Saturday, 26 February 2022

சென்னை புத்தகக் கண்காட்சி 2022

 சென்னை புத்தகக் கண்காட்சி2022 தொடங்கி பத்து நாட்கள் கழித்தே செல்ல முடிந்தது. மொத்த அரங்கையும் சுற்றி வந்தேன். எழுத்தாளர் அ.முத்து கிருஷ்ணன், பதிப்பாளர் பரிசல் செந்தில் நாதன் ஆகியோரை சந்திக்க முடிந்தது.


அவர் கேமிராவைப் பார்க்க கேமிரா அவரைப்பார்க்க உயிர்மை அரங்கின் வெளியே மனுஷ்ய புத்திரன் அமர்ந்திருந்தார். எஸ்.இராமகிருஷ்ணனும் தன் தேசாந்திரி அரங்கிற்கு வெளியே அமர்ந்திருந்தார். எழுதினோமா அடுத்ததை எழுதுவோமே என்றில்லாமல் எற்கனவே ஆக்கிய சோற்றை சுமந்து கூவுவது என்பது படைப்பாளிக்கு கூடுதல் பாரம்தான்.




இயல் வாகை, குட்வேர்ட்.சிந்தன் புக்ஸ், கருப்பு பிரதிகள், சாஜிதா பதிப்பகம், மத்திய செம்மொழி ஆய்வு நிறுவன அரங்குகளுக்கு மட்டுமே சென்றேன். குட்வேர்டு அரங்கில் சகாவு நதீம் ஏதோ அவர் வீட்டு திருமணம் என்பது போல களிப்புடன் இருந்தார்.



அரங்கிற்குள் தள்ளு வண்டியில் வைத்து தேநீர், சிறுகடி விற்கின்றார்கள். தலை பிடிக்கிற மாதிரி இருந்தது. குவளை தேநீரின் விலையைக் கேட்டேன். இருபது ரூபாய்கள் என்றார். இதற்கு தலைவலியே மேல் என்ற முடிவிற்கு வந்த எனக்கு ஒரு நல்ல தேநீரை மெய்ப்பொருள் சிங்கம் இஸ்மாயீலும் சகாவு நதீமும் உவந்தளித்தனர்.


குடுமியும் பட்டுக்கறை வேட்டியும் வட்டத்தாம்பாளக் கண்களுடனுமாக ஒருவரும் அவருடன் முழுக் காற்சட்டை அணிந்த இன்னொருவரும் என்னைப்போலவே அங்குமிங்குமாக அலைந்துக் கொண்டிருந்தனர். விசாரணை இருக்கையில் அமர்ந்திருந்த பெண்களிடம் போய் விஜயபாரதம் ஸ்டால் எங்கே எனக்கேட்க அவர்களும் வழிகாட்டினர். விஜயபாரதம் என்பதை மொழியும்போது பாரத்தம் என அழுத்திக் கேட்டனர். விஜயபாரத அரங்கை நோக்கி பாய்ந்து சென்ற குடுமியாரின் வலது கையில் காவி நெருப்புக்குஞ்சலம் திமிறி நின்றிருந்தது.


பொதுவில் உற்சாகம் தோன்றவில்லை. கூட்டம் மிகக் குறைவாகவே இருந்தது. பொங்கல் விடுமுறை மட்டுமே சென்னை புத்தக கண்காட்சிக்கு ஏற்ற பருவம். மற்ற நாட்களில் நடத்துவதென்பது கிழப்பருவத்தில் நடக்கும் திருமணம்தான். பதிப்பகத்தினருக்கு பெரிதாக ஆதாயம் கிடைக்காது. ஆனாலும் காலம் தப்பியாவது புத்தக திருவிழா நடக்கின்றதே என்பது ஒன்றுதான் ஆறுதல். பண வரவு செலவை நீக்கி விட்டுப் பார்த்தால் இது ஒரு அத்தியாவ்சியமான அறிவு பண்பாட்டுக் கூடுகை. பிறிதொரு சொல்லில் சொல்வதானால் நூல் உயிர்ப் பெற்று நடமாடும் இடம். எழுதுபவனும் வாசிப்பவனும் கண்டு முட்டும் தலம். நுகரப்படும்போது மட்டுமே மலரின் உயிர்ச்சுழல் முழுமை பெறுகின்றது.


கால்டுவெல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள ‘ திருநெல்வேலி சாணார்கள்’, மெட்ராஸ் ரிவியூ பதிப்பகத்தினர் வெளியிட்ட ‘ தமிழ்நாட்டு கோவில்களை ஆக்கிரமிக்க முயலும் ஆர்.எஸ்.எஸ் ஜக்கி வாசுதேவ்’ என்ற இரு நூல்களை மட்டும் வாங்கிக் கொண்டேன். தேவைப்படும் புத்தகங்களை அவ்வப்போது வாங்கிக் கொண்டே இருப்பதால் புத்தக கண்காட்சிக்கென என தனியாக புத்தகங்களை அள்ளிப் பிடிப்பதில்லை. ஞாயிற்றுக்கிழமை அடுத்த சுற்று போக வேண்டும். நேஷனல் புக் டிரஸ்ட், சாகித்ய அகாதெமி, செம்மொழி மத்திய ஆய்வு நிறுவனம், தமிழ் நாட்டு பாட நூல் நிறுவனம் , தகவல் ஒலிபரப்புத்துறை அரங்கு, புதுமைப்பித்தன் அரங்கம் ஆகியவற்றிற்கு முழு ஓர்மையுடன் செல்ல வேண்டும்.


இது நாள் வரை வாசகர்கள் வாங்கும் நூல்களை வெளியூர்களுக்கு அனுப்புவதற்கென தனியார் தூதஞ்சல் நிறுவனங்களின் அனுப்புகை அரங்கு ஒன்று வழமையாக இயங்குகும். இம்முறை இந்திய அஞ்சல் துறையிலிருந்து அப்படியான ஒரு அனுப்புகை அரங்கை முதன்முறையாக ஏற்பாடு செய்யப்போகின்றார்கள் என இன்றைய செய்தித்தாளிலிருந்து வாசித்தறிந்தேன். காலங்கடந்தாவது ஞானம் பிறந்ததே. மலிவான கட்டணம். நிறைவான சேவை.


இயல்வாகை அழகேசுவரி திணை இலட்டும் அல்வாவும் தந்தார். கண்காட்சியின் வெறுமையினால் ஏற்பட்ட மூளையின் ஆயாசம் நாவின் வழி நீங்கியது.



No comments:

Post a Comment