ஆசான் என்றால் இவரல்லவா ஆசான்? என்றவாறே புத்தகத்திற்கு மூன்று முத்தங்களை எண்ணிக் கொடுத்தான்
கமால். அந்த வரிகளைக் கடந்து அவனால் மேற்கொண்டு வாசிக்கவும் இயலவில்லை. புனித பிரதிகளைப்போன்றே
தத்துவ நூல்களும் உரிய வாசிப்பு ஒழுங்கைக்
கோருபவை அல்லவா? என்றவாறே மேற்கொண்டு வாசிக்கும் உந்துதலை பிடித்து நிறுத்தினான்.
அவர் எழுதிய வரிகள் எவ்வளவு சத்தியமானவை. இருட்டில் நெருப்பு
பந்தம் கொண்டு எழுதுவதைப்போலல்லவா எழுதியிருக்கிறார். ஆசானின் அந்த சொற்களை அவரே வழிகாட்டியபடி
தன் மூளைப்பேழைக்குள் போட்டு குலுக்கியெடுத்து
தன் சொந்த வரிகளாக்கி சிந்தித்தான்.
எவ்வளவு சிறந்த மனிதர்களாக இருந்தாலும் ஆக உயரமான சிகரத்தை
அடைந்தாலும் எல்லா உச்சங்களும் அவற்றைத்தாண்டிய உச்சங்களை சந்திக்காமல் போவதில்லை.
அந்த உச்சங்களின் முடிவில் இறைவன் மனிதனின் முட்டாள்தனம் நிறைந்த பொறாமை மூட்டைகளைப்பார்த்து
சிரிப்பான்தானே?. ஒன்றைக் கொண்டு ஒன்று சமநிலைப்படும் இந்த வாய்ப்பாடை புரிந்து கொண்டால்
எல்லாமே சரியாகி விடும்” என தனது சொற்களால் சொல்லிக் கொண்டான் கமால்.
என்னதான் தான் சிந்தித்தாலும் ஆசான் போட்டிருக்கும் கருங்கல்
அஸ்திவாரத்தை தாண்ட இயலாது என்ற உண்மை தெளிவானதால் கமாலின் உடலும் மனதும் சோர்ந்தது.
தலையிலிருந்து எரி மெழுகு உருகியது. அவரை விட்டால் தனக்கு வழிகாட்டுபவர் யாருமில்லை
என்ற நினைவு வர கழிவிரக்கம் ஊற்றாகி பெருகியது.
தனது பசிக்கு இதை விட்டால் வேறு வழியில்லை என்ற பச்சையான
யதார்த்தம் உள்ளங்காலிலிருந்து சுடவே வெற்றிச்செல்வனின் ‘தரிசனத்திற்கு இப்பால்‘ என்ற
திண்டு அளவு நூலின் இருபத்தியிரண்டாம் பக்கத்தை மீண்டும் புரட்டினான்.
“தன்னை முன்னுக்கு நிறுத்தியே எல்லாவற்றையும் பார்க்கும் சுயம் சார்ந்த போக்கும், தான் இடம்பெறாத
சங்கதிகளை அலட்சியப்படுத்தி தனக்குள் ஒடுங்கும் தன்மையும், தன்னுடைய அறிவுக்கூர்மையின்
எல்லைக்கு வெளியே உள்ளவற்றின் மீதான கடுகடுப்பும்……”
எப்படி இப்படியெல்லாம் சிந்திக்க முடிகிறது.?
ஆசான் என்ன ஜின்னா? மனிதனா?
கடற்கரை மணற்பரப்பில் விழுந்த வைரத்துணுக்கைக் கூட கண்டுபிடித்து
விடலாம். ஆனால் மனித மனத்திற்கோ கரையும் இல்லை கங்குமில்லை.
இருளுக்குள் இருளாய் ஒளித்திருக்கும் அதன் அழுக்குகளை அதை
சுமக்கும் மனிதனால் கூட கண்டுபிடிக்க முடியாதே!.
