Thursday 15 July 2021

மீண்ட சின்னி

 

இவனுக்கு  வயது பன்னிரண்டு .


எனது சதுக்கைத்தெரு பழைய வீட்டில்  கோடை காலங்களின் வெப்பம் தாங்கவியலாமல் சென்னையிலிருந்து வாங்கி வந்தேன்.


சென்னை சவுக்கார்பேட்டை  நேதாஜி சுபாஷ் சந்திரபோஷ் சாலையைத்தொட்டுக் கொண்டிருக்கும்  கோவிந்தப்ப நாயக்கன் தெரு முனையில் ஒரு பழைய மின்னணு சாதனக்கடை . மின் சாதனங்களின் கருக்கு வாசனையுடன் அட்டைப்பெட்டி வாசனையும் கலந்து ஒரு வகையான பழம் நினைவை கிளர்த்தியது. செவ்வியல் மணம். சவுக்கார் பேட்டையின் அடையாளங்களில் ஒன்று அந்த கடை.  முதலாளியும்  ஒன்றிய அரசு அலுவலருக்கான  '"வந்தா வா வராட்டி போ " பாணி நிதான தோரணை. பணியாளர் எவருமில்லை.  அவரிடம்  ரயிலில் ஓடும் ஷங்கர் பிராண்டு வேக காற்றாடி வேண்டும் என்றேன். ரயிலில் என்னைக்கவரும் பல விஷயங்களில் ஷங்கர் காற்றாடியும் உண்டு. அவர் வைக்கோல் நிரம்பியிருந்த பக்ஸ் பேழை ஒன்றிலிருந்து முயல் குட்டியை தூக்குவது போல் இந்த நான்கு இறக்கை காற்றாடியை  தூக்கி தந்தார். ஷங்கர் iஇல்லை. சின்னி பிராண்டு. முன்னூறு எம்.எம். ஆனால் ரயிலில் பார்த்த அதே காற்றாடி.


ஏழுநூறு அல்லது எண்ணூறு ரூபாய்களுக்குள் வாங்கிய நினைவு.. சுழியத்திலிருந்து மூன்றாம் எண் வரை உண்டு. வசதிக்கேற்ப வைத்துக் கொள்ளலாம். இடம் வலம் வலம் இடம் தலையாட்டுதலும் உண்டு. வாத்தைப்போல முயலைப்போல கழுத்தைப்பிடித்து தூக்கிக் கொள்ளலாம். ஓடும்போது இரும்பு அலுமினியம் கலந்த  உலோக மணத்துடன் கன வேகத்தில் காற்றையள்ளி விடும்.


வெக்கை வழியும் என் சதுக்கைத்தெரு பழைய வசிப்பிடத்தில் கூரை காற்றாடி ஓட தலைமாட்டில் இது ஓட சிமிட்டி தரையில் தண்ணீர் தெளித்து நான் படுத்த பிறகு என் மீது தண்ணீரை தெளிப்பாள் மனைவி. மய்யித்துக்கு தெளிப்பது போல. இரவு படுக்கையே இறப்பிற்கான அன்றாட ஒத்திகைதானே என்ற தத்துவ தெளிவெல்லாம் அவளுக்கில்லை என்பதையும் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை. இவ்வாறான  வளி நீர்ம ஏற்பாடுகளுடன்   பல ஆண்டுகளின் கோடை  இரவுகளைக் கடந்திருக்கின்றோம்.


என் மூன்றாம் மகன் அப்துல்காதிர் ஜியாத்  பிறந்த பிறகு கோடை அல்லாத காலங்களில் இந்த காற்றாடிக்கு அவன்தான் முழு பயன்பாட்டாளர் அடுத்த கோடை வரும் வரைக்கும். 


நான்கு வருடங்களுக்கு முன்பு ஒட்டடை மண்டிக்கிடக்கின்றதே என மொட்டை மாடியில் வைத்து  அடியைக்கழற்றி துப்புரவு பண்ணிய பிறகு மீண்டும் எனக்கு  மாட்டத்தெரியவில்லை. அடி கழன்று தனி உறுப்பாகி தொங்கிக் கொண்டிருந்தது.


சரி. புதிய சின்னியொன்ரை வாங்குவோமே என அதே  கடையைத் தேடினால் அந்த இடத்தில் வேறு ஏதோ புதிய கட்டிடம் நின்றுக் கொண்டிருந்தது. அக்கம்பக்கத்தில் விசாரித்தேன். அங்குள்ள சாலையோர பழக்கடைக்காரரிடம் கேட்டேன். யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.  காலத்தின் ஏதோ இண்டு இடுக்குகளில்  அவரும்  கடையும் போய் செருகிக் கொண்டு விட்டார்கள். காற்றாடியின் துயரத்துடன் அடையாளப்பழமையொன்றை இழந்ததுமான விசனத்தின் கனம் கூடியது.  பெரு நகரங்களுக்கு இருப்பதெல்லாம் மெழுகு முகங்கள் மட்டும்தான்.


