சுட்டி யானை சிறுவர் இதழில்( ஜூலை2021) வெளிவந்தது.
எனக்கு பத்து வயதிருக்கும். இரவு தூங்கிக் கொண்டிருக்கும்போது நாசிக்குள் ஏறும் புத்தரிசியின் பொங்கு மணத்தில் உருக்கு நெய் வாசனை வீசும். திருநெல்வேலி வயலிலிருந்து போன வாரம் வந்திறங்கிய நெல்லிலிருந்து குத்திய தவிடு நீங்காத அரிசி அது. அந்த வாசனையில் உறக்கம் இன்னும் அதன் ஆழத்திற்குள் செல்லும். அது ரமழான் நோன்பு காலம். நோன்பு பிடிப்பதற்கான ஸஹர் உணவு தயாரிப்பு வேளை.
ஃபாத்திமா கண்ணும்மாவின் கைப்பாகமும் அடுப்பங்கரையில் அவர்களின் கால் ஒலியும் ஓய்ந்து ஒரு மணி நேரத்தில் அதாவது பின்னிரவு மூன்றரை மணியளவில் “ ஜிகு ஜிகு தப் தப் “ என்ற ஓசை தெருவின் முனையிலிருந்து மெல்ல கிளம்பும். ஐந்து பத்து நிமிடங்களில் உலோக கிலுக்குடன் தோலினால் செய்யப்பட்ட தஃப்ஸ் ஒலிக்குப்பின்னால் கரகரப்பேறிய குரலொன்று….
“காற்றுப் போன்ற உடலுக்குள்ளே
கனத்த ரகசியம்தான் படைத்தாய் அல்லாஹ்!
ஜிகு ஜிகு தப் தப் ஜிகு ஜிகு தப் தப்
வெளியே முந்திரி விதை விதைத்து
வேடிக்கையாய் வைத்தாய் அல்லாஹ்
அல்லாஹ் யா அல்லாஹ்……
ஜிகு ஜிகு தப் தப் ஜிகு ஜிகு தப் தப்… ”
என பின்தொடரும்.
தஃப்ஸ் ஒலி முன்னே போக பாட்டொலி பின்னேக ஃபக்கீரப்பாவின் கையிலிருக்கும் ஹரிக்கேன் லாந்தரிலிருந்து வரும் செம்மஞ்சள் ஒளி ஆடி ஆடி தேய்ந்து மறையும். ஒலிகளை ஒளி தொடரும் புதுமை.
ரமழான் மாதத்தின் பின்னிரவுகளில் மின்சாரமும் அலாரமும் இல்லாத அக்காலகட்டத்தில் நோன்பாளிகள் தங்களின் ஸஹர் நேரத்து எழுதலுக்காக இந்த ஃபக்கீரப்பாக்களைத்தான் முழுக்க முழுக்க நம்பியிருந்தனர்.
ரமழான் அல்லாத காலங்களில் பிழைப்புக்காக பூட்டு திறவு கோல் விற்பவர்களாகவும், வணிக நிறுவனங்களில் கடை நிலை உதவியாளர்களாகவும் , பாய் விற்பவர்களாகவும், குடை பழுது பார்ப்போராகவும் பல்வேறு உதிரி தொழில்கள் செய்து வாழும் இவர்கள் ஃபக்கீரப்பா ஆவதற்கு சில மரபார்ந்த நடைமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும். அவற்றைக் கடந்த பிறகே ஃபக்கீரப்பாவாக முடியும். முன் காலத்து ஸுஃபி ஞானிகளுடைய பாடல்கள், தாங்களே சொந்தமாக இயற்றிய பாடல்கள், முஸ்லிம் நாட்டாரிசை வரிசை பாடல்கள், அந்தந்த காலகட்டங்களில் புகழ் பெற்ற பாடல்கள் என இவர்களின் பாடல் தொகுதி இருக்கும்.
ஃபக்கீர் என்ற அரபு மொழிச் சொல்லுக்கு பொதுவாக ‘ ஏழை ‘ எனப்பொருள். அதே சொல்லுக்கு பாரசீக, உர்தூ மொழியில் ‘ அலையும் துறவி ‘ எனப்பொருள் வரும். இரு மொழிப்பொருள்களையும் தங்களுக்குள் சுமந்திருக்கும் உதிரி மனிதர்கள்தான் ஃபக்கீரப்பாக்கள் என்ற அலையும் பாணர்கள். ஃபக்கீர் என்ற சொல் திரிந்துதான் தமிழில் பக்கிரி என வழங்கப்படுகின்றது.
எல்லா நிலங்களுக்கும் சொந்தமான இவர்கள் பக்கீரப்பா, பக்கீர் பாவா , பக்கீர்சா, தர்வேஷ், பீர், கலந்தர் என பல்வேறு பெயர்களில் நேசத்துடன் மக்களால் அழைக்கப்படுகின்றனர். பொது ஆண்டு 900 களில் வாழ்ந்து நிறைந்து திருச்சிராப்பள்ளியில் மண் மறைந்து வாழும் மகான் நத்ஹர் வலிய்யுல்லாஹ் அவர்களின் நற்போதனை பரப்புரையணியின் முன்னணியாளர்களாக இவர்கள் இருந்துள்ளனர் . அந்த கணக்குப்படி கிட்டத்தட்ட ஆயிரமாண்டு கால தொடர்ச்சி உள்ளவர்கள் இந்த ஃபக்கீரப்பாக்கள்.
