Saturday 25 February 2023

நதிகளின் தத்தளிப்பு

 கோடிகள் புழங்கும் தன்ஜீ தெருவில் முன்னர் இருந்த உடுப்பி பிரகாஷ் ஹோட்டலின் அருகில் தினசரி வந்துவிடுவார் அவர்.

பின் கொண்டை வைத்திருக்கும் கசல் பாடகர் ஹரிஹரனை நினைவுபடுத்தும் தோற்றம். அவர் கருப்பு நிறம். இவர் வள வள வெள்ளை.இவரைச் சுற்றிலும் மணி கற்களின் கொடுக்கல் வாங்கல் மும்முரமாக நடந்து கொண்டிருக்க இவர் மட்டும் அமைதியாக எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்.


அவர் பார்க்கும் துலாம்பர பார்வையில் நம்மோடு அவர் பேச விழைவது போல தோன்றும். கண்கள் வரைக்கும் வரும் சொற்கள் தலைக்குள்ளேயே தேங்கிவிடும் போல. நலம் விசாரிப்பவர்களிடம் குஜராத்தி மொழியில் சிறிய உசாவல் அவ்வளவுதான்.

இவரை பார்த்தவுடன் சியா ஜெயராமன்தான் நினைவிற்கு வந்தார்.அவரை அப்படித்தான் அழைப்பார்கள். எல்லை நகரான மோரேவில் நீண்ட காலம் வசித்தவர் தமிழ்நாட்டு செட்டியார் தான். பர்மிய மொழியை தமிழ்ச் சுவையுடன் பேசுவார்.

பர்மா சிவப்பு குச்சல் நன்கு ஓடிய காலத்தில் சம்பாதித்தவர். வியாபாரம் தேய்ந்து திப்பிலியானாலும் சென்னை தங்கசாலை தெருவில் தினந்தோறும் வெள்ளையும் சொள்ளையுமாக வந்து நிற்பதை மட்டும் கைவிடவே இல்லை. யாரிடமும் அதிகம் எதுவும் பேசாமல் நின்று கொண்டே இருப்பார். ஒரு காவலருக்குரிய கருந்தேக்கு உடல். அவருக்கு நான்கடி தள்ளி புஷ்பராக வணிகத்தில் நொடித்து போன கால் இயலாத பிரகாஷும் வந்து நிற்பார்.

என்ன அண்ணே என்ன அண்ணே என்பதை தவிர வேறு ஒன்றும் பெரிதாக இருவரும் பேசிக் கொள்வதில்லை. நெருக்கடி மிக்க அந்த தெருவில் இவ்விருவரும் அவரவர் உலகங்களுக்குள் தனித்தனி தூண்களாகத்தான் நின்று கொண்டிருப்பர்.

என்னதான் சேர்த்து வைத்திருந்தாலும் முன்னை போல் வருமானம் இல்லாததால் வீட்டிலும் அமைதி இல்லை. எனவே தினசரி சந்தை வருகை.

காலம் என்பது உலகம் தொடங்கிய நாளிலிருந்து இன்று வரையும் இனி வரும் நாளைக்கும் கூட, நாட்களாலும் வாரங்களாலும் வருடங்களாலும் மட்டுமே ஆனது. இவர்களும் நேற்று இன்றுகளின் வேறுபாடு களைந்து அவற்றிற்குள் உடலை நிறுத்தி வைத்திருக்கும் மனிதர்கள். ஓடுதலுக்கும் நிற்றலுக்கும் இடையே தத்தளிக்கும் நதிகள்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சென்னை சந்தைக்கு போக நேர்ந்த போது ஜெயராமன் இதய நோயாலும் பிரகாஷ் புற்றுநோயாலும் மொத்தமாக விடை பெற்று விட்டிருந்தனர். சிறிய தனிமையில் இருந்து பெரிய தனிமையை நோக்கிய ஓர் ஒத்திகைதான் இவ்வளவு நாட்களும் நடந்திருக்கிறது.

No comments:

Post a Comment