Thursday 25 August 2022

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் -- தலைமை அலுவலகம், நூல் வண்டி



முஸ்லிம் கலை பண்பாடு தொடர்பான ஆங்கில நூலொன்றை வாங்க அம்பத்தூர் என்சிபிஹெச்( நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்) அலுவலகத்திற்கு போகிறேன். நீங்களும் வருகிறீர்களா? என அழைத்தார் சகாவு கொள்ளு நதீம்.

தமிழகத்தின் பதிப்பு வரலாற்றில் அரசு செய்ய வேண்டிய வேலையை தனி நிறுவனமாக நின்று செய்த சாதனைகள் கொண்ட ஒரு நிறுவனமல்லவா! உடனே சம்மதித்தேன்.


 வெப்ப மணத்துடன் பிழிந்தெடுக்கும் ஒன்றே கால் மணி நேர பேருந்து ஓட்டத்தில் அம்பத்தூர் வந்தது. சகாவும் கொஞ்சம் தாமதமாக வந்திணைந்து கொண்டார். பிறகு இருவருமாக என்சிபிஹெச்ஸில் அலுவலராக பணிபுரியும் சகாவின் நண்பரான கூத்தலிங்கத்தை சந்தித்தோம். வளாகத்தை சுற்றிக்காட்டினார் கூத்தலிங்கம். நேசமும் பணி ஈடுபாடும் கொண்ட தஞ்சையின் மகன் அவர். கொஞ்ச காலத்திற்கு முன்புதான் என்சிபிஹெச்சில் இணைந்திருக்கிறார். நிறுவனத்தின்  வரலாற்றை அவரே விவரித்தார்.

 1951 இல் சிபிஅய் கட்சியினரால் தொடங்கப்பெற்ற என்சிபிஹெச்நிறுவனம். பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தலைப்புக்களில் நூல்களை பதிப்பித்திருக்கிறது. சோவியத் ஒன்றிய தமிழாக்க நூல்களின் மொத்த வினியோகமும் விற்பனையும் இவர்களிடம்தான் இருந்தது. தமிழ்ச்சமூகத்திற்குள் வாசிப்பை புனல் வேகத்தில் பாய்ச்சிய அறிவு மகா சாகரம்.

ஏக்கர் கணக்கில் பரந்து கிடக்கும் இதன் வளாகத்தில் தன் அந்தி நினைவுகளுடன் நின்று கொண்டிருந்தது ஓர் ஊர்தி. கிட்டே போய் பார்த்த பிறகுதான் அது தலைமுறைகளின் ஊர்தி என்பதை கூத்தலிங்கம் உறுதிப்படுத்தினார்

-----------------

இலங்கையிலிருந்து வாப்பா வாங்கி வந்த  அந்த  சிறார் இலக்கியங்கள் என் இளமையின் ஓர் அங்கம். அவை தந்த கிறக்கத்தில், புரிகிறதோ புரியவில்லையோ அதன் பளபளஉயர் ரக  தாளுக்கும் கெட்டியான கட்டுமானத்திற்குமாக வாங்கியவைதான் அன்றைய சோவியத் ஒன்றியத்தின் ராதுகா, முன்னேற்ற பதிப்பகங்கள் வெளியிட்ட பொதுவுடைமை கோட்பாட்டு நூல்கள், இயற்பியல் நூல்கள். இவற்றை  காயல்பட்டினம் அரசு கிளை நூலகத்தில் எடுத்து வாசித்திருக்கிறேன்.

நான் பயின்ற முஹ்யித்தீன் மெற்றிக்குலேஷன் பள்ளி வளாகத்திற்கு ஒரு முற்பகல் வேளையில் வந்து நின்றது அந்த வண்டி . சிந்தா காக்காவின் எண்ணெய் பிழியும் சம்சாவுடன் ஏலத்தின் மணம் தூக்கலாக நிற்கும் தேயிலையையும் குடித்து விட்டு வரிசையாக அந்த வண்டிக்குள் ஏறினோம். பளபள தலையரும் இராணுவ உடற்கட்டும் கொண்ட பள்ளி முதல்வருமான பீற்றர் சாரின் இறுகிய  கண்காணிப்பில் வரிசை அமைதியாக நகர்ந்தது.

அந்த வண்டியில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் என எழுதியிருந்தது. அறிவியல்,கதை,மருத்துவ நூற்களில்  இந்நிறுவனத்தின் வெளியீடுகள் போக சோவியத் ஒன்றிய இறக்குமதி தமிழாக்க நூல்களின் கருக்கு வாசப்படலம். அன்று அந்த புத்தகங்களை வாங்குமளவிற்கு காசில்லாத பருவம். வேடிக்கை பார்க்க மட்டுமே இயன்றது. வாப்பா வாங்கி தருவதினாலும் பொது நூலக உறுப்பினராக இருந்ததாலும் புதிய  நூற்களை இந்த நூல் வண்டியில் வாங்கவியலாதது ஒரு குறையாக தோன்றவில்லை.  ஆனால் நூல் வண்டியின் வரவு புத்தகங்களின் மீதான மோகத்தை இன்னும் கூடுதலாக்கியது.

