Thursday, 30 September 2021

மூன்று நாள் ஜமாஅத்

 


எனது வயதில் அவருக்கு ஒரு மகள் இருந்தாலும் அவரை ஏகே காக்கா என்றுதான் சிறு  வயதில் அழைப்பதுண்டு. காலம்  இருவரையும் பழுக்க வைத்த பிறகு காக்கா என்ற சொல்லின் போதாமையை உணர்ந்து அவரை மாமா என்று அழைக்கத் தொடங்கினேன். இந்த கதைக்காக அவரை காக்கா என்றுதான் அவரை அழைக்கப்போகின்றேன். காரணம்  இந்தக்கதையை அவர் எனக்கு காக்கா பருவத்தில்தான் சொன்னார்.



 

செல்வமும் செல்வாக்குள்ள குடும்பத்தில் பிறந்தவர் ஏகே காக்கா. இலங்கை கண்டி டிரினிட்டி கல்லூரியில்தான் படிப்பு. பிரேமதாச காலத்து ராணுவ தளபதி. அமைச்சர்கள் சிலரெல்லாம் இவரின் பள்ளி பருவத்து நண்பர்கள். தமிழ்,ஆங்கிலம்,சிங்களத்தில் நல்ல புலமை உள்ளவர் ஏகே காக்கா. ஏகே காக்கா ஊரில் யாருடனோ நடந்த சண்டையில் சிங்களத்தில் இருக்கும் எல்லா வசவுகளையும் பயன்படுத்தி இலக்கணத் தூய்மையாக திட்டினாராம். இவரிடம் சண்டையிட்டவனுக்கு சிங்களத்தில் ஒரு எழுத்தும் தெரியாது என்பது கூடுதல் செய்தி.

 

 

சிலோனில் அவர் சுழி புரட்டாமல் இருந்திருந்தால் அமைச்சராகவோ அயல் நாட்டு தூதராகவோ ஆகியிருக்க வாய்ப்புண்டு என ஊரிலுள்ள அவரது கூட்டாளிகள் கடைசி வரைக்கும் சொல்லிக் கொண்டிருந்தனர்.

 

 

தொடக்கத்தில் நாத்திகராக இருந்தாலும் பின்னாட்களில் ஜமாஅத்தே இஸ்லாமி சிந்தனைக்கு ஆட்பட்டார். உள்ளுர் நிலவரங்களின் காரணமாக ஸ்லஃபிக் கொள்கைக்குள்ளும் தன்னை அவர் வைத்துக் கொண்டார். சொல்லப்போனால் இரண்டுங்கலந்த கலவை. சிங்களத்தில் சொன்னால் கலவன். தர்கா ஆட்களிடம் கூட இரக்கத்துடன் நடக்கும் ஏகே  காக்காவிற்கு தப்லீக் என்றால் காட்ட இயலாது. திமிலில் தொடப்பட்ட மாடாகி குழம்பி விடுவார்.

 

தப்லீக் ஜமாஅத்திற்கு செல்ல தேவைப்படும் ஒரே தகுதி ரயில் பேருந்து கால அட்டவணைகளை தெரிந்திருக்க வேண்டும் என்பார். நபிகளின் சுன்னத்தான நடைமுறை என்று சொல்லி எப்போது பல்துலக்கும் குச்சியை தன் சட்டைப்பைக்குள்  வைத்திருக்கும் தப்லீக் சாத்திகளுக்காக அவர் சொல்லும் செய்தி: “  முஹம்மது நபி வர்றதுக்கு முன்னாடியே இறைவன் இயற்கையான சுன்னத்து என சொல்லி சில விஷய்ங்களை சொல்லியிருக்கின்றான். அதுல உறுப்பு சுத்தம், பல் தீட்டுறதோட  குளிக்கிறதும் ஒரு சுன்னத்துதான். அதுனால இவனுவோ போற இடம்லாம் வாளியயும்  கயித்தயும் தூக்கிட்டு போவானுவலா?”. எப்பப்பா ரொம்ப சரியா  தொழுகய முடிச்சிட்டு மத்த அஞ்சு கடமையும் செய்யப்போறியோ? அதுக்குள்ள ஒலகம் முடிஞ்சிருமே.”