காலம் முழுக்க அலைந்து திரியும் வாழ்க்கைக்கு சொந்தக்காரர்கள். நம் நாட்டை ஆக்கிரமித்த வெள்ளைக்காரர்களுக்கெதிரான விடுதலைப்போரில் இவர்கள்தான் விடுதலைப்படைகளுக்கிடையே செய்தி பரிமாறவும் எதிரி முகாம்களில் தங்கு தடையின்றி நுழைந்து உளவு பார்க்கவும் பயன்பட்டனர். காலம் எல்லோரையும் போல இவர்களின் வாழ்க்கை முறையையும் புரட்டியிருக்கின்றது. இவர்களின் எண்ணிக்கை தற்சமயம் அருகி வருகின்றது.
வீர விளையாட்டுக்கள், மரபுக்கலைகள், சித்துக் களி, நாட்டு மருத்துவம், போன்றவற்றில் தேர்ச்சி பெற்ற இந்த நிகழ்த்து கலை மனிதர்களை திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம், திருச்சிராப்பள்ளி நகரம், நாகப்பட்டினம் மாவட்டம் நாஹூர் போன்ற முஸ்லிம்கள் பண்பாட்டு ரீதியாக செறிந்து வாழும் பகுதிகளிலும் தர்காக்கள் எனப்படும் மகான்களின் நினைவிடங்களிலும் காணலாம். நோன்புக்காலம் தவிர்த்த மற்ற காலங்களில் தர்காக்களில் நடைபெறும் கந்தூரி, உர்ஸ் விழாக்களில் இவர்களின் கலைப்பங்களிப்பு இருக்கும்.
பச்சை நிறத்தலைப்பாகை, கழுத்தில் கண்ட மாலை எனப்படும் பல வண்ண படிக மாலை, லேஞ்சி எனப்படும் மேல் துண்டு, நீண்ட ஜிப்பா, தோளில் தொங்கும் துணிப்பை கையில் தஃப்ஸ் . இதுதான் இவர்களின் கோலம்.
ரமழானின் முப்பது நாட்களின் ஸஹர் நேரங்களிலும் தஃப்ஸ் முழங்கும் இவர்கள் நோன்பின் இறுதி நாட்களில் எல்லா வீடுகளுக்கும் பகலில் தஃப்ஸ் அடித்து பாடி வருவர். ஒவ்வொரு வீட்டிலும் அளிக்கப்படும் அரிசியாகவோ பணமாகவோ துணிமணிகளாகவோ தங்களின் தொங்கும் தோள் பைகளுக்குள் பெற்றுக் கொள்வர். இனி அடுத்த வருட ரமழான் அல்லது கந்தூரி விழா வரைக்கும் இந்த இரவாடி மனிதர்கள் பகலின் வெளிச்சத்துக்குள் கரைந்து போய் விடுவார்கள்.
இரவை பகலாக்கும் வகையில் நவீனம் வளர்ந்து விட்ட போதிலும் மேலப்பாளையத்திலிருந்து எங்களூரான காயல்பட்டினத்திற்கு இவர்கள் ரமழான் தோறும் வந்து கொண்டுதானிருந்தார்கள். பெருந்தொற்றுக்கால முடக்கினால் ரமழானின் இரவுகள் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டிருக்கின்றன.
எகிப்து உள்ளிட்ட ஆசிய ஆஃப்ரிக்க நாடுகளில் ஃபக்கீரப்பாக்கள் வெவ்வேறு பெயர்களில் அறியப்பட்டாலும் சேவலின் கூவலுக்கு முந்திய இந்த மனிதர்கள் கண்டங்கள் தாண்டியும் மானுடத்தை தங்கள் இரவுக்குரலிசையால் பிணைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
தமிழ்நாட்டு ஃபக்கீரப்பாவின் பாடல் காணொளி
இலங்கை ஃபக்கீரப்பா பாடல்கள் காணொளிகள்:
சொல் விளக்கம்:
ஹரிக்கேன் லாந்தர் – மண் நெய்யில் ( கெரோசின்) எரியும் கூண்டு விளக்கு.
ரமழான் --- ஆண்டுக்கொரு முறை முஸ்லிம்கள் நோன்பு வைக்கும் மாதத்தின் பெயர்
ஸஹர் — வைகறைக்கு முன்னர் நோன்பு வைப்பதற்காக உணவு உண்ணும் வேளை
கண்ணும்மா -- தாய் வழி பாட்டி
தஃப்ஸ்—பறை
தர்கா – மகான்களின் நினைவிடம்
கந்தூரி, உர்ஸ் —மகான்களின் ஆண்டு நினைவு விழா
ஃபக்கீரப்பாக்கள் பற்றிய கூடுதல் வாசிப்பிற்கு:
தர்காக்களும் இந்து - இசுலாமிய ஒற்றுமையும், சிவசுப்பிரமணியன். ஆ, நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை (முதற்பதிப்பு, 2014)
தமிழகத்தில் நாடோடிகள் (சங்ககாலம் முதல் சமகாலம் வரை), பக்தவச்சல பாரதி. சீ (பதிப்பாசிரியர்), வல்லினம், புதுவை (முதற்பதிப்பு, 2006)
இஸ்லாமிய ஃபக்கீர்கள், ரஹ்மத்துல்லா. வ, படையல் வெளீயீடு, சென்னை (முதற்பதிப்பு, 2007)
No comments:
Post a Comment