முதல் சொல்
முதல்
சொல்
திருச்சிராப்பள்ளி வானொலியிலிருந்து அஞ்சலாகும் மதியம் ஒன்றே முக்கால்
மணிக்கான மாநிலச்செய்தி தொடங்கவும் வழமையாக நான் சோற்றில் கை வைக்கவுமாக
சரியாக இருக்கும்.
திருமணமொன்றிற்காக மல்லிப்பட்டினத்துக்குப் பயணம். துணிகளை
இஸ்திரி போட்டு விட்டு சாப்பிட உட்கார்ந்ததில் நிறையவே தாமதம். மணி மூன்றாகி
விட்டிருந்தது.சாப்பிட்ட மயக்கத்தின் ஆழத்தில் தலை இறங்கிக் கொண்டிருக்கும்போது
மெத்தைக்கு பக்கவாட்டில் செருகிக் கிடந்த செல்பேசி குரல் மங்கி ஒலித்தது.
“அய்யா வணக்கோம் பேசலாமுல்லா?”
“ சொல்லுங்க குமரேசன் பேசலாம்”
“சிருங்கி பஸ்பம் கேட்டிருந்தீங்கள்லா அதுக்குத்தான் அடிச்சேன்”
“ரொம்ப நன்றி குமரேசன். நான் வாட்சப்புல அனுப்புன முகவரிக்கே
அனுப்பிடுங்க. காசு எவ்வளவு?”
“சரி சரி . நான் ஜி பேல போட்டுர்றேன்”
“ வேறென்ன செய்தி குமரேசன்?”
“ டாக்டரோடயே நேரம் சரியாப்போவுது சார்”
“ஆமா அது அப்டித்தான். அதுவும் இவருக்கு பேரு இருக்கிறதுனால கூட்டம்
வருந்தானே”
“சாப்டீங்களா குமரேசன்?”
“தம்பி பையனுக்கு நிச்சயதார்த்தம்“
“ஓ அப்டியா?”
“பையன் என்ன பண்றான்?”
“விப்ரோல வேல”
“எங்கயோ நல்லபடியா இருந்தா சர்த்தான்”
“ஆமாய்யா உண்மத்தான். எல்லாம் ஒங்க ஆசீர்வாதம்”
“வேறென்ன குமரேசன்?”
“வேறென்னத்தப்போட்டு. காலயாகுனா மதியாமுகுது மதியாமானா சாயந்திரமாகுது
சாயந்திரமானா ராத்திரியாகுது ராத்திரியாகுனா மறுபடியும் காலயாகுது. என்னத்தவிர எல்லாமே
ஓடுது உருளுது”
“என்ன எல்லாம் தத்துவமா இருக்கே குமரேசன்“
“வேறென்ன அய்யா நடப்பத்தானே சொல்றேன். ஒரு நாளய்க்கும் இன்னொரு
நாளய்க்கும் என்ன வித்தியாசம்?”குமரேசனின் சொற்களில் ஒளித்திருக்கும் சோர்வு புதினமாக
இருந்தது.
“சரி நீங்க சாப்டீங்களா குமரேசன்?”
“டாக்டர் என்னய நல்லபடியா கவனிச்சுக்குறார்”
“……”
குமரேசனுக்கு சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை நாகஸ்வர தலைமுறை.
எனது அணுக்க நண்பரும் ஒளிப்படக்கலைஞருமான நீலகண்டன் மூலமாக குமரேசனை சென்னை
புத்தக கண்காட்சியில் வைத்து பழக்கம்.
குமரேசனின் அண்ணன் தம்பி எல்லோருமே நாகஸ்வர தவில் கலைஞர்களாக ஓரளவு
நல்ல நிலையில் இருக்க இவரின் நிலைகொள்ளா படபடப்புத் தன்மையினால் சராசரி
வாழ்க்கை வாய்க்கவில்லை. தனித்தீவு வாழ்க்கை. அபூர்வமாக இணைப்பில் வருபவர் வருடத்திற்கு இரு முறை மட்டும் போன் அடிக்கத் தவற
மாட்டார். நூறு ரூபாய் மட்டும் போடச்சொல்லிக் கேட்பார்.
