Friday 10 February 2023

பரியாகுதல்



200 சதுர அடி கொண்ட அந்த அறை தான் ஒரே நேரத்தில் அடைக்கல கரமாகவும் வளைத்து பிடிக்கும் சிறையாகவும்  இருந்தது.

மூச்சு முட்டவே முன்னா பாய் கடைக்கு தேநீருக்காக சென்றான். தேநீர் குடித்து முடித்து வெகு நேரம் ஆகி இருந்த மனிதர்கள் சொந்தக் கதையும் அல்லாமல் பொதுக்கதையும் அல்லாமல் ஏதோ ஒன்று பேசிக் கொண்டிருந்தனர்.  தேய்ந்து அழிந்த பீடிகளும்  தலை எரிந்த மெழுகுத்தாள்  தீக்குச்சிகளுமாக அங்கு  சிதறிக்கிடத்தன . தேநீரை நினைத்த மாதிரி மெதுவாக குடிக்க இயலவில்லை. காசை நீட்டியவுடன் பூதக்கண்ணாடிக்கு பின்னால் பெரிதாக தெரிந்த கண்களுடனிருந்த டீ மாஸ்டரும் கடை உரிமையாளனுமாக இருந்த முன்னாபாய் "சதக்கா பாய் எங்கே? என்றவாறே மீதி சில்லறையை நீட்டினான்.பத்து வருடங்களுக்கு முன்பு இதேபோன்று விரைத்து அரிக்கும் கடும் கூதல் காலத்தில் இரத்த வாடை இல்லாமல் குருணை நெய்யில் பொரித்த மாட்டு ஈரலின் சுவையானது  நீங்கா நினைவாகிவிட்டது முன்னா பாய்க்கு  . சதக்கா  சென்னையில் ஏதாவது ஒரு நகைக்கடையின் அதிகாலைப் பொழுதுகளில் இறைச்சிக் கடையின் முதல் வாடிக்கையாளராகத்தான் போய் நிற்பார்.அவருக்கான வரவு செலவென்பது இறைச்சியும் ஊணேறிய அதன் மணமும் தான். பழைய நினைவுகளின் பாரம் தொலைக்க வந்த இடத்தில்  கடைக்காரரின் அந்த ஒற்றை கேள்வி பாரமான அந்த  பத்து வருடங்களை மீண்டும் தலைக்குள்  இழுத்து விட்டது.  இதிலிருந்து தப்புவதற்காக  அவன் தன் அறை இருக்கும் அந்த தெருவை வேக வேகமாக கடந்து அதன் முனையை எட்டினான். டயர் போலிருந்த  உப்பிய ரொட்டிகளை தொப்பியும் கலர் கை பனியனும் அணிந்த மனிதர் களிமண் அடுப்பிலிருந்து நீண்ட கம்பி கொண்டு  எடுத்துக் கொண்டிருக்க ஏதோ ஒரு சிறுவன் கியோரஸ்தமி படத்தில் வருவது போல  அந்த ரொட்டியை கையில் ஏந்தி சென்று கொண்டிருந்தான்.  ரொட்டி கடைக்கு அடுத்த கடைக்கு அடுத்த கடையில் அந்த முதியவர் அமர்ந்திருந்தார்.  பலகையிலானசிறு கடை. குத்திகளிலும் ராக்கைகளிலும் சிறு சிறு விற்பனை பொருட்கள். கடைக்குள் மின்விளக்கு இல்லை . வெளிச்சத்திற்கு அகல் விளக்கை ஏற்றியவர் அதிலிருந்து தனது பீடிக்கும் நெருப்பு வைத்துக் கொண்டார். பெரியவரை படம் எடுக்கலாம் என்று பார்த்தால் மதினா ஹோட்டலின் முன்னுக்கு சுருள் தாளிலுள்ள சேவை சாப்பிட்டுக் கொண்டிருந்த சிறுமிகளை படம் எடுக்க போய் அச்சிறுமிகளால்  வளையம் கட்டப்பட்ட கசப்பு தடம்  நினைவுக்கு வர இடம் விட்டகன்றான்.  மூத்தோர் கசப்பு இளையோரை விட நீளம் கூடியதல்லவா? இங்கிருந்து தானே இது அங்கு கை மாறி இருக்கும். மூளையின் சடவு நீங்க கால்கள் இன்னும் கொஞ்சம் நடந்தன. திருமண வாடகைக்கு செல்லும் குதிரைகள் மை தீட்டாத வெறும் குமரிகள் போல   கவசம் இல்லாமல் நின்று கொண்டிருந்தன. 

குதிரைகள் மொத்தமாக நிற்பது சௌந்தர்யம்தானே. செல்பேசியில் ஒரு படமெடுக்க படத்தில் வெறும் குதிரைகளாக நின்றன அவை. குளிப்பதை வெயில் காலத்திற்கு ஒத்தி போட்டிருந்த ஒரு  சுருங்கிய முகத்தின் மேற்பார்வையில்  ஒற்றைக் குதிரைக்கு வைத்திய பரிகாரம் நடந்து கொண்டிருந்தது. சுருட்டி பிடித்த கோணியில் கங்கு சுடர அதற்குள் ஏதோ ஒரு பொடி தூவப்பட கிளம்பிய புகை குதிரையின் நாசிக்குள் சென்றது. அதற்கு சளி தொல்லையாம்.திமிராமல் திணறாமல் புகை காட்டுபவரிடம் அடங்கி நின்றது குதிரை.

No comments:

Post a Comment