Tuesday 23 August 2022

மூணு மாடி ஊட்டு ஷஃபியுல்லாஹ்

 



‘ பச்சிப்பி ‘ என்றுதான் என்னை அவன் சிறிய வயதில் கூப்பிடுவான். தொண்டையதிர சிரித்துக் கொண்டே அவன் பகடி பண்ணாத ஆளே இல்லை. அவன்தான் மூணு மாடி ஊட்டு ஷஃபியுல்லாஹ்.

ஒன்றாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை ஒன்றாகவே படித்தோம். அரைத்தொடைக்கு காக்கி காற்சட்டையணிந்து அவன்  வரும் தேசிய மாணவர் படையிலும் ஒன்றாக கழித்தோம்.எனக்கு பக்கத்து தெருக்காரனும் கூட.


அவனின் பெயருக்கு முன்னால் ‘மூணு மாடி ஊட்டு’ என்ற முன்னொட்டு வரக்காரணம், ஆசாத் தெருவிலுள்ள அவனது வாப்பா வீடு மூன்று மெத்தைகள் கொண்டது. அறுபது வருடங்களுக்கு முன்பு, ஓட்டு வீடுகள்,குடிசை வீடுகள் என பெரும்பாலாக காணக்கிடைத்த காலத்தில் மெற்றாஸ் டெரஸ் எனப்படும் கட்டைகுத்து வீடுகளும் குறைவாகவே இருந்தன.அதிலும் முதல்தளம் கட்டிய வீடுகள் என்பது மிகக் குறைவு.

ஷஃபியுல்லாஹ்வின் வாப்பா ஹபீப் ஹாஜியார் இலங்கையில் வெற்றிகரமான மாணிக்க வணிகராவார். கல்லில் சம்பாதித்ததை கல்லடுக்காகவே கட்டுவோம் என நினைத்தாரோ என்னவோ எழுந்தது மூணு மாடி வீடு. எனது நினைவில் இன்று வரை  ஊரில் இரண்டு மாடிகள் வரை மட்டுமே உயர்ந்துள்ளது. மூன்று மாடிகள் யாரும் கட்டியது போல அறியவில்லை.

பத்தாம் வகுப்பிற்கு பிறகு நான் வேறொரு பள்ளிக்கூடம் சென்று விட்டேன். இடையில் அவனை மிக குறைவாகத்தான் சந்தித்திருக்கிறேன். நுண்ணுயிரியலில் முதுகலை ( எம்மெஸ்சி மைக்ரோ பயாலஜி) பயின்றவன்.  மாணிக்க வணிகம்,அச்சு,கட்டுமானம்,தகவல் தொழில் நுட்பம் என பல துறைகளில் சாதித்தவன். ஒரு கட்டத்திற்கு மேல் அத்துறைகளில் அவனால் பிடித்து நிற்க முடியவில்லை. காரணம் தொழில் சார்ந்த பொய்கள்,நேர்மைக்குறைவுகளுக்குள் தானும் சிக்க வேண்டி வருகிறதே என்ற குற்றவுணர்வில் பத்து வருடங்களுக்கு முன்னர் வேலையை விட்டு விட்டான்.

வேலையை விடும் முன்னர் மாற்றுத் தொழிலுக்கான ஏற்பாட்டுடன்தான் விலகினாயா? எனக் கேட்டபோது “ வாழ்வாதாரத்தை பற்றிய எந்த ஏற்பாடுமில்லாமல் அல்லாஹ்வின் மீதான நம்பிக்கையை கொண்டு மட்டுமே வெளியேறினேன். அந்த இறுதி முடிவெடுத்த சமயத்தில்  ஐடி நிறுவனத்தில் மாதம் மூன்று இலட்சங்கள் வரை ஊதியம் கொடுக்க முன் வந்தனர். முடிவை மாற்றுவதற்கில்லை என சொல்லி விட்டேன். கஞ்சி கடை தொடங்கி நான் பார்க்காத தொழிலில்லை. அதிலெல்லாம் நான் மான அவமானம் பார்த்ததுமில்லை. இனி பார்க்கப்போவதுமில்லை.” “ இப்போ என்ன செய்யுறே?” எனக் கேட்டேன். : கற்பித்தல் உள்ளிட்ட இணைய வழி பணிகள்  என ஓடுகிறது” என அவன் முகத்துடன் கண்,காது,வாயெல்லாம் கூடவே  மலர்ந்தன.

