Sunday 4 September 2022

தோந்நிய யாத்ரா – நிறைவுப்பகுதி ( திருவனந்தபுரம், விழிஞ்ஞம், பூவாறு) நில வேர்கள்

 

திருவனந்தபுரம் சாலைக்கம்போளத்தில்,  ஊர்க்காரரின் அறையில் குளித்து முழுகி வெளியிறங்கினேன். வளையல் செட்டித்தெருவிலுள்ள தட்டுக்கடையில்  வாத்து முட்டை, மலையாளத்தில் தாரா மொட்ட ஆம்லேட்டும் தோசைகளுடன் துவையலுமாக பசியாற்றை நிமிர்த்தியதில் முப்பத்தாறு ரூபாய்கள்தான். கடை வைத்திருப்பவர் சென்னைக்காரர். 

 அவரின் இணையர் இங்குள்ளவர் என்பதால் இவரும் இங்கேயே நிரந்தரமாகி விட்டார். சென்னையை விட்டு வந்து முப்பது வருடங்களுக்கும் மேலாகி விட்டது. கேரள அரசு போக்குவரத்து கழக ஊழியர்களும் வரிசை கட்டி நின்று சாப்பிட்டுக் கொணடிருந்தார்கள். எந்த முடுக்கில் கடையிருந்தால் என்ன? குறைந்த விலையும் சுவையும்  இழுத்து வந்து விடும்தானே? சாலை  கம்போளத்தெருவிலுள்ள பழைய பெரிய இறைச்சியுணவு கடையொன்று உண்டு. அங்கு சாப்பிட்டால் மூன்று வேளை உணவிற்காகும் காசை ஒரு வேளை உணவிற்கு கொடுக்க வேண்டி வரும். எந்த ஊருக்கு பயணித்தாலும் சரி, சுவையுடன் கரிசனமும் விலை மலிவும் சேர்ந்த சிறிய கடைகள்தான் என்னுடைய முதல் தேர்வு.

சாலைக்கம்போளத்திலிருந்து கிழக்கே கோட்டைக்குள் நுழையுமிடத்தில் உள்ள பத்மநாபா திரையரங்கில் ‘ஜனகணமன’ திரைப்படம் திரையிடுவதாக இணையம் சொல்லிற்று. இப்பயணத்திலிருக்கும்போதுதான் ‘ ஜனகணமன’ மலையாளத் திரைப்படமானது மலையாளம் உள்ளிட்ட தென்னாட்டு  மொழிகளில் வெளியிடப்பட்டது. நாட்டு, அதிகார, ஆதிக்க  வெறியையும், பித்தையும் நார் நாராக்கிய  துணிச்சலான படம் என பார்த்தவர்கள் சொன்னார்கள். மதியம்தான் காட்சி.படக்காட்சிக்கு இன்னும் மூன்றரை மணி நேரமிருந்ததால் பத்மநாப சாமி கோயிலைசுற்றியுள்ள அக்ரகாரத்தை கண்டு வரலாம் எனத் தோன்றியது. 

கிழக்கே கோட்டை
கிழக்கே கோட்டை

இந்த அக்ரகாரத்தைப்பற்றி வலையொளி ஒன்றை ஏற்கனவே கண்டிருந்ததால் ‘ நேரில் காண வேண்டும்’ பட்டியலில்  இதுவும் ஏற்றம்.. நகரத்தின் இழுவிசைக்கு நடுவே தனித்திட்டுக்களாய் நிற்கும் தமிழ் பிராமணக் குடியிருப்புகள், அதிகாரத்தினதும் நிதியினதும் குவிமையமான பத்மனாபசாமி கோயிலைச் சுற்றிலும் தேனடையாய் அடர்ந்திருக்கின்றன.

அனிழம் திருநாள் மார்த்தாண்ட வர்மன்

பதினெட்டாம் நூற்றாண்டில் திருவிதாங்கூர் சமஸ்தானக்குடிமக்களிடையே எழுந்த கிளர்ச்சியை ஒடுக்குவதற்காக அன்றைய அதிகார பீடத்தால்  தந்திரமொன்று  கையாளப்பட்டது,  அரசன் அனிழம் திருநாள் மார்த்தாண்ட வர்மன், தன்னை ‘ பத்மனாப தாசன்’ என அறிவித்துக் கொண்டான். அதிகாரத்தின் அநீதியின் மேல் புனித போர்வை போர்த்தப்பட்டது.. ஒடுக்கப்பட்ட மக்களிடம் பறித்து சேர்த்த வரிப்பணம் அரசனின் ஒற்றை சொல்லில் முழுக்க பத்மனாபசாமி கோயிலுக்கு உடைமையாகியது.

தங்கம் நிறைந்த நூற்றுக்கணக்கான குடங்களும் வெள்ளிப்பாளங்களும் கோயில் நிர்வாகத்தினராலாயே நெடுங்காலம் திருடப்பட்டு வந்திருக்கின்றன. இவையனைத்தையும் புனித போர்வையின் கைங்கரியத்தால் பொது மக்களின் கண்களை விட்டு மறைக்கப்பட்டு விட்டன. 

