Tuesday, 5 July 2022

நிரந்தரத்தை நோக்கி -- பேப்பூர் அரசன்

 





“ எதற்காக எழுத வேண்டும்?

 

ஏதாவது நோக்கமிருக்கிறதா?


 

கலை, கலைக்காகவா?

 

கலை, வாழ்க்கையின் முன்னேற்றத்திற்காகவா?

 

அச்சு வடிவத்தில் புகழ்…

 

கோடி கோடி அனந்த கோடி

 

புகழின் உச்சியில் வாழ்ந்தவர்கள் செத்து மண்ணோடு மண் மடிந்து போய்விட்டார்கள். அவர்களை எல்லம் யார் இப்போது நினைத்துப் பார்க்கின்றார்கள்?

 

நினைத்துப் பார்ப்பதில்தான் என்ன பயன் இருந்து விடப்போகிறது?

 

புகழ்பெற்றவர்களும் பெற விரும்புகிறவர்களும் நானும் நீங்களும் பயணித்துக் கொண்டிருக்கின்றோம். அல்லவா?

 

திடீரென்று சென்று விழப்போகும் உயிரின் காலமுடிவை நோக்கி.

 

கால மயக்கத்திற்குள்ளாகும் உயிர். ஆகியே தீர வேண்டும் அல்லவா?”

 

--- ( வைக்கம் முஹம்மது பஷீர், உண்மையும் பொய்யும் கேள்வி பதில்,  நூலில்)


-------------------------

 

ஜூலை 5 --  அநித்தியத்தின் ஓர்மைகளை எப்போதும் தன்னுடன் சுமந்து கொண்டிருந்த பேப்பூர் அரசன் முடிவேயிராத  நிலைத்தன்மைக்குள் கரைந்த நாள்.

 

பெருந்தொற்று முடங்கிய களியாவேசங்களை எல்லாம் ஒன்று  கூட்டி 02ஜூலை2022 - 05ஜூலை2022 வரை கோழிக்கோடு பேப்பூரில் உள்ள வைக்கம் முஹம்மது பஷீரின் இல்ல வளாகத்தில் நடந்து வரும் ' வைக்கம் பஷீர் நினைவு தினநிகழ்ச்சிகள்"  வாயிலாக கேரளியர் கொண்டாடித் தீர்க்கின்றனர். நிகழ்ச்சிகள் இன்றுடன் நிறைவடைய உள்ளன.

 

எழுத்தாளர்களின் உரைகள், பஷீர் திரைப்படத்திருவிழா, இளம் எழுத்தாளர்களுக்கான பயிற்சி முகாம், உணவுத்திருவிழா, கசல் இசை, குழந்தைகளுக்கான ஓவியப்போட்டி என அடரும்  கணங்கள்.

 

‘ ஆகாச மித்தாயி ‘ என்ற பெயரில் வைக்கம் பஷீர் நினைவகத்திற்கான அடிக்கல்லை  கேரள சுற்றுலா அமைச்சர் பி.ஏ.முஹம்மது ரியாஸ் பேப்பூரில் நாட்டியுள்ளார். கோழிக்கோடு நகராட்சியும் மாநில அரசின் சுற்றுலாத்துறையும் இணைந்து கட்டவிருக்கும் இந்த நினைவகத்தில்  அட்சர தோட்டம், சமூக கூடம், பண்பாட்டு நடுவம், ஆய்வு நடுவம், நூலகம், விளையாட்டுத் திடல், பஷீர் அருங்காட்சியகம், நடைத்தடம், உணவரங்கு போன்றவை இடம் பெறவிருப்பதாக அறிவிப்பு வந்துள்ளது.

