Saturday 26 February 2022

கசபத்’ – வேலைவெட்டியில்லாதவன் : குறுநாவலை முன்னிட்டு --- கொள்ளு நதீம்

 

புதிய புத்தகம் பேசுது --- ஃபிப்ரவரி 2022 மாத இதழில் ' கசபத் ' குறு நாவல் குறித்து சகாவு கொள்ளு நதீம் எழுதிய பதிவு



 

காயல்பட்டினம் என்கிற சிறுநகரம் யிரம் ஆண்டுகளுக்கும் மேல், அருகிலுள்ள கொற்கை அதைவிட பழைமையானது என்று கூறப்படுகிறது,

இந்தியாவின் எந்தவொரு முஸ்லிம் குடியிருப்பை எடுத்துக் கொண்டு ஒப்புநோக்கி பார்த்தாலும் மிக முன்னோடி நகரம் என்பதில் எந்தவொரு சிறு ஐயமும் இல்லை. அப்படியான காயல்பட்டினத்தைச் சேர்ந்த கதைச் சொல்லி முப்பத்தி மூன்று ஆண்டுகளுக்கு முந்தைய ஃப்ளாஷ் பேக்கை கூறுவதுதான் மொத்த நிகழ்வுகளும். அந்த நாயகன் அபு என்று நாம் அறிந்து கொள்வது நாற்பது பக்கங்கள் கடந்த பிறகுதான். அதுபோல அபுவின் நண்பர் இஸ்மாயில் தேவர் முக்கியமான கதாபாத்திரம். அவர் கிட்டத்தட்ட இன்டர்வல்லில் வருகிறார். முழு கதையாடல்களும் காயல்பட்டினத்து பேச்சு வழக்கில் வருகிறது. நூலகத்தில் கழித்த பொழுதுகளும், படித்த நூல்களைப் பற்றிய விவரணைகள் கூர்மையானவை.

 

 

(எந்த ஊரில் தயாரிக்கப்பட்டது என்பதைக் குறிக்க, கேரளாவிலுள்ள) கொல்லம் ஓடு, உணவின் போது வந்த நெய்மணத்தைக் குறிக்க கரூர் நெய் என சரியான தகவல்கள், வரலாறும், தொன்மமும் சரிவிகிதத்தில் கலந்து தந்திருக்கிறார். வாப்பா, உம்மா, லாத்தா எல்லோரும் அபுவுக்கு உண்டு. வேலையோ, சரியான தொழிலோ இல்லாமல் இருப்பதுகூட பிரச்சனையில்லை, காடு வாசாரியா சுத்தரானே? நூலகங்களுக்கும், கூட்டங்களுக்குப் போகிறானே என்பதுதான் தந்தையின் கவலை. முழு கதையும் இந்த முரணைச் சுற்றியே ஓடுகிறது.

 

எண்டமூரி விரேந்திரநாத், குங்குமம், தேவி, சோவியத் நாடு இதழ்கள், யாகோவ் பெரல்மான் (1882 - 1942) எழுதிய பொழுதுபோக்கு இயற்பியல், டால்ஸ்டாயின்அன்ன கரீனினாமுதல் பாகம் என ஒரே நூலகங்களுக்குப் போன கதை விரவிக் கிடக்கிறது. ஆடிக்காற்று தெருவை புரட்டிக் கொண்டிருந்தது என்கிற விவரணையும்,  வசந்தகாலம் பற்றிய குறிப்புகளும் என உக்கிரமாக பதிவாகியுள்ளது.

தாவூதப்பா, சேத்துக்கார், தோழப்பா, கபீர், காஜா, பாக்கர், காதர் என ஏராளமான மனிதர்கள். அவர்களில் குட்டை ஷாஃபி, மெய்தீன் மேஸ்திரி, பக்கத்து வீட்டு மொகுதூம், சமையல்காரர் மொகுதூம், கொட்டு அலி, தீவுத்தெரு அஷ்ரஃப், தெங்கம்பழ வைத்தியர் பலருக்கும் முன்னொட்டுகளூம், பின்னொட்டுகளும் உள்ளன.