உச்ச நீதிமன்றத்தினால் நியமிக்கப்பட்ட குழுவினர்  2011 ஆம் ஆண்டு இந்த நிதிக்களஞ்சியத்தின் அய்ந்து அறைகளையும் திறந்து ஆய்ந்து  அறிக்கை வெளியிட்ட பின்னர்தான் மொத்த இருப்பையும் பற்றி உலகமே அறிய நேர்ந்தது. இன்று உலகிலேயே மிகவும் பணக்கார வழிபாட்டுத்தலப்பட்டியலின் முதலிடத்தில் பத்மநாப சாமி கோயில் ஏறி விட்டது. தங்கம், வெள்ளி, வைரம், இரத்தினக்கற்கள், தங்கத்திலான  நாணயங்கள், சிலைகள், மணி முடிகள் , பன்னாட்டு நாணயங்கள் அடங்கிய கணக்கற்ற திறைக்களஞ்சியத்தின் மொத்தம் ஆறு  நிலத்தடி அறைகள் இந்திய தொல்லியல் துறையால் 2001 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டன.

திறக்கப்பட்ட அய்ந்து அறைகளிலிருந்து  தெரிய வந்த  நிதிக்கூம்பாரத்தின் மதிப்பு இன்றைய ஒரு இலட்சம் கோடி ரூபாய்களுக்கும் மேல். இந்த களஞ்சியத்தின் இரண்டாம்  எண்ணுள்ள அறையை திறந்தால் நாடே அழிந்து விடும் ‘என அரச தலைமுறையினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தியா முழுக்கவுள்ள பெரும் கோயில்களின் வரலாற்றுக்குள் நுழைந்தால் பெரு நிதியுடன் அதிகாரத்தின் குவி மையமாகவும் செல்வாக்கிற்கான போட்டி மையமாகவும் அவை விளங்கியிருப்பதை கண்டு கொள்ளவியலும்.. இந்த காரணங்களுக்காக மட்டுமே  மத இன வேறுபாடின்றி அரசர்கள் கோயில்களை  குறி வைத்துள்ளனர்.

மக்களின் பணம் மக்களுக்கே செலவழிக்கப்பட வேண்டும் என்ற பத்ம நாப பக்தர்களின் கோரிக்கைகள் எழுந்தவுடன்  ‘ முஸ்லிம், கிறித்தவ வழிபாட்டுத்தலங்களில் இது போல உங்களால் தலையிட இயலுமா?” என அரச குடும்பத்தினரும் இந்துத்வ நாஜிகளும் திசை திருப்புகின்றனர்.. அனைவரினதும்  வரிப்பணத்தில் இயங்கும் துணை இராணுவப் படையினர், காவல்துறையினரின் காவலில் நாய் உருட்டிய தெங்கம்பழம். வட்ட சூனியத்திற்குள் இறக்கப்பட்ட நங்கூரமாகிய பற்றுதல்களும் நம்பிக்கைகளும் வந்து முடிவது இப்படித்தான்.

பத்மனாபசாமி கோயிலின் மூன்று திசை பிரகாரங்களிலும் சூழ்ந்திருக்கும் அக்ரகாரமானது காவல் தடுப்பரண்களுக்குள் வழித்து துடைத்து துப்புரவாக இருந்தது. வரிசை கட்டி நிற்கும் இரும்பு அழி போட்ட வீடுகள்.  வெறிச்சோடி கிடக்கும் திறந்த வெளி கொட்டாரம். அதிகாரத்தின் இறந்த கால வெளி. உச்சியில் விழும் ஈரப்பத வெய்யிலினால் வழி கேட்பதற்கு கூட ஒற்றை மனிதரில்லை.

சென்ற கால பாதாளத்திற்கான கமுக்க வாயிலாகி பச்சையடித்து நின்றிருந்த தெப்பக்குளத்தை சுற்றிலும் யாரும் நுழைய இயலாதபடிக்கு வலுவான வேலியிட்டிருந்தனர். நீர்ச்சாவுகளை தடுப்பதற்காக என அங்கிருந்தவர் சொன்னார். கோயிலுக்குள் நுழைவதற்குரிய மடிசார் உடைகளை வாடகைக்குக்கு விடும் கடைக்குள் வெண் மஞ்சள் நிறத்திலிருந்த பிராமணக்குடும்பமொன்று நுழைந்தது.  

வெய்யிலில் தளர்ந்த சதுரத்தை அமர்த்துவதற்கு பிரகாரத்தில் எங்குமே இடமில்லை. தென்புற பிரகாரத்தில் கேரள அரசின் பண்பாட்டுத்துறை  வளாகத்திற்குள் மரங்களும் நிழல்களுமாய் அகன்ற இடம் தட்டுப்பட்டது. அமர்ந்து காலாறிக் கொண்டிருக்கும்போது  வட நாட்டு நெடுங்கட்டை உடல் கொண்ட வாலிபர் வந்தமர்ந்தார்.பேச்சுக் கொடுத்தேன். ஆள் உபிகாரர். தொடக்கமும் முடிவும் கத்தரிக்கப்பட்ட  தெளிவற்ற தொடர்பில்லாத மறுமொழிகள். மனம் புரண்டிருக்கிறது.

பண்பாட்டுத்துறை அலுவலக வளாகம்
பண்பாட்டுத்துறை வளாகம்

அங்கிருந்து கிளம்பத் தீர்மானிக்கும்போது கட்டிடத்திற்குள்ளிருந்து வெளியூர் ஆட்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். எறும்புகளின் சாரியென்றால் அதன் அற்றத்தில் தீனி திட்டம்தானே. கவனிக்காமல் கிளம்பியிருந்தால் பெரும் இழப்புதான்.  படியேறிப்போய் பார்த்தால் அது பண்பாட்டுத்துறையின் அலுவலக முற்றம். அதன் தாழ்வாரத்தை பழமையான நிழற் படங்களால் நிறைத்துள்ளனர். ஆண்டுகள் ஏறிக் கிடக்கும் கேரள நினைவுகளின் நிழல் பதிவுகள். முன்பு அரசாட்சியின் மாளிகையாக இருந்திருக்கிறது. மங்கி மாய்ந்த அதிகாரத்தின் அழகியல் எச்சம். 


