Sunday, 13 June 2021

ஒளியிலே தெரிவது— நூல் பார்வை

 


நண்பர் இயல்வாகை அசோக் அனுப்பித்தந்த  ‘ஒளியிலே தெரிவது ‘ ( ஆசிரியர்: நிவேதா ). மொத்தம் 30 பக்கங்கள் கொண்ட  சிறு நூல். பூவுலகின் நண்பர்கள் வெளியீடாக வெளிவந்த நூல். தற்சமயம் அச்சில் இல்லை. பிடிஎஃப் கோப்பாக கிடைக்கின்றது.  ஒளி மாசு தொடர்பாக   நான் அறிந்தவரை தமிழில் இது முதல் நூல் என்று கூட சொல்லலாம்.

 

தொழில் நுட்பம் சார்ந்த செய்திகளை  சுவை தமிழில்  திருகலற்ற  நடையில்  கொடுத்திருப்பது நூலின் வெற்றி. மிகச்சில எழுத்துப்பிழைகள் உள்ளன. ஆசிரியரிடம் பேசினேன். விரிவாக்கப்பட்ட  இரண்டாம் பதிப்பை அடுத்த வருடம் கொண்டு வரவிருப்பதாக சொன்னார்.

------------------------

 

இலங்கை வானொலியின் ஒன்பது மணி செய்திகள் முடிவடைவதற்குள் வீட்டின்   ஓடைக்கதவு, முற்றத்து கதவுகள் சாத்தப்பட்டு  உறக்கத்திற்கான ஆயத்தங்கள் தொடங்கி விடும்.. அகில இந்திய வானொலி  திரு நெல்வேலி நிலையத்திலிருந்து  மதுரை காமராஜர் பல்கலைக்கழக அஞ்சல் வழிக்கல்வி ஒலிபரப்பு  நடக்கும் பத்தரை மணிக்கெல்லாம்  இரவின் கால் பகுதிக்குள் கனஜோராக காலிறங்கிக் கொண்டிருக்கும்.

 

சேதாரமில்லாத இரவு மனிதனுக்கு ஒரு மர்மத்தை அளித்தது. அந்த மர்ம குகைக்குள் ஜின்கள், அருவங்கள், நீத்தாரின் ஆவிகள் உள்ளிட்ட பல வாழ்ந்திருந்தன. அகாலங்களிலிருந்து  எழும் இனம் புரியா குரல்கள் இரவை இன்னும் ஆழமும் அடர்த்தியும் கொண்டதாக்கின.  இருளில் நிற்கும் ஒற்றை மரத்திற்குள்  அவ்வளவு அமானுஷ்யக்கதைகள். இம்மாயங்கள்தான்  நாம் பகல்களினால்  நசுங்கி விடாமல் தடுத்திருந்தன. நாம் இளைப்பாறுவதற்கும் திகில் கலந்த கிளர்ச்சி பெறுவதற்குமுரிய மயக்க மாயா திண்ணையொன்றை இரவு நமக்கு உருவாக்கியளித்தது.  நாமும் அதில் எல்லாமுமாக இருந்தோம்.

 

நாம் இன்று மின் ஆழிக்குள் இரவை முக்கி விட்டு  ஒளியும் இருளுமற்ற மெய் நிகர் போலிக்கரங்களில் நம்மை நாம் ஒப்புக் கொடுத்திருக்கின்றோம்.

 

நரேந்திர மோதி தலைமையிலான ஒன்றிய அரசு கொண்டு வந்த சட்டத்திற்கேற்ப அன்றைய அதிமுக தலைமையிலான தமிழ்நாட்டரசு   2019 ஆண்டு  தமிழகத்தில் கடைகள், வணிக நிறுவனங்கள் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் செயல்படலாம் என ஒப்புதல் வழங்கி அரசு அரசாணையொன்றை வெளியிட்டது. நீர் நிலம் காற்றை தின்று விட்டு  இப்போது இரவின் மடிக்குள்ளும் கை வைக்கிறது பெரு நிறுவனங்களுக்கான  அரசு.

 

இயற்கைக்கு ஆதரவான குரல்கள் எழும்போதெல்லாம் அறிவியலுக்கும் வளர்ச்சிக்கும் இவர்கள் எதிரானவர்கள் என்ற முத்திரையை அணிவிக்க ஆள்வோரும் பெரு நிறுவனங்களும் தவறுவதில்லை.

 

அறிவியலுக்கு நாம் எதிரானவர்கள் இல்லை. ஆனால் அறிவியலின் அக்குளில் ஒளிந்திருக்கும் சூரிக்கத்தியையும் கணக்கிலெடுக்கச்  சொல்கின்றோம்.