குன்றக்குடி அடிகளார், எம்.எஸ்.விஸ்வநாதன் முதலிய பல துறை பிரபலங்களிடம்
வேலை பார்த்திருக்கிறார். திரைத்துறை, வானொலி, தொலைக்காட்சியில் தற்காலிக பணி. தென்னக
பண்பாட்டு மையம் சார்பில் மேகாலயா சென்று தவில் வாசித்தது முதல் வானொலியின் உள்ளூர்
நிலையத்தில் வேலை பார்த்த வடநாட்டு இயக்குனர் பிரேம்குமார் பன்சலின் பெண்பித்து
வரை புனிதமான புனிதமற்ற எல்லா விஷயங்ளும் அனுபவங்களும் குமரேசனுக்கு அத்துப்படி.
தனக்கு எதிரில் இருப்பவர் தன்னைப்பற்றி ஏதோ தப்பாக நினைக்கிறார் என
இவர் நினைத்தாலே போதும்.அவரிடமிருந்து விலகி விடுவார்.இந்த பதட்டத்தினால் பல வேளைகள்
பட்டினி கிடக்க வேண்டி வந்திருக்கிறது குமரேசனுக்கு.
சாப்பிடக் காசில்லாமல் பல நாட்கள் தானும் நீலகண்டனும் வெறுந்தேயிலையில்
எலுமிச்சை சாறு பிழிந்து குடித்தே கழித்ததை சொல்லியிருக்கிறார்.
சாப்பாட்டைப் பற்றி முதலில் கேட்கும்போதும் நிச்சயதார்த்தம் என்றார்.
இப்பொழுது டாக்டர் என்கிறாரே என்பதும் சேர்ந்து உறைக்கவும் விடாப்பிடியாக “எல்லாஞ்சரி
குமரேசன் சாப்டீங்களா?”
“என்ன நெனச்சுக்கிட்டு இருக்கீங்க. நானும் பாக்குறேன். பேச்ச
மாத்தி பாத்தாலும் உடாம தொரத்தி தொரத்தி சாப்டாச்சா சாப்டாச்சானு கேக்குறீங்க?”குளிருக்குள்
நெருப்பு கலந்தது.
“என்னாச்சி குமரேசன்?”முகம் சுருங்கி கழுத்து வியர்த்தது.
“நீங்க மட்டுமில்ல சார் பாக்குறவன்லாம் கேக்குறான். சாப்டீங்களா
சாப்டீங்களான்னு”?.குரலின் தண்மை ஆவியாகியிருந்தது.
“சாப்டீங்களான்னு கேக்குறதுல என்ன தப்பு?” சுதாரித்துக் கொண்டு
வலுவாக திருப்பிக் கேட்டேன்.
“ஆறு மாசத்துக்கு முன்னாடி கடையத்துல ஒரு பண்ணையில கூப்டாங்கன்னு போனா நா தண்ணிக்கொழாய
கைல தூக்க முன்னாடியே அங்கவுள்ள பொடிப்பையன் நான் யாருங்கறத தெரிஞ்சிக்கிட்டு என்ன
பாத்து கேக்குறான்.“
“என்ன கேட்டான் அவன்?”
“அது எதுக்கு கருமம்?” குரலழிந்து உறுமலாகியிருந்தது.
நான் ஒன்றுஞ்சொல்லவில்லை.
“அந்த மாதிரி எடத்துல நிக்க முடியுமா அய்யாசொல்லுங்க. கைல காசில்லாம
திர்னவேலிக்கே ரயில் ஏறிட்டேன். டிடி புடிச்சா இருக்கவே இருக்கு பாலத்துக்கு கீழ ஓடுற
தண்ணி”
தொனியில் உக்கிரம் கூடியிருக்க இதை எப்படி மடை திருப்புவது என்பதை யோசிக்கத்
தொடங்கினேன்.
