Wednesday, 16 June 2021

'கா'ஞானம்


 

முதுகு ஒட்டிக் கொண்டு  வியர்த்து நெய்யாகி  டைல்ஸ் தரை  நழுவியது. சற்று நகர்ந்த  பிறகு பழைய இடத்திலுள்ள வியர்வையின் மினுமினுப்பில்  சாளரக்கிராதியின் நிழல் கோணவும்  தலையின் சூடு மெழுகாகி இளகியது. அதற்கு மேல் தொடர மனமில்லை. எழும்பி அமர்ந்து கொண்டான் நூகு.


பச்சையும் கருமையுமாக இடது கெண்டைக்காலில் முந்திரிக்கொத்து போலவும்  இரையெடுத்த குட்டி பாம்புகளைப்போலவும் வளைந்து  திரண்டிருந்தது.இது சுருள் நரம்பு எனவும் சரிக்கட்ட விபரீத கரணி ஆசனம் சிறந்தது என யோகாச்சாரியன் இஸ்மாயீல் திருவனந்தபுரம் வானொலியில் சொல்லியதைக் கேட்டிருந்தான்.அதன்படி  ஒரு வாரமாக காலை அல்லது மாலை என நூகின் யோகாசனப்  பயிற்சி தீவிரமடைந்தது.

மேஸ்திரி குஞ்சப்பனை நினைத்த நேரத்திற்கு  கூடுதலாக ஓர் ஆசனத்தை செய்திருக்கலாம் .கசகசப்பிற்காக  காற்றாடியை  போடலாமென்றால்  “ ஆசனம் அப்யசிக்கும்போள் ஃபான் பாடில்லாஎன்ற யோகாச்சாரியனின்  அறிவுறுத்தல் நினைவிலெழுந்தது. ஆச்சார்யன் சொல்லில் பாம்பின் கூர் உண்டு, டைல்ஸ் தரையில் கிடக்கலாமென்றால் வாத சேட்டையுடன் நரம்புகளில் இரத்த ஓட்ட பாதிப்பும் வரும் என மருத்துவர் எச்சரிக்கை ஒரு பக்கம். டைல்ஸ் ஒட்டுவதற்கு மாற்றாக ரெட் ஆக்சைட் பூசிய சிமிண்ட் தரை போடலாம் என தான் சொன்னதைக்கேட்டு பச்சை சிரிப்பு சிரித்து சென்ற மேஸ்திரி குஞ்சப்பனின் முகத்தில் இந்த வியர்வையை  அள்ளியெடுத்து மொத்தமாகத் தடவ வேண்டும்  போலிருந்தது.

கான்கிரீட் கூரையின் வெக்கையில் கனம் கூடியிருப்பதாக  நூகிற்கு  தோன்றியது. மொட்டை மெத்தையின் சாளரக்கதவில் நின்று கொண்டிருந்த ஆண் குருவி  சிர்ப்பவும் மொட்டை மெத்தையின்  நினைப்பு நூகிற்குள் உற்சாகத்தைக் கிளப்ப ஏணிப்படிகளை  இரண்டிரண்டாகத் தாவினான்.குஞ்சப்பனிலிருந்தும் நசநசப்பிலிருந்தும் விடுவிக்கும் மாடிக்காற்றின் தழுவலில் வியர்வைப்பெருக்கு தணியத் தொடங்கியது

பூசாமல் நிற்கும் பனாட்டுக்கார வீடு கிழக்கு பக்கம். வட பக்கம் மட முகத்தின் வீடு.அவன் பெயரைச் சொல்லி விட்டால் மடத்தனத்தின் வீரியத்திற்கும் சதவிகிதத்திற்கும் குறைவு செய்த குற்றம் வரும். அவன் வீட்டு  தண்ணீர் தொட்டியின் மீதமர்ந்திருந்த  நாட்டியப்புறா  நூகின் தலையைக்கண்டவுடன் சிலிர்த்து கலைந்து மேலெழும்பியது. நெஞ்சில் செஞ்சாயம் பூசிய   இன்னொரு  புறா வானத்திலிருந்து   இறக்கைகளை அணைத்துப் பொத்தியவாறே கல்லாகி கீழிறங்கியதுநாட்டியப்புறாவின் அருகில் வந்தவுடன்  இறக்கைகளை  விரித்தது. பின்னர்  இரண்டுமாக திசை திரிந்து பறந்தலைந்தன.

