Friday, 11 June 2021

டி ஏ எஸ் மாமா

 



இங்கிலாந்து அரசியார் எலிசபெத்  சென்னைக்கு 1961 இல் வருகை தந்த போது அப்போது அவர் திருச்சிராப்பள்ளியில்  படித்துக் கொண்டிருந்த சமயம். நிறைந்து வழிந்த தொடர்வண்டியில் அரசியை காணும் ஆவலில்  சென்னை வரைக்கும் தொங்கிக் கொண்டே சென்றிருக்கின்றார். அந்த நெரிசலில் அவரின் ஒரு கால் சப்பாத்து  தவறிப்போயிருக்கின்றது.


 

இது போன்ற சொல்லப்படாத நிறைய கதைகளுடன் அந்த மனிதர் இன்று சென்று விட்டார்.

 

எனது தமிழாசிரியர் அபுல் பரக்காத் அவர்களின் இறப்பு பற்றி நான் எழுதியதுதான் கடைசி நினைவேந்தல் குறிப்பு.  அதற்கும்  இந்த குறிப்பிற்கும் இடையே எனது இளம் பருவத்து நண்பர்கள் முன்று பேர் இறைவனடி சேர்ந்து விட்டனர்.  நினைவேந்தல்கள் தேய் வழக்காகி விடும் என்ற அயர்ச்சியில் எதுவும் பதியவில்லை.

 

தொடர் இறப்புகளினால் மரத்து போயிருந்த துயர நினைவுகள் மீண்டும்  டிஏஎஸ் மாமவின் பிரிவினால் பச்சையாக திறக்கின்றன .  அனைவர் மீஹ்டும் இறப்பு தன் இரத்த துளிகளை தெளிப்பதின் வழியாக தன்னைப் புதுப்பித்துக் கொண்டேயிருக்கின்றது.

 

காயல்பட்டினம் அல் ஜாமிவுல் அஸ்ஹர் ஜுமுஆ மஸ்ஜிதின் தலைவரும்  காயல்பட்டினம் மருத்துவ அறக்கட்டளை மருத்துவமனையின் நிறுவனர்களில் ஒருவரும்  அரிமா சங்கம்,  அரசு நூலக வாசக வட்டம் உள்ளிட்ட பல்வேறு நலன்புரி பணிகளில் ஈடுபாடுள்ள  டி ஏ எஸ் அபூபக்ர் அவர்கள் இன்று 11/06/2021 வெள்ளிக்கிழமை காலை ஆறு மணிக்கு பெருந்தொற்றின் விளைவாக திருச்சிராப்பள்ளியில் வைத்து  தனது எண்பதாவது வயதில் காலங்கடந்து விட்டார்.

 

நான் அவரைப் பார்க்கும்போதெல்லாம்  நீங்கள் முன்னாள் இளைஞர் மட்டுமில்லை இன்னாளிலும்  இளைஞர்தான் என்பேன். என் தோளைத்தட்டியவாறே  “ என் நட்பு வட்டங்களில் இளையோர்தான் கூடுதல். அதிலும் நான் இளைஞந்தான் “ என அளந்து சிரிப்பார்.

 

அவரின் உற்சாகமான அன்றாட வாழ்க்கைக்கு முன்னால் அவரின் வயது தோற்று பின் வாங்கி விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். ஐவேளைத்தொழுகையை ஜமாஅத்துடன்  தொழுபவர் பொது நிகழ்ச்சிகள், தனிப்பட்ட சந்திப்புகளில் நேரந்தவறாமையை கடைபிடிப்பவர். அழைக்கும் பொது நிகழ்வுகளுக்கு தவறாமல் வந்து விடுவார்.

