Friday 22 October 2021

வைக்கம் முஹம்மது பஷீர் என்றால் யார்? -- (அக்டோபர்2021 சுட்டி யானை சிறார் இதழுக்காக எழுதியது)

 




நிலையான வருமானமின்றி இருக்கும்  அவரால் முழு வாடகை கொடுக்க இயலாது. அதனால்  ஒரு வாடகை கட்டிடத்தின் வசதிகள் குறைந்த கிடங்கொன்றில் குறைந்த வாடகைக்கு தங்கியிருக்கின்றார் வைக்கம் முஹம்மது பஷீர்.

 

வைக்கம் முஹம்மது பஷீர் என்றால் யார்?

 

கேரளத்தின் கோட்டயம் மாவட்டத்தில் வைக்கம் வட்டம்,   தலயோலப்பரம்பு கிராமத்தில் 1908 ஆம் ஆண்டு பிறந்து 1994 ஆம் ஆண்டு கோழிக்கோடு மாவட்டம் பேப்பூரில் மறைந்தவர்.

 

நிறைய கதைகள் மலையாளத்தில் எழுதி ஏராளமான அரசு,தனியார் விருதுகளை வாங்கியவர். அவரின் கதை முழுக்க நிறைந்திருப்பது  உலகின் எல்லா உயிர்களையும் நேசிப்பதை பற்றி மட்டுமேதான். அவரின் கதைகள் தமிழ் உள்ளிட்ட  உலகின் பல மொழிகளில் மொழியாக்கப்பட்டுள்ளன.

 

சரி, இனி விஷயத்திற்கு வருவோம்.

 

அவர் அந்த கிடங்கில் தங்கியிருக்கும் ஒரு நாளில் அவருடைய பிறந்த நாள் வருகின்றது. கையில் காசில்லாத  வைக்கம் பஷீருக்கு அன்றைய தினம் ஒரு தேநீர் குடிக்கக் கூட வழியில்லாமல்  உடலும் மதியும் கிறங்கிய நிலையில் தனது அறையில் அதாவது கிடங்கில் இருக்கின்றார்.

 

அந்த ஒரு நாள் முழுக்க அவருக்கு நடக்கும் உண்மை நிகழ்வுகள்தான் அவரின் ‘ ஜன்ம தினம் ‘ ( பிறந்தநாள் ) சிறுகதை. ஆனால் இங்கு நாம் பார்க்கப்போவது அவரது அந்த பசி நிறைந்த அந்த பிறந்த நாளில்  அவருக்கும் உங்களைப் போன்ற சிறார்களுக்கும்  இடையே ஏற்பட்ட  அனுபவங்களை மட்டும்தான்.

 

அவரின் அறையைத் தேடி காலை பத்து மணிக்கு இரண்டு கிறிஸ்தவ சிறார்கள் வருகின்றார்கள். அவர்களின் கையில் விற்பனைக்கான இரண்டு இணை மிதியடிகள் (காலணிகள்) இருக்கின்றன. சத்துக் குறைவால் வெளுத்தும் மெலிந்தும் இருந்த அந்த சிறார்களுக்கு எட்டோ அல்லது பத்தோ வயதுதான் இருக்கும். அவர்களிருவரும் சகோதரர்கள்.

 

அவரிடம் வந்து “ மிதியடி வேண்டுமா?” என்று கேட்கின்றனர். விலைகளோ மூன்றணாக்கள்தான் ( அன்றைய கால நாணயம்). அதாவது பதினெட்டே முக்கால் பைசாக்கள். பசியால் குன்றிப்போய் கிடக்கும் வைக்கம் பஷீரோ தன்னிடம் பணமில்லாததினால் தனக்கு மிதியடிகள் வேண்டாம் என்கின்றார்.இயல்பிலேயே வைக்கம் பஷீர் கம்பீரமான தோற்றத்தையும் உடையையும் கொண்டவர். அதைப் பார்த்த சிறுவர்களுக்கு  அவரிடம் காசில்லை என்பதை நம்ப அவர்களின் மனம் மறுக்கின்றது. அவர் பசித்திருப்பது அவர்களுக்கு தெரியாதுதானே?

 

அதை பஷீரே அவரது சொற்களில் சொல்கின்றார்:

 

“ எதையும் உட்புகுந்து அறிந்து கொள்ள இயலாத சுத்த இதயங்கள்”

 

“செரி” என்ற அவநம்பிக்கை சொல்லுடன் அவர்கள் அங்கிருந்து அகல்கின்றனர்

 

இரவு ஏழரை மணியாகின்றது. அவரது வயிறோ இன்னும் உணவைப்பார்க்கவில்லை.  அவர்களிடமிருந்து  ஒரு ரூபாயைக் கடனாக வாங்கி பசியை துரத்தியடிக்க இயலுமா? என்பதற்காக வைக்கம் பஷீர் அந்த கட்டிடத்தின் மாடியில்  தங்கியிருந்த கல்லூரி மாணவர்களைப்பார்க்கப் போகின்றார். அவர்களோ அதைப் புரியாமல் அவருடன் ஊர்கதை உலகக்கதைகளை பேசிக் கொண்டிருக்கின்றார்கள். அந்த சமயம் பார்த்து “ மிதியடி வேண்டுமா?” என்ற குரல் கீழேயிருந்து  கேட்கின்றது. காலையில் வந்த அதே சிறார்களின் குரல். இப்போது அவர்களின் கண்கள் வெறித்து  முகங்கள் வாடித்தளர்ந்து உதடுகள் வறண்டு போயிருந்தன. காலையிலிருந்து அவர்கள் அலைந்ததுதான் மிச்சம். மிதியடி எதுவும்  விற்கவில்லை.

