“உண்மையில் இந்த இரவு நேசத்தால் தோய்ந்திருக்கிறது. ஒவ்வொரு இரவுகளும் எவைகளுகெல்லாம் சாட்சிகளாகி நிற்கின்றன?. நேசத்தின் விரகத்தின் கரிசனத்தின் காத்திருப்பின் அணைப்பின் கணங்களால் இந்த இரவு நிறைந்திருக்கிறது. “
தனது சொற்களில் தோயும் ஆதுரத்தினூடே வானொலி நேயர்களின் ஆன்மாக்களுக்குள் இறங்குகிறார் ரேடியோ
ஜாக்கி சங்கர். தனியார் பண்பலை ஒன்றில் நிகழ்ச்சி
வழங்குநராக பணிபுரியும் சங்கரின் இந்த தனித்தன்மைதான் அவரை காவலர், கலைஞர் , சமையலர் என வாழ்வின் எல்லா தட்டில் உள்ளவர்களினதும் நெருக்கத்துக்குரியவராக்குகிறது..
புலனாகாத அக புற நெருக்கடிகளால் நெரிபடும் இன்றைய சமூக
வாழ்வில் எல்லோருமே கூட்டத்துடனே இருப்பதாக தோன்றினாலும் அது ஓர் உணரப்படாத பாவனையே. உண்மையில் ஒவ்வொரு மனிதனும்
எந்தவொரு சித்திரத்தினதும் முழுமையாக முடியாத தனித்தனி துண்டங்களாகவே நீடிக்கின்றனர்.
கண்களை பொத்திக் கொண்டு நாம் உண்டாக்கிய இந்த அகழிகளை துல்லியமாக தேடிப்பிடித்து மேவுகிறது சங்கரின் குரல்.
பிராஜேஷ் சென்னின் எழுத்து இயக்கத்தில் ஜெயசூரியா, மஞ்சு வாரியர், சிவதா நாயர், ஜானி அந்தோணி நடிப்பில் வெளிவந்துள்ளது மேரி ஆவாஸ் சுனோ என்ற மலையாளப்படம்.மேரி ஆவாஸ் சுனோ என்றால் என் குரலைக்கேள் எனப்பொருள். நாண்களுக்குள் நுழையும் காற்று குரலாகி குரலுக்குள் பொருளும் உணர்வும் ஏறும் போது அது ஆன்மாவாக பெருகுகிறது.
தொலைக்காட்சி, திறன்பேசி, கணினி உள்ளிட்ட மெய்நிகர் உலகின்
ஆக்கிரமிப்பிற்கு முந்திய உலகமானது வானொலி என்ற அரை மெய் உலகிற்கு வசியப்பட்டிருந்தது,
குரல்களால் மட்டுமே மனித முகங்கள் உருவகப்படுத்தப்பட்ட அவ்வுலகின் ஆட்சி அரை நூற்றாண்டுகளுக்கு மேல் பூமிப்பந்தில்
முழுமையாக நின்றது. இன்றைய எண்ணியல் யுகத்தெய்வங்கள் மனிதனின் மொத்த புலன்களையும் பலி கேட்பது
போல வானொலி என்ற ஊடகம் கேட்டதில்லை.
கேட்கப்போவதுமில்லை மாசிச்சம்பலில் தேங்காய்ப்பூவை விரவியவாறோ, ஒரு முத்தத்தின் நடுவிலிருந்து
கொண்டோ வானொலியுடன் நீங்கள் குறைவற இணைந்திருக்க
இயலும்.
ஏராளமான இதயங்களை
தன் சொற்களால் நீவும் சங்கரின் பணி ஓரிடத்தில் அதன் உச்சத்தை அடைகிறது. வானொலி நேரலை
நிகழ்ச்சியில் சிறுமியிடமிருந்து தொலைபேசியழைப்பொன்று வருகிறது
“அங்கிள்! உங்களுடைய நிகழ்ச்சி எனக்கு ரொம்ப பிடிக்கும்.