எண்புறங்களின் சீர் தந்த  நிறைவில், மேடு பள்ளம் இல்லாத  பக்கமாக பார்த்து  படுத்தான் நூகு. அடி வெளுத்த வானில் சுட்ட மஞ்சள் கிழங்காய் கதிரவன் எட்டிப்பார்த்தவுடன்  எழுந்து  கொஞ்சம் நிதானித்து தென்வடலாக அமர்ந்தான்.

இரண்டாவது தடவையாக பிஸ்மி  சொல்லி  பத்மாசனத்திலிருந்து மீண்டும் தொடக்கம். மூச்சை முழுவதுமாக உள் நிரப்பி மார்பு விம்மியவுடன் பந்தனத்திற்காக மூச்சைக் கட்டி நிறுத்தினான். வலது கைவிரல்களை மெல்ல விடுவித்து எண்ணி  முடிக்கவும் வயிறு பாபாவின் கப்பரையாகி குழிந்து விட்டிருந்தது.எழுபது எண்ணும் வரைக்கும் தாக்கு பிடிக்கிறது. நுரையீரலுக்கு இன்னும் வயது தெரியவில்லை போல.

தலைமாட்டிலிருந்த பிலிப்ஸ் வானொலிப்பேழையில் மூச்சை இழுத்து பிடித்த ஏற்ற இறக்க குரல்செய்கைகளுடன் ஜீயின் குரலாகி  அரசின் சாதனைகளை எடுத்து விட்டுக் கொண்டிருந்தார் மூத்த அறிவிப்பாளர். “அது அத்து தெறிச்சு போற மாதிரிலோ கத்துரான். அத விட சம்பளம் மேலா முட்டாள்.”வானொலியை அணைக்கத் தோன்றியது.ஓசையைக் குறைத்து கை தட்டாதபடிக்கு கொஞ்சம் தள்ளி வைத்தான்.

அடுத்து  உட்கடாசனம். மூச்சை வெளி விட்டவாறே  முட்டுக்கால்களை முக்கால் திட்டத்திற்கு வளைத்துக் கொண்டு ஆசன இருக்கையில் நின்றான். பப்பாளி மரத்தண்டை முறித்த சாடைக்கு இள முறிவு ஒலி கேட்டது போல ஒரு சக்கு, “முட்டுதான் மொறு மொறுத்ததா?.வாடா மூடியும் இதுவும் ஒன்று. சிரட்டை தெறித்தாலும் பரவாயில்லை. ஆசனத்தை விட்டு விடக்கூடாது. அது முட்டு வலிக்கு நல்லதாம்...”  இரண்டாம் மூன்றாம் தடவைகளில் முட்டிலிருந்து ஒலியொன்றும் கேட்கவில்லை.

இருபத்தேழு வருடங்களுக்கு முந்தி மலப்புரத்து  நரம்பன் சௌக்கத் எடுத்த எட்டு மணி நேர மொத்த களரி பிழிவுக்கு நின்று பிடித்த முட்டா இது? நினைத்தால் வலிதான். “மாறடா.ஓசையில்  நினைப்புகள் உதிர்ந்தன.மூச்சை திரும்ப  உள்ளிழுத்தான்.

உள்ளிழுப்பினால்  பெருத்த விலாவில் வியர்வை  ஊற்றெடுத்தது. முட்டு வலி இருந்தாலும் அதன்  இளமை பெரிதாகக் குன்றவில்லை என்ற நிறைவில் சவாசனம் கிடந்தான். நெஞ்சு மார்பு என எல்லாப்பக்கங்களிலிருந்தும் வழிந்த வியர்வை  மொத்த ஒழுக்காகி முதுகின் பக்கம் இறங்கி அசௌகரியம் ஒழிந்தது. தாகித்திருந்த தள ஓடுகளுக்கு  நல்ல உப்பிட்ட  திரவக் குடிப்பு.

கீறப்பட்ட  குரல் வளையிலிருந்து   ஒரு குரல்  ஏணிப்படி கூட்டில் முட்டித் திரும்பியது  “ காஹ்என்று வேக இடைவெளியில் இரண்டு முறை. வெளுத்து  பிளந்த வாயுடன் முதிரா காக்கையொன்று கைப்பிடிச்சுவரின் விளிம்பில் வந்தமர்ந்தது.