கசையடி

பொ.ஆ. 1903 இல் கோழிக்கோட்டில் உள்ள அடுமனையின் படத்திலிருந்து  நிழற்படம் தொடங்குகிறது. கண்ணாடி முகப்பு கொண்ட தகரப்பேழைகளில் தின்பண்டங்கள். வட்டு முடி மனிதர்கள், மேல் துணியிருக்க வேண்டிய இடத்தில் அணிகலன்களுடன் நிற்கும் நாயர் சிறுமி,,கொய்லாண்டி முஸ்லிம் பள்ளிவாசலும் கொஞ்சம் நம்பிக்கையாளர்களும், முல்லப்பெரியார் அணை கட்டப்படும்போது எடுக்கப்பட்ட படம், பதினேழாம் நூற்றாண்டின் இலட்சத்தீவு கவரத்தி உஜ்ரா பள்ளிவாயிலின் செதுக்கு வேலை நிறைந்த கூரை, இந்திய செவ்வியல் ஓவியர் இராஜா இரவிவர்மன், எழுதிக்கொண்டிருக்கும் வைக்கம் முஹம்மது பஷீர், திருவிதாங்கூர் திவான் சர். சி.பி.இராமசாமி அய்யர் என  போன கால காட்சிகளால் நிழல் பட முற்றம் நிறைகிறது.

அலுவலகத்திலுள்ளவர்களிடம் இந்த நிழல் பட முற்ற முயற்சியை பாராட்டி விட்டு இது புத்தக கோவையாக கிடைக்குமா? எனக் கேட்ட போது அப்படியொன்றுமில்லை என கை புரட்டினர். அப்படியொரு புத்தகம் வந்தால் அது அரசிற்குமொரு வருமானம். தேடலுள்ளவர்களின் கையில் காலத் திரவியச் செப்பு.


இக்கட்டிடத்தின் மாடியிலும் கலைமாடம் அமைத்துள்ளார்கள். அங்குள்ள பொறுப்பு அலுவலர், ஓவிய அரங்கில் படமெடுக்க தடையென்றார்.  பழைய , நவீன பாணி ஓவியங்களுடன் கொஞ்சம் சிற்பங்களும் கொண்ட முற்றம், கண்களால் வாங்கிக் கொண்டேன்.வண்ணங்கள் இணைந்தும் பிரிந்தும் கூத்தாடுகின்றன.  

இப்படியான கலைக்காட்சியகம் இங்கிருக்கிறது என்ற அறிவிப்பு பலகை வெளியில் எதுவுமில்லை. ஆட்கள் ஏன் வர வேண்டும்? என நினைத்திருக்கலாம்.  திருவனந்தபுரத்தைக் காண வருபவர்கள் தவற விடக்கூடாத இடங்களில் இதுவும் ஒன்று.

‘ஜனகணமன’ திரைப்படத்திற்கு இன்னும் கொஞ்சம் நேரமிருந்ததால் கிழக்கே கோட்டையில் உள்ள பூங்காவில் நேரப்போக்கு. சிறு மண்டபத்தின் கல் இருக்கைகளில் யாரும் யாருடனும் தொடர்பற்று  நகரத்துக்கேயுரிய விலகலுடன் அமர்ந்திருந்தனர்.அங்கு தலை சாய்க்கும் உதிரி மனிதர்களை பூங்காவின் காவலர் பார்த்து பார்த்து துரத்தியடித்துக் கொண்டிருந்தார். ஏதிலிகள் தலை வைக்கக் கூடாத  இளைப்பாறுதலுக்கான ஒரு பொது வெளி ஒன்று  அங்கிருப்பதை விட அது ஒரு கல் குவியலாகிப்போவதே மேல். மனிதன் என்ற பெயர்ச்சொல்லானது  அந்தஸ்திற்குள்ளும் அடையாள அட்டைகளுக்குள்ளும் சுருக்கப்படும் நவகாலம்.

திரைப்படம் உண்டாக்கிய தீவிர மன நிலையுடன் வெளியே வந்தபோது நகரம் மழையால் நனைந்திருக்க பூங்காவில் ஏதோ ஓர்  அரசியல் இயக்கத்தினர் முழக்கங்களை எழுப்பிக்கொண்டிருந்தனர்.

அடுத்த நாள் ‘தோனயாத்ரா’வின் இறுதி தினம். விழிஞ்ஞமும் பூவாரும் போகலாம் என திட்டம். நண்பர் மிடாலம் அன்சார் அகமது  நாகர்கோவிலிலிருந்து வந்திணைந்து கொள்வதாக சொன்னார்.

நான் அரை மணி நேரம் முன்னதாகவே விழிஞ்ஞம் பேருந்து நிலையம் போய் விட்டேன். போரிலிருந்து மீண்ட களையில் கிடந்தது நிலையம். முன்னொரு காலத்து மனிதர்கள் பயன்படுத்தியிருந்த காத்திருப்பு கூரை. குழிகளையும் பரிந்து போன சாலையையும் பெரும் வீரத்துடன் பார்க்கும் தோரணையில் நின்றிருந்த கேரள அரசு போக்குவரத்து கழகத்தின் இரண்டோ மூன்றோ பேருந்துகள். மொத்தத்தில்  ஓர் ஆயாச பலன்.