என்னோடு பேசுவதற்கு யாருமில்லை. என் அம்மா ஒரு வேலைப்பளுவுள்ள குழந்தைகள் டாக்டர்.
எப்போதுமே நான் உறங்கிய பிறகுதான் வீட்டுக்கு வருவார். ஆனால் என்னைத்தவிர எல்லா குழந்தைகளையும் பார்ப்பார். எனக்கு
யாருமில்லை.”
“ உனக்கென யாருமில்லை
என்று யார் சொன்னது? மகளே இந்த உலகத்தில் தனியாக
என யாருமில்லை. எல்லோருக்கும் யாரோ உண்டு”.
“இந்த போனும் அப்பா எனக்கு தந்த ரேடியோவும் மட்டுமே எனது
உலகம். உங்களின் நிகழ்ச்சியை கேட்டவாறே நான் உறங்கிப்போவேன்.இது மட்டுமே எனது உலகம்.”
“ நீ எங்கிருந்து இந்த நிகழ்ச்சியை கேட்கிறாய் மகளே?”
“நான் மொட்டை மெத்தையில் உள்ளேன். இங்கிருந்து விண்மீன்களையும்
நிலவையும் ஆகாயத்தையும் எல்லாவற்றையும் பார்க்கலாம். உங்களுடன் பேசி முடித்த பிறகு
நான் பறக்கப்போகிறேன். கீழினும் கீழாக.
சிறுமியின் மென் குரலுக்குள்ளிருக்கும் விபரீதத்தை உணர்ந்த
சங்கர் திகைப்பு மேலிட “ மகளே நீ என்ன சொல்றே? நீ சேஃப்தானா? உன் வீடெங்கே இருக்கிறது?”
“ இது வீடல்ல அங்கிள். இது ஃபிளாட்டு. (அடுக்ககத்தின் பதினான்காம்
தட்டில் அதாவது கட்டிடத்தின் உச்சியில் நின்று கொண்டு அந்த சிறுமி உரையாடுகிறாள்) இங்கிருந்து முழு நகரத்தையும்
பார்க்கலாம். எவ்வளவு வண்டிகள் போகின்றன? எல்லோருமே எங்கேயோ அவசரமாக போய்க் கொண்டேயிருக்கின்றனர்.
நானோ இங்கு மட்டும் தனியாக இருக்கிறேன்.”
“ நீ கீழே சென்று எல்லோருடனும் இரு”
“ கீழே சென்றாலும் நான் தனிதானே அங்கிள். என் அம்மா என்னைக்
கட்டிப்பிடித்து எத்தனை நாட்களாயிற்று தெரியுமா?”
சங்கரின் தனிப்பட்ட முயற்சியால் ஒரு வழியாக அச்சிறுமி காக்கப்படுகிறாள்.
வாழ்வை அக்குளில் இடுக்கிக் கொண்டு நாம் ஓடும் ஓட்டத்தை அதற்கு நாமே நமக்கு தோன்றிய விதத்தில் வைத்திருக்கும் பெறுமானத்தை அதன்
கழுத்தில் நாம் கட்டித்தொங்கவிட்டிருக்கும் விலைப்பட்டியை என எல்லாவற்றையும் பரத்தி புழுதியாக்குகிறது இவ்வுரையாடல்.
இது போன்ற மாயக்குழிகளில் உழலும் பாலை மனங்களுக்கு இதம்
நல்கும் சங்கரை ஒரே நாளில் வாழ்க்கை எதிர் துருவத்தில் கொண்டு போய் வைக்கிறது.. மனிதர்களின்
துயராரும் உணர்வுகளை வலிகளை தன் சொற்களால் ஆற்றுப்படுத்தும் சங்கரிடமிருந்து அந்த ஆற்றல்
திறன் மொத்தமாக ஒரு கணத்தில் பறிக்கப்படுகிறது.
