Thursday, 21 October 2021

பழவேற்காடு -- மரபு நடை


 


பழவேற்காடு போய் பதினைந்து  வருடங்களிருக்கும். நண்பர்கள்  நான்கைந்து பேருடன்  சென்னை சென்றலிலிருந்து பொன்னேரி வரைக்கும் புற நகர் இரயிலில் ஏறி அங்கிருந்து பேருந்து பிடித்து போய்ச் சேர்ந்தோம்.  அங்குள்ள உப்பு நீர் ஏரியில் அதாவது  காயலில் படகுப் பயணம் செய்து முகத்துவாரத்தில் ஆட்டம்பாட்டம்  போட்டு  விட்டு திரும்பி விட்டோம். பழவேற்காட்டின் தொன்மையைப் பற்றி அவ்வளவாக அக்கறை எடுக்காத காலமது.

 

வரலாற்று ஓர்மைகள் துளிர்த்த கடந்த சில வருடங்களில் இதற்கனவே  ஷீத் ரஸ்தா, காயல்பதி என இரு வட்சப் குழுமங்களை அமைத்து தகவல் சேகரம், சிறிய  அளவிலான ஆவணப்படுத்தல்கள், குறும் பயணங்கள் என மேற்கொண்டு வருகின்றோம். பழவேற்காடு தொடங்கி பட்கல் வரை என்ற ஒரு திட்டத்தை கொஞ்ச நாட்களாகவே பேசிக்கொண்டிருந்தோம்

 

கடந்த ஒரு வாரகாலமாக  தொடர் விடுமுறையாக இருந்ததால் மீலாதுந்நபீ அன்று ஷீத் ரஸ்தா & மெய்ப்பொருள் வாசிப்பு வட்ட தோழமைகளுடன் இணைந்து பழவேற்காடு சென்று வர தீர்மானிக்கப்பட்டது.

 

இராயப்பேட்டை தமுமுக இஸ்மாயில், இலக்கிய விமர்சகர் கொள்ளு நதீம், சீர்மை பதிப்பக உவைஸ் அகமது, அரபு முதுகலை  மாணவரும் காயல்காரன் மரபுக் குழுமம் நடத்திவருபவருமான  காயல்பட்டினம் அனீஸ் அகமது ஆகியோருடன் மகிழுந்தில் சென்னையிலிருந்து கிழக்கு கடற்கரைச்சாலை வழியாக  காலையில் புறப்பட்டோம். கிட்டத்தட்ட  ஒன்றரை மணி நேர பயணம். ஐம்பத்தி மூன்று கிலோ மீற்றர்.

 

பழவேற்காட்டில் ஈர நைப்புடன் கூடிய வெய்யில்  பொழிந்து கொண்டிருந்தது.  அக்கரையில் உள்ள குப்பங்களுக்கு செல்வதற்காக காயலுக்கு குறுக்கே பாலம் ஒன்று எழும்பியிருந்தது. வேறொன்றும் மாறவில்லை. கிராமத்திற்குரிய எல்லா நினைவுகளுடனும் ஊர் உட்கார்ந்திருந்தது.  வண்டியை ஓரங்கட்டி விட்டு  ஓலை உணவகம் ஒன்றிற்குள் நுழைந்தோம்.  மீன்பிடிக் கிராமமாதலால் மீனவர்களால் அந்தக் குடில் நிரம்பி வழிந்தது. துப்புரவுக் குறைவான கடை.  பசியில் வரும் ஆட்கள் அதையெல்லாம் பொருட்படுத்தவேயில்லை. வேறு வழியில்லாமல் நாங்களும் நெருக்கிப் பிடித்துக் கொண்டு அமர்ந்தோம்.

 

பரோட்டா, முட்டை தோசைக்கு துணைக்கறியென்பது  இறால் கறி அல்லது கோழிக்கறிதான்.  மரக்கறியெல்லாம் இல்லை. கடலும் காயலும் கொண்ட  ஊரில் ஊனற்ற உணவு என்பது புதுமைதான்.

