Friday 21 July 2023

இந்துமாக்கடல் வாழ் சமூகத்தில் மறைந்து வரும் மொழியை காப்பாற்றும் காயல்பட்டினம்


---- எழுத்தாளர் சுமய்யா முஸ்தஃபா (sumaiya.mustafa93@gmail.com)



தமிழ்நாட்டின் முத்துக்குளிக்கும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கடற்கரை நகரமான காயல்பட்டினத்தில் மிக வேகமாக வழக்கொழிந்து கொண்டிருக்கும் அர்வி என்றழைக்கப்படும் அறபுத்தமிழ்மொழியை மீட்டுருவாக்கும் முயற்சியில் காயல்பட்டினவாசிகள் சிலர் ஈடுபட்டுள்ளனர்.

காயல்பட்டினத்தில் உருவான அறபுத்தமிழ், அறபுகளுக்கும் தமிழ் முஸ்லிம் சமூகத்திற்கும் ஒரு தொடர்பு பாலமாக அமைந்திருந்தது. சென்னை புதுக்கல்லூரியின் பேராசிரியர் கே.எம்.ஏ.அஹமது சுபைர் அவர்களின் ஆராய்ச்சிக்கட்டுரையின்படி கி.பி.எட்டாம் நூற்றாண்டு முதல் பத்தொன்பதாம் நூற்றாண்டுவரை அறபுத்தமிழ் மிகத்தீவிர பயன்பாட்டில் இருந்ததையும், மேலும் வணிகம், சொத்துப்பரிமாற்றம், கடிதத்தொடர்பு, இலக்கியம் போன்றவற்றில் தமிழ்முஸ்லிம் சமூகத்தில் பாரிய செல்வாக்கு செலுத்தியதையும் அறியமுடிகிறது.  

"தமிழ் – அறபு ஆகிய இரண்டு செவ்விய மொழிகள் இணைந்து ஈன்ற அழகிய குழந்தைதான் அர்வி மொழி. அர்வி அதன் நோக்கத்தையும், பெருமையையும் இழந்தாலும், அது மீட்டுருவாக்கி பாதுகாக்கப்பட வேண்டும்." என்கிறார் காயல்பட்டினத்தைச்சார்ந்த எழுத்தாளர் சாளைபஷீர்.

அர்வி ஆர்வலர்கள் காயல்பட்டினத்தின் வரலாற்றையும், பண்பாட்டையும் பாதுகாக்க, காயல்பட்டினம் வரலாற்று ஆய்வு மையத்தை உருவாக்கியுள்ளனர். விரைவில் இம்மையம் காயல்பட்டினம் வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் அர்வி பற்றிய ஒரு விழிப்புணர்வு நிகழ்வை நடத்தவிருக்கிறது.மேலும், காயல்பட்டினம் வாழ் தமிழ் முஸ்லிமாகிய நான் இந்த அர்வி மொழி எப்படித் தோன்றியது என்பது குறித்து எனது சமூகத்திடமிருந்து தெரிந்துகொண்டேன்.

அர்வி மொழியின் பல நூற்றாண்டு கால தொடர் வளர்ச்சியை பதிந்து வைத்துள்ள ஆவணங்கள் பற்றிய ஆராய்ச்சிக்கட்டுரைகளையும் நான் படித்திருக்கிறேன். அர்விமொழி எப்படித்தோன்றியது?என்பதை புரிந்து கொள்ள ஒருவர், முஸ்லிம்கள் நடுவில் மறக்கப்பட்டு வரும் மனைவி வீட்டில் கணவன் குடிபோகும் (Matrilocal) தனிச் சிறப்பான வரலாற்றை காயல்பட்டினத்தில் நோக்கவேண்டும்.

17 ஆம் நூற்றாண்டுக்கு முன்பு வடக்கு ஐரோப்பியர்கள் தங்களது ஆதிக்கத்தை உறுதிப்படுத்தவும் கடல்வழியைக்கண்டுபிடிக்கவும் தொடங்கியபோது, இந்துப்பெருங்கடல் வணிகமானது அறபுகளாலும், பாரசீகவளைகுடாவின் கடற்புரங்களிலிருந்து வந்த பாரசீகர்களாலும் நிரம்பியிருந்தது.