அதைத்தொடர்ந்து  கிழக்கிலும் மேற்கிலுமாக பத்து காக்கைகள் வரை இறக்கையை தணித்து சீராக சுவற்றிலிறங்கின. மெத்தை முழுக்க நெடில்வின் இரைச்சல்களால் நிரம்பின. இத்தனைக்கும் மெத்தையில் அவற்றிற்கான உணவென்று எதுவும் கிடக்கவில்லை. வழித்து துடைத்து துப்புரவாக இருந்தது தளம். இரண்டு நாட்களுக்கொரு முறை வீட்டுப்பக்கம் எட்டிப்பார்க்கும் சேதுராஜா தெரு பார்வதியக்கா  நேற்றைய  தினம்தான்  பெருக்கி விட்டிருந்தாள்.

சில காக்கைகள் வலமும் இடமுமாக தலையை திருப்பி திருப்பி பார்த்து விட்டு  சுவற்றிலிருந்து தளத்திலிறங்கி நூகிலிருந்து எட்டடி தொலைவில்  நின்றன. சலனமடக்கிக் கிடந்தான். கரைதல்கள்  உக்கிரமடைந்தன. குரலை வைத்து அவன் உத்தேசமாக கணக்கிட்டான்..ஒவ்வொன்றுக்கும் தனித்தனி அலைவரிசைக் கரைதல்கள்.கண்களைத் திறந்து எண்ணியதில் இருபது .

இதென்ன எழவுக்கு  நம்மள ரவுண்ட் கட்டுது?.” எலி,பல்லி எதுவும் செத்துக் கிடக்கவில்லை என்பதை நான்கு முக்கு மூலைகளையும் பார்த்து உறுதிப்படுத்தியாயிற்று.ச்சூ.” அவனின் ஓசைக்கு எதுவும் அசையவில்லை. கழுத்தில் முடி போய் வெள்ளை தெரிந்த காக்கையொன்று இவனை தலையைத் திருப்பிப் பார்த்தது. ஒரு வேளை அதுதான் இக்கும்பலின் தலைவனாக இருக்கும். டிவிஎஸ் 50 ஐ ஓட்டிக் காட்டும்போது தலையை புரட்டிப்பார்த்ததால் உரிமம் மறுக்கப்பட்ட பூச்சை தாவூதாகவும் இருக்கலாம்.கையை வீசினான்.வீசின திசையில் நின்றிருந்த மூன்று காக்கைகள் நெஞ்சு தணிந்து நிமிர்ந்தன.பறக்கவில்லை.ஓடிப் போய் விரட்டினான்.மனமின்றி எழுந்து பறந்து மறு பக்கம் வந்தமர்ந்துக் கொண்டன.

கல்லும் குச்சியும் கிடைக்கிறதா எனத் தேடினான்.ஒன்றுமில்லை. அடித்தொண்டையிலிருந்து சளியைத் திரட்டி உதட்டைக் குவித்து காறித் துப்பினான்.அது அவனிலிருந்து அய்ந்தடி கூட  தாண்டவில்லை.தான் செய்ததை நினைத்து அவனுக்கே பரிகாசமாக இருந்தது.

”சாப்புல வச்சு தன் கைய்ல சோறுண்ட காக்கய அப்பா எப்படி வசப்படுத்தினாரு?” என்பதைக் கேட்டு தெளிவதற்கு அப்பாவுமில்லை.அக்கதையை தனக்கு சொன்ன உம்மாவும் இல்லை.

காக்கச்சி நாற்றத்தின் வெக்கை. முடி தீய்ந்த நெடி உள்ளுக்குள் ஏறாமலிருக்க மூச்சையடக்கினான்.“காக்கை காக்கை நாய்க்காக்கை.”தான் இப்படி கத்துவதைக் குறித்து நூகு வியந்தான்.“காக்கைகளோடு ஏன் மல்லுக்கட்ட வேண்டும்? அதன் பாட்டுக்கு அது நிற்கிறது. நாம் அதைப் பார்ப்பதைப்போல அதுவும் நம்மைப் பார்க்கிறது.நமக்கு ஒத்ததாக இல்லாத உயிரிகள் மேல் ஏன் இத்தனை பகையும் வெறுப்பும்?.”