 

அந்த சிறார்களிடம் கல்லூரி மாணவர்கள் மிதியடியின் விலையைக் கேட்க “ இரண்டரையணா” என்றனர். காலையில் மூன்றணாவாக இருந்தவை.

 

இரண்டணாவுக்கு அந்த மிதியடிகளை கேட்கின்றான் ஒரு கல்லூரி மாணவன். இரண்டே காலணாவிற்கு எடுக்கச் சொல்கின்றனர் அந்த சிறார்கள். மறுக்கின்றான் அந்த கல்லூரி மாணவன்.  அந்த சிறார்கள் வருத்தத்துடன் படியிறங்கிச்செல்கின்றனர். அவர்களை திரும்பக்கூப்பிட்டு இரண்டே காலணாவிற்கே வாங்கிக் கொள்வதாகச் சொல்கின்றான் அந்த கல்லூரி மாணவன்.

 

காலணா  சில்லறை இல்லை எனச் சொல்லி இரண்டணாக்கள்தான் இருக்கின்றது. மிதியடி தருகிறதென்றால் தா இல்லையென்றால் போ என்கிறான்  கல்லூரி மாணவன். அண்ணன் தம்பியான சிறார்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்த பிறகு வேறு வழியின்றி இரண்டு அணாக்களைப் பெற்றுக் கொண்டு மிதியடியை அந்தக் கல்லூரி மாணவனின் கையில் கொடுத்து விட்டுப் போகின்றனர்.

 

அந்த சிறார்கள் படியிறங்கி சாலைக்கு வந்தவுடன் அந்த கல்லூரி மாணவன் தனது சக மாணவர்களைப்பார்த்து வெற்றிப்பெருமிதத்துடன் சொல்கின்றான்” நான் ஒரு வேலை காட்டியிருக்கின்றேன். அதிலே ஒன்னு செல்லாத  ஓரணா துட்டு”

 

“ஹா…ஹா… ஹா… என மற்ற கல்லூரி மாணவர்கள் சிரித்தனர்.

 

பசியால் வலுவிழந்துக் கிடந்த வைக்கம் முஹம்மது பஷீர் அந்த அண்ணன் தம்பியான அந்த இரண்டு சிறார்களைப் பற்றி பின்வருமாறு சொல்கின்றார்.

 

  அந்தக்குழந்தைகளிடம் ஒரு நயா பைசா கூட இல்லை. அவர்கள் இதுவரை எதுவுமே விற்கவில்லை.. நேரம் விடிந்தது முதல் அலைந்து  திரிகிறார்கள். மூன்று மைல் ( கிட்டத்தட்ட ஐந்து கிலோ மீற்றர் ) தொலைவில், ஏதோ ஒரு குடிசையில் அடுப்பில் சூடாறிக் கிடக்கும் தண்ணீருடன் தமது குழந்தைகள் வருவதை எதிர்பார்த்துக் காத்திருக்கும் பெற்றோர்களின் காட்சி என் மனத்தில் ஓடியது”.

 

வைக்கம் முஹம்மது பஷீருக்கும் அந்த கல்லூரி மாணவர்கள் கடனெதுவும் கொடுக்காமல் “சாரி, சேஞ்ச் ஒண்ணுமில்லே” என அனுப்பி விடுகின்றனர். 


மீதி வரிகளையும் அவரின் கதையிலிருந்தே கேட்போம்.

 

“ மணி ஒன்பது.நான் பாயை விரித்துப் படுத்துக் கொண்டேன். ஆனால் இமைகள் மூட மறுத்தன. தலை பாரமாக இருந்தது. இருந்தாலும் படுத்தே கிடந்தேன். உலகில் வாழும் கதியற்றவர்களைப்பற்றி நான் நினைத்தேனா…. எங்கெல்லாம் எத்தனையெத்தனை கோடி ஆண் பெண்கள் இந்த அழகான பூலோகத்தில் பட்டினிக் கிடக்கின்றார்கள். அதில் நானும் ஒருவன்….. “

 

இதுதான் வைக்கம் முஹம்மது பஷீர்.

 

(நன்றி: பத்தியில் உள்ள கதை வரிகள் காலச்சுவடு வெளியீடான ‘ உலகப்புகழ் பெற்ற மூக்கு “ நூலில் உள்ளவை).

--------------------------------------------------

 

No comments:

Post a Comment