.ஏறக்குறைய 7 ஆம் நூற்றாண்டிலும் அதனைதொடர்ந்து வந்த காலங்களிலும் ஊர் ஊராக சுற்றிவரக்கூடிய அறபு வணிகர்கள், சுமைதூக்குபவர்கள், சிறு,பெரு வணிகர்கள் இந்தியதீபகற்பத்தைத்தேடிவந்து அதன்கடற்புற ஊர்களில் படிப்படியாகக் குடியேறத் தொடங்கினார்கள். அவர்கள் உள்ளூர் பெண்களையும் மணமுடித்தார்கள். இத் திருமண உறவு மூலமாகத்தான் அர்விமொழி தோன்றியது.

காயல்பட்டினத்து பெண்கள் தங்களது கடலோடித்தந்தைகளையும், சகோதரர்களையும், வருகைதரு கணவர்களையும் (இச்சொல்லாட்சி இந்துமாக்கடல் வரலாற்றாசியர்களால், வர்த்தகத்திற்காக பயணிக்கும்கணவர்கள் தங்களது மனைவி,குழந்தைகளைப்பார்ப்பதற்காக ஆண்டுக்கொருமுறையோ அல்லது இருமுறையோ இப்பாதை வழிவரும் கணவர்களைக் குறிக்கிறது.) தொடர்பு கொள்ள அர்வியைப் பயன்படுத்தினர்.

இந்துமாக்கடலின் வணிகத்தேவையின் அடிப்படையில் பல கலப்பின மொழிகள் உருவாகியுள்ளதாக அறபிமொழி, அர்வி ஆர்வலரானமாணவர்அனீஸ் அஹமது கருதுகிறார்.

அறபுகள் எங்கெல்லாம் கால் பதித்தார்களோ அங்கெல்லாம் உள்ளூர்மக்களின் மொழியுடன் கலந்து அறபிமலையாளம், ஜாவி போன்ற மொழிகள் உருவாகின. அஹமது அனீஸும் அவரது நண்பரும் மென்பொருள் தொழில்நுட்பவியலாளருமான முஹம்மத் இபுறாஹீம் அன்சாரியும் இணைந்து அர்வியை இலகுவாக அணுகுவதற்கு ஒருசெயலியை உருவாக்கியிருக்கிறார்கள்,

இச்செயலி காயல்பட்டினம் வரலாற்று ஆய்வு மையம் நடத்தும் நிகழ்வில் தொடக்கம் காணவிருக்கிறது. அர்வியின் மிகக் குறிப்பிட்டத்தக்க விஷயம் யாதெனில், பரந்து பட்ட அளவில் தமிழ்பேசும் முஸ்லிம் பெண்களால் அர்வியைஎழுத, வாசிக்கமுடியும். 17 ஆம் நூற்றாண்டில்,அறிஞர் சாம் ஷிஹாப்தீன் அவர்களால் எழுதப்பட்ட பெண்புத்திமாலை புத்தகம் கூட பெண்களை மையப்படுத்தியே எழுதப்பட்டது. மேலும் 19ஆம்நூற்றாண்டில் செய்யது ஆசியா உம்மா போல் குறிப்பிடத்தக்க பெண் எழுத்தாளர்களும், கவிதாயினிகளும் இருந்தார்கள்.

அர்வி மொழிக்கு ஆயிரமாண்டிற்கு மேல் வரலாறு உண்டு என வரலாற்று அறிஞர்கள் வாதிடுகின்றனர். அர்வியின் குறிப்பிடத்தக்க இலக்கியப்படைப்புக்கள் சோழ மண்டலக்கடற்கரையின் முத்துக்குளி துறைமுகமான தூத்துக்குடி முதல் குமரி வரையுள்ள பகுதிகளில் கி.பி.1525 ல் போர்த்துக்கீசியர்களின் படையெடுப்பால், அழிந்து போயிருக்கக்கூடும் என பேராசிரியர் சுபைர் அவர்களின்ஆராய்ச்சிக்கட்டுரைகூறுகிறது.

மேலும் ,அக்கட்டுரையில் போர்த்துக்கீசிய படையெடுப்பிற்குப்பிறகு இறையடியாரான காயல்பட்டினம் ஹாபிழ்அமீர்வலிஅப்பா அர்விக்கு என முறைப்படுத்தப்பட்ட எழுத்து முறைமையை மீட்டுருவாக்கம் செய்ததை பதிவுசெய்திருக்கிறார். பின்னர் லித்தோ கிராஃபிக் அச்சுப்பரவலால் அர்வியில் புத்தகங்கள் ரங்கூனிலிருந்து மும்பைவரை 19 நூற்றாண்டில் அச்சிடப்படத்தொடங்கின.

