Saturday 28 January 2023

வகுதாபுரியிலிருந்து ஒரு ஜோல்னா தேசாந்திரி -- தோந்நிய யாத்ரா, எழுத்தாளர் ரியாஸ் முகமது மதிப்புரை

 

 

பழைய காயல்பட்டினத்திற்கு இலக்கியத்தில் “வகுதாபுரி” என்றொரு பெயரும் உண்டு. காயல்பட்டினத்தை சேர்ந்த  சாளை பஷீரை முதன்முதலில் பத்திரிக்கையாளருக்கேயுரிய ஒரு ஜோல்னா பையுடன் விமான நிலையத்தில் சந்தித்தேன். இன்னும் அந்த ஜோல்னாபை சித்திரம் என்னை விட்டும் நீங்கவில்லை.

வியாபரங்களுக்காகவும் தனிப்பட்ட முறையிலும் இந்தியா முழுதும் சென்றிருக்கிறார். வட இந்திய பயணங்களயும்  எழுதியுள்ளார். ”தோந்நிய யாத்ரா’ இப்புத்தகம் அவர் ஜோல்னா பையுடன் திரிந்த பயணங்களை பற்றி பேசுகிறது.

பயணக்கட்டுரைகள் என்றாலும் எல்லா கட்டுரைகளிலும் ஒரு துடிப்போடு அவர் குரலில் பேசுவதை கேட்க முடிகிறது. நாகூர் , பொன்னானி, வைக்கம் பசீரின் பேப்பூர்,கிழிச்சேரி ,மம்புரம் ஊர்களின் தெருக்களில் அவரோடு நாமும் உலவுவதாகவோ இதை படிக்கும்போது ஒரு உணர்வு.

எழுத்தாளர் ஜெயமோகன் ஒரு முறை தான் அஜ்மீர் தர்காவுக்கு சென்று வந்ததை தொடராக எழுதினார். அதில் தமிழக  இஸ்லாமிய சூபியாக்களை எல்லோரையும் சித்தமரபில் சேர்த்துக்கொள்ளமுடியாது. அதில் சிலர் போர்களில் இறந்தவர்களாக இருகின்றார்கள். அவர்களின் தர்காக்களை எல்லாம் சூபியாக்கள் என்கிறார்கள் என்று குறிப்பிட்டார்.

இந்த புத்தகத்தை இந்த கருத்தோடுடன் பொருத்திப்பார்க்கிறேன். அவரை பொருத்தவரை எல்லாம் துறந்த துறவிகளை போல் இருப்பவர்களையே சூஃபி மரபில் இணைத்துக்கொள்கிறார்.

ஆனால் தென் தமிழகம் நாகூர் முதல் மலபார் வரை அடங்கியுள்ள ஒலியுல்லாக்கள் பெரும்பான்மையாக ஏதோ ஒரு வகையில் சுதந்திர போராட்டதில் துண்டு துண்டாக  வெட்டுப்பட்டோ அல்லது போர்த்துகீசியர்களால் கொல்லப்பட்டோ இருப்பர்கள் என்பதே வரலாறு அறிய தரும் உண்மை.

இஸ்லாமிய சூஃபி மரபுகளில் வந்தவர்கள்  அநீதிக்கு எதிராக போரடுபவர்களாகவும் , அதே சமயம் மனோஇச்சைக்கு எதிராக போராடும் மெய்யியல் தளத்தில் செயல்படுபவர்களாகவும்  ஒரு சேர இருந்துள்ளார்கள்.

சாளை பசீர் இப்படி கடலோரங்களில் தர்கா  பச்சை போர்வைக்குள் அடங்கி கிடக்கும் ஒலிமார்களை வேறோரு கோணத்தில் அணுகுகிறார்.

நாகூரின் புராதன வீதிகளிலுல் பொன்னானி காயல் ஆற்றிலும் மறைந்து கிடக்கும் ஒரு சரடை பிணைத்துக்காட்டுகிறார். அது வாசகர்களுக்கு ‘சீத் ரஸ்தா’ (சேது சாலை)வை வேறொரு கோணத்தில் தரும் என்றே நம்புகிறேன்.

 இதில் வரும் பொன்னானி அத்தியாயத்தில் முதலாம் சைனுத்தின் மக்தும்  அவர்களிடம் அபயமாகும் மீன் விற்கும் சிறுவன்,

 அவனுக்கு திருமணம் நிகழ்ந்த அன்றே பறங்கியர்களிடம் ஒரு பெண்ணை காப்பற்றுவதற்காக தன் உயிர் நீத்த “புதியப்பிளா சஹீத்”(புதிய மாப்பிளா இறைபாதையில் வெட்டப்பட்டவர்)  ஏழு துண்டங்களாகவெட்டப்பட்டுவெளியங்கோடு,பேப்பூர்,தானுர்,,கோட்டை,வைப்பின்,திருவன்னுர் உள்ளிட்ட  ஏழு இடங்களில் வீசப்பட்ட தொன்மத்தை பொன்னானி அலாக்கரை உப்போடு திரும்ப திரும்ப வாசிக்க மனம் நாடுகிறது.