ஒரு காக்கையிடமிருந்தும் பேச்சு மூச்சில்லை. கிட்டத்தட்ட நாற்பது இணை கண்கள் தன் உடலின் மேல் பூக்களைப்போல விழுகின்றன.”அவைகளை வரைந்து பார்த்தால்…? உதடுகளாகத் தோன்ற வாய்ப்பில்லை.கரிக்கட்டையால் புள்ளிக் குத்தின மாதிரிதான் இருக்கும்….ச்சீ இதென்ன தேவையற்ற கற்பனை.” எழும்பத் தோன்றவில்லை. தன் அசைவாட்டத்தால் அவை பறந்து விடக்கூடாது…. எண்ணங்களைத் தொடர விட்டபடியே படுத்தே கிடந்தான்.

ஒரு வேளை இப்படியும் இருக்கலாமோ…. எதை ஆட்டினாலும் அசைத்தாலும் பறக்காமலிருக்கக் காரணம்….? காக்கை சித்தரின் ஞான மரபு தொடர்ச்சியாகவும்  இருக்கக்கூடும். அவரைப் போலவே தங்கள் தங்கள் இறக்கைகளுக்குள்  என்னென்ன சித்துக்களையெல்லாம் இவை செருகி வைத்திருக்கின்றனவோ?.” குறுக்கு மறுக்கான எண்ண ஒட்டங்கள்.  “ தானாக தெளியட்டும்என்ற தன் சித்தத்துடன் குழப்பத்திற்குள்  கிடந்தவனுக்கு பெயர்த்தியை பள்ளிக்கூடத்தில் கொண்டு போய் விடும் நேரம் நெருங்குவது நினைவிற்கு வர ஆசனங்களைத் தொடர்ந்தான்.

ஒரு மணி நேர ஆசன செய்கை பட்டியலில் இறுதியாக மகராசனம் என்னும் முதலையாசனம். கவிழ்ந்து கிடந்து செய்வது.தரையில் விரிப்பை விரிக்கும்போது விலாப்புறத்தின் வழியாக அவற்றைக் கவனித்தான்.காக்கைகளின் எண்ணிக்கைக் கூடியிருப்பது போலிருந்தது.

இரு கைகளின் முட்டி இணைப்பில் நாடியை மட்டும் வைத்து தலையை அந்தரத்தில் நிறுத்தும் ஆசனம்.உடலுடன் தொடர்பற்ற தலை. தலையென்றவுடன் குடை லெப்பை நினைவிற்கு வந்தார். இரண்டு கவட்டைகளையும் அகட்டி அகட்டி நடப்பவருக்கு வேறு மாதிரியல்லவா பெயர் வைத்திருக்க வேண்டும்?.

அவர் பார்வையில் பொத்தல் விழாத இடம் வானம் மட்டும்தான் என அவரை முன்னே போக விட்டு ஊரில் பேசி சிரிப்பார்கள்.நூகு மகராசனத்தில் கிடந்த அதே அமைப்பில்தான் அவர் அதை செய்திருந்தார். மாட்டுக்கறி பொதிகளுக்கு மேல் ஆட்டுக்கால்களை குறுக்காக அடுக்கி  அதற்கு மேல் ஆட்டுத் தலையையும் வாங்கி வைத்து மீதமாகிய  காசை தன் பைக்குள் ஆக்கிய குடை லெப்பை.அவ்வளவு கவனத்துடன் சன்னமாக ஆட்டிறைச்சியை வெட்டுவது போல வெட்டியும் ஒரு துண்டிறைச்சி மட்டும் ஹல்வாத் துண்டு அளவில் களரித் தாளத்தில் கிடந்ததை வைத்துதான் களவு பிடிபட்டது.

இப்ப கணக்கு சரி”.விடை கிடைத்த மகிழ்ச்சியில் விரிப்பை சுருட்டி எறிந்தான்.சில காக்கைகள் ஆறடி உயரத்திற்கு பறந்தெழும்பி சற்று இடம் மாறி அமர்ந்தன.திடீர் மகிழ்ச்சியில் அவ்வாறு எழுந்தமர்ந்தவை எத்தனை என்பதை அவன் எண்ணவில்லை.

சவாசனத்தில் கிடந்து கொஞ்ச நேரம் கண்ணயர்ந்ததால் காக்கைகளுக்கு  தன்னை  ஒரு பெரிய இறைச்சி துண்டமாகத் தெரிந்திருக்கிறது என்ற  ஞானமானது நூகின் தலைக்குள் குதித்து வெளுத்தது. குப்பைகளை தெருவில் போடுபவர்களுக்கு போன வாரம்தான் நகராட்சி தண்டமடித்தது.