-------------------------------------
புத்தகத்தை மூடும்போது நள்ளிரவை கடந்திருந்தது. மனைவி நிஷா வாய் பிளந்து
தூங்கிக் கொண்டிருந்தாள. அவளது தலையணையருகில் கிடந்த செல்பேசியில் “ ஒரு நகரில் ஏழு வயதுடைய ஏழைப்பாலகன்” என்ற பாடலை
நாகூர் ஹனீபா பாடிக் கொண்டிருந்தார். அதை எடுத்து நிறுத்தி மேசைப்புறம் வைத்தான். ஹனீஃபாவின்
பாடல்களுக்கப்புறம் சாலி காக்காவின் பாடல்களும் அவளுக்கு ரொம்ப பிடிக்கும்.
தூங்கும் யாரைக்கண்டாலும் பாவமாகத்தான் இருக்கிறது. உனது
வாயில் கொசுக்களுக்கும் கொஞ்சம் இடந்தான் கொடேன் என அவளை எழுப்பி சொல்லத்தான் ஆசை.
பாவம் வயதான உம்மா, இளைப்புக்கார தங்கச்சி, வயதுக்கு வந்த இரண்டு மகன்கள், காலை பத்து
மணிக்கு விடியும் சிறுநீரக நோயாளியான இன்னொரு தங்கச்சி, இனி அரை நூற்றாண்டை தாண்டிய
கமால் என அனைவரின் மையப்புள்ளி இவள்.
உப்பில்லாமல், உறப்பில்லாமல்,மிளகு சேர்த்து,இனிப்பு குறைத்து
என மூன்று வேளைகளும் மூன்று வகையான சமையல்.
இனி இடைவேளைகளில் மருந்து அவித்துக் கொடுப்பது, வெந்நீர் போடுவது என ஒரு மருத்துவமனையையும்
தாண்டிய வேலைகளின் அம்பாரம் ‘பாவம் இனி அவள்
உறங்கட்டும்’ என அவன் தனக்குள் சொல்லிக் கொண்டான்.
நைட் லாம்பும் இரவிற்கு தொந்திரவை அளிக்கும் என்பதால் படுக்கும்போது எப்போதுமே முழு இருளாக்கி விடுவதுதான் கமாலின் வழக்கம்.
எல்லா ஓசைகளையும் தனக்குள் ஒடுக்கிக் கொள்ளும் இரவு கிடைப்பது என்பது ஒரு குவளை நிறைய
பழச்சாற்றை சிந்தாமல் சிதறமால் முழுமையாக அப்படியே அருந்துவது போன்றது. இரவிற்கு அப்புறம்
பழைமையானது என்று பார்த்தால் இருபத்தேழு வருடங்களாக கமாலுடன் இரவை கழிக்கும் மனைவி
மட்டும்தான்.
மணி பன்னிரண்டரை. மூத்திரம் பெய்து விட்டு வந்து படுக்கை
விரிப்பை உதறி விட்டு கொஞ்ச நேரம் படுக்கையில்
உட்கார்ந்திருந்தான். நீரின் மேல் மிதக்கும்
மெழுகுத்திரையாகி மிதக்கத் தொடங்கின
அந்த சொற்கள். அந்த முதலிரண்டு வரிகளும் எளிமையானதுதான். ஆனால் கடைசி வரியில்தான் விஷயமே
இருக்கிறது. பார்க்கும்போது அது இலேசாகத்தான் தெரியும். ஆனால் அது பாரமானது. உயர்ந்த
மனிதர்களின் சல்லித்தனத்தை இழுத்துப்போடும் பெரும் மேதமை.
-------------------------
நான்கைந்து மாதங்கள் இருக்கும். தொலைக்காட்சி பேட்டியொன்றில்
தன்னைத்தேடி வந்த விருதுகளை நிராகரித்தது பற்றி ஆசான் “ முகில் குவைக்கு யாராவது நீர் பாய்ச்சுவார்களா?”