“இவ்ளோ பெரிய ஆளான நீலகண்டனே என்னப் பாத்து சாப்டீங்களான்னு கேக்குறாரு”
“ ஒங்களுக்கு என்ன பிடிக்கலன்னா போன்னு சொல்லீருங்க. ஏன் அப்டி
கேட்டு என்ன வதைக்கிறீங்க நீலகண்டன்னு?” கேட்டேன்.
“ஒங்கள மாதிரியே அவரும், சாப்டீங்களான்னு கேக்குறதுல
என்ன தப்பு? ன்னு கேக்குறாரு”.குமரேசனுக்கு மூச்சு வாங்குவது தெளிவாகக் கேட்டது.
“நல்லா கேட்டுக்குங்க சார். இத மாதிரி கேட்டதுனாலத்தான் நான் சாவ வேண்டி
வந்ததுனு எழுதி வச்சுட்டுதான் போவேன்”. தெளிந்த குரலில் சொன்னார்.
என்ன மறுமொழி சொல்வதென்று தெரியவில்லை. அவசரத்திற்கு சொற்கள்
அகப்படவில்லை. சில நிமிடங்கள் கழிந்தால் சூடு தணிந்து விடும் என்பதற்காக இணைப்பைத்
துண்டித்தேன்.நான் சொன்ன ஒவ்வொரு சொல்லாக மீட்டிப் பார்த்தேன். கிண்டலும் பண்ணவில்லை.
வேறு எதுவும் தப்பாகவும் சொல்லவில்லை. குமரேசனுக்கு கஞ்சா தண்ணி பழக்கம் எதுவும் இருக்குமோ?.
சீச்சி. அது அடிக்கிற ஆளா இருந்தா கண்ணுக்கு கீழே சத ஈஞ்சுடுமே. நாம பாக்கரப்போல்லாம்
ஆள் வெறப்பால்ல இருந்தாப்புல. நினைத்து முடிப்பதற்குள் குமரேசனிடமிருந்து
மீண்டும் செல்பேசி ஒலித்தது.
இதமற்ற சொற்களைக் கேட்க விருப்பமில்லாமல் திடப்படுத்திக் கொண்டு நான்
முந்திக் கொண்டேன்.“நான் ஒன்னும் ஒங்க கிட்ட தப்பா பேசலையே குமரேசன்?”
அவர் என் கேள்வியைக் காதில் வாங்காமல் பேசத் தொடங்கியிருந்தார்
“இப்டி சாப்டாச்சாண்னு கேட்டதுனாலத்தான் நான் பல எடங்கள்ல வேலய விட
வேண்டி வந்தது.”
“இங்க உள்ள ரேடியோ ஸ்டேசன்ல நான் கேசுவல் ஆர்ட்டிஸ்டா
வேல பாக்குறப்போ எங்க கைய குலுக்க வேண்டி வந்துருமோன்னு பயந்து தூரத்துல என்னைய கண்டவுடனேயே
கைய தூக்கி விஷ் பண்ணிடுவாங்க அப்படி இல்லாட்டி எனக்கு கேக்காமப்போயிடுமோன்னு சொல்லி
சத்தமா வணக்கம் சொல்றாங்க.”
“சாப்டாச்சானு கேக்குறதுக்கும் கைய தூக்கி வணக்கம் சொல்றதுக்கும்
என்ன சம்பந்தம் குமரேசன்?”
“ ஒங்களுக்கும் புரியலியா?. இல்லாட்டி வேணுன்னே புரியாதது மாதிரி
கேக்குறீங்களா?” என்னடா இது கால்மிதி விரிப்பைத்தானே இழுத்தோம். ஆனால் இங்கு ஒரு மலையே நகருகின்றதே. சங்கடத்துடன்
எரிச்சலாகவும் இருந்தது.
