Thursday 3 June 2021

சைக்கோல்



 

 

ஜூன்3. இன்று உலக மிதி வண்டி நாள்

 

 அல் ஜாமிவுல்   அஸ்ஹர் முக்கிலுள்ள ஸலீம் சைக்கிள் மார்ட்


ஆறாம் பள்ளி வளாகத்திலுள்ள எஸ்.எம்.டி.மிதி வண்டி நிலையம்


 ஹாஜியப்பா தைக்கா அருகிலுள்ள மேடை கட்டிடத்திலிருந்த  முருகன் சைக்கிள் கடை


கூலக்கடை பஜாரில் உள்ள அடுமை கடை,  குமரன் சைக்கிள் கடை

 

ஒரு மணி நேரத்திற்கு இருபத்தைந்து பைசா வாடகையில்  மேற்கண்ட கடைகளிலிருந்து ஏதாவது ஒரு கடையிலிருந்து வண்டி எடுக்கப்படும். . அரை மணி நேரத்திற்கும் வாடகைக்கு தருவார்கள். ஐந்து நிமிடம் தாண்டி விட்டால் ஒரு மணி நேர வாடகைதான்.

 

 கால் வண்டி அரை வண்டி முழு வண்டி என நிற்கும். எங்கள் உயரத்திற்கு ஏற்றவாறு எடுத்துக் கொள்வோம்.  அதற்கான பேரேட்டில்  மிதிவண்டியின்  பின்பக்க மட்கார்டின் வெள்ளை வண்ண வாலில் எழுதப்பட்ட எண்ணை மட்டும் பதிந்து கொண்டு கடைக்காரர் தந்து விடுவார். பெயர் முகவரி என எதுவும் தேவையில்லை. வண்டி பங்சர் ஆகி விட்டால் கடை வரைக்கும் ஓட்டிச் செல்வதில்லை. ரிம் எங்க கிழிந்தால் என்ன? என கடைக்கு பத்தடி முன்னர் வரைக்கும் ஓட்டி விட்டு  அதன் பிறகு மெல்ல இறங்கி நல்ல பிள்ளையாக சைக்கிளை ஸ்டேண்டு போட்டு வாடகையை கொடுத்து விட்டு பாஸாகி விடுவோம்.  நான்கைந்து நாட்களுக்கு கடையை மாற்றி விடுவோம்.  அதற்குள்  அவருக்கும் முகம் மறந்து விடும்.

 

ஓட்டத்தெரியாததால்  தெரு வரை உருட்டி  வந்த பிறகு குட்டப்பீ சதக், கொன்னி அஹ்மத், ஒய்ஸ் ஆகிய  மூன்று கூட்டாளிகளில்  எவனாவது  ஒருவனின்  தயவில்  மிதி வண்டியின் இருக்கையில் ஏறி அமர்ந்ததும் யானையின் மீதிருக்கும் பதட்டம் ஏறிக்கொள்ளும்.

 

 நான் ஏறி அமர்ந்ததும் இருக்கையை ஒரு கையாலும் ஹேண்டில் பாரை மறு கையாலும் பிடித்துக்கொண்டு தங்களது தோள்பட்டையால் என் குறுக்கில் முட்டுக் கொடுத்து ஓட்டம் தொடங்கும். கால் போகும் போக்கிற்கேற்ப விலாவும் வில்லாய் வளையும். “ ஏல  குறுக்க நெளிச்சா பொட்டியிலேயே அடிப்பேன்” என்ற மிரட்டல்.  தெற்கு வடக்காக மிதிவண்டியை பிரட்டும்போது பொறுமை மீறிய அவர்களின் கையால்  சூத்தாம் பட்டையில்  சுள்ளடி விழும்.

 

அம்பல மரைக்காயர் தெருவின் மொத்த  நீள அகலமும்  மிதி வண்டியின் முன் ரோதைக்குள் வழன்று  என் முகத்திற்கு வருவது போல ஒரு கனம்.  முன் உருளி நேராக செல்லாமல் தாறுமாறாக வளைக்கப்படும்போதெல்லாம்  தெருவும் விடாமல் அதற்குள் ஒட்டித் தொலைத்திருக்கும்.

 

என்னைப் பொறுத்தவரை ஹேண்டில் பார்,  முன் ரோதை , மிதிப்பான்  இம்மூன்றும்தான் ஒரு மிதி வண்டியின் அச்சாரம். இவைகள் என் கை, கால்களுக்குள் பணிந்த ஒரு நாளில்  மிதி வண்டியை ஒழுங்காக பெட்டியை வளைக்காமல் ஓட்டக் கற்றுக் கொண்டேன் .