 

(உண்மைப் பெயரில்) ஷஹீத் இஸ்மாயில் (1786 – 1831), ஆனந்தமடம் நாவலை எழுதிய, வந்தேமாதரம் பாடிய பங்கிம் சாட்டர்ஜி (1838 – 1894),  வியட்நாம் நாட்டுத் தலைவர் ஹோசிமின் (1890 – 1969); வைக்கம் பஷீர் (1908 – 1994); மக்கள் கட்டிடக் கலையை முன்னெடுத்த லாரி பேக்கர் (1917 – 2007); தமிழ் நாவலாசிரியர் ஜி.நாகராஜன் (1936 – 81), திருக்குர்ஆனின் கடைசி பாகத்தை மொழிபெயர்த்த பி.எஸ்.அலாவுத்தீன் என போகிற போக்கில் சொல்லிக் கொண்டே 30/40 ஆண்டுகளுக்கு முன்பாக முஸ்லிம்களிடம் இல்லாதிருந்த த.மு.மு.க., தவ்ஹீத் இயக்கங்களின் உருவாக்கம் குறுக்கு வெட்டு தோற்றத்தில் விவரிக்கப்பட்டிருக்கிறது.

 

முஸ்லிம் லீக் சமத் சாயபு மட்டும் சரியான பெயருடன் குறிப்பிடப்பட்டுள்ளார், அதன் பிறகு உருவான (முஸ்லிம்) தலைவர்களும், அவர்கள் கட்டியெழுப்பிய இயக்கங்களும் சற்று திரிபுடன் பதிவாகியுள்ளது. ஜெ.பி (என்ற மதத் தலைவர்) வருகிற காட்சி அபாரம். ஷஹீத் முத்து மகதூம், பாலப்பா, சீனியப்பா, 10-ஆம் நூற்றாண்டு தர்கா, அதையொட்டிய தடி மஸ்தான், சோலா காக்கா, மஹரா மார்க்க கல்விக்கூடம் என காயல்பட்டினத்தையொட்டிய ஆன்மிகம் பேசப்படுகிறது.

 

பருப்பு மூட்டை, பலசரக்கு கடை, நகைக்கடை என .மாதவனின் கதைகளுக்குப் பிறகு பஷீரின்  கதைகளில் உள்ள கதாபாத்திரங்கள் தெருவிலேயே உள்ளனர். ஊர் சுற்றிப் புராணமாக இந்த கதையின் நாயகன் போன, போகாத நாடுகளான சிலோன், சிங்கப்பூர், மலேஷியா துல்லியமாகவும், விரிவாகவும் பதிவு செய்துள்ளார்.  தனுஷ்கோடி, தூத்துக்குடி, காயாமொழி, பாபநாசம், ஆலப்புழை, விழுப்புரம், பல முறை - திருநெல்வேலி, சென்னையென ஊர்க்கதைகள் பேசி செல்கிறார். நாயகனைப் பொறுத்தவரை வெளியூரான கோவையைக் குறிப்பிடும்போதுகூட வெறுமனே ஊர் பெயரைச் சொல்லாமல் அந்த ஊரில் காந்திபுரம், அஞ்சுமுக்கு என்று திட்டவட்டமான இடங்களைச் சொல்கிறார். 


1950-களில் அமெரிக்காவில் ஹிப்பிக்கள் இயக்கம் படிப்படியாக 70-களின் வாக்கில் இங்கு வேர்பிடிக்கத் தொடங்கியது. குடும்பம், சமூகம் என்கிற நிறுவன மயமான அமைப்பை மீறிய அல்லது தப்பித்து ஓடிய ஹிப்பிகள் எல்லா கசப்புகளையும் சுயபகடியாக்கி கடந்து போகலாம் எனக் காட்டினர். இந்திய அளவிலும் சரி, நம் தமிழிலக்கியம், தமிழ் சினிமாவிலும் இங்கொன்றும் அங்கொன்றுமாக ஹிப்பிகள் பதிவாகியுள்ளர். சாகசம், விட்டேறித்தனம், மனவிரிவு, கட்டற்ற சுதந்திரம், இயற்கையோடு ஒன்றியிருத்தல், நுண்ணர்வு, துறவுநிலை என்றும் கூற முடியாதபடிக்கு விலகி தனித்திருக்கும் போக்கு என அந்தக் குழுவின் பொது இயல்பு கலையழகுடன் சித்தரிக்கப்பட்டுள்ளதுஹிப்பிகளைப் பற்றிய கதைகள் தீவிரத்தன்மை கொண்டவை. பட்டிக்காடா பட்டணமாஹிப்பி வேடத்தில் சிவாஜி நடித்திருப்பார். ‘தம் மாரெ தம், மிட்ஜாயெ கம், போலு சுபஹ் ஷாம்’.