 

பசியாறை முடித்து விட்டு நேராக மத்ரசா முதல்வர் அலீ ஆலிம் அவர்களை சந்தித்தோம். பல்வேறு வேலை நெருக்கடிகளுக்கு நடுவே எங்களை உபசரித்து நாங்கள்  வந்த விஷயத்தை கேட்டறிந்து வழிகாட்டும் ஆட்களை ஏற்பாடு செய்தார்.

 

அலீ ஆலிம் அவர்கள் குறுங்குழுவாதம், இயக்க பிடிமானம் போன்ற தட்டுமுட்டுகளுக்கு அப்பால் சமூகத்தினிடையே பணி புரியும் வித்தையைக் கற்றவர். முஸ்லிம்களிடையேயும் மற்ற சமூகங்களிடையேயும்  அழகிய முறையில் ஊர் ஜமாஅத் ஒத்துழைப்புடன் நலச் செயல்பாடுகள், நல்லிணக்க நிகழ்வுகள்  பல நடந்தேறுகின்றன.

 

பெரிய பள்ளிவாசல், சிறிய பள்ளிவாசல் என் இரண்டு பள்ளிவாசல்கள் இருக்கின்றன.  அரபகத்திலிருந்து  புறப்பட்ட ஐந்து கப்பல்களில் ஒன்று இங்கு இறங்கியதாக சொல்லப்படுகின்றது. பொது ஆண்டு 1502 இல் பழவேற்காட்டை  போர்த்துக்கீசியர்  ஆக்கிரமித்துள்ளனர். இந்த காலகட்டத்தை வைத்துப் பார்க்கும்போது  இந்த ஊரின் வயதென்பது எழு நூறு ஆண்டுகளுக்கு மேல்  என்பதைக் கூறலாம். அரசு முறையான தொல்லியல் ஆய்வு நடத்தும்போது எல்லாம் துலங்கி வரும்.

 

பெருமளவிலான கடற்கழி பரப்பையும் இந்தியாவின் இரண்டாம் பெரிய காயலையும் அதாவது உப்பு நீர் ஏரியையும்  கொண்ட பழவேற்காடானது வடகிழக்கு பருவமழையை தீர்மானிப்பதில் தலையாய பங்கு வகிக்கின்றது. மீன் பிடி,இறால் பிடி தலையாய தொழில்.  ஏராளமான பறவைகளுக்கு புகலிடமாக இருக்கின்றன  ஏரியும் கடற்கழியும்.

 

அரபு வணிகர்கள் உள்ளூர் மக்களுடன் ஏற்படுத்திய மண உறவின் தொடர்ச்சியாக பெருகிய  குடும்பங்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட எழுபது ஆகும். இவர்கள் தங்களுக்குள்ளேயே மணமுடித்துக் கொள்கின்றனர். அரபுகள்  வணிகம் புரிந்த தமிழகத்தின் கடற்கரை ஊர்களில் பழவேற்காட்டைத்தவிர வேறெந்த ஊரிலும் இங்குள்ள அளவிற்கு அரபுச்சாயல் முகங்களைப் பார்க்க முடியாது. மக்கள் தொகையின் பெருக்கத்தினால் தற்சமயம் வெளியூர் மணமும் நடக்கின்றது.

 


 

புலிக்காட், பளயகாட் என்றழைக்கப்பட்ட பழவேற்காட்டில் கடல் கடந்த   வணிகம் செழித்து நடந்துள்ளது. வைர வணிகம், உணவு வாசனைப்பொருள் வணிகம் போன்றவற்றுடன் அடிமை வணிகமும் நடந்துள்ளன. உள்ளூர் மக்களையும் அதிராம்பட்டினம், தொண்டி, காயல்பட்டின மக்களையும்  அடிமைகளாக்கி அய்ரோப்பிய சந்தையில் விற்கும் அடிமை  வணிகத்தை தொடங்கியவர்கள் போர்த்துக்கீசியர். டச்சுக்காரர்களும் அதையே  தொடர்ந்துள்ளனர்.