 

இவர் இப்படி வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தப்லீக்கை கிண்டல் பண்ணும் செய்தி அவர்களுக்கும் தெரிந்துதானிருந்தது. இவரை எப்படியாவது மூன்று நாள் ஜமாஅத்திற்கு கூட்டிக் கொண்டு போய்விட்டால் சரியாகி விடும் என அவர்களுக்குள் நடந்த மஷீராவில் சிரித்தாவாறே பேசிக் கொண்டனராம்.

 

ஆடி மாதக்காற்றில் மண் பறந்துக் கொண்டிருந்த ஒருநாள் அஸர் வேளையில்  குருவித்துறை பள்ளி முக்கில் சிகரட்  குடித்துக் கொண்டிருந்திருக்கின்றார்  ஏகே காக்கா.

 

தொலைவில் சிலோன்  தப்லீக் ஜமாஅத்தை சேர்ந்தவர்களை  முஹல்லா கஷ்த்திற்காக  காதுமந்தம் சதக்கத்துல்லா வழி நடத்தி வந்தார். சிலோன் ஜமாஅத்துதான் ஏகேக்கு சரி என்ற முன் தீர்மானத்தில் காதுமந்தம் சதக்கத்துல்லா ஏகே காக்காவை வளைத்து பிடித்து விட்டார். சிகரட்டிற்கான விலையை எண்ணி காது மந்தம் சதக்கத்துல்லாவை மனத்திற்குள் சபித்தவாறே புகையும் சிகரட்டை காலில் போட்டு நசுக்கியவாறே  அவர்கள் சொன்ன சலாமிற்கு விடையளித்தார் ஏகே காக்கா.

 

“ ஏகே காக்கா சொகந்தானா?

“ சொகமா இல்லன்னா இப்படி நிக்க ஏலுமாப்பா?”

 

“ காக்காக்கு எப்பவும் கிண்டல்தான்”

 

“ சரீ. போலீஸ் கஸ்டடி எடுக்குற மாதிரி என்ன ரவுண்டு கட்டியிருக்கிறிங்களே என்ன நடப்பு?”

 

“ஒன்னுமில்ல. மறுமைக்காக நீங்க கொஞ்சம் நேரங்கொடுக்கணும்?”

 

“ இப்ப அதுக்கு நான் என்ன செய்யணும்?”

 

“ ஏரலுக்கு வரணும்”

 

“ அட! ஏரல்லயா மறுமை இருக்குது?”

 

“தமாஷ் பண்ணாதீங்க காக்கா. ஏரலுக்கு பக்கத்துல இக்குற கஸ்ஸாலி மரக்காயர் சாலயிக்கு  மூணு நாள் ஜமாஅத் போறோம்”

 

இந்த பிடியிலிருந்து தப்பிக்க என்னவெல்லாமோ சாக்கு போக்கு சொல்லிப்பார்த்தும் அவர்கள் அவரை விடுவதாயில்லை. ஒருவழியாக பட்டியலில் தனது பெயரை எழுதிக்கொள்ள சம்மதித்தார் ஏகே காக்கா.

 

அவரின் பெயரை எழுதிக் கொள்வதற்காக  பட்டியலை தன் ஜிப்பா பைக்குள் கைவிட்டு தேடினார் காதுமந்தம் சதக்கத்துல்லா. பட்டியலைக்காணோம். மிஸ்வாக்கை எடுக்கும்போது  தவறியிருக்கலாம் என காதுமந்தம் முணுமுணுக்க அருகிலிருந்த சிலோன்காரர் ஏகே காக்காவிடமே எழுதற்கான காகிதம் எதுவும் இருக்கிறதா? எனக்கேட்டார். ஏகே காக்காவும்  ஒரு வகையாக துழாவி முடித்து  சிகரட்  கூட்டிலிருந்து ஒரு பக்கம் வெண்மையாக உள்ள  ஜரிகைத்தாளை உருவிக் கொடுத்தார்.