என நகைத்தார். சிரிப்பபு குன்றாமலேயே தொலைக்காட்சிக்காரரை
உக்கிரமாகவும் பார்த்து வைத்தார் அவர். விருதுகளுக்காக செய்யப்படும் எத்தனங்களை என் நகக்கண் கூட செய்யாது” என ரௌத்திரங்கொண்டார்.
ஆசானது இந்த சொற்கள் எதிராளிகளால் பெரிதாக எள்ளப்பட்டாலும் ஒரு வாரத்திற்கு அவர்தான் பேசு பொருளாகியிருந்தார.
படைப்பின் உச்சியில் நிற்பவனுக்கு இந்தக்கர்வம் இல்லையென்றால் அவன் தூசியையும் விட எடையற்றவன்தான். அவரின் கோபம்
சரிதான் என கமாலுக்கும் தோன்றியது.
மீண்டும் அந்த புத்தகத்தை படிக்க வேண்டும் போலிருந்தது.
விளக்கை போட்டால் பாவம் இவளின் தூக்கம் வேறு கெடும். வேண்டாம் என்றவாறே ஆசானின் இணையதளத்தை
பார்ப்பதற்காக தன் செல்பேசியை திறந்தான் கமால். முகப்பு படத்தில் வட்டப்பாறையில் கால் பாவாமல் நின்றபடி சிரித்துக்
கொண்டிருந்தார் அவர்.
“அண்ணலின் உயிர் மை’
என்ற தலைப்பில் ஒரு சிறுகதை இருந்தது.
மேலோட்டமாக பார்த்து வரும்போது ஒரு வரியில்
அவன் கண் குத்தி நின்றது.
தேசப்பிதாவின்
காலடிகளில் அவரைக் கொல்ல விதிக்கப்பட்டவன் கிடந்து மன்றாடினான்.“
அண்ணலே! நீங்களே உங்கள் கைகளால் என்னை முடித்து விடுங்கள். அப்போதுதான் உங்களின்
உயிரைப்போக்கும் அந்த கொடும் கணத்தை நான் பார்க்காமலும் சந்திக்காமலும் இருக்க
முடியும்”
“இளைஞனே! என்னுடைய
இறப்பிலேதான் என்னுடைய வாழ்க்கை உள்ளது. நான் என் சொந்த கூட்டை விட்டு எவ்வளவு
நாள்தான் பிரிந்திருக்க முடியும்?”
கடைசியில் தன்னுடைய
கொலையாளியின் கருவிக்கு தேசப்பிதா தன்னை ஒப்புக் கொடுத்தார். தன் ஆன்ம விருப்பத்தை
அந்த இளைஞன் வழியாக நிறைவேற்றிக் கொண்டார். கொன்றவனை அவனுடைய
குற்றவுணர்ச்சியிலிருந்து விடுவித்தார். கொன்றவனும் கொல்லப்படுபவனும் இணையும்
அவசங்களுக்குள் சென்று முயங்கும் பெருந்தருணமாக அது இருந்தது. ஊழானது
தன் தர்க்கத்தை அடைந்து கொள்ள தன் உடலையே நடைவழியாக்கினார் தேசப்பிதா.
ஒரு மாபெரும் வரலாற்றுப் பிழையை ஒரே வரியில் உடன்பாடான திசையில் புரட்டிபோடும் இரசவாதம்.
ஒரு தேசத்தின் அச்சாணியை முறித்துப்போட்ட கொடுஞ்செயலானது
ஒரு எளிய தர்க்கத்தின் வழியாக வேறொன்றாகி விட்டது. பொங்கி பொங்கி கிளம்பியவைகள்
முனை மழுங்கி மடியிலேயே வந்து விழுந்தன.
மூளையின் களைப்பு உடலுக்கும் இறங்கி தூக்கம்
தன் வரவாக வந்தடைந்தது.
---------------------------
அது தெற்குகரை.