தொடர் புகைத்தலினால் தொண்டையில் புற்று நோயின் தாக்குதல். பேச முயலும் சங்கரிலிருந்து
குரலும் பொருளும் உணர்வும் நீக்கப்பட்ட வெற்று
காற்று மட்டுமே வெளிவருகிறது. எதுவுமற்ற உமிக்காற்று.
மௌனத்தின் குளத்தில் தனித்த ஆழ்தல்.உள்ளுக்குள் தகர்ந்து வீழும் சங்கரை எல்லாமாகி தாங்குகிறார்
அவர் மனைவி .
மூழ்கிப்போன குரல்களை
மீட்பதில் வல்லவரான குரல் நிபுணரிடம் (மஞ்சு
வாரியர்) சங்கர் அழைத்துச் செல்லப்படுகிறார். அவரோ “ உனக்கெல்லாம் பேச்சு வர வாய்ப்பேயில்லை
“ என ஒற்றையடிக்கு நிராகரிக்கிறார். வேறு வழியின்றி மீண்டும் அவரைத் தேடி சங்கர் போகும்
போது ஆளை இன்னாரென்று அறியாத நிலையில் சங்கரின்
பழைய வானொலி சொற்களையே அவருக்கு போட்டுக் காட்டி மீண்டும் மறுதலிக்கிறார் நிபுணர்.
தனது நிழலில் தனக்கான இளைப்பாறுதல் இல்லை என்ற
பருண்மை சங்கருக்குள் இரும்பின் கனமாகிறது.
சங்கரை இன்னாரென்று அறிந்த சின்னாட்களில் நிபுணரே சங்கரை தேடி வந்து நம்பிக்கையூட்டி தொடர் மருத்துவமளிக்கிறார். காற்றுக்குள்
குரலை பிணைத்திடும் முயற்சியில் மலை நகர்கிறது. “வாழ்க்கையின் மறுகரையில் நமக்கென ஒருவர்
உண்டு என்ற எண்ணத்தில் வாழ்பவர் எத்தனையோ பேர்.“ என சங்கர் என்றோ காற்றில் விதைத்தது மருத்துவரின் வடிவில் விளைந்து
அவரிடமே மீள்கிறது.
சங்கருக்குள் ஒன்றி சிகிச்சையளிக்கும் நிபுணரின் இருப்பு அவரின் மனைவிக்கு ஒரு வித அச்சத்தையும் உளைச்சலையும்
கொடுக்கிறது. தான் சரியாக புரிந்து கொள்ளப்படவில்லை என்பது நிபுணருக்கும் உறைத்துணர்த்தப்படுகிறது.
மஞ்சு வாரியரின் மீறும் உடல் மொழிக்கேற்ப அவர் ஏற்று நடிக்கும் குரல் நிபுணரின் பாத்திரம் போதாதென தோன்ற வைக்கும்
நடிப்பின் அபாரம். அவருக்குள்ளிருக்கும் நடனம் அனிச்சையாக படம் முழுக்க ததும்பிக்கொண்டேயிருக்கிறது.
ஒரு குரல், ஒரு காற்றுத் தொழில் நுட்பம், காற்றுக்குள் காதை பதித்து
காத்திருக்கும் அருவ மனிதர்கள் ஆழங்கூடிய மிக சொற்பத் தொகையிலான உறவுகள், புரியப்படாத
ஒற்றைப்பட்ட உணர்வு, எதிர்பாராமை, ஏற்பு, நிராகரிப்பு, மீட்பு, கைவிடப்படல்,நம்பிக்கை,
அவநம்பிக்கை, புரிந்து கொள்ளப்படாமை என விதியின்
வலிய விசை மிக்க இழுபறி வலயத்தில் நிகழும்
வாழ்க்கையானது பிராஜேஷ் சென்னின் உழைப்பில் திரைக்கதையாகியிருக்கிறது.
No comments:
Post a Comment