‘சுராங்கனி சுராங்கனி சுராங்கனிக்க மாலும் கெனவா மாலு மாலு மாலு சுராங்கனிக்க மாலு சுராங்கனிக்க மாலு கெனவா’ 70-களின் பிரபலமான சினிமா பாடல் இதில் பொருத்தப்பட்டுள்ளன.

 

கரும்புச் சாறு, தண்டவாளத்தில் காசு வைத்து அதன் மீது ரயிலேறி போவதை வேடிக்கை பார்க்கும் விளையாட்டு, பெட்ரோமாக்ஸ் விளக்கு, (எங்கள் பகுதியில் இதை தம் பிடிப்பது என்கிற) 70 வரை மூச்சடக்கி எண்ணும் தோட்டத்தில் பம்ப் செட் தொட்டிக் குளியல், நான்கு பேருள்ள குடும்பத்தின் மாதச் செலவு ரூ.நான்காயிரம் என்கிற விவரம், ஈர விறகு, டேப் ரிக்கார்டர், கேசட், போன், சைக்கிள் ரிக்ஷா (எம்.ஜி.ஆர். நடித்த படம் வெளியானது 1971, ஆட்டோக்காரனாக பாட்சாவில் ரஜினி நடித்தது 1995) ரயிலில் கரி / டீசல் இஞ்சின் மாற்றுதல் என எல்லாம் பிளாக்&வைட் சினிமாதான். பயண அலைச்சல், ஆவணப்படங்களின் மீதான ஆர்வம், தான் கண்டதையும், அனுபவித்ததையும் சுவையாக சொல்ல வந்திருக்கிறது.

 

இதன் நாயகன் கதை சொல்லும்போது இருபது வயது இளைஞன், பள்ளிக்கூடம் பற்றி நிறைய பேசுகிறான், அன்று இப்பொழுது இருப்பதைப் போல ஊருக்கு எட்டு கல்லூரிகள் வராத காலம். திண்ணைப் பள்ளிக்கூடம் சற்று நவீனமாக டுட்டோரியல் காலேஜ் என்கிற பெயரில் இயங்கி வந்தது,  நாயகனின் அண்ணனும் ஆசிரியர்.  அதன் இன்னொரு  ஆசிரியர்  அபுல் பரக்காத் சார்.

 

"The most excellent jihad is when one speaks a true word in the presence of a tyrannical ruler" என்றொரு நபிமொழி உள்ளது. இதைத்தான் எட்வர்ட் செய்த்அதிகாரத்திடம் உண்மையைப் பேசுதல்என்று கூறினார். இந்த கதையின் நாயகன் அப்படி காலமெல்லாம் விளைவைப் பற்றிய சிறு கவலையும் இல்லாமல் பேசியவன். கிளைமாக்ஸ்சில் அபுவின் சொற்பொழிவு, எந்தவொரு இலட்சிய நாயகனுடைய புகழ்பெற்ற அறைகூவலுக்கும் குறைந்ததல்ல.

 

இந்த கதையின் நாயகன் இலட்சியவாதி. இன்றைய தேதியில் ஒரு இலட்சியவாதியையும் பார்க்க முடிவதில்லை, அருகி வரும் இலட்சிய மனிதர்களின் மேன்மையின் மீதான நம்பிக்கையில்தான் நம் பிள்ளைகள் தெருக்களில் நடமாடமுடிகிறது. இலௌகீக அளவுகோலின்படி நாயகன் தோற்கடிக்கப்பட்டிருந்தாலும் வாழ்வின் பொருளும், பொருளின்மை குறித்தும் நிறைவுடன் கழித்திருப்பது நமக்கு வாய்க்கவில்லையே என்று ஏங்கத் தோன்றுகிறது.