காத்திருப்போர் திண்டின் ஓரத்தில் குடுமியும் தெலுகுமாக இரண்டு ஆண்களும் அவர்களுடன் ஓர் பெண்ணும் நின்றிருந்தனர். இள வயதுக்காரர்கள். எல்லாம் நமது மாவட்டத்துக்காரர்கள்தான். எதிர்வு சொல்லும் தெலுகு பேசும் நாயக்கர்கள். விழிஞ்ஞத்தில் கூட்டங் குடும்பமாக குடியிருக்கின்றனராம். இங்கிருந்து கிளம்பி பல இடங்களுக்கும் போய் குறி சொல்லி பிழைப்பவர்கள். பாஞ்சாலங்குறிச்சி பக்கம் போவதற்கு நிற்பதாக சொன்னார்கள்.     

அன்சார் வந்தவுடன் பயணப்பொதியினை சாப்பாட்டுக்கடையொன்றில் வைத்து விட்டு கடற்கரை நோக்கி நடந்தோம்.கடற்புரத்தை எட்டியபோது அது அனைவரினதும் வெளியாக பெருகிக் கொண்டிருந்தது. வழியெங்கும் மீனும் கருவாடுமாக கடை பரப்பியிருந்த மீனவப்பெண்கள். கரை சேரும் மீன் நிரம்பிய படகுகள்.  நீரலம்பிக் கொண்டு ஏலத்திற்கு காத்திருக்கும் மக்கள் திரள். பழம் புகைப்படமொன்று நிகழ்ந்து கொண்டிருந்தது.

இயற்கை வனப்புடன் கூடிய  கருங்கல் பாறைக்குன்றுகள் நிறைந்த  அலைவாய்க்கரையும் மீன்பிடித்துறைமுகமும்  கொண்ட விழிஞ்ஞத்தின் பழைய பெயர் விழிஞ்ஞத்துவாய்.சங்க கால வரலாற்றுடன் தொடர்புடைய இவ்வூர், ஆய் மன்னர்களின் தலைநகராக திகழ்ந்துள்ளது.கடல்வாணிபம் செழித்தோங்கிய இப்பகுதில் ஏராளமான   படையெடுப்புகளும் நிகழ்ந்துள்ளன.

பாண்டியர்களும்  சோழர்களும் படையெடுத்ததால் ஆய் அரசத் தொடர் வீழ்ந்தது.சோழர்களுக்கு பிறகு இப்பகுதியானது வேணாட்டிலும் பின்னர் திருவிதாங்கூரிலும் உட்பட்டிருந்தது. இராஜராஜ சோழனின்  வெற்றியைக் குறிக்கும் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படும்  காந்தளூர் சாலை என்பது  விழிஞ்ஞம் பகுதி என்பது  சில வரலாற்றாய்வாளர்களின் கூற்று. சோழ வெற்றியை கொண்டாடும்  விதமாக  இராஜேந்திர சோழபட்டினம் என்றும் இவ்வூர் பெயர் மாற்றம் கண்டுள்ளது..

ஆய் தலைமுறையினரின் காலத்தில் பொலிவு பெற்றிருந்த இந்நகர் பின்னர்  வீழ்ச்சியுற்றதற்கு படையெடுப்புகள்  காரணமாக இருக்கலாம். இத்தனை பழைமையான இவ்வூரின் வரலாறு முறையான ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை. வரலாற்றுச் சிறப்புமிக்க விழிஞ்ஞத்தின்  அடையாளமாக  எஞ்சியிருப்பது சிறிய குடைவரைக் கோவில் மட்டுமே..

கேரள தொல்லியல் துறையினர் கடற்கரையில் சில ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர.எனினும்  முழுமையான அகழாய்வு மேற்கொள்ளும்போதே இவ்வூரின் தொன்மை வெளிவரும். தமிழ் மரபும் துலங்கும். இவ்விஷயத்தில் தமிழக தொல்லியல் துறை மூலம் கேரள அரசிற்கு அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும். விழிஞ்ஞம் தமிழ் கூறும் நல்லுலகின் பகுதி என்பதற்கு ஆதாரமாக இவ்வூரின் துறைகுடியினர் உள்ளனர். கடலை வாழ்வாதாரமாகக் கொண்டு  வாழும்  கிறிஸ்தவர்களும்  முஸ்லிம்களும் இதற்கு சாட்சியாக உள்ளனர்.

கத்தோலிக்க  கிறிஸ்தவர்களான முக்குவர்களின் பேச்சை உன்னிப்பாக கவனித்தால்  அதில் இழையும் இழுவையில் குமரிமாவட்ட மீனவர்களின் மலையாளம் கலந்த பேச்சு வழக்கினை கண்டு கொள்ளவியலும்.

இங்கிருக்கும் முஸ்லிம்களின் பேச்சு வழக்கும் குமரி மாவட்ட கடலோர  முஸ்லிம்களின் வட்டாரத் தமிழுடன் நெருங்கிய  தொடர்புடையது.  வட்டாரத்தமிழுடன்  மலையாளம் கலந்து பேசும் பேச்சு வழக்கை திருவனந்தபுரம் பீமாப்பள்ளி வட்டாரத்திலுள்ள வயது முதிர்ந்தவர்களின் பேச்சிலும் அவதானிக்க முடியும்.. இந்த பகுதிகளில் அர்வி எனப்படும் அரபுத்தமிழ் செல்வாக்கு பெற்றிருந்திருக்கிறது. தமிழின் வட்டார வழக்குகளையும் தொலைந்துபோன பழந்தமிழ் சொற்களையும்  ஆய்வு செய்யும் மொழியியல் ஆய்வாளர்களுக்கு ஏற்ற இடமிது.