தெற்காசிய முஸ்லிம் சமூகத்தின் பண்பாட்டை ஆய்ந்துவரும் ஆய்வறிஞரானடார்ச்டன் ஷாச்சர், ஹாஜி எம்.ஏ.ஷாகுல் ஹமீது&சன்ஸ் 1909 களில் அர்விபடைப்புகளை பதிப்பித்தும் அதனை விற்பதற்கு புத்தகக்கடையையும் நடத்தி வந்ததைக் கவனப்படுத்துகிறார். எனினும், கடந்த பல பத்தாண்டுகளாக பழைய படைப்புக்களை மட்டுமே அவர்கள் மீண்டும்மீண்டும் பதிப்பிக்கிறார்கள்.

மொழிகளின் வரலாற்றில் வாய்மொழி வழியாகவே ஒரு தலைமுறையிடமிருந்து மற்றொரு தலைமுறைக்கு மொழி கடத்தப்பட்டிருக்கிறது.

அபத்தி எனும் காயல்பட்டினபண்பாட்டு,படைப்பாக்க மையத்தின் இயக்குநரும் காப்பாளருமான ஜாரியாஅஜீஸ் கூறுகையில் , காயல்பட்டினத்து சூபி அறிஞர்கள் உரக்கவாசிக்கும் நிகழ்வுகளாலும் , மத நிகழ்வுகளில் சொற்பொழிவாற்றுவதின் மூலமாகவும் அர்வியை உயிரோட்டமாக வைத்திருந்தனர் என்றும் பல மதரஸாக்கள், தொடக்கப்பள்ளிமாணவர்களுக்கு அர்வியை வாசிக்கக் கற்றுக்கொடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள் என்பதையும் சுட்டிக்காட்டுகிறார். மேலும் அவர் கூறுகையில்,எங்களால் இன்றும் கூட ஐந்து தலைமுறைகளுக்கு முன்னருள்ள அர்வி புத்தகம், குறிப்புக்களை காயல்பட்டின குடும்பங்களில் இருந்துகண்டறியமுடிகிறது என்றும் குறிப்பிட்டார்.

அனீஸ், அன்சாரியின் எழுத்துரு உருவாக்க முயற்சியினால், எங்கள் அபத்தியில், தொலைநோக்குத்திட்டத்தின் அடிப்படையில், ஒவ்வொருவருக்கும், குறிப்பாக மூத்தோருக்கும், அர்வியில் ஈடுபாடு உண்டாக்க, குழந்தைகளுக்கான புத்தகங்களை பயன்படுத்துவதற்கான நீண்டகாலத் திட்டமொன்று உள்ளது என்றும் குறிப்பிட்டார்.

இருப்பினும், இதுவரை அர்வியின் இருப்புக்கு சில தனிப்பட்டவர்களின் முயற்சிகளே காரணம். இன்றும் கூட இஸ்லாமிய நூற்களை கற்பித்து வரும் மூத்த ஆசிரியையான சேலத்தைச் சார்ந்த அம்மாஜி அக்கா குழந்தைகளுக்கு அர்வியைக் கற்பித்து வருகிறார்.

அர்வியின் எழுத்து அறபி எழுத்தில் இருக்கின்றபடியால், அறபி எழுத்து வடிவில் தமிழை எழுதுவதுதானே அர்வி என எளிதாகத்தெரியலாம்.ஆனால் அர்வியின் எழுத்துவடிவமானது அறபிமொழியின் ஓசையில் இல்லாத உயிரெழுத்துக்களுக்கும் சில மெய்யெழுத்துக்களுக்குமாக கூடுதல் எழுத்துக்களைக் கொண்டிருக்கின்றன.

அர்விக்கு பெருமைப்படத்தக்க தனித்த இலக்கியப்பாணியுடன் கூடவே ஒத்திசைந்த சொந்த அகராதியும் உண்டு. அர்வி மொழிப் புலவர்கள் தமிழ் இலக்கணத்தி்லும் அறபு இலக்கணத்திலும் ஒட்டாமல் தனக்கே உரிய பாணியில் வேறு நடையில் அர்விமொழியில் கவிதை வடிப்பார்கள்.

மாநிலத்தின் பள்ளிகளில் பயிற்று மொழியாக தமிழ், ஆங்கிலம் வந்ததும் அர்வியின் வீழ்ச்சிக்குக் காரணம்.

