வாக்கிங்
டு ஸ்கூல்
( சீன மொழித்திரைப்படம் ஆங்கில துணைத்தலைப்புக்களுடன்)
திரைப்பட நேரம்: 82 நிமிடங்கள்
இயக்குனர்: பெங்க் ஜியாஹுவாங்க்
-----------------------------
பச்சைக்காடும் மலைக்க
வைக்கும் மலையும் அச்சமூட்டியவாறே சுழித்துக்
கொண்டு ஓடும் நதியும் உடைய அந்த ஊர் சீன நாட்டின் யுனான் மாநிலத்தில் இருக்கின்றது. அந்த ஊரில் லிசு என்ற
சிறுபான்மை இனத்தைச் சார்ந்த சிறுவன் ஒருவன் இருக்கின்றான். அவன் பெயர் வாவா. அவனுக்கு
ஓர் அன்பான அக்கா இருக்கின்றாள். அவள் பெயர் நக்சியாங்க்.
இவர்களின் வீடு உயரமான மலை முகட்டில் இருக்கின்றது. இவ்விருவரின்
பெற்றோர்களும் நன்கு உழைத்து அதில் கிடைக்கும் வருமானத்தில் தங்கள் பிள்ளைகளை அன்பாகவும்
அறிவாகவும் கண்டிப்பாகவும் வளர்த்து வருகின்றனர்.
அக்கா நக்சியாங்க் தினந்தோறும்
தனது பள்ளிக்கூடத்திற்கு போவதென்பது நாமெல்லாம்
பள்ளிக்கூடத்திற்கு போவது மாதிரி இல்லை.
அவளுடைய ஊரில் ஓர் ஆறு ஓடுகின்றது என்று சொன்னேனல்லவா? அந்த விரிந்து பரந்த ஆழமான வேகமான
ஆற்றின் பெயர் நூஜியாங்க். அந்த ஆறு சமயங்களில்
கோபமான யானையைப்போல இருக்கும். சில சமயங்களில் அடுப்பில் கொதிக்கும் கீரை சூப் போலவும்
இருக்கும். அந்த நூஜியாங்க் நதிக்கப்பால்தான் அவளின் பள்ளிக்கூடம் இருக்கின்றது. குழந்தைகளே!
இந்த திரைப்படத்தை பார்த்த பிறகு அந்த பெரிய ஆறு உங்களுக்கு எப்படி தோற்றமளித்தது? என்பதை மறக்காமல் சுட்டி
யானைக்கு எழுத வேண்டும்.
சரி இனி திரைப்படக்கதைக்கு வருவோம்.
அக்கா நக்சியாங்க் ஒவ்வொரு
நாளும் அந்த பள்ளிக்கூடத்திற்கு செல்ல வேண்டுமென்றால் படகில் போக முடியாது. காரணம்
இவர்கள் வீடு இருப்பது மலை உச்சியில். ஆறு ஓடுவதோ பெரும் ஆழத்தில். எனவே இரண்டு மலைகளுக்கு
இடையே கம்பி வடம் ஒன்றை கட்டியிருப்பார்கள். கம்பி வடத்தின் ஆங்கிலப்பெயர் என்ன தெரியுமா?
அயர்ன் கேபிள். சரியா?. பள்ளிக்கூடத்திற்கு போவது மட்டுமில்லை மருத்துவம் உள்ளிட்ட
எல்லா வெளித்தேவைகளுக்கும் அந்த தொங்கும் கம்பி வடம்தான் ஒரே போக்குவரத்து.
அந்த அந்தர கம்பி வடத்தில்
கொக்கியை மாட்டி அதில் தொங்கியவாறே அக்கரையில் உள்ள மலைப்பள்ளிக்கு தினந்தோறும் சென்று
வருவாள் அக்கா நக்சியாங்க்.பள்ளிக்கு போகும் பருவத்தை அடையாத தம்பி வாவாவிற்கு அந்தரத்தில்
மிதந்தவாறே தினந்தோறும் செல்லும் தனது அக்காவைப்பார்த்து மிகவும் ஆசையாக இருக்கும்.
பல நாட்கள் இந்த ஆசையை
மனத்திற்குள் வளர்த்து வந்த வாவா ஒரு நாள் அந்த ஆசைகளின் கனம் தாங்கவியலாமல் யாரிடம் சொல்லாமல் அந்த கம்பி வடத்தில் தனியாகவே
கமுக்கமாக அக்காவின் பள்ளிக் கூடத்திற்கு சென்று விட்டு வந்து விட்டான்.
பள்ளிக்கூடத்தின் வண்ணமும்
கலகலப்பும் படிப்பும் விளையாட்டும் அங்குள்ள நிறைய மாணவர்களையும் பார்த்த மகிழ்ச்சியில்
ஒவ்வொரு நாளும் தனது வீட்டிற்கும் அந்த பள்ளிக்கூடத்திற்கும் தெரியாமலேயே பள்ளிக் கூடத்திற்கு
கமுக்கமாகவே போய் வரத் தொடங்கினான் வாவா.
அதன் பிறகு என்ன நடந்தது?
என்பதை நீங்களே இந்த திரைப்படத்தை பார்த்து தெரிந்துக் கொள்வீர்கள். குழந்தைகளாக இருந்தாலும்
நமக்கும் ஒரு பொறுப்பு உண்டு என்பதை புரிந்து கொள்வீர்கள் இன்ஷா அல்லாஹ்.
இந்த எழுத்தை வாசிக்கும்
ஒவ்வொரு கண்மணியும் நீங்கள் இத்திரைப்படத்தை பார்த்த விவரத்தை எங்களுக்கு எழுத வேண்டும்.
சரியா?
கீழ்க்காணும் இணைப்பை பயன்படுத்தி நீங்கள் இத்திரைப்படத்தைக்
காணலாம்
No comments:
Post a Comment