 

 

அடுத்த நாள் காலையில் சுபஹ் பாங்கு சொல்லி முடிக்கவும் ஏகே காக்காவின் வீட்டு  வரவேற்பறைக்கதவை  தட்டும் ஒலி. சளி கட்டிய இளைப்பினால் இரவு தூக்கம் கெட்டுப்போயிருந்த ஏகே காக்கா சற்றே எரிச்சலுடன் கதவைத்திறந்தார்.

 

குப்பென்ற ஜவ்வாது வாசமடிக்க காதுமந்தம் சதக்கத்துல்லாஹ் அசமந்த சிரிப்பொன்றை சிரித்தவாறே இன்னும் இரண்டு சாத்திகளுடன் நின்றுக் கொண்டிருந்தார். சிகரெட் தாளோடு போய் விடும் என நினைத்திருந்தது தப்பாகி விட்டதே என தனக்குள்ளே  நொந்துக் கொண்டவராக சொற்களிழந்து  ஒரு துணிப்பைக்குள் ஒரு செட் உடுப்புடன் துவாலை ஒன்றையும் திணித்துக் கொண்டு அவர்களுடன் கிளம்பினார் ஏகே காக்கா.

 

கடைப்பள்ளியில் சுபஹ் தொழுது விட்டு  ஏரலுக்கு போகும் நகரப்பேருந்தில் காதுமந்தம் தலைமையில்  மூன்று நாள் ஜமாஅத் கிளம்பியது.

 

இஞ்சி தேயிலையுடன் சிகரட்டுமாக காலைப்பொழுதை தொடங்கும் ஏகே காக்காவிற்கு  கடைப்பள்ளியில் கிடைத்தது பாலில்லாத கடுப்பம் கூடிய சீனிக்குறைவான வெறுந்தேயிலைதான். இந்தக்கடுப்பில் ஏகே காக்காவிற்கு  இம்மையின்  நினைவுகள் மட்டுமே சுற்றி சுற்றி வந்தன. இந்தக்கூட்டத்தில்  தனது சிறு பருவத்து நண்பரொருவரையும் பார்த்தது மட்டும்தான் ஏகே காக்காவிற்கு சற்றே ஆறுதல்.

 

ஒருவழியாக காலை ஏழுமணிக்கு கஸ்ஸாலி மரைக்காயர் சாலைக்கு சமையல் தளவாடங்களுடன் தஃலீம் கிதாபுமாக வந்து சேர்ந்தது  தப்லீக் ஜமாஅத்.

 

அணில் சேமியா பசியாறுடன் பால் தேயிலையும் கிடைத்த பிறகுதான் கொலை வெறிக்கு சற்று புள்ளிகள் குறைவான வெறுப்பு  நீர்த்து நிதானத்திற்கு வந்தார் ஏகே காக்கா. பசியாறிய பிறகு  வட்ட வட்டமாக அமர்வுகள் தொடங்கின. எல்லாம் முடிய மதியம் பதினொன்றரை மணியாகி விட்டது. ஒரு மணிக்குதான் லுஹர் தொழுகை. அதுவரை ஓய்வு என அறிவித்து விட்டனர். வந்தவர்களில்  பலபேர் கால் நீட்டித்தூக்கத்தை போட்டனர். கொஞ்சம் பேர்  யாரை இழுக்கலாம் யாரைப் பார்க்கலாம் என்ற ரீதியில் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர்.

 

ஏகே காக்காவிற்கு தான் இன்னும் குளிக்கவில்லை என்ற  நடப்பு  நினைவிற்கு வர சட்டையின் உள்பையில் ஒளித்து வைத்திருந்த சிகரட்,  தீப்பெட்டியுடன்  டவலை எடுத்துக் கொண்டு சுனை பக்கம்   ஒதுங்கினார்.

 

ராஹத்தாக இழுத்த விட்ட புகைக்குள் மொத்த வானமும் இருந்தது. அதற்குள் கொக்கு, நாரைகள் என எல்லாமே பறந்தன. சாயந்திரம் வரைக்கும் தாங்க வேண்டும் என்பதற்காக  அடுத்ததாக  இன்னொரு சிகரட்டையும்  ஏகே காக்கா பற்ற வைக்கவும் அவரின் இளம் பருவத்து கூட்டாளி வந்து சேரவும் சரியாக இருந்தது.

