அன்று காலை பள்ளிப்பருவத்து நண்பன் முஸ்தஃபாவின் மகளுக்கு நிக்காஹ். அதற்கு போகும் அவசரத்தில் நல்ல பசி. முத்தாரம்மன் கோயில் தெருவிலிருக்கும் ( வடக்கு முத்தாரம்மன் கோயில் தெருவிற்கு அடுத்த தெரு) அபுல் கலாம் காக்கா கடையில் ( அவர் கடைக்கு தனியாக பெயரெல்லாம் இல்லை) சென்று இரண்டு ஆப்பம், ஒரு வடை, ஒரு தேயிலை என காலைபசியாறு. வயிறு நிறைந்தது. ஆக மொத்தம் இருபது ரூபாய்கள்தான்.
மெயின் ரோட்டில் இஞ்சி தேயிலை கு... சி தேயிலை என எதையாவது சொல்லி ஜேபியில் உள்ள பன்னிரண்டு ரூபாய்களை கழற்றிக் கொண்டு உலோக கப்பில் நெருப்பை அள்ளித்தரும் கடையும் உண்டு. வெளியில் கோடையின் சூடு, தேயிலை சூடு, தேயிலையை தாங்கிய கோப்பையும் சூடு.
நாக்கின் பசபசப்பை தணிக்க உதடுகளை சுட்டுக் கொள்ளும் கெட்ட அனுபவம்.
பொதுவாகவே ஒவ்வொரு கடையிலும் ஒவ்வொரு விலை. தேயிலை 8₹ -- 12₹. வடை 7₹ -- 10₹. மற்ற பலகாரங்கள் 10₹ - 12₹. சுருக்கமாக சொன்னால் காலை பசியாற்றை மற்ற கடைகளில் 30₹ களிலிருந்து 50₹ வரையில்லாமல் உண்ண முடியாது.
இத்தனை கொடும் நினைவுகள்தான் அபுல் கலாம் காக்காவை (சொல்லின் தந்தை) அபுல் தஆம் காக்கா ( உணவின் தந்தை)ஆக்குகிறது.
No comments:
Post a Comment