“இவனோட கை குலுக்க வேண்டி வந்திரக்கூடாதுங்கற ஆட்கள்தான் சாப்டாச்சான்னு
கேக்குறாங்க. இதுக்குதான் நான் கலியாணமே பண்ணிக்கிறல தெரியுமா?. வமிசா வழி வரைக்கும்
நோண்டுவாங்கன்னு”
“ஆனா நான் ஒங்களோட பல தடவ கை குலுக்கியிருக்கேனே” என சொல்லி வாயடைக்கலாம்தான்.
ஆனால் அதையும் குமரேசன் எப்படி எடுத்துக் கொள்வாரோ என்ற தயக்கம் வர இதற்கு மேல் வளர்ப்பது
சரியில்லை. பத்து தடவைகளாவது மன்னிப்புக் கேட்டிருப்பேன். அப்போதும் குமரேசன் பேச்சை
விட்டபாடில்லை.
அப்போதுதான் பிரேம் குமார் பன்சலின் பெயர் கை கொடுத்தது. இரவு தங்கும்
பணிக்கு பெண் அறிவிப்பாளர்களை வரவழைத்து பன்சலும் நிலையத்தில் தங்குவது என அடுக்கத்
தொடங்கினார். அவற்றை சொல்லி முடித்தவரின் குரல் இயல்பாகியிருந்தது.ஆளைத் திடனாக சமன்படுத்த
ஏதாவது பேச வேண்டும் என்பதற்காக தொடர்பில்லாத சங்கதிகளையெல்லாம் இழுத்து பேசி கிட்டத்தட்ட
ஒரு மணி நேரம் உரையாடல் நீடித்தது.
மாலையிலும் திரும்பக்கூப்பிட்டேன். எனது எண்ணை தடை செய்திருப்பார் என்பதிலிருந்து
பல எதிர்மறையான எண்ணங்கள் தோன்றி மறைந்து கொண்டிருந்தன. நான்கைந்து அடிகளிலேயே எடுத்து
விட்டார்.
“ அய்யா!மன்னிக்கணும்.கொஞ்சம் பொறுங்க. பேசண்டுங்க நெறய
வந்திருக்காங்க. நான் அப்றோம் கூப்பிடறேன். “
பல சொல்
குமரேசனுடனான மேற்படி உரையாடலுக்குப்பிறகான சில நாட்களிலேயே
பெருந்தொற்று முடக்குத் தொடங்கி விட்டது. நானாக அவருக்கு போன் போடுவதில்லை. அவர்
அழைத்தாலும் பல மணி நேரங்கழித்துதான் திரும்பக் கூப்பிடுவேன். ஏதாவது ஒரு வேக உச்சியில்
இருந்து அழைத்திருந்தால் அது இறங்குவதற்கும் நேரமும் அவகாசமும் வேண்டுமே.
பெருந்தொற்று தொடங்கியவுடன் யோகா செய்யுங்கள்,புத்தகத்தை
வாசியுங்கள்,இசையைக் கேளுங்கள்,வானொலிப் பேழை வாங்குங்கள், வீட்டுத்தோட்டம் போடுங்கள்,கதை
எழுதுங்கள்,நாங்கள் எழுதும் கதைகளை வாசியுங்கள்.வீட்டாருடன் அன்பாக இருங்கள்,அழைக்க
மறந்த நண்பர்களுடன் நீங்களாகப்போய் பேசுங்கள்,புதுச் சட்டை போடுங்கள், விதம் விதமாக
வீட்டில் ஆக்கி உண்டு களித்திருங்கள்.இது போன்ற ஓர் ஓய்வான தருணம் மொத்தமாக
குலையாக உங்களுக்கு ஒரு போதும் கிடைக்கப்போவதில்லை. இறைவனுக்கும் பஞ்ச விகிதம் கொடுங்கள்
என இலக்கியவாதிகள் தொடங்கி ஆன்மிகவாதிகள் வரை விதம்விதமான அறிவுரைகள் வழிகாட்டுதல்கள்.