விழிஞ்ஞம், பூவாறு பகுதிகளில் தற்சமயம் பிறந்து வளரும்  தலைமுறையினர் முழு மலையாளம் மட்டுமே பேசுகின்றனர். காரணம் கல்விச்சாலைகளின் கற்பித்தல் மொழி மலையாளமாகும். இதனால் நாளடைவில் இங்குள்ள கலவன் நடை மடிந்து விடும் என்கிறார் அன்சார். 

இங்குள்ள மீனவர்கள் முஸ்லிம்களாகவும் கிறிஸ்தவர்களாகவும் உள்ளனர். கடற்கரையில் நிற்கும் போர்ச்சுக்கீசியர் கால கத்தோலிக்க தேவாலயம் கிறிஸ்தவம் பரவிய  வரலாற்றின் கல் சாட்சி.மேற்கே கொஞ்சம் தொலைவில் வெண்பாறை சிற்பமாகி  நிற்கும் முஹ்யித்தீன் பள்ளி,பாறைப்பள்ளி மகாமுடன் தென்கேரளத்தின் பெரிய பள்ளிவாசல்களில் ஒன்றான தெக்கும்பாகத்தின் வலிய பள்ளியும் இருப்பு கொண்டுள்ளன. 


முஹ்யித்தீன் பள்ளியில் இறுதி ஓய்வு கொள்ளும் அய்ந்து மகான்களின் பெயர்களுடன் அவர்களின் வரலாற்றையும் மர்மமாகவே வைத்துள்ளது பள்ளி நிர்வாகம். இங்கு  வருடந்தோறும்  நடைபெறும் உரூஸ் இவ்வட்டாரத்தில் பிரபலமானது.  முஹ்யித்தீன் பள்ளியை அடுத்துள்ள பாறைப்பள்ளி மகாமில் மறைந்து வாழும் இரண்டு நாதாக்களின் மண்ணறையையும் ஒளிப்பதிவு பண்ண நிர்வாகம் இசைவதில்லை. யாராவது கனவில் வந்துதான் புத்திமதி உரைக்க வேண்டும்.

பாறைப்பள்ளி மகாமில் அடங்கியுள்ள இரண்டு மகான்களில் ஒருவரின் பெயர் பொன்னானி சாஹிபு ( ரஹ் ). பிறிதொருவரின் பெயர் கொல்லங்கோடு சாஹிபு என்றழைக்கப்படுகிற அப்துல்காதிர் ( ரஹ்). இவர் காயல்பட்டினத்திலிருந்து  குமரிமாவட்டத்தின்  கொல்லங்கோட்டிற்கு வந்து நெடு நாட்கள் மார்க்கப்பணி புரிந்திருக்கிறார். பின்னர் விழிஞ்ஞத்திற்கு இடம் பெயர்ந்தவர் இங்கேயே நிறைந்து விட்டார்.கொல்லங்கோட்டில் துலங்கியவரென்பதால் அப்பெயரே நிலைத்து விட்டிருக்கிறது. கொல்லங்கோட்டு சாகிபின் மரபுத்தொடரை காயல்பட்டினவாசிகள் தேடும்போது வரலாறு இன்னும் துலக்கமாகும்.

எல்லாம் பார்த்து விட்டு  திரும்பும் வழியில்  வறுத்தரி உப்பா மகாம்  கரை சாட்சியாக நிற்கிறது. பல சுவாரசியங்களின் உறைவிடம் இம்மகாம்.

வறுத்தரி உப்பா மகாம்

இம்மகாமுக்கு கூரை அமைக்க உள்ளூர்வாசிகள் பலமுறை முயன்றும் நடந்தேறவில்லை என ஒரு தொன்மம் நிலவுகிறது.. இப்பொழுதும் இம்மகாம் வானம் பார்த்தபடிதான் உள்ளது. போர்க்களத்தில் இரத்தசாட்சியாகி இம்மகான் அடங்கப்பட்டுள்ளார்கள் எனவும் ஒரு கூற்றுண்டு. விழிஞ்ஞம் துறைமுகத்திற்கான நிலமெடுப்பு/விரிவாக்கத்தின் போது  வறுத்தரி உப்பாவின் மகாமை தகர்க்க வந்த மணல்வாரி எந்திரங்கள் செயலிழந்ததாகவும் சொல்கிறார்கள்.

வறுத்தரி உப்பா வாழும் காலத்தில் வறுத்தரிசியும் கொப்பரைத்தேங்காயும் சர்க்கரையும் கலந்து உண்பதை வழக்கமாக கொண்டிருந்ததால் வறுத்தரி உப்பா ( வறுத்தரிசி அப்பா )  என்றழைக்கப்பட்டார். உண்மை பெயர் தெரியவில்லை. வறுத்தரி உப்பாவின்  இந்த விருப்ப உணவுதான்  இம்மகாமின் நேர்ச்சை. உடலுக்கு வலு சேர்க்கும் தென்னகத்தின்  பண்டைய   நொறுவையான    வறுத்தரிசியானது உப்பாவின்  நினைவாக மட்டுமே மாறிவிட்டது.