 

பழவேற்காட்டிலும் சுற்று வட்டாரங்களிலும் நடந்த பருத்தி  துணி உற்பத்தி. அதிலும் குறிப்பாக இங்குள்ள கைலி, லுங்கி எனப்படும் சாரங்கள்  புகழ்பெற்றவை. ஹாலந்து உட்பட  தென் கிழக்காசியா வரைக்கும் இவை ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தன.  போர்த்துக்கீசியரை அடித்து விரட்டிய டச்சுக் காலனியாதிக்கவாதிகள் பொது ஆண்டு 1609 இல் இங்குள்ள முஸ்லிம் வணிகர்களுடன் வணிக ஒப்பந்தம் செய்ததோடு தங்களுடைய தலை நகரையும் இங்கு அமைத்துள்ளனர்.1613இல் ஜெல்டிரியா என்ற பெயரில் கோட்டையொன்றை நிறுவியுள்ளனர்.  பழவேற்காடுதான்   இந்தியாவில்   முதல் டச்சுத்தாவளமாகும்.

 

ஆங்கிலேய காலனியதிக்கவாதிகளின் கை ஓங்கவும் பழவேற்காட்டில் 1825இல்  டச்சு காலனியாதிக்கம் முடிவடைகின்றது.அத்துடன் பழவேற்காட்டின் வணிக முக்கியத்துவமும் முடிவிற்கு வந்தது. இங்கு நடந்த வணிகம் பின்னர் போர்ட்டோ நோவோ என்றழைக்கப்படும் பரங்கிப்பேட்டைக்கு மாறி விட்டது.

 

இத்தனை அரசியல்,பொருளாதாரம், பண்பாடு  புழங்கிய  பழம் நகரமான பழவேற்காடு பற்றிய வாசிப்புக்கு பழஞ்சான்றுகள், நூல்கள் ஏதாவது இருக்கிறதா? எனத்தேடும்போது உள்ளூரில் அப்படியான ஆவணக்காப்பு எதுவும் நடந்திருக்கவில்லை.  வீ.இராதாகிருஷ்ணன் என்ற உள்ளூர்க்காரர் எழுதிய பழவேற்காடு வரலாற்று நூல் வெளிவந்திருக்கும் செய்தி கிடைத்தது.  இந்நூலில் உள்ளூர் முஸ்லிம்களின் வரலாறு சொல்லப்படவில்லை என்ற வருத்தம் இங்கு நிலவுகின்றது. நூலாசிரியரை தொடர்பு கொள்ள முயன்றோம். நடக்கவில்லை.  நூலை வாங்கி வாசிக்க வேண்டும்.

 

ஊருக்குள் நடை தொடங்கியது. வெய்யில் சமாந்தர்மாக இருந்தாலும் பெரும் நீர்ப்பரப்பின் கரையில் ஊர் அமைந்திருப்பதால் காற்றிலுள்ள ஈரப்பதத்தின் ஆவி வெம்மையானது   சோர்வடைய வைத்தது.

 

எங்களை வழி நடத்திச் சென்ற பெரியவர் அப்துல் வஹ்ஹாப்  புதியதாக கட்டப்பட்டு  வரும் தனது வீட்டிற்கு அழைத்து சென்றார். மாடங்களுடன் கூடிய அகன்ற வீடு. குறு அரண்மனை. மின்சாரம் இல்லாமலேயேம் வீடு முழுக்க கதிரொளி நிறையும்படியான ஏற்பாடு.




