Saturday 24 July 2021

பேராயர் இராபர்ட் கால்டுவெல் -- இடையன்குடி சிற்றுலா


தண்ணென்ற அயர்லாந்தில் பிறந்து இலண்டன் கிறிஸ்தவ பரப்புரை நிறுவகத்தால் அழல் நிறைந்த தமிழ்நாட்டிற்கு அனுப்பப்பட்டவர்.

தான் நம்பும் நெறியை மக்களுக்கு பரப்பிட வேண்டுமென்றால் அவர்களின் மொழியை அறிந்திட வேண்டும் என்ற யதார்த்தத்தை உணர்ந்தார். தமிழ் பயின்றார். த்மிழை பயில பயில இம்மண்ணின் உப்பு அவருக்குள் ஏறியது. அவரே இந்நிலத்தின் மண்ணாகவும் உப்பாகவும் ஆகிப்போனார்.

இயேசுவை அறிவித்தலுக்கு அப்பாலும் தன்னால் சிலவற்றை இம்மண்ணின் மக்களுக்கு கொடுத்திட இயலும் என்பதை உணர்ந்த அவர் தன் இறகுகளை விரித்தார்.
தொடர்பாடல் என்பதையும் தாண்டி தமிழ் அவருக்குள் ஊறியது. அதன் இலக்கணத்தைக் கற்றார். இது மொழியில்லை மொழிகளின் அரசன் என்பதறிந்தார்.
இந்திய மண்ணின் சாபமான ஆரிய பண்பாட்டிற்கு நேரெதிரான எல்லா கூறுகளையும் பண்பு நலன்களையும் தமிழ் தன்னகத்தே கொண்டிருப்பதை அறிந்தார். தமிழ் திராவிட மொழிகளின் தாய் என்பதை பாரதிர சொன்னார்.
அன்று அவர் ஆரிய ஆதிக்கத்தின் உயிர் தலத்தில் போட்ட அறையால் தமிழ் நாடு இன்னொரு இருண்ட வட நாடாகாமல் தப்பியது.
தமிழை துலக்கி ஒளி வீசச் செய்த கால்டுவெல் இம்மண்ணும் மிகப்பழமையானது என்பதையும் பகிரங்கப்படுத்தினார். அவருக்குள்ளிருந்த தொல்லியல் மானிடவியல் ஆய்வாளன் வெளிவந்தான். கொற்கை, பழைய காயல் என தன் கால்களால் அளந்தார்.
கொற்கை தனக்குள் மிகப்பழமையான நாகரிகத்தைக் கொண்டுள்ளது என்பதை தனது தொல்லியல் ஆய்வுகளால் நிரூபித்தார். அவர் போட்ட பாதையில் நடை போட தமிழ் நாட்டரசிற்கு ஏறத்தாழ நூறு வருடங்கள் எடுத்திருக்கின்றது. 1964 ஆம் ஆண்டுதான் தமிழக தொல்லியல் துறை என்ற ஒன்றே அமைக்கப்படுகின்றது. 1968 ஆம் ஆண்டு அரசின் சார்பில் தொல்லியல் ஆய்வு நடைபெறுகின்றது. இப்போது இரண்டாம்கட்ட ஆய்வு நடைபெறுகின்றது. அரசு செய்ய வேண்டிய வேலையை தனியொருவராக செய்திருக்கின்றார்.
நமதூருக்கும் அவர் ஆய்விற்கு வரும் நாளில் அன்றைய நம் முன்னோர்கள் தடுத்து விட்டனர். அவர உள்லே விடப்பட்டிருப்பாரானால் கொற்கைக்கு அடுத்தபடியாக நமதூர் உலகோர் நடுவே அறிவியல் பூர்வமாக இன்னமும் துலங்கியிருக்கும்.
இன்றைய நாட்களில் அதன் விளைவை நாம் சுவைத்துக் கொண்டிருக்கின்றோம். அன்றைய நம்மவர்களின் தவற்றினாலும் எந்த ஒரு வரலாற்று தடயங்களையும் விட்டு விடக்கூடாது என்பதில் நமக்குள்ள தெளிவினாலும் ஆயிரமாண்டுகளுக்கு மேல் வரலாறு உள்ள நாம் இன்று வெறும் நினைவுகளாகவும் தொன்மங்களாகவும் மாறிக் கொண்டிருக்கின்றோம்.
அசௌகரியங்கள் நிறைந்த வெப்பம் கொப்பளிக்கும் ஓர் அன்னிய நிலத்தில் தனக்கிடப்பட்ட பணிகளுக்குமப்பால் எல்லா வசதிகளையும் கொண்ட தனது இடையன்குடி பணி மாளிகைக்குள் உறைந்திடாமல் அவர் மாட்டுவண்டி, குதிரை வண்டி, கால் நடையாக நாடோடிக்குள் நாடோடியாக அலைந்தார். எந்த இயேசுவிற்காக தன் வாழ்வை ஒப்புக் கொடுத்தாரோ அந்த கிறிஸ்து சபை அவரை அவரின் இறுதி கணங்களில் அலைக்கழித்தது. ஆனால் அவரது ஆன்மாவோ நசிந்து கொடுக்கவில்லை. தன் பணி நிறைந்து உடல் நலிந்து உயிரடங்கிய கால்டுவெல்லை நாம் மனங்கொள்வது இந்த இடத்தில்தான்.
நமது சாலிஹான தாயீக்கள் நாதாக்கள் செய்த தியாகங்கள் இவற்றையெல்லாம் விஞ்சியவை. காரணம் அவர்கள் முழுக்க முழுக்க சத்தியத்தின் ஒளியில் வழி நடத்தப்பட்டார்கள்.
இயேசுநாதரிலிருந்து வெகு தொலைவு விலகி உலகாயத சமரசங்களில் கரைந்து போன ஒரு நெறியின் பேராளர், பரப்புரையாளரிடம் காணப்பட்ட இந்த அசாத்திய செயற்கரிய குணங்கள்தான் நம்மை சும்மா அமர விட மாட்டேனென்கின்றது.











































































 

No comments:

Post a Comment