ஆசிரமத்திலிருந்து பிரிந்து செல்லும் கல்பாவிய சாலையொன்று
தென்பட்டது. ஆகவே அது களக்காடெல்லாம் இல்லை. ஐயமே இல்லை.தெற்குகரையேதான். ஆசிரம சாலையின்
வலது ஓரத்தில் மண் வழித்தடமொன்று சரிந்து இறங்குகிறது.
பாதையின் நடுவில் எழுத்தாளர் வெற்றிச்செல்வனின் வீடு. வண்ணக்கலவை
பூசினால் வீடு கொதிக்கும் என சுண்ணாம்பு பூச்சு மட்டும் அடிக்கப்பட்ட வீடு. மொட்டை
மெத்தையில் கமால் இருந்தான்.. கிழக்கே அடவி நயினார் அணையின் மதகுகள் புனல்வாய் உலைகளாகி நின்றன. கரிய மலைச்சிகரங்களின்
வழியே மேகமானது துருத்தி வாய் நீராகி பீறிட்டுக்
கொண்டிருந்தது. அடிக்கும் வெய்யிலுக்குள் ஈரலிப்பு கொண்டு மேகங்களின் சாம்பல் நிறம்
கரைந்து விரவி மனத்தின் வெப்பு தணிந்தது.
மாடியின் கைப்பிடிச்சுவற்றில் இருந்த பூந்தொட்டிகளிலிருந்து தரை நோக்கி
வழிந்து கொண்டிருந்தன பசுந்துதிக்கைகள். அவற்றினிடையே இருந்த தைல வண்ண ஓவிய
சட்டங்கள் மூன்று கிடத்தப்பட்டிருந்தன. கண்ணாடியில்
பட்டு வெய்யில் மந்தமாக மின்னியது. ஒன்றில்
பாகவத புராணத்தின் போர்க்காட்சி. கேடயத்திற்கு பின்னே முட்டுக்குத்தி அமர்ந்திருந்தான்
படை வீரன்.
இன்னொன்றில் ஒன்றையொன்று முயங்கியும் விழுங்கியும் வளையமாகி கிடக்கும் பல்வண்ண பாம்புகள்.
மூன்றாவது ஓவியத்தில், உலையில் வைக்கப்பட்டிருந்த பாத்திரத்திலிருந்த
வெடித்துச் சிதறும் கருந்திரவமானது சூழ நிற்கும் மனிதர்களின் முகங்களில் போய் படிகின்றது.
மூன்று ஓவியங்களையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தவன்
மூன்றாவது ஓவியத்தில் கைகளால் வருடிக் கொடுத்தான். உள்ளங்கையில் தீச்சுட்டது. கையை
உதறியவாறே தலையை உயர்த்தவும் எழுத்தாளர் வெற்றி செல்வன்படியேறி வரவுமாக சரியாக
இருந்தது.
வழமைக்கு மாறாக
கன்னங்கொழுத்து முடி கலைந்து வெள்ளி நிற கண்ணாடியின் ஃபிரேம் இடப்பக்கமாக சாய்ந்திருந்தது.
சிரிப்பற்ற முகத்தில் கூரேறிய கண்கள்.அருகிலிருப்பவனைக் கண்டு கொள்ளாமல் மலையின் மீதும்
வெற்று ஆகாயத்தின் மீதும் அவரின் விழிகள் துளாவின.
தானாக போய் அறிமுகப்படுத்திக் கொண்டான் கமால். எல்லா உணர்ச்சிகளையும்
இறுக்கிப் பூட்டிய வெற்றுத்தட்டான முகம்.
” நான் நேத்து ஒங்க ஊர் பக்கம் வந்திருந்தேன் என்றார்.
எங்கே? எப்போது? என அவன் திரும்ப கேட்கவும் நேற்று மத்தியான
வாக்கிலே கல்லிடைக்குறிச்சி வந்திருந்தேன் என்றார்.