எழுத்தாளர் சாளை பஷீர் சொல்வது போல் விடுதலைக்குப்பிறகு இந்தியாவில் குறிப்பாக மொழிவாரி அடிப்படையில் மாநிலங்கள் உருவாக்கப்பட்டபொழுது அர்வியானது தமிழ்முஸ்லிம்கள் இடையே தனது சிறப்பை இழக்கத்தொடங்கியது.

இப்பகுதியில் அர்விமொழியை இறுதியாகப் பாதுகாத்து வந்த உலமாக்கள் – காவலர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், பரப்புபவர்கள் உள்ளிட்ட யாவரும், இருபதாம் நூற்றாண்டின் தொடக்ககாலத்தில் தமிழ் முஸ்லிம்கள் நடுவில் வாழ்ந்த சமூக பண்பாட்டு சீர்திருத்தவாதிகளுக்கு ஆதரவாக திரும்பிய செயலானது, அர்விமொழியின் வீழ்ச்சிக்கு கூடுதல் வலுசேர்த்தது. சுய மரியாதை இயக்கத்தின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட இச்சீர்திருத்தவாதிகள் அருகி இருந்த அர்வி வாசிப்பாளர்களுக்கு கடும்அறைகூவலாக இருந்தனர்.

அர்வியில் புலமைபெற்றவர்கள் அனைவருமே சூபி பின் புலம் கொண்டவர்களாக இருந்தார்கள். இருபதாம் நூற்றாண்டில் இஸ்லாமிய புத்தாக்கவாதிகள் அனைவருமே இந்த சூபி வழிமுறையைக்கண்டித்தனர். இந்த சூபிக்கோட்பாடுகள் முழுவதும் அர்விமொழியில்தான் கூடுதலாக தொகுக்கப்பட்டிருந்தன.

புலனுணர்வுகளுக்கு அப்பாற்பட்ட அனுபவங்களை அனைவரும் புரிந்துகொள்ளமுடியாது என்பதால் சூபிகொள்கைக்கு தவறான பொருள் விளக்கம் கொடுப்பதைத் தவிர்ப்பதற்காகவே அர்விமொழியில் ஆழமான வாசிப்பு இல்லாதவர்கள்,அர்விமொழி நூற்களைப்படிக்க அர்விமொழி அறிஞர்கள் தடை போட்டார்கள். உலமாக்களிடமிருந்து வந்த இந்த மொழிப்பாதுகாப்பு நடவடிக்கையினால் அவர்களுக்கு முஸ்லிம்பிராமணர்கள் என முஸ்லிம் சுயமரியாதைக்காரர்கள் பெயர்கொடுத்தனர் என்கிறது ஷாச்சரின் ஆய்வுக்கட்டுரை.

நம்மிடமிருந்து தவறிய மொழியைப் பாதுகாப்பது நமக்கும் நமது தலைமுறைக்கும் கடமையாகிறது என்கிறார் காயல்பட்டினம் மாநகரில் சமீபத்தில் தொடங்கப்பட்ட காயல்பட்டினம் வரலாற்று ஆய்வு மையத்தின் நிர்வாகியான காயல் எஸ்.இ. அமானுல்லாஹ். காயல்பட்டினம் வரலாற்று ஆய்வு மையத்தின் வழியாக அர்வி நூற்களையும் கட்டுரைகளையும் சேகரிக்கத் தொடங்கியுள்ளனர்.

நாட்டின் பன்மை அடையாளங்களைத் திட்டமிட்டு அழித்து ஒற்றை அடையாளமாக மாற்றப்படுவது குறித்து எழுத்தாளர் சாளை பஷீர் கவலை தெரிவிக்கிறார். இதுபல்வேறு பட்ட மொழிகள், பண்பாடுகள், நம்பிக்கைள் அழிக்கப்படும் என்பதை நளினமாகச் சொல்கிறது. நமது அடையாளங்களைப்பற்றிப் பிடிக்கவேண்டிய தேவை முன்னெப்போதையும் விட தற்போது கூடுதலாக இருக்கிறது என உணர்வதாகக் கூறும் அவர், இந்தியாவின் பெருமையானது பன்முகத்தன்மையிலும், அதன் வேறுபாட்டிலும்தான் இருக்கிறது என்கிறார்.

 

நன்றி – THE CARAVAN, JULY2023.

மொழியாக்கம்: எம்.சாகுல் ஹமீது, உதவிப் பேராசிரியர், முதுகலை வரலாற்றுத்துறை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி,திருநெல்வேலி.

 

 


3

No comments:

Post a Comment