என் உறவினருக்கு தெரிந்த மின்வினைஞரிடம் கொடுத்தேன். அவர் ஓட மட்டுமே வைத்து தந்தார். பக்கவாதத்தில் விழுந்து விட்டது  சின்னி.  என் மகனின் மொழியில் ஏசி ஃபேன் என்றழைக்கப்படும் சின்னிக்கு  இப்போது ஒரே வேகம்தான். கூட்டவோ குறைக்கவோ இயலாது. தலையசைப்பில்லை. அறிந்தே அல்லவா நோயாளியாக்கி விட்டோம். இருந்தாலும்   ஓடுகின்றதே என்ற சமாதானம்.


தற்போதைய வீட்டிற்கு மாறி வந்த பிறகும் சின்னி ஓடிக் கொண்டிருந்தது. ஒரு நாளிரவு அது  தன் செயல்பாட்டை நிறுத்திக் கொண்டவுடன் சடைந்து போய்  பொருட்களின் அகதி முகாமான பரணில் கிடத்தி விட்டோம்.


ஓரு மாதத்திற்கு முன்னால் ஏதோ பொருளொன்றை எடுக்க பரணை என்  மனைவி உழப்பிக் கொண்டிருக்கும்போது சின்னி குட்டனையும்  தூக்கி வெளியில் வைத்தாள்.  " என்னை எடுத்துக் கொள்" என்றது.


சரிக்கட்டித்தான் பார்ப்போமே என்று கூடத்தில் தூக்கி வைத்தேன். ஒரு மாத காலமாக அங்கேயேதான் கிடந்தது. அதற்கான நேரமென்பது நேற்றுதான் வந்தது. சின்னி அய்யா முஹ்யித்தீன் தெருவில்  பழுது நீக்ககத்திற்கு எடுத்து செல்லப்பட்டார். ஒரு நாள் பரிகாரத்தில் மீண்டு விட்டான் என் சின்னி. வினைஞரிடமிருந்து " காக்கா! நீங்க கொடுத்துட்டுப்போன பழய காலத்து ஃபேன ஒரு மாதி ஓட வச்சாச்சு. வந்து வாங்கிக்கிருங்க" என்றார். "பழையது ஆவதற்கான காலத்தகுதி ஒரு மாமாங்கமா?"


தரமான பிளக்குடன் புதிய மின் வடம். சுழியத்திலிருந்து மூன்று வரை வேகம்  கூட்டலாம் குறைக்கலாம். தலையாட்டுவதில் மட்டும் மீச்சிறு தடங்கல். ஆனால் தலையாடுகின்றது. அடியும் அதன் இடத்தை அடைந்து  கொண்டது. என் சின்னி கிட்டத்தட்ட அப்படியே கிடைத்து விட்டான். வினைஞர் இருநூற்றி ஐம்பது ரூபாய்கள் கேட்டார். மூத்த மகன் முனவ்வர்  சாஜித்  அவரிடம் பேசி இருநூறு ரூபாய்களாக்கி விட்டான். மீந்த ஐம்பதை சின்னி மீண்ட மகிழ்ச்சியில் அவன் கையிலேயே கொடுத்து விட்டேன்.


இவ்வளவு நாள் நொண்டிக் கொண்டிருந்த  தற்போதைய வீட்டின் இடைவழியிலுள்ள கூரைக்காற்றாடிக்கு கன்டன்சர்,பேரிங்க் பழுதாகி விட்டது என. மனைவியும் அப்துல்காதிர்  ஜியாதும் ஆவலாதி சொல்லவும் சின்னியை வைத்துக் கொள்ளச் சொல்லி விட்டேன். காற்றாடிகளுக்கிடையேயும் மொழி உண்டு என்பது புதிய தெளிவு.


இந்தப்பதிவிடும்போது சின்னியின் இன்றைய விலையை இணையத்தில் தேடினேன். இரண்டாயிரம் ரூபாய்களைத் தாண்டிக் காட்டுகின்றது.எப்படியோ இருநூற்றைம்பது ரூபாய்களில் புதிய காற்றாடி வாங்கியதற்கு சமம்தானே சின்னி மீண்டது? உண்டா? இல்லையா?




 


No comments:

Post a Comment