கல்லிடைக்குறிச்சிலேந்து திர்னவேலி ஒன்னேகால் மணி நேரம் திர்னவேலியிலேந்து எங்க ஊரு ஒன்னர மணி நேரமாகுமே” என்றவுடன் அவர் அவன் முகம் பார்க்காமல் மலையைப்பார்த்தவாறே சொன்னார்” கேரளாவை அதிகமாக புகழ்ந்து எழுதாதீங்க தம்பி”.அவர் இதை சொல்லி முடித்ததுதான் சுணக்கம் இளைஞர்களும் மாணவர்களும் அவரின் கழுத்தையும் தலையையும் தங்களது கைகளால் சுற்றி வளைத்துக் கொண்டனர். அதில் ஓர் இளைஞன் தனது சொந்த பிரச்னைகளை அவரின் இடதுகாதில் கூறுகிறான்.
---------------------------------
கண் பீளையைக்கூட துடைக்காமல் செல்ஃபில் இருந்த இமாம் இப்னு கதீரின் தஃப்சீருல் அஹ்லாம் நூலை உருவி எடுத்த வேகத்தில் பேனாக்கூடு தரையில் விழுந்து அழி ரப்பர்,குண்டூசி,
ரப்பர் பேண்ட் முதலானவை தரையில் திசைக்கொன்றாய் சிதறின. சத்தம் கேட்டு பதறியெழுந்த
நிஷா ஒன்றும் புரியாமல் “பே பே “ என முழித்துக் கொண்டிருந்தாள். காலை வந்து கொண்டிருந்தது.
நூலைப் புரட்டினான் கமால். அமேசானில் ஆயிரம் ரூபாய் விலை
காட்டியதால் ஒரு வாரத்திற்கு முன்னர்தான் சுல்தான் ஆலிமின் பரிந்துரையில் சென்னைக்கு சொல்லி சலுகை விலையில் வாங்கியது. ஆங்கில
மொழியாக்கத்தின் பேப்பர் பேக் பதிப்பு.
கொஞ்ச காலமாகவே
நள்ளிரவு பின்னிரவு அதிகாலை என வந்து கொண்டிருக்கும் அவனது கனவுகளுக்கு விளக்கம் சொல்லி ஓய்ந்து போய் சுல்தான்
ஆலிம் இந்த நூலை வாங்கிக் கொள்ளும்படி கமாலுக்கு
அறிவுறுத்தியிருந்தார்.
அதன் முகப்பு அட்டையில் வனத்தில் மான் மரை பறவைகளுடன் நிற்கும்
பேரீத்த மரம். அதன் தண்டு, நிலத்தின் கீழிருக்கும் இருளையும் தாண்டி நீலக்கடலுக்குள்ளும்
நீள்கிறது. கூட்டங்கூட்டமாக செல்லும் சிறு மீன்கள். அக்கூட்டத்தின் மேல் பொன் மஞ்சள் நிறமுடைய மீனொன்றின் வயிற்றில் போய்
முடிகிறது அந்த பேரீத்த மரம். ஷேர்வானி அணிந்த மனிதரொருவர் அதன் ஒருபுறம் நிற்க முழு
நீள அங்கியும் கழுத்தில் மாலையும் அணிந்த இன்னொரு மனிதர் மண்வெட்டியால் நிலத்தைக் கிளருகிறார்.
நூலை புரட்டிய கமால் . WRITER என்ற தலைப்பின் கீழ் அச்சிடப்பட்டிருந்ததை வாசித்தான்.
DISHONEST, CUNNING, DECETFUL AND A FRADULENT
PERSON என்றிருந்தது.
ஆசான் சிறுகதையின் வானொலி வடிவம்:
(17/06/2023, சனிக்கிழமை திருவனந்தபுரம் அகில இந்திய வானொலி நிலையத்தின் தமிழ்ச்சொல் மாலை நிகழ்ச்சியில் ஒலிபரப்பாகியது)
No comments:
Post a Comment