 

வைக்கம் பஷீர் தன் பிறந்த வீடு விட்டு, மீளவும் வீடேகிய  தலயோலப்பரம்பு கிராமத்தின் மூவாட்டுப்புழா நதி தீரத்தில் ஏற்கனவே ஒரு வைக்கம் பஷீர் நினைவகம் இருக்கிறது. அநித்தியத்திற்குள் நித்தியத்தை நிறைத்தவர் கொள்ளும் விரிவு அளவற்றது

 

மலையாள இலக்கிய நண்பரொருவரிடம் பேப்பூரில்  நடக்கும் இவ்விழா குறித்து உரையாடிக் கொண்டிருக்கும்போது “நடக்குன்னது ஒரு தரத்தில் மார்க்சீய பரிபாடியானு”( ஒரு வகையில் இது மார்க்சீய நிகழ்ச்சிதான்) என விமர்சித்தார். மார்க்சியமோ மாவோயிசமோ வைக்கம் பஷீர் நினைக்கப்படுகிறார் என்பதுதான் இங்கு செய்தி. வைக்கம் பஷீர்,”தான் ஒரு நிராகரிப்பாளனோ மார்க்சியவாதியோ இல்லை. தன்னால் அவ்வாறு ஆகவும் முடியாது.காரணம்  தான் காந்தியை விரும்புபவன். அத்துடன் ஓர் இறை நம்பிக்கையாளனும் கூட” என்றார்.

 

வைக்கம் முஹம்மது பஷீரின் வாழ்க்கைக்குள் காந்தியைப்போலவே வேசிகளுக்கும் திருடர்களுக்கும் இரவலர்களுக்கும் இடமுண்டு. அவர் முனிவரும் சூஃபி ஞானியும் கூட. தன் பசிக்கு தன்னை இரை கொடுத்தவர் என அவரிடமிருந்து நாம் கொண்டாட  பல சிகரங்கள் இருக்கின்றன. வைக்கம் பஷீரை யாரும் எந்த சிமிழுக்குள்ளும் குறுக்கிட இயலாது.

 

அரசுகள் வைக்கம் முஹம்மது பஷீரை  கொண்டாடினாலும் கொண்டாடாவிட்டாலும் சரி, கேரளியர் இந்த கொண்டாட்டங்களை முன்னெடுப்பதில் பின் நிற்கப்போவதில்லை என்பது தெளிவு. கேரளத்தின் எந்த எழுத்தாளனுக்கும் கிடைத்திராத பேறு.

 

பொன்னானி நண்பர் ஹுதைஃபா இந்த விழாப்பற்றி சொன்ன நாளிலிருந்தே எப்படியாவது போய் விட  வேண்டும் என திட்டமிடத் தொடங்கினேன். கேரளத்தின் பருவ மழைப் பொழிவிற்குள்  இருக்க வேண்டும் என்ற எனது கொஞ்ச நாள் விருப்பமும் இதோடு கூட நிறைவேறப்போகிறது என்பதாக எனது முழு நினைவுகளும்  அங்கேயே தாவளமிடத் தொடங்கியது. குறிப்பிட்ட அந்த நாட்களில் தவிர்க்க இயலாத சொந்த வேலைகள், அது சார்ந்த பாரங்களை அழுத்தி விட்டு எப்படியாவது போய் விடலாம் என நினைத்திருந்தேன்.

 

நாம் நினைப்பதெல்லாம் நடந்து விடுவதில்லைதானே. இறுதியில் சொந்த வாழ்வின் சுமைதான் வென்றது. எனது பயணத்தைக் கைவிட்டேன் என்ற வட்சப் செய்தியை கோழிக்கோடு நண்பர் நவ்சாதுக்கு அனுப்பினேன். “ அடுத்த முறை நீங்கள் இந்த நிகழ்வுகளில் பங்கெடுப்பீர்கள் என நம்புகிறேன்” என மறுமொழியளித்திருந்தார்.

 

இங்கு  எவருக்கும் அடுத்த நொடிக்கே உத்திரவாதமில்லை.  வைக்கம் முஹம்மது பஷீர் சொன்னதைப்போல “ எண்ணற்ற நொடிகளின்  நிமிடங்களின் காலங்களின் கருவூலம் அவனிடமல்லவா இருக்கிறது”


தொடர்புடைய பதிவுகள்

1. பன்னிரண்டணா சுல்தான்

2. வைக்கம் முஹம்மது பஷீர் என்றால் யார்? -- (அக்டோபர்2021 சுட்டி யானை சிறார் இதழுக்காக எழுதியது)

3. வைக்கம் முஹம்மது பஷீர் -- பேப்பூர் ஸுல்தான்-- ஒளிப்படக்கோவை


No comments:

Post a Comment