எனக்கும் சகாவிற்கும் கூத்தலிங்கத்திற்கும் முன் நின்று கொண்டிருந்தது அதே நூல் வண்டிதான். 1985களில் ஓடத் தொடங்கி 2010களுக்குப் பிறகு வரை இயங்கிக் கொண்டேயிருந்திருக்கிறது.உரிமம் தொடர்பான சிக்கலில் அதன் மூப்பு அதற்கு உணர்த்தப்பட்டிருக்கிறது. நாங்கள் மூவரும் எங்கள் பள்ளி நாட்களில் ஏறி இறங்கிய அந்த வண்டிதான் இது என்ற அறிதல், வாசிப்பினால் நிறைந்திருந்த அந்த பால்யத்தின் ஒரு போதும் மீளப்பெறவியலா ஒரு கால சோகத்தை கொண்டு வந்து நிறைத்தது.  ஒன்றுமே புரியாமல் கனத்த கம்யூனிஸ்டு கோட்பாட்டு நூலை எடுத்துக் கொண்டு  மொட்டை மெத்தையின் ஏணிப்படியளிக்கும் இரகசிய நிழலில் வாசித்தது உள்ளிட்ட பசிய ஓர்மைகள்.

எத்தனை தலைமுறைகளின் கால்களும் கண்களும் கண்ட இந்த புத்தக வண்டியை ஒரு நினைவுச்சின்னமாக  என்சிபிஹெச் பராமரிக்க வேண்டும். கூடவே பழுப்பேறி போயிருக்கும் தன் செயல்பாடுகளையும் அது காலத்திற்கேற்ப புத்தாக்கம் செய்து கொள்ள வேண்டும். ஏனென்றால் எங்களுக்கு கிடைத்த அந்த ஆல் நிழல் எங்கள் தலைமுறைகளின் மீதும் படர வேண்டும்.

 

 













1 comment:

  1. இந்த பேரூந்தில் 80-களின் பிற்பாதி, அனேகமாக 87/88 வாக்கில் எங்கள் (பழைய வட ஆற்காடு மாவட்ட ஆம்பூர்) நகரத்தின் வாரச் சந்தை திடலில் பார்த்தேன். ஐந்து, பத்து ரூபாய்க்கு ஏதோ சில நூல்களை வாங்கியிருப்பேன். பிறகு அடுத்து வந்த பத்து ஆண்டுகள் தொடர்ந்து வருகைத் தந்த இந்த வாகனத்தில் கடைசியாக அதிகபட்சம் நூறு ரூபாய்க்கு புத்தகங்களுக்கு பில் போட்டிருக்கிறேன் (என்று நினைக்கிறேன்) ஆனால் அதைவிட அதிகம் அந்த பஸ்ஸில் புதுப்பெண்ணை பார்க்கும் ஆவலுடன் மொத்தமாக புத்தகங்களை பார்த்தது அப்பொழுதுதான். அதற்குப் பிறகுதான் சென்னைப் புத்தகக் கண்காட்சிக்கு வருவதை நான் தொடங்கினேன். உள்ளூர் அரசு நூலகம், தனியார் லெண்டிங் லைப்ரரி - அடுத்து இதில் பார்த்த புத்தகங்களே இன்றுவரை என்னை பின்தொடரும் நிழலின் குரலாக தொந்தரவு செய்து வருகின்றன. அதை மீண்டும் ஆவடியில் கண்டது நெகிழ்வான தருணம். இந்த நூலக பேரூந்து ஊருக்கு வருவதற்கு முன்பு இடதுசாரித் தோழர்கள் போஸ்டரும், நோட்டிஸ்-சும் ஆங்காங்கே ஒட்டி இருப்பர். அப்பொழுது நான் பெற்றோரின், பெரியோரின் காசை, பணத்தை நம்பி இருந்த சிறு பருவம். என் தாய்வழி பாட்டிக்கு இந்த பேராண்டி மீது கொள்ளைப் பிரியம். புக் வாங்குற பேரன் என்று குடும்பத்தார் முன்னிலையில் என்னை உச்சி முகர்ந்த மணம், இன்னும் என் நாசியில் உணர்கிறேன். என் அப்பாவும், அம்மாவும் அவர்களால் முடிந்த பத்தோ, இருபதோ கொடுத்துள்ளனர். என் தாய் மாமன் ஒருமுறை முப்பது ரூபாய்க்கு நான் எடுத்த நூல்களுக்கான பில் கட்டிவிட்டு, ஊரில், பள்ளிவாசலில், திண்ணையில் அமர்ந்து பெருமையாக பேசிக் கொண்டிருந்தார். அவர்களில் யாருமே இன்றில்லை, இந்த பேருந்தும் ஓட்டத்தை நிறுத்தி ஓரமாக கிடக்கிறது. காலம் மாறி ebook, kindle, epub, pdf என கணிணி மயமாகி விட்டது, ஆனால் இன்றைக்கும் தாள்களும், அச்சு மை வாசமும் என் ஊனோடும், உணர்வோடும் கலந்துவிட்டது. இந்த பிறவி அச்சு நூல்களுடனே - அந்த கொடுப்பினை இருந்தால் போதும் ரஹ்மானே! - கொள்ளு நதீம், ஆம்பூர்.

    ReplyDelete