 

 பள்ளிவாசலின் தலைமை பொறுப்பை ஏற்றதற்காக அவரை வாழ்த்தினேன்.  “ இதுல என்ன வாழ்த்துறதுக்கு இருக்குது?”  என்றவாறே அந்த வாழ்த்தை என்னிடம் திரும்ப தந்து விட்டு  அவர் பாட்டுக்கு  தொப்பியும் கையுமாக போய் விட்டார். யார் மேலும் விருப்பு இல்லை. யாரையும் குறை கூறியதில்லை.  பொது விஷயங்களில் நீதம்  தவறாத பார்வை. அவரின் தனிப்பட்ட வாழ்வில் ஸலஃபி போக்கு இருந்தாலும் எல்லா பிரிவாரிடமும்  எந்த தடையுமின்றி தொடர்பாடியவர்.

 

அவர்களின் மரபு வழி நகைத்தொழில் யாழ்ப்பாணத்தில் இருந்ததால் அங்குதான் அவரின் கல்வி நடந்திருக்கின்றது. அன்று கற்ற தமிழ் இலக்கியங்களை அடி பிறழமால் நல்ல தமிழில் கணிரென மீட்டுவார். ஆங்கிலமும் சிங்களமும்  சரளம். இந்தியும் தெலுகும் சமாளிப்பார்.

 

ஒரு நாள் அவரை  கடற்கரைக்கு அழைத்து சென்ற போதுதான் அவருக்கு தெலுகும் தெரியும்  என்பதை விளங்கிக் கொண்டேன்.  தனது மரபு வழி நகை வணிகத்தின் போக்கு  சொல்லிக் கொள்ளும்படியாக இல்லையென்று ஆகும்போது பட்டப்படிப்பை நிறைவு செய்து இந்திய  கடறபடையில் மூன்று வருடங்கள் பணியாற்றியிருக்கின்றார். 


அதன் பிறகு  தனியார்  வங்கியில் நீண்ட காலம் பணியாற்றியிருக்கின்றார்.  வட்டியின் உறுத்தலினால் அதிலிருந்து விலகி பொது வாழ்க்கையில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டே ரத்தினக்கல் வணிகமும் புரிந்தவர். ஆந்திராவின் பெரும் பகுதியை  சுற்றியிருக்கின்றார். பேருந்து கிடைக்காததினால் சரக்குந்து ஒன்றில் ஏறி பயணித்த போது நோயினாலும் வறுமையினாலும் பாதிக்கப்பட்ட மனிதர்களுடன் அவருக்கேற்பட்ட பட்டறிவுகளை சொல்லும்போது  அழாமலிருக்க முடியவில்லை.

 

“ மாமா! இதை நீங்கள் எழுதலாமே?” என்றதற்கு “ அதுலாம் நீங்க தாம்பா எழுதனும் “ என்றார்.

 

இலங்கை தொடர்பான பேச்சு வரும்போதெல்லாம் “ மாமா! தோழிங்கள்லாம் சொவமா இருக்கிறாளுவளா?” என்றதற்கு  “ யாரப்பா கேக்குறே?” என்பார்.

 

“ என்ன மறய்க்கிரியளே! யாழ்ப்பாணத்துல  படிக்கும்போது உள்ள தோழிமார்”

 

அவரின் முகம் மலர்ந்து  “ அது எப்படிப்பா இல்லாமா இருக்கும்?” என்பார்.

 

மாமா எப்போதும் தனியர்தான். அவரின் பொது / தனி  வாழ்க்கையிலிருந்து நான் அவதானத்ததிலிருந்து நான் வந்தடைந்த முடிவு. சுபஹ் தொழுகைக்குப் பின்னர் தேநீர் அருந்தப்போவது தொடங்கி  ஒரு நாளின்  பல சமயங்களில் அவரை பெரும்பாலும் தனியாகவே கண்டுள்ளேன்.  முதல் தோற்றத்தில் இறுக்கமானவர் போன்று தோன்றும் அவருடன் நாம் நெருங்கி உரையாடும்போது  ஒத்த வயதுக்காரனாகி விடுவார்.