 

“ மச்சான் முங்கி குளிச்சு எவ்ளோ நாளாச்சு” என்றவாறே  குற்றாலத்தில் வாங்கிய துகில் வெண்ணிற ஈரிழை முண்டு உடுத்தி சுனைக்குள் கூட்டாளி பாய்ந்தார். சிகரட்டை  நுனி வரைக்கும் தீர்த்தபின் ஏகே காக்காவும் சுனைக்குள் இறங்கினார்.

 

தென்மேற்கு திசையில் சாய்ந்திருந்த ஆல மரத்திலிருந்து அவிழ்ந்த முடியாகி தொங்கிக் கொண்டிருந்த  விழுதின் முனை  நீர்ப்பரப்பை தொட்டும் தொடாமலும்  முங்கியிருக்க மீன் குஞ்சுகள் மொத்த உடலையும் நடுக்கியபடி விழுதின் வெண் முனையை  கடிப்பதும்  விலகுவதுமாக இருந்தன

 

 

ஆனந்தக்குளியல். கண்டி பீலிகளில் குளித்த பழைய நினைவுகள்,  தயானி தோழி உடனான கள்ள கணங்கள் எல்லாம் பொங்க முங்கி முங்கிக் குளித்தனர். மண்டிக்கிடந்த ஆகாயத்தாமரை அருகில் நீர் வாத்து இணையானது நீரைச் சிதறியவாறே  களியாடிக் கொண்டிருந்தன. நஞ்சு போல் ஏறிக்கிடக்கும் உச்சி வெய்யிலுக்கு அசர் வரைக்கும் கிடந்தாலும் காணாது போலிருக்கின்றது என இருவருக்கும் தோன்றியது.

 

தேங்காய் தும்பு வைத்து தேய்த்த பிறகு ஒரு முங்கு, அரப்புத்தூள் தேய்த்த பிறகு  இன்னொரு முங்கு. “ மச்சான் ஒரேயடியா குளிச்சா சீக்கிரம் வெரச்சுரும்” என்ற ஏகே காக்காவின் சொல் புண்ணியத்தில் குளிப்பதும் வெய்யிலில் காய்வதுமாக  இன்னும் பல சுற்று நீராடல்கள் நடந்தேறின.

 

“மச்சான் இந்த வெய்யிலுக்கு  நொங்கு தின்டா எப்டியீக்கும்?”

 

“ ஈர மண்ணாயிக்கும். சும்மா ஆசய கெளப்பாதடா. காலய்ல தேயில கெடய்க்காம நாய் மாதி  நான் ஆவப்பாத்தது ஒனக்கி எங்கே தெரியப்போவுது “ என்றார் ஏகே காக்கா  நீருக்குள் நின்ற  கூட்டாளியைப்பார்த்து.

 

“அது இல்லாட்டி நீ செத்துருவியே. மச்சான்!  சிலோன்லலாம் என்ன சாப்பாடுப்பா. நாம சாப்பிடாத சாப்பாடா? அந்த உரந்தான் இந்த வயசுலயும் காப்பாத்துது. நீந்தான் அருமாந்த உடம்ப சிகரட் குடிச்சி கெடுத்துக்கிட்டா” என்றார் கூட்டாளி.

 

ஏகே காக்காவிற்குள் பழுப்பு நிறந்தோய்ந்த போயா நாளுக்கு  முந்திய தின நினைவுகள் கிளர்ந்தெழுந்தன. “மச்சாங் லஸ்ஸனாய்” என்ற மென்சொற்கள் இன்றும் அதே இளமையுடன் இருப்பதாக உணர்ந்தார்.   முகம் என்னவோ போல் ஆவதை சுனை நீரில் கவனித்திருப்பார் போலும்  “ போ ஷைத்தான் “ என சன்ன  திடத்துடன்   கூறியவாறே தன் நெஞ்சை நீவி விட்டுக் கொண்டார்.

 

உள் பள்ளியிலிருந்து  லுஹர்  தொழுகைக்கான இகாமத் கூறும் ஓசை கேட்டது.. “ டே ஏகே இகாமத்தா சொல்லுது? பாங்கு எப்படா சொன்னோ?” என கலவரமானார் கூட்டாளி.