 

உலகின் தலை சிறந்த அறிவியலாளர் வரிசையில் வைத்து பார்க்கப்படும் தாமஸ் ஆல்வா எடிசன்,  மின்சார கண்டுபிடிப்பிற்கான போட்டியில் எதிர் பக்கத்தை தோற்கடிக்கும் மூர்க்கத்தில்  யானை உள்ளிட்ட சொல்லற்ற உயிரிகளை அநீதமாக கொன்றொழிக்கின்றார். (  நூல் பக்கம்: 9,10,11 )  சூரிக்கத்திகள் மெல்ல விரிகின்றன.  நமது இரவு ஆக்கிரமிப்பினால் எண்ணற்ற உயிரிகளுக்கு நாம் எல்லா வகையிலும் ஊறு விளைவிக்கின்றோம். ஊறு ஏற்படுத்துதல் என்பது  ஏதோ ஊறுகாய் தொட்டுக் கொள்வது போன்றல்ல. இரவை சீரழிப்பதின் வாயிலாக  பன்மய உயிரிகளை நாம் இனப்படுகொலை செய்கின்றோம். இதற்கான சான்றுகளை அள்ளி இறைக்கின்றது நூல்.

 

அறிவு வளர்ச்சியிலும்  தேடலிலும் மனிதன் ஏனைய உயிரிகளை விட மேம்பட்டவன்தான். தேங்கியிருப்பதென்பது அவனுடைய இயல்புக்கு மாற்றமானதும் கூட. அதற்காக மின்சாரம் உள்ளிட்ட புதிய கண்டுபிடிப்புகளினால்  விண்ணையும் மண்ணையையும் ஒரு குவளை நீராக்\ குறுக்கி குடித்து விடத் துடிக்கும் அவனின் மூட எத்தனத்திற்குள்  வலுவில் குறுக்கிட வேண்டியுள்ளது.

 

“ஓளி என்பது புனிதமானது என்ற தத்துவத்தில் முதலில் மாற்றம் கொண்டு வர வேண்டும். இயற்கையே எல்லாம்” ( நூல் பக்கம்: 29 ) .

 

 அகத்தில் ஆயிரமிருள் மண்டிக்கிடக்க புற ஒளியை ஆராதித்து என்ன செய்ய? இருளில்லாமல் ஒளியில்லை ஒளியில்லாமல் இருளில்லை.  இருளும் ஒளியும் இயற்கை என்ற மொத்த வடிவின் ஒரு அங்கம். அதனதற்குரிய  பங்கை கூட்டாமல் குறைக்காமல் கொடுப்பதற்குத்தான் இத்தனை மெனக்கெடல்களும்.

 

பகலை நாம் இரவாகவோ அல்லது வேறு எதுவாகவோ மாற்றாமலிருக்கும்போது இரவின் மீது   மட்டுமே   ஏன் பகல் வண்ணம் பூசுகின்றோம்? . இது இரவின் மீதான  வன்செயல் இல்லையா?  இரவை நிரந்தரமாக கொல்லும்  நமது முயற்சி ஒருபோதும் வெற்றி பெறப்போவதில்லை.  இரவு என்ற நதிப்பெருக்கின் முன் தலை முட்டும் எவரும்   அவர் தாமே  மாய்ந்து  போவார்கள் என்ற பேருண்மையை மனிதனைத்தவிர இந்த பிரபஞ்சத்தில் உள்ள எல்லோரும் நன்கறிந்தேயுள்ளனர்.

 

இயற்கைக்கும் சூழலியலுக்கும்  குரல் கொடுக்கும் ஓர் அரசு தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் சூழலில் முந்தைய அதிமுக அரசின்  2019 ஆண்டு அரசாணை யை  பின்வலித்து விட்டு ஒளி மாசு குறித்து கவனஞ்செலுத்தினால்  நல்லது.

 

 

 

“ மீண்டும்

மீண்டு மீள முடியாத

 உலகைத் தேடிச் செல்கிறது

 இவ்விரவுகளின் பாதைகள்.

 

இப்போது இந்த

உலகில் மிச்சமிருப்பது

நானும், இவ்விரவும் மட்டுமே.”

 

                                                           --- ரகுபதி


https://www.hindutamil.in/news/supplements/uyir-moochi/686066-light-pollution.html?fbclid=IwAR2ADxY4vd69XLRGZaRGKDwZ6feG2SrBR01hBh4G8c-RtkTUfSr1EBKguzU

No comments:

Post a Comment