 

ஆனால் மர்ஹூம் எஸ்.கே. மாமாவின்  இலக்கணத்தின் படி சைக்கிள்  என்பதற்கான இலக்கணம்  வேறு. அவரின் இளைய மகனும் தலைமை சைத்தானும் எனது அணுக்க கூட்டாளியுமான எஸ்.கே. ஸாலிஹிடம் ஒரு நாள் எஸ்.கே. மாமா எங்கேயோ போக அவசரமாக மிதிவண்டியை கேட்டிருக்கின்றார்.  அவர் வண்டியில் ஏறப்போகும் நேரம் பார்த்து “வாப்பா !  பெல் அடிக்காது” என்றிருக்கின்றான். “ சரி அதப்பாத்துகர்லாம் “ என நகர முனைந்தவரிடம் “பிரேக் அவ்வளவா பிடிக்காது”  என்றிருக்கின்றான்.

 

சூடு  தலைக்கேறிய அவர் “ஹப்பும் வீலும் இருந்தா போதுமே. அதான் சைக்கிள். அதுக்கு எதுக்கு அநாவசியமா  பிரேக் சீட் பெல்லுலாம்?” .

 

 

---------------------

 

மிதி வண்டிக்கான வாடகைக் காசு கிடைக்காத ஒரு நாளில்  வாப்பாவின் வார் பையிலிருந்து  அதை தேற்றிக் கொண்டேன். வாப்பா கணக்குகளில் துல்லியமான மனிதர். அதன் பிறகு அதற்கு நான் துணியவில்லை.  

 

ஒரு நாள் கடற்கரையிலிருந்து அதி விரைவாக மிதித்து வந்தேன். எதிரே வந்த இன்னொரு முழு வண்டியின் பெடல் தண்டில் போய் முழு வேகத்துடன்  எனது வண்டி தறி கெட்டு மோதி விழுந்தது.  சிறு பையனாதலால்  மன்னிப்பு. எனக்கு இளந்தலத்தில் சிறுகாயத்தை தவிர எந்த அடியுமில்லை.  ஆனால் வண்டியை ஓட்ட முடியவில்லை. ஒரு மாதிரி நெளிகிறது. பங்சர் வண்டிக்கான அதே முறையில்  மூச்சில்லாமல் உம்மா வீட்டு ஓடையில் பிள்ளையைப்போல  உருட்டிக் கொண்டு வந்து நிறுத்தி விட்டேன்.

 

மறுநாள் வண்டியை வெளியிலெடுத்த பெரிய காக்கா விஷயத்தை கண்டுபிடித்து விட்டார்.  பழுது பார்த்த அடுமை என்  காக்காவைப்பார்த்து  “ சாளே ! லாரில கொண்டு உட்ட மாதிரிலோ வண்டி  ப்ரேமே பெண்டாயீக்குது. எங்க  கொண்டு உட்டான் ஒந்தம்பி ” என்றிருக்கின்றார். பள்ளிக்கூட சஞ்சாயிகா சிறுசேமிப்பிலிருந்து இருபது ரூபாய்கள் தண்டம் வாங்கி விட்டார் காக்கா.

 

மிதி வண்டி நாட்களின் மறக்க முடியாத  நிகழ்வுகள் மூன்று.

 

முதல் நிகழ்வு தைக்காத்தெருவில் பாளையத்தார் வீட்டைத்தாண்டும்போது வீடு கட்டுவதற்கான குருத்த மண் கொட்டி வைத்திருந்தார்கள். அதில் சிக்கி வண்டி வெட்டி  தெருவை தாண்டிய ஒரு குமரிப்பெண்ணின்  இடது தொடையில் மோதி அவள் ஒரு பக்கம் நான் ஒரு பக்கம்  மிதி வண்டி ஒரு பக்கம் என விழுந்து கிடந்தோம். அந்தப்பெண் கதறியவாறே அவள் வீட்டின் முடுக்கிற்குள் ஓடி விட்டாள். என்னுடைய  வயதினால் முதுகு தப்பியது. இப்போது நினைத்தாலும் அந்த பெண் பிள்ளையின் அழுகுரலும் “ வாப்பா பாத்து ஓட்டு “ என மிதி வண்டியை தூக்கி என் கையில் தந்தவாறே  என்னை அந்த தெரு மனிதர்கள் மன்னித்து விட்டதும் நெஞ்சை அறுக்கின்றது, அவர்கள் அடித்திருக்கலாம்.  அந்த குற்றத்திலிருந்தாவது  நான் விடுபட்டிருப்பேன்.