 

“ நீ தண்ணிக்குள்ள கெடந்து ஊறுனா எப்படி விளங்கும்?” என்ற ஏகே காக்காவின் மறுமொழியையும் பொருட்படுத்தாமல் அடித்து புரண்டு பள்ளிக்குள் விரைந்தார் கூட்டாளி. ஏகே காக்காவை விட  கூட்டாளி தொழுகை விஷயத்தில் பேணுதலான ஆள்தான்

 

ஏகே தலை துவட்டி உடுப்பு மாற்றி சாவதானமாக நடந்து செல்லும்போது மூன்றாம் ரக்அத் தொடங்கி விட்டிருந்தது. நான்காம் வரிசையின் ஓரத்தில் நின்றிருந்த  கூட்டாளி பக்கத்தில் நின்று ஏகே காக்கா  தக்பீர் கட்டவும் இமாம் ருகூவிர்கு செல்லவும் சரியாக இருந்தது.

 

ருகூவிற்கு போகும்போதுதான் ஏகே காக்கா அதை கவனித்திருக்கின்றார். விழுந்தடித்து தொழுகையில் வந்து இணைந்த கூட்டாளி இடுப்பில் கட்டிய  நனைந்த ஈரிழை முண்டை மாற்ற மறந்த நிலையில் ருகூவில் இருந்தார்.  நீர் சொட்டி சொட்டி  தரையில் பல கோடுகளாய் இழைந்து கொண்டிருந்தன.

 

கூட்டாளிக்கு மட்டுமே விளங்கும் வகையில் அவர் காதருகே “ மச்சான் டவலோட நிக்கிறியே. தொழுவ கூடாதே” என ஏகே காக்கா கிசுகிசுத்தவுடன் கண்ணைப்பொத்தியவாறே தொழுகையில் உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் இருந்த கூட்டாளி “ நீ சும்ம இரி மச்சான். தொழுவயிலுமா ஒன் கேலியும் கிண்டலும்” என்றவர் ஏகேவுக்கு பயந்து  கண்களை இன்னும் இறுகப் பொத்திக் கோண்டார். “ தொலை” என்றவாறே  ஏகே காக்காவும் மீதியை தொழுது முடித்தாராம்.

 

இந்தக்கதையை  மாத இதழில் வாசித்திருந்த எனது மச்சான்காரர்  அந்த இதழையும்  தூக்கிக் கொண்டு எனது வீட்டிற்கே நேராக வந்து விட்டார்.

 

என் மச்சான் தப்லீக் ஜமாஅத்தில் தீவிர ஈடுபாடுள்ளவர்.  மாத கணக்கான ஜமாஅத்திற்காக வட தென் துருவங்களைத்தவிர  எல்லா நாடுகளுக்கும்  போய் வந்து விட்டார். கூட்டு தொழுகைக்கு விடாத காரணத்தினால் இதுவரை சம்பளத்திற்கு  இருந்த பத்து கடைகளிலிருந்தும்  நின்று  விட்டார். இனி சேர்ந்து விலகுவதற்கு புதிய  கடைகள் இல்லாததினால் அக்மார்க் இலவம் பஞ்சில்  தலையணை மெத்தை  தைத்து விற்று வாழ்க்கையை  ஓட்டுகின்றார்.

 

“ மச்சான்! ஒங்களுக்கு தப்லீக் ஜமாத்துன்டா புடிக்காது. அது புரியுது. அத கிண்டல் பண்ணி கதையும் எழுதி அதுவும் அச்சாயிட்டு. அதுவும் பெரச்னயில்ல”

 

“ சரி மச்சான் அப்போ என்னதான் பெரச்ன?”

 

“ கதய்லாம் சர்த்தான். கூட்டாளிக்கு ஈர முண்டு உடுத்துனது தெரியாமபோயிட்டுண்டே வச்சிக்கிருவோம்.  தொழும்போது பேசுனா தன் தொழுகயும்  பாழாப்போயிரும்ன்டு ஏகே காக்காவுக்கு எப்டி தெரியாம் போச்சு? அது மட்டுமில்ல கூட்டாளி செய்றத ஒன்னு விடாம வேற கண்காணிச்சிருக்கிறாரு. இந்த தொழுக எப்டி கூடும்? இதுலேந்து தெரியலயா நீங்கோ   எடுத்துக்கட்டி துவேசக்கதயத்தான் எழுவிக்கிறியோ?” என வெற்றிப்புன்னகை புரிந்தார் என் மச்சான்.

