Thursday, 29 June 2023

உப்பு கண்டம் -- ஹஜ்ஜுப்பெரு நாள் வண்ணங்கள்


இஞ்சி, பூண்டு மசாலா விழுதுடன் பூஞ்சணம் பிடிக்காமலிருக்க கொஞ்சம் எலுமிச்சைச்சாறு கூட்டி பிணைந்த இறைச்சி துண்டங்கள். அந்தரத்தில் தொங்குவதால் காக்கைகளுக்கு ஆவதில்லை. கண்ணுக்கும் இறக்கைக்கும் எட்டியது அலகிற்கு எட்டாது என்ற துல்லிய கணிப்பில் அவை தொலைவிலிருந்தே பறுபுறுத்துக் கொண்டு பொறுத்துக் கொள்கின்றன. கிட்டாதாயின் வெட்டென மற இன் ஆகாய செயல் வடிவம்.


மூன்று கிலோ போட்டால்  வாரக்கணக்கில் வற்றி சுருங்கி பாதி தேறுவதற்கு ஆட்டிறைச்சியெல்லாம் சரி வராது. கொழுப்பும் ஊணும் செறிந்த மாட்டிறைச்சிதான் பொருத்தம். 

பந்தூசியும் சணலுங் கொண்டு இறைச்சி துண்டங்களை கோர்த்துக் கொண்டிருக்கும்போது  அருகிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த  சதாப்தத்தை எட்டும் என் மாமியார், மூத்த மருமகன் போடும்    உப்புக்கண்டங்களை  உரலிட்டு இடித்து  பெரிய தகரப்பேழைக்குள்  தான் சேமித்து வைத்ததை  நினைவு கூர்ந்தார்.

உப்புக்கண்டத்தை இடித்து பஞ்சாக்கி பொறிப்பது ஒரு முறை. நீரிலிட்டு ஊற வைத்து கடலை பருப்பு சேர்த்து ஆக்குவது இன்னொரு முறை. என என் இளைய மகனிடம் விளக்கிக் கொண்டிருந்தாள் அவனது சாச்சி.

கொச்சி பழைய நகரில் வசிக்கும் முஸ்லிம்களிடையே 'கோழி அட' என்றொரு சிறு கடி பிரபலம். சமோசாவின் குட்டி வடிவம். அதற்குள்  உலர்ந்த மாட்டிறைச்சி துண்டங்களை தட்டி பரத்தி  பொரித்து  குறுக்கியிருப்பார்கள். தேயிலையை கட்டியாக போட்டு ஒவ்வொரு கோழி அட துண்டங்களாக வாயிலிறக்கிநால்,  சிறு சுவையின் வழியாக பெரும் பரவசம் அனுபவமாகும்.



No comments:

Post a Comment