 

வீட்டைப் பற்றிய விளக்கிய பெரியவர் அப்துல் வஹ்ஹாப், இது தனக்கு மட்டும் சொந்தமான வீடு இல்லை எனவும் தனது உடன் பிறப்புக்களுக்கும்  உரித்துடையது என்று கூறிய அவர், “ எங்கள் தலைமுறை வீட்டை இடித்துதான் இந்த வீட்டைக் கட்டுகின்றோம். வீட்டிற்கான வேலை தொடங்கும் முன்னர் பங்கு பிரிவினை பற்றி பெரியவர்களாகிய நாங்கள் பேச்செடுக்கும்போது எங்கள் மக்களும்  பெயர மக்களும்  நாமெல்லோரும் ஒன்றாகவே இருப்போம் என்று கூறி விட்டதால் அனைவருக்குமாக சேர்த்து பதினாறு அறைகளுடன் கூடிய வீடாக இதைக் கட்டி முடித்துள்ளோம்”.




 

அணுக்குடும்பம் ஒற்றைக்குடும்ப  பேச்சுகளுக்கான எதிர் பேச்சானது நம் முன் கல்லும் மண்ணுமாக உருக் கொண்டு நிற்கின்றது. மனங்களின் அகல்வு  மேன்மேலும் உறுதிப்படுத்தப்படும் ஒரு காலத்தில்  இது ஒரு சிறந்த பரிகாரம். பதினாறுகளின் பதினாறுகளுக்காக துஆச் செய்தோம்.

 

 நண்பர் இஸ்மாயீலின் மனைவியின் முன்னோர் நிலம் பழவேற்காடுதான். அவர்களின் உறவினர் இல்லத்திற்கு சென்றோம். மரத்தூண்களும் திறந்த முற்ற வெளியும் கொல்லையுமாக பழம் வீடு. இங்குள்ள பெரும்பான்மையான வீடுகள் இந்த அமைப்பில்தான் உள்ளன. இதே போல இன்னொரு வீட்டிற்கும் சென்றோம். மர விதானம் கொண்ட வீட்டினுள்  மெத்தை எடுத்திருந்தார்கள். நுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்ட உத்திரங்களும் தூண்களுமாக கலைக்கூட அமைப்பு.




 

காயல்பட்டினத்தில்  இது போன்ற வீடுகள்  ஐம்பது வருடங்களுக்கு முன்னர் வரை இருந்திருக்கின்றன. காங்கிரீட்டின் வருகைக்குப்பிறகு வீடானாலும் சரி நூற்றாண்டுகள் பழமையான பள்ளிவாசல்களானாலும் சரி இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேல் நீடிக்க விடுவதில்லை என்ற தெளிவுடன் இருக்கின்றோம். எதிரிகளுக்கு ஒரு வேலை மிச்சம்.

 

 இங்குள்ள நிறைய வீடுகள் நூறு இரு நூறாண்டுகள் பழமையானவை. வெறும் மண்,சுண்ணாம்பு, இயற்கை கலவை முறையைப்பயன்படுத்தி கட்டப்பட்டவை.  ஆங்காங்கே பழையதை இடித்து காங்கிரீட் கட்டிடங்களும் உயருகின்றன.

 

இங்குள்ள பழம் வீடுகளின் கொல்லையில்  குடுவைகளில் மழை நீரை சேகரிக்கின்றார்கள். இக்குடுவைகளில் பூப்படங்களும் டிராகன் படங்களும் இருக்கின்றன. பின்னர் இக்குடுவையினுள் பழுக்க காய்ச்சிய இரும்பு துண்டம் அல்லது கம்பியை நுழைத்து எடுக்கின்றார்கள். இதனால் வருடம் முழுக்க நீர் பேதலிப்பதுமில்லை அவற்றில்  புழு பூச்சிகள் உண்டாவதுமில்லை. கேரளத்தின் பொன்னானியில் உள்ள தங்ஙள் ஒருவரின் தரவாட்டு ( தலைமுறை )  வீட்டு முற்றத்திலும் மழை நீர்  சேகர முறையைக் காண நேர்ந்தது.  முற்றத்து சாய்ப்பிலிருந்து வடியும் மழை நீரை சங்கிலி மூலம் குழாய்கள் வழியாக தொட்டியில் இட்டு சேகரிக்கின்றனர்.