 

மச்சானின் கூர்மையை நான் எதிர்பார்க்கவில்லை. சுதாரித்துக் கொண்டு சொன்னேன்  “ஏகே காக்கா சொன்னது உண்மையா பொய்யாங்குறதுக்கு இன்னொரு கதய  இல்லயில்ல சம்பவத்த  சொல்றேன் கேளுங்க”

 

“ என்னது இன்னொரு துவேசக்குழியா?” என கண்களை இடுக்கியவாறே அவநம்பிக்கையுடன்  கேட்டார் மச்சான்.

 

இருபத்தேழு வருசத்துக்கு முன்னால சுத்தமல்லில இஜ்திமா நடந்திச்சு தெரியுமா? தாமிரபரணி  ஆத்துல குளிச்ச ஒங்க சாத்திங்க அங்க டைவ் அடிச்சிருக்காங்க”

 

“ டைவ் அடிச்சா ஹராமாப்பா?” என்றார் எகத்தாளத்துடன் மச்சான்.

 

“ டைவ் அடிச்சத நான் தப்புன்டு  சொல்லல்லே மச்சான். அப்டி டைவ் அடிக்கும்போது  ஜிப்பாவையும்  சாரத்தையும் கழத்த மாட்டேன்டு அடம் பிடிச்சு குதிச்சதுல  சாரங்கழன்டு  கால்ல மாட்டி  வெறு மேலோட தண்ணில அவர்  பெரள இதப்பாத்த ஒரு பையனுக்கு விடாக்காய்ச்சல் வந்து இங்கய்லாம் ஓதிப்பாக்க முடியாது பையன் பெருசா பயந்திருக்கான்.கேரளாவுக்கு கொண்டு போங்கோ என உள்ளூர் அமீர்  சொல்ல  இதுக்கிடையில  தண்ணில பெரண்ட மனுசனக் காப்பாத்த இன்னும் மூணு பேர் ஜிப்பா சாரத்தோடு குதிச்சதாவும் அதுல  ஒராளு தலய்ல உள்ள தொப்பிய  ஒத்தக்கையால புடிச்சுக்கிட்டே மறுகையால நீஞ்சுதனாவும் கேள்வி” என நான் முடிக்கும் முன்னரே மச்சான் என் கைகளை இறுகப்பிடித்தவாறே “ மச்சான்! போதுன்டா  இதுக்கு அந்த ஏகே கதையே பரவாயில்ல போலிருக்கே” என்றார்.

 

------------------  -----------------------------

 

சொல் விளக்கம்

 

ஜமாஅத் – கூட்டமைப்பு,

ஜமாஅத்தே இஸ்லாமி – இஸ்லாமிய வாழ்வியல் அரசியல் பேசும் அமைப்பு

ஸ்லஃபி – தூய்மை,சீர்திருத்தவாதம்

தப்லீக் – தொழுகைக்கு  மக்களை பயிற்றுவிக்கும் அமைப்பு

சுன்னத் – நபிகளாரின் நடைமுறை

சாத்தி – தப்லீக் உறுப்பினர்

மூன்று நாள் ஜமாஅத்  - தப்லீக் நிகழ்ச்சிகளில் ஒன்ரு

மஷீரா-- கலந்தாலோசனை

முஹல்லா கஷ்த் – வட்டார சுற்று( தப்லீக் நிகழ்வுகளில் ஒன்று)

சுபஹ் - வைகறை

பாங்கு – தொழுகைக்கான அழைப்போசை

தஃலீம் கிதாபு—தப்லீக் பாட நூல்

இகாமத் – தொழுகை தொடங்கப்பெறுவதற்கான அழைப்பு

ருகூ – தொழுகையில் குனிதல் நிலை

இஜ்திமா- மாநாடு

ஹராம் -- தடுக்கப்பட்டது

அமீர் – தப்லீக் தலைவர்

சாரம்- லுங்கி

 

 

 

 

No comments:

Post a Comment