எல்லா வெளிகளிலும் நீள் துயில் கொள்ளும் இம்மனிதர்களுக்கு அனைத்து நிலமும் அவர்களின் நிலமே. பன்மயப்பட்ட நிலங்களை தங்களின் வாழ்வு கொண்டு ஊடும் பாவுமாக கோர்ப்பவர்கள். வான் மழை தான் வீழும் நிலப்பரப்பின் நிறமெடுத்துக் கொண்டு ஓடுவதைப்போல  எல்லா நிறங்களையும் நினைவுகளையும் சொற்களையும் வரலாறுகளையும் தனக்குள் ஏற்றியபடி காலப்பேழையாய்  உறைபவர்கள்.

விழிஞ்ஞத்திலுள்ள முஸ்லிம் மீனவர்கள் மரக்கார் என்று அறியப்படுகின்றனர்.கடல்  வணிகத்தில் கோலோச்சியிருந்த மரைக்காயர்களுக்கும் இவர்களுக்குமிடையே உள்ள அடைமொழியில் வித்தியாசம் உண்டு. முஸ்லிம்களின் முஹல்லா அமைப்பு விழிஞ்ஞம்  தெக்கும்பாகம், விழிஞ்ஞம் வடக்கும்பாகம் விழிஞ்ஞம் சென்றல் என்று  நீண்டு கிடந்தாலும்   தெற்கு பகுதியானது (தெக்கும்பாகம்) பழைமை வாய்ந்தது..எனினும் பழைமையை பறைசாற்றும் அடையாளங்களை இன்று இங்கு  காணவியலவில்லை. பள்ளி விரிவாக்கம் என்ற பெயரில் பழைமையை சிதைப்பதின் வழியாக  இவர்களும் வரலாற்றை காணாமலடித்துள்ளனர். இவர்களை பழைய காலத்திற்குள் கடத்திக் கொண்டுபோய் கொஞ்ச காலம்  அங்கு  தடுத்து வைக்க வேண்டும்.

மாலிக் தீனார் அவர்களின் குழுவினரும் அதற்கு அடுத்த தலைமுறையினரும் கட்டிய பள்ளிவாசல்களின் பட்டியலில்  இவ்வூரும் அடங்குவதாக கருதப்படுகிறது. ரிஹ்லத்துல் முலூக் என்ற என்ற நூலில் குறிப்பிடப்படும் தொடக்ககால  காழிமார்கள்(காஜி) பட்டியலில் இடம்பெறும்  பூவாறுபட்டினம் என்பது விழிஞ்ஞம் அல்லது பூவாறு எனக் கருதப்படுகிறது.. அன்றையகால துறைமுகப்பகுதி என்பது நீண்ட கடற்கரையைக் கொண்டது என்பதாலும்  விழிஞ்ஞம் இராஜேந்திர சோழ பட்டினமாக இருந்ததாலும் இவ்வாறு அழைக்கப்பட்டிருக்க கூடும்.

கடந்த காலங்களில் இங்கு கோலோச்சிய வணிகமும் அதிகாரமும் தங்களின் முட்டல் மோதல்களை மனிதர்களுடனேயே  மட்டிறுத்தி  நின்றன. இவ்வண்டத்தின் பெரும் நீர் சாட்சியின் மீது வரம்பு மீற அவை துணிந்திடவில்லை. அகங்காரத்தின் வீச்சோடு கூடிய பரிமாற்றங்களைக் கொண்டு கடலுடன் முரண்பட்டதுமில்லை. விழிஞ்ஞத்தின்  நீலத்திரள் மார்பில்  கொட்டப்பட்டுள்ள பாறைகளில்  சிங்க மூர்க்கத்துடன் மோதிக் கொந்தளித்துக் கொண்டிருந்தன அலைகள். இதன் சீற்றமறியாமல் கடலின் வனப்பில் வசீகரிக்கப்பட்டு குளிக்க முற்படும் அயலூர்க்காரர்கள் உயிரை தொலைக்கும் துயர். 


அழகும் இடரும் பிணைந்த கடல் சார் பண்பாட்டு வாழ்வின் தனித்த நிலங்களில் ஒன்றான விழிஞ்ஞத்தின்  அடையாளங்கள் வெகு விரைவில் காணாமலடிக்கப்படும் என்றே தோன்றுகிறது.

திருவனந்தபுரத்திலிருந்து  15 கிமீ தொலைவிலும் குமரி மாவட்ட  எல்லையிலிருந்து 18 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ள இந்தியாவின் மிக ஆழமான விழிஞ்ஞம் இயற்கை துறைமுகமானது ஒன்றிய அரசின் செல்லப்பிள்ளையான அதானியின் மடித்தட்டில் கிடத்தப்பட்டுள்ளது. அதானியின் விரல் தீண்டலில் பிறிதொன்றாக எழும்  இத்துறைமுகமும் கடலும், இயற்கையையும்  மக்களையும் அந்நியமாக்கி  எல்லாவற்றையும் புரட்டிப்போடத் தொடங்கி விட்டன.

துறைமுகத்தை தூக்கி நிறுத்த தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைகளை நெய் மீனை வெட்டுவது போல வெட்டி பெருந்துண்டங்களாக்கி சுமந்து கொண்டு  விழிஞ்ஞத்தின் நெஞ்சில் குறுக்கும் நெடுக்குமாக ஓடும் டாரஸ் சரக்குந்துகளின் காட்சிக்குள்ளும் ஓசைக்குள்ளும் மய்யித்து வாடை அடிக்கின்றது.

