Tuesday 28 September 2021

கதாபுருஷன், மலையாளத்திரைப்படம்





நான் எப்போதும்  அணுக்கமாக உணரும் அடூரேட்டனின் (அடூர் கோபால கிருஷ்ணன்) திரைப்படமொன்றை நீண்ட இடைவெளிக்குப்பிறகு கண்டேன்.


 

“ எழுதத் தொடங்கினால் நேரம் போவதே தெரிவதில்லை. சிந்தித்து பார்த்தால் சுவைதான். நேரம் எங்கும் போவதில்லை. போவது நாம்தான்.”

 

“ எத்தனை பேர் வந்து போன வீடு இது? இதற்குள் நாம் எலிகளைப்போல இருக்கின்றோம்”.

 

செறிந்த பாயசத்தில் மிதக்கும் நெய்யில் வறுத்த முந்திரியும் திராட்சையும் போலவுள்ள மிகக் குறைவான அளவான அடர்த்தியான வசனங்கள்.

 

  கடந்த கால  பொன் கனவுகளின் ஏக்கங்களிலிருந்து  எல்லா வலிமையுடன் கூடிய  நிகழ் கால பருண்மைகளுக்குள் பூப்போலவும் இழுத்து பறித்தும் இறக்குபவை    அடூரேட்டனின் திரைப்படங்கள். அமர  திரைக்காவியங்களின் வழியே தன் வாழ்வினை ஒரு முற்றுப்புள்ளிக்கு அப்பாலும் நீளும் ஓவியம் போல  அகலித்துக் கொண்டே போகிறார் அடூரேட்டன்.

 

1995 ஆம் ஆண்டு ஜப்பானின் உதவியுடன் அடூர் கோபாலகிருஷ்ணன் எழுதிய இயக்கிய திரைப்படம் இது.

 

107 நிமிடங்கள் ஓடக்கூடிய இத்திரைப்படம் பன்னாட்டு, தேசிய, மாநில விருதுகளைப்பெற்றுள்ளது.

 

 நாட்டு விடுதலைக்கு பத்து வருடங்களுக்கு முன்னர் தொடங்குகின்றது கதை.

 

நிலவுடைமை பிரபுத்துவ சமூகத்தில் அச்சமூகமும் அதிலுள்ள மனிதர்களும்  எவ்வாறு பின்னமாகி மறு உருவாக்கம் பெறுகின்றனர் என்பதைப் பேசுகின்றது இப்படம்.

 

காந்தியின் படுகொலை, நக்ஸல் எழுச்சி, கேரளத்தில் இடதுசாரி அரசு முதன்முறையாக அதிகாரத்தில் அமர்தல், நிலச்சீர்திருத்த சட்டம் என ஐம்பது வருட நிகழ்வுகள் எல்லாவற்றிற்கும் சாட்சியாகின்றன.

 

இந்த மாற்றங்களின் வழியாக உடைத்து மீளுருவாக்கம் செய்யப்படும் நிலவுடைமையாள சமூகத்தின் குழந்தையான குஞ்சுண்ணி  தனது எல்லா மாற்றங்களையும் எழுத்துக்கலையினூடாக அடையாளங்கண்டு உரத்து நிற்கின்றான் விண் மரம் போல.

 

தனது நாவல் தடை செய்யப்பட்ட செய்தியை நாளிதழில் வாசித்தவுடன் எகத்தாளமாகச் சிரித்துக் கொண்டே  குஞ்சுண்ணி சொல்கின்றான் “ இனி சிறை பிடிப்பார்கள் இல்லையா? சத்தியத்தின் முகம் எவ்வளவு அலங்கோலமானது? இனி நாம்  ஒளித்து ஒதுக்கி  மறைத்து அஞ்சி விறைத்து யாரையும் தொடாமல் எதையும் முகராமல் எதாவது செய்வோம்.”






 

No comments:

Post a Comment