 

எழுபத்தேழாவது வயதில் பல்கலைக்கழகமொன்றில்  ஆங்கிலம் முதுகலை படிப்பிற்காக சேர்ந்திருந்தவர் திருநெல்வேலியில் நடக்கும் வகுப்புகளுக்கு பங்கெடுக்க செல்லும்போது கையில் ஊர் தின்பண்டங்களை வாங்கிச் செல்வார். அதை அவருடன் பயிலும் பிராமண மாணவியொருத்தி உண்ண தயங்கியிருக்கின்றார். அதையே இவர் நகைச்சுவையாகவும்  சாதுர்யமாகவும் கையாண்டு அந்த வகுப்பறைத் தோழியின் முடிவை மாற்றியிருக்கின்றார். பெருந்தொற்றினால் இறுதித்தேர்வு தள்ளிப்போயிருக்கின்றது. அது இவரையும் கையோடு கூட்டிக் கொண்டு போகும் முடிவில் வந்திருப்பது தேர்விற்கு எங்கே தெரிந்திருக்கப்போகின்றது?

 

அரிமா சங்கமோ பல்கலைக்கழகமோ எங்கு சென்றாலும் தன்னுடைய முஸ்லிமல்லாத நட்புகளுக்கு அழகிய முறையில் இஸ்லாத்தை அறிமுகப்படுத்தி விடுவார்.

 

சென்ற வருட இறுதியில் பள்ளிவாசலில் என்னைக் கண்டு அழைத்தவர் “ கொடிக்கால் மாமாவின் வாழ்க்கை வரலாற்றை  ஆங்கிலத்தில் எழுதியிருக்கின்றார்கள். அதை எனது நோக்கிற்காக அனுப்பியிருக்கின்றனர். தம்பி நீங்களும் கொஞ்சம் வாசித்து அதன் மீது  உங்கள் கருத்தை சொல்ல இயலுமா?” என்று கேட்டார். வேலைப்பளு இருந்த போதிலும் டி ஏ எஸ் மாமாவிற்காக அதை வாங்கிக் கொண்டு ஒரு வாரத்தில் அதை வாசித்து முடித்து விட்டேன்.

 

நூலின் படியை திருப்பிக் கொடுக்க அவரது வீட்டிற்கு  செல்லும்போது  நல்ல நூலொன்றை வாசிக்க வாய்ப்பு தந்தமைக்கு அவருக்கு நன்றி கூறினேன். ஏற்கனவே  லியோபால்ட் அஸாத்தின்  ரோட்  டு மக்கா நூலின் தமிழாக்கமான “ எனது பயணம் “(மொழியாக்கிவர்: அபுல் ஹஸன் கலாமி) நூலின் படியையும் விமர்சனத்திற்காக எனது கையில் திணித்தார். எனக்கு விருப்பக் குறைவாக இருந்த போதிலும் அதையும் அவருக்காகத்தான் வாசித்தேன். அதை நான் வாசிக்காமல் விட்டிருந்தால் நான் பெரும்  அருள் நிதியொன்றை தவற விட்டிருப்பேன்.

 

டிஏஎஸ் மாமா வீட்டில் உரையாடிக் கொண்டிருக்கும்போது  சீராக அடுக்கப்பட்டிருந்த அவரது புத்தக அடுக்குகள் கண்களில் பட்டது. அவரின் இசைவோடு துழாவினேன். எம்.எம்.காரஸ்ஸேரி எழுதிய ‘ வைக்கம் முஹம்மது பஷீர் “ ( சாஹித்ய அகாதமியின் இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை ) நூலிருந்தது.

 

“ இது எனக்கு  வேணுமே “

 

“ படிச்சுட்டு திருப்பி தர்ற மாதிரிதானே “

 

“ அந்த ஐடியா இல்ல மாமா”

 

“ அது முடியாது “

 

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தேன்.

 

‘ சரி தராட்டா பரவாயில்ல. இத எங்க வாங்கினியோ?”

 

“ அதாம்பா நீங்க நடத்துன புத்தக கண்காட்சியிலத்தான் வாங்கினேன்”

 

அதற்காக அவரைப்பாராட்டினேன். அதிலெல்லாம் அவர் விழவில்லை.

 

நூலை சொந்தமாக்கும் முயற்சி தோற்றவுடன் ஒரு சமரச கட்டத்திற்கு வந்தேன்.