உணவு,பலசரக்கு,மருந்து இவற்றைத்தவிர எல்லா வணிகமும் தரைக்கு தம்பியாய்
படுத்து விட்டிருந்தன. எங்களின் மாணிக்கக்கல் வணிகத்தைப்பற்றி தனியாக சொல்லவே தேவையில்லை.
இலங்கையிலிருந்து வானூர்தி வந்தால்தான் தொழிலே.
“எவ்ளோ நாள்தான் ஃபிளைட் பறக்காம இருக்கும்.ரண்டு மூணு மாசத்துல
நெலம சரியாயிடும்னு” என எனக்கு நானே சொல்லி நானும் கதை எழுதத் தொடங்கி அது
வளர்ந்து குறு நாவலாக மாற வீட்டுத்தோட்டத்தில் நின்ற சக்கைப்பழமும் அறுப்புக்குத்
தயாராகி விட்டது.ஒன்றும் செய்யத் தோன்றாத ஒரு பொழுதின் சலிப்பைப் போக்கடிக்க சக்கைக்குலையும்
கதர் சாரமுமாக முகநூலில் படமும் போட்டேன்.எல்லா மேல்பூச்சு பகட்டுகளும் முடிந்த பிறகு
வெறுமை அசையா திடத்துடன் வந்து நிற்கிறது.
பெருந்தொற்று முடக்கில் நான் நண்பர்களுக்கு போன் போட்டேனோ இல்லையோ ஆனால்
உள்ளூர் சாமி மய்யித்து பக்ரீ, கோழிக்கோடு ரமேஷ் அளியன், துபையிலிருக்கும் அதிரை அமீன்,
புருணையில் இருக்கும் தம்பி மகன் அப்துல்காதிர், உண்மைக்கும் உண்மையை போலச்செய்தலுக்கும்
இடையே ஊடாடும் பேருவளை ஹோமியோபதி மருத்துவர் ஜலாலுத்தீன் உள்ளிட்டோர் அழைத்திருந்தனர்.இதில்
இரண்டு பேரைத்தவிர மற்றவர்கள் அனைவரும் காக்கா அல்லது மச்சான் உறவு முறை சொல்லி “ செலவுக்கு
வேண்டுமா?” என பேச்சின் கடைசியில் கேட்டனர்.
அனைவர்களுக்கும் நன்றி சொல்லி துஆ செய்த பிறகு அரை நாளுக்கு அழுது தீர்த்தேன். “ நீ வேலை வெட்டியில்லாமலல்லவா
இருக்கின்றாய்” என்ற பேருண்மை மூளையின் எல்லா அடுக்குகளிலும் விழித்துக் கொண்டது.
அதன் பிறகான எல்லா தொலைபேசி உரையாடல்களிலும் “உங்கள் தொழில் எப்ப்டி
இருக்கின்றது?” என்ற இடத்தை நான் எப்படி கடக்கின்றேன் என்பதை வைத்துதான் உரையாடலின்
மீதி பகுதியும் குளிரா? நெருப்பா? எனத் தீர்மானமாகும்.
திருமண விருந்தொன்றில் சாப்பாட்டுத் தாலம் வந்து சேரும்
வரைக்கும் எனது நண்பரான சக கல் வணிகரிடம் பேசிக் கொண்டிருந்தேன். பேச்சுவாக்கில்
அவன் தன் செல்பேசி திரையைக் காட்டினான். கொழும்பு காலி முகக் கடலை தூர்த்து அறுநூற்றி
அறுபத்தைந்து ஏக்கரில் சீனா கட்டி வரும் நவ துபை நகரத்திற்கு ஒரு உள்நாட்டுக்காரனும்
போக முடியாதாம். சீனத்து கடவுச்சீட்டுதான் செல்லுமாம் அல்லது சீன அலுவலர்
அனுமதி தரணுமாம். மொத்த சிலோனும் சீனாக்காரன் மடியில விழுந்த பிறகு கல் தொழிலும் குறு
வணிகமும் மிஞ்சுமா என்ன? எல்லோருக்கும் ஈரப்பலாக்காய்தான்.