ஒரு புனைவிற்கான எல்லா லட்சணங்களும் உள்ள தொன்மம்.

நாகூர் சாகுல் அமீது பாதுஷா நாயகம்  ஹஜ் செய்துவிட்டு மக்காவில் இருந்து நேராக மலபார் வருகை புரிகிறார்கள். முதலம் சைனுத்தின் மக்துமை சந்திக்கும் அவர்கள் பறங்கியர்களுடன் எவ்வாறு போர் புரிவது என்ற வியூகத்தை வகுக்கிறார்கள்.

பறங்கியர்களோடு போர் சமரசம் கொண்டு அம்னித் தீவு வாசிகளுக்கு நாகூர் சாகுல் அமீது பாதுஷா நாயகம் வழங்கும் இன்னொரு போர்யுத்தி அபாரம்.

இந்த பத்திகளை படிக்கும் போது டச்சுக்கு  இந்தோனேசியாவில் சிம்மசொப்பனமாக விளங்கிய உலமாக்கள் புரிந்த போர் “பாடி வார்” நினைவுக்கு வருகிறது. ஹஜ்ஜுக்கு மக்கா செல்வதால் தான் இவர்கள் எல்லாம் ஒன்றாக நமக்கு எதிராக போராட துணிகிறார்கள் என்று அன்றைய இந்தோனேசியாவை ஆண்ட டச்சு அரசாங்கம் ஹஜ்ஜுக்கு தடை விதித்தது. ஹஜ் கப்பல்கள் நடுக்கடலில் கொளுத்தப்பட்டது இவற்றை“கப்பல் ஹாஜி” புத்தகம் விவரிக்கிறது

இந்த புத்தகத்தில் சாளை பசீர், இரண்டு எழுத்தாளர்களின் நினைவிட குறிப்புகளயும் சேர்த்துகொண்டது ஏன் என்று புரியவில்லை இருந்தாலும் அந்த கட்டுரைகளும் சுவராசியத்திற்கு குறைவில்லை.

ஒரு முறை பஷீரிடம் ’நீங்கள் ஏன் தொழுவதில்லை’ என்று கேட்டதற்கு ‘செடி கொடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவது ஒரு வகையான தொழுகை தான். வாழ்க்கை முடிவற்ற பிரார்த்தனை தான்’ என்பதிலிருந்து ஆரம்பிக்கிறது சாளை பஷீர் எழுதிய ‘தோந்நிய யாத்ரா’ புத்தகத்தின் முதல் அத்தியாயமான ‘பன்னிரெண்டனா சுல்தான்’ .

சாளை பஷீர் இதற்கு முன்பாக “கசபத்” எனும் குறுநாவலை எழுதியுள்ளார்.

தேர்வு செய்யப்படாத பாதை எனும் ராபர்ட் ஃப்ராஸ்ட் எழுதிய கவிதையுடன் ஒரு ஊரின் இரண்டு வழிப்பாதைகளை பற்றி சாளை பஷீர் குறிப்பிடும் போது எனக்கு பாபர் எழுதிய பாபர் நாமாவில் அவர் குறிப்பிடும் சம்பவத்தை நான் எடுத்துகாட்டுவது சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

பாபர் ஒரு பெருநாளை இரு முறை ஒரே ஊரில் கொண்டாடியதில்லை.

நீச்சலை பெரிதும் விரும்பும் பாபர் , ஒரு ஆற்றை குறுக்கும் மறுக்குமாக நீந்திப்பார்த்துள்ளார். பாதசாரி அப்படித்தான். அவனுக்கு சலிக்கும் வரையில் ஒரே பாதையில் திரும்ப திரும்ப நடந்துக்கொண்டிருக்கிறான்.

அவனுக்கு புதிய காட்சிகளையும் புதிய மனிதர்களையும் தரும் வரையில்  அந்த பாதயை விட்டும் பாதசாரி  திரும்ப போவதில்லை.

படித்து முடித்த பின் தூரத்தில் கலாசிகளின் பாடும் மகாகவி மொயின்குட்டியின்பத்ருப்பாட்டும் உஹதுப்படைப்பாட்டும் கேட்டுக்கொண்டே இருக்கிறது.

No comments:

Post a Comment