கடலுக்குள் கொட்டப்படும் இக்கற்களினால் அலைகளின் சீற்றம் வேறொரு பக்கத்தில் பிய்த்து பாய்ந்து மீனவர்களின் வீடுகளை மோதி நொறுக்குகின்றன. கடலுக்குள்  போய் வரும் மீனவர்களின் உடல்களும் படகுகளும் குழம்பிப்போன நீரோட்டங்களினால் சேதமாக்கப்படுகின்றன. முற்றத்து புறா போல அருகாமையில் பிடிபட்டுக் கொண்டிருந்த மீன்கள்,  துறைமுக கட்டுமான அமளிகளினால் தொலை கடலுக்குள் சென்று விட்டன. இதனால்  படகுகளின் எரிபொருள் செலவு ஏறவே மீன் அறுவடையின் ஆதாயமும் அற்றுப் போகிறது.

நான்கு வருடங்களாக தொடரும் துறைமுக கட்டுமானத்துயர்  அதன் உச்சத்தை எட்டவும், அதனை எதிர்த்து மீனவ மக்களின் திரள் போராட்டம் இலத்தீன் கத்தோலிக்க பேராயத்தினால் தலைமை தாங்கப்பட்டு 2022 ஆகஸ்டிலிருந்து நடத்தப்பட்டு வருகிறது. அறிவியல் ரீதிக்கெதிராக அமைக்கப்பட்டு வரும் இத்துறைமுகத்தின் வரவினால் ஏற்படும் சூழலியல், சமூக பின்விளைவுகளைப்பற்றிய ஆய்வொன்றை கோருகின்றனர் போராடும் மக்கள். இடதுசாரி அரசோ இது வளர்ச்சிக்கெதிரான மக்களெதிர்  போராட்டம் என கொச்சைப்படுத்துவதோடு அதானி குழுமத்துடன் துறைமுக கட்டுமான வேலைகளை தொடர்வதற்கும் உறுதி பூண்டுள்ளது.மலையையும் கடலையும் மரு நிலமாக மாற்றுவதில் வலது இடது வேறுபாடுகள் எல்லாம் கரைந்தொழுகி ஒற்றை நிற சரமாகி ஆடுகின்றன. வெய்யில் உச்சி கண்டிருந்தது. நீலம் பாரித்த ஓர்மைகளுடன் பூவாறுக்கு வண்டியேறினோம்.

பூவாறுக்கு நான் வந்து கிட்டத்தட்ட  இருபத்தாறு வருடங்களுக்கும் மேலாகிவிட்டது. களப்பணி நாட்களில்  வந்து போன இடம். தலையாய வரலாற்று கட்டிடங்கள் நிற்கும் இடங்களைத்தவிர வருடந்தோறும் தன் முகப்பை கலைத்து கலைத்து மாற்றிப்போட்டுக் கொண்டேயிருக்கும் காயல்பட்டினம் போன்ற ஊர்களை ஒப்பிடும்போது  காலம் ஒன்றும் பூவாற்றை  வாரிக் கொண்டுபோய் விடவில்லை.. சிறிய மாற்றங்களே நடந்திருந்தன.

பூவாற்றில் நான் தேடிப்போவது ஒரே ஒரு மனிதரைத்தான். பி.எம்.பாரூக் காக்கா. பூவாற்றின் முகமும் தோரணமுமாக இருந்தவர். இருவரும்ஒரே களத்தில் இருந்தோம். இரு மொழிகளும் தெரிந்தவர் என்பதால் இயக்க இலக்கியங்களின்  மொழியாக்க வேலைகளுக்கு அவரிடம்தான் போயாக வேண்டும்

காலணி கடையும் அணியலங்கார சாதன கடையுமாக இரு கடைகள் வைத்திருந்தார். முதலீட்டை உராய்ந்து செல்லும் நெருக்கடி வணிகம். தனக்கென சொந்த வீட்டை கட்டிக் கொண்டிருந்த நேரமது. பருவமெட்டியிராத பிள்ளைகள். இத்தனை இறுக்கங்களுக்கும் நடுவே ஃபாசிசத்திற்கெதிரான அரசியலில் தலைவனாகவும் ஊழியனாகவும் பாத்திரம் வகித்து நின்றவர். காவல்துறையையும் எதிரிகளையும் நேர்கொண்டு நின்றவர். புன்னகைக்கும் துணிச்சல்காரன்.

இயக்க வாழ்க்கைக்கு வரும் முன்னரே அவர் ஜமாஅத் தலைவன். இளைஞர்களின் தளகர்த்தர்.எல்லா பொது வேலைகளுக்கும் முதல் மனிதன். பூவாற்றில் வெள்ளிக்கிழமைகளில் மிம்பர் ஏறிய கத்தீபு. ஆனால் அவர் அவசரத்திற்கு கத்தீபில்லை. காயல்பட்டினத்தில் முறையாக ஆலிம் பட்டம் பெற்றவர்.மலையாளத்தில் சொல்வதானால் ‘பூவாறின்டே பிரியங்கரன்’.தூளேறிய மூக்கும் கைக்குட்டையுமான சதுரம். ஆனால் பொதுவாழ்வின் புகையை  தன்னில் படிய விட்டதில்லை.அகமும் புறமும் அமைதியையும் திடத்தையும் ஒருங்கே வாய்க்கப்பெற்றவர். 