தமிழ்நாட்டரசின் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் அவனுக்கு இரண்டடுக்கு கொண்ட சொந்த கட்டிடம். தெளிந்து துலங்கும் இல்லிடம். வீட்டிற்குள் தேவைக்கு கூடுதலாக எந்த பொருளுமில்லை. மின்னணு சாதனங்களின் வாரியிறைப்பில்லை.அவனிடம் இருப்பது இரு சக்கர ஊர்தி மட்டுமே. குடும்பத்துடன் போக பொது போக்குவரத்தையும் ஓலா போன்ற வாடகை ஊர்திகளைத்தான் பயன்படுத்துகிறான். முதுகிற்குப் பின்னர் விட்டு வந்தவைகளைப் பற்றிய துளி துயரமுமில்லை. வீட்டுவாசலில் வாழ்க்கையானது நாய்க்குட்டியாகி கட்டுண்டு கிடக்கிறது..

கழிந்த கதைகளை பேசிக் கொண்டிருக்கும்போதே நாரிழை இடுக்கி ஒன்றை கொண்டு வந்து காட்டினான். “ இது என்ன மச்சான்?” என்றேன். “பாம்பு புடிக்கிறதுக்குத்தான்” அவன் வாழும் பகுதியில் பாம்புகளின் நடமாட்டம் அதிகம். எப்படி பிடிப்பாய்? என்றதற்கு “ ஆர்ப்பாட்டமெல்லாமில்லை. முதலில் ஒடும் பாம்பின் குறுக்கே இடுக்கியை நீட்டியவுடன் அது மேற்கொண்டு ஓடாது. அதன் பிறகு அதன் பதட்டம் நீங்கும் வரை கொஞ்சம் விளையாட்டுக் காட்டி விட்டு கழுத்தில் இடுக்கியை வைத்து விடுவேன்.பிடி தப்பாது” என்றவாறே என் கையை நீட்டச் சொல்லி மணிக்கட்டில் இடுக்கியால் பிடித்தான். பூப் போல இருந்தது. பாம்பிற்கு சிறு கீறல் கூட ஏற்படாது. உயிரிகளின் சம நிலையறிந்தவன் என்பதால் கோணிப்பையில் போட்டுக் கட்டி காடடர்ந்த பகுதியில் வழியனுப்பி விடுவான். இரு பக்கமும் இழப்பில்லை. அக்கம்பக்கத்தாருக்கு பாம்புகால மீட்பன் இவன் தான்.

முக நூல் வழி எனது சிறுகடி விற்பனையின் வாடிக்கையாளரானான்.நான் சென்னையிலிருப்பதை அறிந்தவுடன் தனது வீட்டிற்கு “ கண்டிப்பா வா மச்சான்” என்றான். அம்பத்தூர் என்சிபிஹெச் பக்கம் போனதோடு  அவனது வீட்டிற்கும் சென்றேன்.

சூடான பக்கோடாக்கள் நிறைந்த தட்டுடன் தேநீரையும் அவனின் கடைக்குட்டி பெண் ஓடி ஓடி கொண்டு வந்தாள். இஷா தொழுகைக்குப் பிறகு எண்ணெய் மண இளந்தோசைகளுடன் முட்டை தோசையும் துணைக்கு அடர்த்தியான தேங்காய் துவையலும் சாம்பாரும். “ மூச்சு உட ஏலலை” என்றேன். கடைக்குட்டி, வெறுந்தேயிலை, இலங்கை மொழியில் பிளைன் ரீக் குவளையுடன் துள்ளி வந்தாள்.

மாஷா அல்லாஹ்! அய்ந்து பேர் கொண்ட நாட்டின் அரசன் அவன்.   

 






No comments:

Post a Comment