இரண்டாம் முடக்கும் தொடங்கி விட்டது.தொழிலின்மையின் கனம் வானம் நிலத்தின்
இருப்பைப்போல பேருரு கொள்ளத்தொடங்கியது. சுபஹில் தொடங்கி லுஹர் வரைக்கும் உச்சக்கட்டம். மதியம் மட்டும் இடைவேளை. மாலையில் அதுவும்
தூங்கி எழுந்து விட்டு நம் முன் வந்து இரை கேட்டு நிற்கும். எங்கும் தப்பிக்கவியலாது.
மனைவி பிள்ளைகள் என எல்லோரின் முகங்களும் அழிந்து அவ்விடத்தில் பணத்தாள்களின் நிறமும்
மணமும் கூடியிருந்தது.
முதல் முடக்கில் தொலைபேசியில் அழைத்த ஒருவர் கூட திரும்ப அழைக்கவில்லையே?
அப்படியே போட்டாலும் கூட அது ஒப்புக்கான நல விசாரிப்புகளில் தொடங்கி
ஊர் பலாய் பேச்சுக்களில் வந்து முடிந்து விடும்.
“நீ குதிரையில் அமர்ந்திருக்கும்போது உன் கையிலிருந்து சவுக்கு
கீழே விழுந்தால் கூட அதை நீ யாரிடமும் எடுத்துக் கேட்காதே” என்ற ஹதீதை நேசிக்கும் மனத்தின் மறுபக்கம்தான் இப்படி எதிர்பார்க்கின்றது.என்னில்
நானே வெளுத்துப்போன மெய்கணம்.
ஒவ்வொரு சுஜூதிலும் “வ அஃனினி பி ஃபள்ழிக்க அம்மன் சிவாக்” என்று கேட்டால் மட்டும் போதுமா? மனத்தின் கையை தாழ விடாதே மண்டையனே!
அவர்களுக்கும் எனக்கும் எல்லோருக்கும் வாழ்வாதாரமளிக்கிற அந்த முடிவற்ற களஞ்சியக்காரனிடம்
மட்டுமே கேள்……
இப்படியாக சொந்த தொழில் குறித்த நிலையில்லாத தன்மை தலைக்குள்
நஞ்சாகி ஏறிக் கொண்டிருக்கும் நாளில் அதுவும் ஒரு முழு அடைப்பு நாளில் மார்த்தாண்டத்தில்
வாடகை வீடெடுத்து உண்ணியப்பம் சுட்டு கடைகளுக்குக் கொடுக்கும் கூட்டாளி தொலைபேசியில்
விளித்தான்.கடின உழைப்புடன் நெருக்கடியான வாழ்க்கையையும் ஒருங்கே பெற்றவன். இவனும்
மாமாங்கத்திற்கு ஒரு தடவை தொலைபேசியில் அழைப்பவன்தான்.
“காக்கா ஒங்க யாபாரம் நடக்கா?”
“ஒன் வியாபாரம் எப்படி?”. கேள்விக்கு விடையாக அதே கேள்வியை போட்டு
மடக்க வேண்டும் என்ற முன் தீர்மானத்தின் விளைவாக வந்த மறுமொழி.
“கடை அடைச்சிருக்கும்போது யாபாரம் எப்படி நடக்கும் காக்கா?”
“அதுதான் இங்கயும்.” உள்ளத்தின் வெம்மை தணிந்த நிறைவு.
இந்த பேச்சு முடிந்த மூன்றாவது நாளில் சென்னையிலிருந்து ஒரு தொலைபேசியழைப்பு.