பூவாறு பி.எம்.பாரூக் காக்கா

பாரூக் காக்காவின் பெயரோடு உடனெழுந்து வரும்  சலனக்காட்சி ஒன்று உண்டு. இது நடந்து கால் நூற்றாண்டு கடந்து விட்டது. திருவனந்தபுரம் கோவளம் கடற்கரைப் பள்ளியில் இயக்கத்தின் துறை சார்ந்த முகாமொன்று ஏற்பாடாகியிருந்தது. ஜன்னலுக்கு வெளியே கொதித்துயரும் அலைகளின் நுனிகளிலிருந்து வெண்மை விடுபட்டு கரையெங்கும் சிதறிக் கொண்டிருந்தது. சாகசமும் வெளியின் எழிலும் நிரம்பிய பாட்டையில் ஒரு மிதத்தல் அனுபவப்பட்டுக் கொண்டிருக்க முகாம் தொடங்கியது.

அம்முகாமின் உணவு ஏற்பாடுகள் காக்காவிடம் கொடுக்கப்பட்டிருந்தன. அமைப்பின் அடிப்படை விதிகளில் ஒன்று நேரந்தவறாமை. அதில் அவர்கள் சமரசம் செய்வது கடினம். இதற்காக அமைப்பின் கோட்பாட்டுத்தலைவர் கூட தண்டிக்கப்பட்டதை நான் கண்டிருக்கிறேன். உணவு சமைத்தல், கடையை கவனித்தல் உள்ளிட்ட காரணங்களினால் பாரூக் காக்கா முகாமுக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டிருந்தது.

முகாமின் பயிற்சியாளர் காக்காவை விட  வயதால் மிகவும் இளையவர். தூக்கும் கையுமாக வியர்த்து விறுவிறுத்து வந்தவரிடம் தாமதத்திற்கான காரணம் சற்று கடுமையாகவே கேட்கப்பட்டது. ஆனால் கூர் பாறைகளின் கீறல் ஏற்காமல் நதி ஒலித்தோடுவது போல  காக்கா அதைக் கடந்தார்.

எண்ணெய்யும் மசாலாவும் கலந்துண்டாக்கும் செம்மஞ்சள் நிறத்தில் இறைச்சியின் கொழுப்பு படலம் மிதக்க, மற்றொரு தூக்கில் இருந்த நெய்ச்சோற்றை அவரின் இளம் படையாளிகளுடன்  நானும் சேர்ந்து விளம்பினேன். பின்னாட்களில் அமைப்பு பூவாற்றில் ஆழங்கால் கண்டது.

பாரூக் காக்காவின் விடை பெறல் 2015 இல் இதய அடைப்பினால் நேர்ந்திருக்கிறது. அடக்கவிடத்தை அவரின் மூத்த மகன் அடையாளங்காட்டினார். ஒன்றுமே தெரியாததைப்போல சமமாகி கிடந்த  நிலத்தில் கொஞ்சம் புற்கள் எஞ்சியிருந்தன. அன்னாரின் இறுதி தொழுகைக்கு ஜுமுஆ பள்ளியில் இடங் கொள்ளவில்லை என சொன்னார்கள்.

ரசூலுல்லாஹ் விடை பெற்ற  அறுபத்தி மூன்றாம் வயதில்தான் தனது விடைபெறலும் இருக்கும் என வீட்டாரிடம் பல காலங்களுக்கு முன்பே சொல்லியிருந்திருக்கிறார். நேசரின் நேசன் கேட்டுக் கொண்டான். சொன்ன வயதிற்கு வண்டி வந்து விட்டது.

சொல்வதற்கும் கேட்பதற்கும் நூகு வலிய்யுல்லாஹ் தொடங்கி அனந்த விக்டோரியா மார்த்தாண்டம் கால்வாய் வரை பூவாற்றில் நிறைய உண்டு. ஆனால் இந்த முறை பூவாறானது  பாரூக் காக்காவின் மாயாத நினைவுகளால் மட்டுமே நிரம்பி விட்டது. பயணத்தின் இந்த இலக்கம் பாரூக் காக்காவிற்கு மட்டும்தான்.

பொன்னானியில் தொடங்கி பூவாற்றில் நிறைந்த  தோன்றிய பொழுதின் இந்த சஞ்சாரமானது  புது நதியொன்றிற்கு அதன் தடத்தை உணர்த்தியிருக்கிறது. நதியைப்போலவே அலைதலும் முக்காலத்திலும் இருப்புக்கொள்வதுதானே.

------------------------  ---------------------------- ---------------------------

அருஞ்சொற் பொருள்

கம்போளம்  - சந்தை

பசியாறு –உணவுண்ணுதல் என பொதுப் பொருளிருந்தாலும் காயல்பட்டினத்தில்  காலையுணவை குறிக்க மட்டுமே பயன்படுத்தப்படுகிறது

மகாம் – மகான்களின் அடக்கத்தலம்

மய்யித்து  - சடலம்

                                                 

 

 ஒளிப்படக்கோவைகள்

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில் சுற்று வட்டாரமும், கேரளத்தின் அரிய நிழற்படங்களும்

பூவாறு, விழிஞ்ஞம்

முந்திய பதிவுகள்

தோனயாத்ரா 3 – குப்பா பள்ளி, மம்புரம் தங்ஙள், குஜராத் தெரு

தோனயாத்ரா 2 -- கொண்டோட்டி

தோனயாத்ர -- 1,பொன்னானி

No comments:

Post a Comment