 

(இலண்டனில் படித்த) காந்தியடிகள் (தென்னாப்ரிக்காவிலிருந்து) இந்தியா திரும்பியது 1915, அப்பொழுது கோகலே இறந்தும், திலகர் நலிவுற்றும் போயிருந்தனர். அடுத்த பத்தாண்டுகள் ஒத்துழையாமை இயக்கம், சத்தியாக்கிரகம் என விடுதலைக்கான இயக்கம் நாட்டில் மேலெழுந்து வந்தது.

 

சமூகங்களுக்கு இடையில் பதற்றத்தை உண்டாக்கும் எண்ணத்தில் வெறுப்புக் கக்கும் பேச்சுக்களுக்கு தண்டனை தரக்கூடிய Hate Speech Law Section 295(A) சட்டத்திருத்தம் இந்த பதற்றமான 1927-ஆம் ஆண்டில்தான் பிரிட்டிஷ் அரசு நிறைவேற்றியது. பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டு ஓராண்டு  கழிந்து (1993-யில்) ஒரு கூட்டம் கோவையில் நடக்கிறது. இந்த கதையின் நாயகன் அபு அதில் கலந்து கொள்கிறான்.

 

(அனேகமாக கேரள மலப்புரத்திலிருந்து வந்த?) வெள்ளாரங்கல் மனிதர் எனக் குறிப்பிடப்படும் இயக்கச் செயல்பாட்டாளர் வகுப்பெடுக்கிறார், பள்ளிக்கூட ஆசிரியர் நியாஸ் அந்த காலகட்டத்தில் இயங்கிய நக்சல்களைப் போல தர்மபுரியிலிருந்து வந்திருந்தது வியப்பில்லை.

 

இந்து மதத்தை மிகக் குறுகிய நோக்குடன் பார்த்தவர்கள் என்று காந்தியடிகள் குறிப்பிடும் ஆர்ய சமாஜ் (1875), அதை நிறுவிய தயானந்த சரஸ்வதி (1824 – 1883),  ரங்கீலா ரசூல் (1920), அதற்கடுத்து தலைமையேற்ற சிரத்தானந்தர் (1856 – 1926),  கே.கே.நாயர், அயோத்யா என பல்வேறு விஷயங்களை பேசுகிறார். இந்த கொலையில் தொடர்புடைய அப்துர் ரஷீத் பற்றி அங்கு பேசப்படுகிறது. கே.கே.நாயர், கே.ஜே.ஜா, கிருஷ்ண ஜா ஆகியோர் எழுதியஅயோத்தி இருண்ட இரவுஎன்ற விடியல் பதிப்பக நூல் இவ்விபரங்களை உறுதி செய்கிறது.

 

சித்தி ஜுனைதா பேகம், திருச்சி ரசூல், ஆளூர் ஜலால், ஜே.எம்.சாலி, மீரான் மைதீன், கீரனூர் ஜாகிர் ராஜா, முஹம்மத் யூசுப், நாகூர் ரூமி, ஆபிதீன், ஓவியர் ரஃபீக், அர்ஷியா, ரோஜா குமார், பிர்தவ்ஸ் ராஜகுமாரன். மலேசியா சை.பீர்முஹம்மது என்கிற வரிசையில் சாளை பஷீர் இணைந்திருக்கிறார். மொத்தமே நூற்றி சொச்சம் பக்கமுள்ள இந்த குறு நாவல் தமிழக சமூக, அரசியல் வரலாற்றைச் சொன்ன பா.வெங்கடேசனின் தாண்டவராயன் கதையைப் போல முஸ்லிம் கதையாடலை பேசுகிறது.

 

விழுமியங்கள் என்றால் என்ன என்று கேட்கப்படும் இந்த காலத்தில் அதற்காக முழு வாழ்க்கையை பணயம் வைத்த இளைஞன் அறம் என்பதன் வாழும் சாட்சியம். அபுக்கள் தோன்றிக் கொண்டே இருக்கட்டும்.




No comments:

Post a Comment