விடையை விரித்துக் காட்சியாக்க  மீண்டும்  சவாசனத்தில் கிடந்தான். வானம் தெளிந்தும் வெண் சிதறல்களால் கலங்கியும் கிடந்தது. நீலமும் வெள்ளையும் ஆக முடியாத  அவசத்தில் நிறங்கள் சலித்துக் கொண்டிருந்தன.

நேர் மேலே  உள்ள வானம் தெளிவாகவும்  புகை வரித்தீற்றல்களுடனும் துலாம்பரமாகக்  கிடந்தது. அருகிலிருந்த முகில் குவையிலிருந்து வெளிப்பட்ட பருந்தொன்று அவன் தலைக்கு நேர் வலப்பக்கம் இறக்கைக்கட்டி  நின்று மிதந்தது. வலப்பக்கம் ஒரு முறை இடப்பக்கம் ஒரு முறை என அரை வட்டமடித்து விட்டு வடக்கு நோக்கி பறந்தது.

வானொலியில்  இந்தி படப்பாடல்கள் ஒலித்துக் கொண்டிருக்க நூகு ஒருக்களித்தான். “ ஆஷ் நிராஷ் கே தோ ராகோன் சே துனியா துனே சஜாயிஎன முஹம்மத் ரஃபி துயரார்ந்துக் கொண்டிருந்தார். காக்கைகளிலிருந்து அவனைத் திருப்பிய வரிகளின் பொருளில் உருகத் தொடங்கினான். மனத்தில் திரை கவிழ்ந்திட  இமைகள் வெட்டி இறங்கிக் கொண்டிருந்தன.

காக்கைகளிலிருந்து தப்பியாக வேண்டுமென்றால் அவைப்பற்றி நினைக்காமலிருப்பதுதான் சிறந்த உத்தி என்ற மன அறிவியல் விதிப்படி  இதயத்தையும் மனத்தையும் கஜ்ஜத்தின் பக்கம் திருப்பினால் நல்லது என  பட்டது.

அவன் வீட்டில் பெருத்த  இறைச்சிக் கண்டம்  வாய்க்கின்றதோ  இல்லையோ வறட்டிய மாட்டிறச்சி துண்டங்களை  முட்டையில் முக்கி பொரிக்கப்படும் சாப்ஸ் கறிக்கு  மாதம் ஒரு தடவை இடமுண்டு. இது  கஜ்ஜத்தின் கைச் சிறப்புதிருமணமான புதிதில்  “மச்சானுக்கு பிடிக்கும்என மாங்கி மாங்கி செய்தாள். கால் நூற்றாண்டை கடந்த பிறகு இப்பொழுதெல்லாம் வருடத்திற்கொருமுறை அதுவும் ஹஜ்ஜுப்பெரு நாளைக்கு மட்டும்தான் என்றாகி விட்டது.

எட்டு வருடங்கள் உணர்வின்றி கிடந்த இஸ்ராயீல் பிரதமர் ஏரியல் ஷரோனின் மூக்கினருகே  அவருக்குப் பிடிக்கும் என்பதால்அசைக்கப்பட்ட இறைச்சி லாலி பாப் பற்றி என்றோ வாசித்திருந்தான்.அது இப்போது நினைவில் குதித்து வரஅட நசீபு கெட்ட கெழட்டு மாடு.’’வாய் கசந்து துப்பினான்.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

சொல் விளக்கம்:

சக்குசக் என்ற அறபி பதத்தின் திரிபு. இதன் பொருள் அய்யம்.

வாடா மூடி  -- பரு அரிசி மாவில்  தட்டும் மூடியுமாக  வெங்காய கறி உள்ளடக்கத்துடன் எண்ணெய்யில் பொறித்தெடுக்கப்படும்  சிறு கடியின் மேல் தட்டு


------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

சொல் விளக்கம்:

சக்கு – சக் என்ற அறபி பதத்தின் திரிபு. இதன் பொருள் அய்யம்.

வாடா  -- பரு அரிசி மாவில்  தட்டும் மூடியுமாக  வெங்காய கறி உள்ளடக்கத்துடன் எண்ணெய்யில் பொறித்தெடுக்கப்படும்  சிறு கடி.

நசீபு - விதி


No comments:

Post a Comment

An Evening Train in Central Sri Lanka