 

இரண்டாம் நிகழ்வு.  உம்மா  தந்து விட்ட பொருளை என் பெரிய காக்கா வீட்டில் கொடுத்து விட்டு திரும்பும்போது மொகுதூம் தெரு பணப்பொட்டி டாக்டரின் மருத்துவமனையருகில் என் முதுகில் நெருப்பால்  இழுத்தாற்போல் சுரீரென்று ஒரு சாட்டையிழுப்பு. அடித்து விட்டு ஓடியவனை  பார்த்து விட்டேன். எந்தக்காரணமுமில்லாத வம்பான அடி. வீட்டிற்கு போய் சட்டையைக் கழற்றினால் முதுகின் குறுக்காக ரத்த வார்.

 

அடுமை காக்கா மிதிவண்டி கடையில் போய் இரண்டு ரூபாய்கள் கொடுத்து பழைய சைக்கிள் செயினை வாங்கி மூன்று நாள் மண் நெய்யில் கழுவி பதமாக்கி  அவன் வழமையாக நடந்து போகும் சிறு நெய்னார் பள்ளி வளாகத்திற்குள் அவனுக்கு கணக்கு தீர்த்தேன். அவன் வலுவானவன். அவனின் உலக்கை கையை எனக்கு நேரே வீசினான். தடுக்க முனைந்த  றம்புக்கணை அப்பாவின் மார்பில் அந்த அடி விழுந்தது, “ உம்மா” என்றவாறே அவர் ஒரு கணம் நிலை குலைந்து விட்டார். அந்த அடி மட்டும் என் மேல் விழுந்திருந்தால் நான் திருப்பியடைக்க முடியாத கடனாகவே அது போயிருக்கும்.

 

மூன்றாவது நிகழ்வு. அப்போது நான் முழு வண்டியை ஓட்டத்தொடங்கிய  நாட்கள்.  பரிமார் தெருவிற்குள் வளையும்போது மீன் அங்காடியை ஒட்டினாற்போல சீமை உடை மரம் மண்டியிருந்தது. அதற்குள் வெள்ளையும் செவலையும் கலந்த நாயயொன்று தன் பின்புறத்தை காட்டியவாறே தின்றுக் கொண்டிருந்தது. சரியாக அதன் பின்புறத்தில் போய் வேண்டுமென்றே  முன் ரோதையை ஏற்றினேன். “ வய் “ என்றவாறே  மூன்றடி தள்ளி விழுந்த பின் அது தப்பி விட்டது.  வண்டி தெருவிலும் நான் முள் உடையிலும்  கிடந்தோம். என்னை தூக்கி விட்ட அந்த தெருக்காரர் “ அடேய்  போயும் போயும் நாய் சூத்தாடா கெடச்சுது” என்று சிரித்துக் கொண்டே என்னைத் தூக்கி விட்டார்.

--------------------

வண்டி பழகும் நாட்களில் ஹேண்ட் பாரில் ஒருவன் பின்னிருக்கையில் இன்னொருத்தன் என ட்ரிப்பிள்ஸ் அடிப்பது, கையை விட்டு ஓட்டுவது  போன்ற சாகசங்களில் எனக்கு டபுள்ஸ் ட்ரிபிள்ஸ் மட்டுமே  முடியும். இந்த வயது வரை கையை விட்டு  ஓட்டும் துணிவு வரவில்லை.  புழுத்தி முத்து, காஜா, சேம்பாறி, அமீர்   உள்ளிட்ட கூட்டாளிகளெல்லாம் ஆறுமுகனேரி தங்கம் திரையரங்கிற்கு டபிள்ஸ் டிரிபிள்ஸ்தான்  ஈஸ்ட்மென் கலரில் வெளியாகும் சிவாஜி எம் ஜி படம் பார்க்க போவர்.  எனக்கு அந்த பட ஓட்டம் வாய்க்கவில்லை. அப்போது படம் பார்ப்பதில் பெரிய நாட்டமெல்லாம் இல்லை. 

 

ஒரு தேர்தல் நாளில்  உம்மா வீட்டு மிதிவண்டி காணாமல் போய் விட்டது. மிதி வண்டியின் மீதான தீரா விருப்பங்கள் ஒரு சம நிலைக்குள் வந்து விட்டிருந்தது. எப்போதாவது ஒரு தடவை தோன்றும்போது வாடகை வண்டியை எடுத்து ஊரை ஒரு ரவுண்டு அடித்து விட்டு வருவதுடன் சரி.