 

மீலாதை ஒட்டி ரசூலுல்லாஹ் வீடுகளில்  மவ்லிது ஓதிக் கொண்டிருந்தார்கள். இங்குள்ள மக்தபுகளில் அர்வி எனப்படும் அரபித்தமிழ் எழுத்துக்களை  வாசிக்க   மாணவர்களுக்கு  பயிற்றுவிக்கின்றார்களாம். கேரள எல்லையை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் உள்ள மத்ரசா பாடத்திட்டத்திலும் அர்வி போதிக்கப்பட்டு வருகின்றது. புதியதாக ப்ழவேற்காட்டுக்காரர்கள் எடுக்கும் நல்ல முயற்சி போற்றத்தக்கது. அர்வியில் அத்தனை கலைக்கருவூலங்கள், இலக்கியம், இலக்கணம்,வரலாறு கொட்டிக் கிடக்கின்றன. அருகி வரும் அர்வியை காப்பாற்ற மற்ற கடலோர முஸ்லிம் ஊர்களும் இதைப் பின்பற்ற வேண்டும்.

 



 இங்குள்ள முஸ்லிம் குடும்பங்கள் ஏனைய முஸ்லிம் ஊர்களைப்போல வெளிநாட்டு வேலை வாய்ப்பை நாடி பெரிய அளவில் இடம் பெயரவில்லை. உள்ளூரிலேயே பனை ஓலைகளிலிருந்து அழகிய வண்ணங்கொண்ட விதம் விதமான பேழைகள் உள்ளிட்ட பல பொருட்களை முடைகின்றனர். கொஞ்சம் பேர் கடற்றொழில் புரிகின்ற்னர்.  இவர்களின் பொருளாதாரங்களில் பாய்ச்சல் எதுவும் நடக்கவில்லை என்பது உண்மையானாலும் ஊரின் தொன்மையில் ஏற்படும் மாற்றங்களும்  சேதாரங்களும் மிகக் குறைவாக இருக்கின்றன என்பதும் மனங்கொள்ளத்தக்க விஷயம்.

 

பெரியவர் அப்துல் வஹ்ஹாபிற்குப் பிறகு  சலீமுத்தீன் ஆலிம் எங்களுடன் வந்து இணைந்து கொண்டார். சுவாரசியமான மனிதர். தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று தன் கைவசமிருக்கும் ஊர் தொடர்பான சில காகித ஆவணங்களை காட்டினார். அவர்கள் பாதுகாத்து வைத்திருக்கும்  குடும்ப மரபு வழி மரபுப்பட்டியலையும்  காட்டினார்.




 

சிறிய பள்ளிவாசலில்  விரிவாக்கப்பணி நடந்து கொண்டிருந்தது. நல்ல வேளையாக அவ்வளாகத்தினுள் இருக்கும் பாங்கு ஒலிப்பு  மாடம் மூத்த இளமையுடன் தப்பி விட்டது. நூறு வருடங்கள் பழமையான கதிரொளிக் கடிகையும் இருக்கின்றது. அதில் விழும் நிழலைப்பார்த்து துல்லியமாக நேரத்தைக் கூறிக் கொண்டிருந்தனர்.





 

எம்.டெக்.பட்டதாரி இளவல் ரிழ்வான் எங்களை பெரிய பள்ளிவாசலுக்கு அழைத்துச் சென்றார். அங்கு அரபிகளின் மண்ணறை என எதையும அறிய இயலவில்லை. ஆனால் இரு நூறு வருடங்களுக்கும் முந்திய வேளைப்பாட்டுடன் கூடிய கல் மீசான்கள் ஒன்றிரண்டை பார்க்க முடிந்தது. சிறிய பள்ளிவாசலின் விரிவாக்கத்தின் போதும் இறந்தவர்களை அடக்குவதற்காக குழி தோண்டும்போது  அங்கு சுவர்கள் இருந்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர். முறையான தொல்லியல் ஆய்வு கல்வெட்டு வாசிப்பின் மூலமாக அவை வெளியாக்கப்பட வேண்டும்.