 

 

“ மாமா  நூல இரவல் தாங்கோ . சாஹித்ய அகாதமில இருந்தா நான் புதுசா வாங்கிர்றேன். இல்லன்டா ஒங்க புக்க வைச்சு  ஃபோட்டோ  கொப்பி எடுத்துகுர்றேன்” என்றவுடன் நூலைத்தந்தவர் தன் மேசையின் மீதிருந்த சிறிய குறிப்பேட்டினை எடுத்து  நூலின் பெயருடன் என் பெயரையும்  எழுதிக் கொண்டார்.




 

“ பஷீர்! இது புது பழக்கம்லா இல்ல. இங்க பாரு “ என்றவாறே கொஞ்சம் தாள்களை புரட்டினார். அவரின் இளைய மகனின் பெயர் எழுதியிருக்கின்றது. அவனுக்கு ஆங்கில நூலொன்ரை கடன் கொடுத்திருக்கின்றார். சற்று தொலைவில் நின்ற அவரது இளைய மகன் அவரைப்பார்த்து ஏதோ பகடியடித்தான்.

“ மாமா நானும் அப்படித்தான். ஒங்கள மாதிரிதான் நோட்டு போட்டு வச்சிருக்கிறேன். கடன் கொடுக்குற புக்கு வாங்குற ஆளு பேரு எல்லாம் தேதியோட எளுதிருவேன். அதோட இப்போ ஒங்கள்ட வாங்கீட்டு போற புக்குல பென்சிலால ஒங்க பேர எளுதிருவேன். நான் போய்ட்டாலும் வீட்ல கேட்டு வாங்கிக்கிர்லாம்” என்றவுடன் உற்சாகமானார்.

 

நான்கைந்து நாட்களுக்குள் அவரை மீண்டும் சந்திக்க நேர்ந்த போது சலாத்திற்குப்பிறகு அடுத்த பேச்சாக புத்தகத்தைதான் திரும்பக் கேட்டார். அதை ஒளிப்படியெடுத்த பிறகு ஒப்படைத்து விட்டேன். இப்போது அவரின் நினைவாக அவருடைய  மகனிடம் அந்த புத்தகத்தை கேட்கலாம் என்றிருக்கின்றேன்.

 

 மாமாவின் இறப்பு செய்தியை சில மாதங்களுக்கு முன் அவரை சந்தித்திருந்த கேரள ஆய்வாளர் ஒருவருக்கு அனுப்பியிருந்தேன். நான் இந்த பதிவை எழுதிக் கொண்டிருக்கும்போது அவரிடமிருந்து மறுமொழி வட்சப்பில் வந்து விழுந்தது. அதை நான்  மீள தட்டச்சாமல் அப்படியே படியெடுத்து இங்கு ஒட்டி விட்டேன்.

 

Yes I remember meeting him

Such an energetic man he was.

-----------------------------

இன்று மதியம் லுஹர் தொழுகையின் போது என் மீது  அன்பும் கரிசனமும் கொண்ட மருத்துவ தம்பி ஒருவரை பார்க்க நேர்ந்தது . “ தம்பி  நீ சொன்னபடி தடுப்பூசி போட்டுக்கிட்டேன்.”

 

“ அப்டியா காக்கா “ என்றவனிடம் “ சரி! டிஏஎஸ் மாமா இரண்டு தடுப்பூசி போட்டுக்கிட்டாரே . அவர் போய்ட்டாரே?” என்றேன்.

 

ஏதோ 80% . கொரோனாவிl ஏழு வகை மாறு வடிவம். டெல்டா என்று தொடங்கியவன் பேச்சைத்தொடரவில்லை.  எனக்கும் அதற்கு மேல் நிற்க முடியவில்லை.

 

நானும் மாயை நீயும் மாயை கொரோனாவும் மாயை தடுப்பூசியும் மாயை என வேதாந்தம் பேசிதான் இறப்பும்  இழப்பும் உண்டாக்கும்  பித்தை கடக்க வேண்டும் போலிருக்கின்றது.

 


-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment