கு வைக்கப்பட்டிருக்கிறது. இந்த சேகரத்தை வரலாற்று பாதாளக்கரண்டியால் ஓரளவுதான் கெல்ல முடியும். மீதமுள்ள இடத்தை இலக்கியம்தான் நிரப்ப வேண்டும். காலனியாதிக்கவாதிகளின் ஆவணங்களைத் தாண்டி இந்த இரு கரைகளின் வாழ்க்கை போதிய அளவில் கிடைக்காத நிலையில் ஏற்படும் வரலாற்றின் போதாமையானது இலக்கியத்தின் தேவையை இன்னும் கனதியாக்குகிறது.

அள்ளி முடியாத வரைக்கும் அது வெறும் முடிதான்.  ப.சிங்காரம் விட்ட வெற்றிடத்தை மேம்பட்ட கலை அழகியல் உத்திகளுடன் நிரப்ப வந்திருக்கிறார்  நண்பர் கே.முஹம்மது ரியாஸ். அவரின் முந்திய  அத்தர் சிறுகதை படைப்பும் இப்போது வெளி வந்திருக்கும் சிகரி மார்க்கமும் தொண்ணூறுகளின் உள்ள மலாய் நில புலம் பெயர் வாழ்க்கையை அகழ்ந்தெடுக்கின்றன.

எதுவும் எங்கும் தவறிப்போய் விடுவதில்லை என்ற தத்துவப்புரிதலூட்டும் சிங்காவில் தொடங்கி உம்மாவின் பச்சை மாலையை விற்ற பணத்தில் தொடங்கும் சஃபர் (வெளி நாட்டுப்பயணம்) மும்பை ஹாஜி அலீ தர்காவின் கவ்வாலி திண்ணையில், “ஒரு குகையில் மூவர் முன்னூறு வருடங்கள் துங்கியது போல் தானும் உறங்கி காலத்தைக் கழித்து விட வேண்டும்” என்ற கதை நாயகனின் அளாவலோடு அப்பயணம் சிதையும் பிறைக்கொடிக்கப்பல்  கதை வரை  மொத்தம் ஒன்பது கதைகள்.

வானமும் கறுக்காமல் நிலமும் பொங்காமல் இருந்தது இருந்தபடியே இருக்க மனிதர்களை பறவையின் இலாகவத்தோடு தட்டிக் கொண்டு போன ஆழிப்பேரலை மொத்த வாழ்க்கையின் பொருளையும் புரட்டிப்போட்டு விடுகிறது.

எல்லோரும் உண்டு உறங்கி புணர்ந்து இன்புற்றிருக்க எழுத்துக்களின் நடுவே இரத்தம் கசியும் மோதிரக்காரிகள், கணவன் என்பவன் மாத செலவுப்பணத்தோடு மட்டுமே நினைக்கத்தகுந்தவன் என்ற ஒற்றைக்கொள்கைக்காரி ஹலிமா, முகம் அழிக்கப்பட்டு இரு கரைகளிலும் இல்லாமலிருக்கும் பெம்பலா, வசிப்பிடமற்றவனின் பாத்திரங்களை கடலும் கூட நிராகரிப்பது என எத்தனை மனிதர்களின் பொத்தல் விழும் வாழ்க்கைகள்.  பயணம் தொடர்ந்தபடி இருக்க ஒன்றன் பின் ஒன்றாக மூழ்கும் கப்பல்கள் வரிசைக்கட்டி வருகின்றன.

காலனியாதிக்கத்தின் ஆக்கிரமிப்பிற்குப்பிறகு சொந்த உள் நாட்டுத் தொழில் பறிக்கப்பட்டு ஏழு கடல்களுக்கு அப்பால் சுழற்றி எறியப்பட்ட தமிழககடற்கரையோர முஸ்லிம்களின் வாழ்க்கை பிற்றைய நாட்களில் பளபளத்தது என்றால் அதற்குள் இத்தனை கைப்பும் துவர்ப்பும் கரந்துறைவதை பார்த்திட மூன்றாம் கண்ணொன்று வேண்டும். அதுதான்  ‘சிகரி மார்க்கம்’.

எழுத்தாளர் கே.முஹம்மது ரியாஸ்


சிகரி மார்க்கம் வாங்கிட


 

 


No comments:

Post a Comment