இவன் பெயிண்ட் கடை வைத்திருக்கிறான். இவனது கடையும் ஒரு மாதமாகப் பூட்டு.
“காக்கா யாபாரம் எதுவும் நடக்குதா?”
“சிலோனுக்கு ஃபிளைட் உட்டாத்தான் எங்களுக்கு யாபாரம்”
“ இங்க ஊர்ல எதுவும் நடக்கலியா காக்கா?”
“நாந்தான் நடக்குறேன். இனிமே யார் போன் போட்டாலும் யாபாரத்த தவிர
மத்ததுலாம் பேசுங்கோன்னு சொல்லப்போறேன்” என்றேன்.
“இப்பிடியே சும்மா இருக்க முடியாதில்லியா காக்கா?”
சாடையாகச் சொன்னாலும் விட மாட்டேன் போலிருக்கிறதே. ஒரு வேளை கைமாற்று
கேட்டால் இந்த பேச்சு இனிமே வராதுதானே எனத் தோன்றினாலும் அந்நினைப்பு நாவுக்கு கடக்கவில்லை.
“நா என்ன வேணுன்னா ஒழய்க்க போகாம இருக்கிறேன். எல்லாப்பக்கமும்
வாசலை மூடிட்டு ஆயிரம் மீற்றர் ஓட்டம் ஓடுன்டா எப்பிடி?”
“ம்ம்ம்’
“இருபத்தஞ்சு வருஷம் அதாவது கால் நூற்றாண்டு உழச்சு போட்டுத்தான்
இக்கிறேன். மாச செலவுக்கு இல்லன்னு சொல்லி யார்ட்டயும் போய் நின்னதில்ல.
இன்னிக்கு இந்த மாதிரி சிக்கல். புது முயற்சி எடுத்தா கொஞ்ச நாளய்க்கு நடக்குது அப்புறம்
வாய் பாக்க வேண்டியீக்கிது. அல்லாஹ்தான் தரணும். காச உண்டாக்க முடியலன்டா எவன்டயும்
போய் நிக்க மாட்டேன் . அது மட்டும் உறுதி. பேசாம தோல்விய ஒத்துக்கிட்டு மல்லாக்க படுத்துருவேன்”.
சொல்லிக் கொண்டிருக்கும்போதே என் கண்களில் நீர் முட்டியது. சில நொடிகளுக்கு போனை கைகளால்
பொத்தினேன்.
சிரித்தான் அவன்.
மீண்டும் வாரக்கடைசியில் அதே
பெயிண்ட் கடைக்கார நண்பனிடமிருந்துதான் அழைப்பு.அந்த பேச்சு வந்தால் கூட்டாளி என பார்க்கக்
கூடாது.பொட்டுக்கு அடிக்க வேண்டியதுதான்.
எது வரக் கூடாது என பத்து தடவை மனத்திற்குள் முராதாக நினைத்தேனோ கால்வாசி கதைகளுக்குப்பிறகு அது வந்தே விட்டது.
“காக்கா யாபாரம் நடக்குதா?”
உச்சியில் சுடு ஆணம் கொதித்தது.
“மயிரு தெரியுமாடா மயிரு அந்த மசிருலதான்டா நடந்துது.”
அவன் இணைப்பைத் துண்டித்தானா?அல்லது நான் துண்டித்தேனா தெரியவில்லை.
சொல்முதலி
துஆ – இறை
வேட்டல்
சுபஹ் – வைகறைத்
தொழுகை
லுஹர் – நண்பகல்
தொழுகை
ஊர் பலாய்
– ஊர் வம்பு
ஹதீது – நபி
மொழி
வ அஃனினி பி
ஃபள்ழிக்க அம்மன் சிவாக் -- நீயல்லாத பிறரிடம்
தேவையாவதிலிருந்து உன் அருட்கொடையின் மூலமே என்னை தன்னிறைவு கொள்ளச் செய்வாயாக
முராத் -- நாட்டம்
No comments:
Post a Comment