 

பழவேற்காட்டு முஸ்லிம்களின் பொதுவான பேச்சு வழக்கு பல்லவ மண்டல் நடையிலிருந்தாலும் உறவு முறைகள், உணவுப்பொருட்களின் பெயர்களுக்கும் காயல்பட்டின சொல் வழக்கிற்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன.

 

உம்மா, வாப்பா, கண்ணும்மா, அப்பா, முத்தப்பா, லாத்தா, காக்கா

 

அறால்( இறால்), ஆணம், சோறு ( சாப்பாடு), கறி ( துணைக்கறி, வெஞ்சனம்).

 

பிரதான சாலையில் உள்ள பழவேற்காட்டின் டச்சுக் கல்லறைத் தோட்டத்திற்கு சென்றோம்.  இந்திய தொல்லியல் துறையின் பராமரிப்பின் கீழ் உள்ளது. பூட்டி வைத்திருந்தார்கள். நாங்கள் வருவதைப்பார்த்த ஒருவர் திறந்து விட்டார்.

 

நுழைவாயிலில் எலும்புக்கூட்டுடன் கபாலமும் பொறிக்கப்பட்டிருந்தன. கிறிஸ்தவ நம்பிக்கையுடன் புறச்சமய சடங்குகளையும் பின்பற்றுபவர்களாக டச்சுக்காரர்கள் இருந்திருக்க வேண்டும்.





 

கல்லறைத்தோட்டத்தை  துப்புரவாக பராமரிக்கின்றார்கள். சிப்பாய்கள், தளபதிகளின் கல்லறைகள் அவரவர் பதவிகளுக்கேற்ப அளவில் வேறுபட்டிருந்தன. பரலோக ராஜ்யத்திலும்  ராணுவ பதவியை விட மனமில்லை.  பஞ்ச பூதங்களால் பழுப்பேறிய முரட்டுக்கல்லறைகள். டச்சு மொழியில் நேர்த்தியாகவும் வலுவாகவும் செதுக்கியிருக்கின்றார்கள். ஓர் ஓரத்தில் கல் சதுரத்தில் துளையொன்று இருந்தது. சுரங்கப்பாதையாக இருக்கலாம். கல்லறையிலிருந்து பாதாளத்திற்கு தப்புவதற்கோ?




 

கல்லறைத் தோட்டத்திலிருந்து வெளியே வந்து வடகிழக்கு திசை மூலையைப்பார்த்தால் அங்கு  குட்டிச்சுவரொன்று சுற்றிலும் புதர் மண்டிய நிலையில் நிற்கின்றது. போர்த்துக்கீசியர் முதலில் கட்டிய கோட்டை. பின்னர் அவர்களிடமிருந்து டச்சுக்காரர்கள் கைக்கு வந்த பிறகு பழையதை இடித்து விட்டு ஜெரால்டு என்ற பெயரில் புதிய கோட்டையை கட்டியிருக்கின்றார்கள். பிரித்தானியர் கையில் வந்த பிறகு அவர்கள் அதை இடித்து விட்டு புதிய ஒன்றைக் கட்டியிருந்திருக்கின்றார்கள். எல்லாவற்றையும் இடித்து விட்டு தனக்கே உரித்தான குட்டிச்சுவராக்கி அழகு பார்த்துக் கொண்டிருக்கின்றது காலம்.

 

மதிய உணவிற்குப்பிறகு கிளம்புவதற்கு திட்டமிட்டோம். பழவேற்காட்டுக்காரர்கள் விருந்தோம்பலில் முன்னுக்கு நிற்பவர்கள். மதிய உணவிற்கு இஸ்மாயீலின் நண்பர் துராப் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார். கடல் உணவிற்கு துணைக்கறியாக சோற்றை உண்டோம். துராபின் வற்புறுத்தலால்  எனக்கு  இரையெடுத்த பாம்பின்  நிலையாகி விட்டது. இயல்பு நிலை திரும்ப இரண்டு மணி நேரம்.




 

 கடைசிச்சுற்றாக காயல் பாலம் தாண்டி கடற்கரையில் கொஞ்ச நேரம் அமர்ந்து விட்டு கிளம்பினோம். போகிற வழியில் அசர் தொழுவதற்காக  பழவேற்காட்டிற்கு அருகிலுள்ள ஜமீலாபாத்திற்கு சென்றோம்.அழகிய பள்ளிவாசலில் குர்ஆன் மக்தபு குழந்தைகள் தங்கள் கதைகளை பேசிக் கொண்டிருந்தார்கள். காயல் தாண்டி கண்காணிப்புக் கோபுரம் ஒன்ரு நின்றிருந்தது. விசாரித்தபோது அது  ஆந்திராவிலுள்ள இராக்கெட் ஏவுதளமான சிறீ ஹரிக்கோட்டாவிற்கு சொந்தமான நிலம். அங்குதான் முதலில் ஜமீலாபாத் வாசிகள் வாழ்ந்திருந்திருக்கின்றார்கள். ஊருக்குப் பெயர் தோணி ரேவு. முப்பது கிலோ மீற்றருக்கு அப்பாலுள்ள சிறீ ஹரிக்கோட்டாவிலிருந்து இராக்கெட்டை ஏவும்போதெல்லாம்  இரண்டு மூன்று நாட்களுக்கு ஊரை விட்டு போகச்சொல்லுமாம் அரசு. ஒரு வழியாக முப்பத்தாறு வருடங்களுக்கு முன்னர்  இழப்பீடு கொடுத்து இவர்களை அங்கிருந்து வெளியேற்றியிருக்கின்றனர்.

 





இப்போதைய ஜமீலாபாத்தில்தான்  பழவேற்காட்டு முஸ்லிம்கள்  முதலில் குடியிருந்துள்ளனர். அதற்கு சாட்சியாக அங்குள்ள மய்யித்துக்காட்டிற்குள் சிதிலமடைந்த கல் பள்ளியொன்று காணக் கிடைக்கின்றது. இதுதான் பழவேற்காட்டின் முதல் பள்ளிவாசல் ஆகும். வெள்ளிக்கிழமை  ஜுமுஆத் தொழுகையுடன் பெருநாள் தொழுகைக்கான ஈத்காஹ் திடலாகவும் பயன்[பட்டு வந்திருக்கின்றது.

 

பல வித அசௌகரியங்களினால் நாளடைவில் இந்த  ஊரையும் பள்ளிவாசலையும் கைவிட்ட முஸ்லிம்கள் தற்சமயம் இருக்கின்ற பழவேற்காட்டில் குடிபுகுந்து விட்டனர்.


ஜமீலாபாத்தில் உள்ள கைவிடப்பட்ட பள்ளிவாசலையும், பழவேற்காட்டில் தற்சமயம் வீடுகளில் தனியார் சேமிப்புக்களில் உள்ள பழம் பொருட்களையும் பெரிய சிறிய ஜுமுஆ பள்ளிவாசல்களில் உள்ள பழைய மீசான் கற்களையும் அவைகள் நசித்து கைவிட்டுப் போகும்முன் அறிவியல் முறைப்படி பாதுகாக்க பழவேற்காடு ஜமாஅத்தினர் முன் வர வேண்டும். ஏனென்றால் அவையனைத்தும் வரலாறு.  வரலாறுதான்  வாழ்க்கை.


திருத்தப்பட்டது: 22/10/2021   16/03/1443

 --------------------------------- ------------------- 

பழவேற்காடு முழு ஒளிப்படக்கோவையைக்காண கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்:-

பழவேற்காடு - ஒளிப்படக்கோவை

No comments:

Post a Comment