Tuesday 28 February 2023

மும்பை தொடர்வண்டி மரபு அருங்காட்சியகம்

 

மும்பையில் பல்லாண்டுகள் வசிப்பவர்கள் கூட அறிந்திராத தொடர்வண்டி மரபு வழி அருங்காட்சியகம்.

மும்பை சத்திரபதி சிவாஜி இரயில் முனையத்தோடு ஒட்டித்தான் இவ்வருங்காட்சியகம் இருக்கிறது.

இந்தியாவின் முதல் இரயில் சேவை பிரிட்டிஷாரால் தொடங்கப்பட்டது தொடர்பான ஆவணங்கள், அவர்களது திட்டங்கள், கனவுகள், அர்ப்பணிப்புகள் என அனைத்துமே இந்தியாவில் மற்ற இடங்களில் காணக்கிடைக்காத புகைப்படங்கள், ஓவியங்களுடன் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.



கொஞ்சம் வருடங்களுக்கு முன்பு வரை விக்டோரியா டெர்மினஸ் என அழைக்கப்பட்டு வந்த மும்பை சத்திரபதி சிவாஜி இரயில் முனைய கட்டிடமே தனித்த பெரும் கலைப்பொருள்தான். அய் நா அவையால் மரபு சின்னம் என அறிவிக்கப்பட்ட கட்டிடம்.

அவர்களின் விருப்பம் முதலில் ஓவியமாக தீட்டப்பட்டு பின்னர் பொறியியல் வரைபடமாக்கப்பட்டு பத்து வருடங்களில் ஓவியத்திலிருந்து மிக நுணுக்கமான மாற்றமொன்றை தவிர்த்து அப்படியே கட்டி எழுப்பப்பட்டுள்ளது.

நில நடுக்கத்தை மனத்தில் கொண்டு கட்டப்பட்டு நூறாண்டுகளை கடந்தும் மங்காத இயற்கை சாயங்களிலான படங்கள், ஓவியங்கள், முதல் கட்டண பட்டியல், கால அட்டவணை, பிரிட்டிஷ் வாயில் தவறாக உச்சரிக்கப்பட்ட ஊர் பெயர்கள், உத்தரமில்லாத ஏணிப்படிகள், இன்னும் செயல்படும் நெடும் பாம்பு போன்ற கழிப்பறை தாரைகள், உள்ளடுக்கு கொண்ட விதான சித்திர குடைவுகள் என முடி துறக்காத அரசனைபோல நிற்கிறது அருங்காட்சியகம்.

மேல்மாடத்திலிருந்து ஏணிப்படிகளை கடந்து கூடத்தினுள் பரவும் ஒளிக்கு மஞ்சள் நிறமிட்டு ஓவியத்தில் தீட்டியிருக்கின்றனர். அதில் ஒரு துளி கூட மாறாமல் அதே ஒளிக்கசிவை நேரடியாகவே காண முடிவதை எப்படி சொல்ல?








































INDIAN RAILWAYS ART&CULTURE

No comments:

Post a Comment