 

திருமணம் முடிந்தம் நாட்களில் என் பழைய வீடு நகரின் மையப்பகுதியில் இருந்ததால் எல்லா இடங்களுக்கும் நடந்தே செல்வேன். பதினைந்து வருடங்கள் கழிந்த பிறகு மிதிவண்டிக்கான விருப்பம் தோன்றிய ஒரு நாளில் தூத்துக்குடிக்கு போய் ஆசீர்வாத  நாடார் கடையில் இரண்டாயிரம் ரூபாய்களுக்கு மிதிவண்டி வாங்கினேன். வீட்டின் உள் நடையில் ஏற்றுவதற்காக அதற்கான சிமிட்டி சாய்தளமும் போட்டோம். நான் தொழில் நிமித்தம் சென்னைக்கு செல்லும் நாட்களில்  நடையின் மேலே உள்ள சாளர ஓட்டையில் கயிற்றைக்கட்டி முன் ரோதையை கட்டித் தொங்க விடுவேன். காற்று இறங்கும்போது டியூப் பழுதாகாமலிருக்க இந்த ஏற்பாடு,

 

மிதி வண்டியில் கடற்கரைக்குப்போகும் ஒரு மாலைடில்  முன்பு குர் ஆனை மனனமிட்டு தற்சமயம் மறந்து போன கூட்டாளி ஒருவன் நின்றிருந்தான். அவனை நான்  செல்லமாக முன்னாள் ஹாஃபிழ் என்றே அழைப்பேன். பேயாட்டம் தொடங்கி விடும். “ ஓய் ஒமக்கு பைக் ஓட்டத் தெரியுமா  ஓய்?” அப்போது நான் பைக் ஓட்டக் கற்றிருக்கவில்லை. மூளைச்சூடு தணியும் வரைக்கும் காத்திருந்து விட்டு அதன் பிறகு பின்னொரு வாய்ப்பிற்காக இப்போதைக்கு சமாதானம் ஏற்படுத்திக் கொண்டு விடுவேன். அவனைபார்த்தவுடன் நின்றுக் கொண்டு  வண்டியை மிதித்தேன். நான் எதிர்பார்த்த எதிர்வினை  அவனிடமிருந்து வந்தே விட்டது.

 

---------------------  

மிதிவண்டி  மனிதர் அப்துல்லத்தீஃப் காக்கா. தனது வண்டியின் பக்கவாட்டில் ஒரு இரும்பு பேழையை இணைத்திருப்பார். அதன் ஒரு பக்கம்  ஒலிபெருக்கி அளவில் ஓட்டைகள் போட்டிருக்கும்.

 

தகரப்பேழைக்குள் அவர் வைத்திருக்கும் வானொலிப்பேழையிலிருந்து  பாடல்கள் ஒலிக்க அவர் கடும் வேகத்தில் வண்டியை மிதிப்பார். அப்படியான ஒரு கடுகதியில் மிதிவண்டியுடன்  மகாத்மா காந்தி நினைவு தோரண வாயிலை  அவர் கடந்து கொண்டிருக்கும்போது அவரைப்பார்த்து உற்சாகம் கொப்பளித்த மாணவனொருவன் மிதிவண்டியின் பிய்ந்த டியூபுடைய ரப்பர் பட்டையால் அவர் முதுகில் சாத்தினான்.  ச்சப் என்ற ஒலி. ஆனால்  அது அவரை தொடவேயில்லை. அவரோ தன்  ஆன்மாவை கழற்றி மிதிவண்டியோடு ஓடவல்லவா விட்டிருக்கின்றார்   எந்த அலட்டலுமில்லாமல் மிதி வண்டி காற்றைப்போல அவரைக் கொண்டு போய்க் கொண்டிருந்தது. அவர்.  இது நடந்து முப்பது ஆண்டுகளாகி விட்டன. ஆறு மாதங்களுக்கு முன்பு அவரை  ஒரு கடையில் சந்தித்தேன். பழைய நிகழ்வுகளை சொல்லி “ பாட்டப்போட்டுட்டு அவ்ளோ வேகமா எங்க காக்கா போவீங்க?” என்றேன்.

 

“தூத்துக்குடிக்குதான்.”

 

தூத்துக்குடிக்கும்  காயல்பட்டினத்திற்கும் இடையே  முப்பத்தியிரண்டு கிலோ மீற்றர்கள். ஆக போக வர அறுபத்தாறு கிலோ மீற்றர்கள்.

 

“ அவ்ளோ தொலய்வுக்கு எதுக்கு காக்கா?”

 

   நகத்தூள் விக்க வாங்க “

 

“ இடையி;ல களவு பயம்?”

 

“அப்டி ஒரு சம்பவம் நடந்ததே இல்ல. நான் சரக்க ஜட்டுக்குள்ள அடிச்சுருவனே “ என கண்களை சிமிட்டினார். எழுபத்தைந்து வயதான மனிதரான அவர் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் வரைக்கும் தூத்துக்குடிக்கு  மிதி வண்டியில் போய் வந்துக் கொண்டிருந்திருக்கின்றார். இன்னும் அதே தர பேழையில் நாகூர் ஹனீஃபாவின் பாடல் ஒலிக்க தன் வீட்டு முடுக்கிற்குள் குறையா இளமையுடன் நுழைந்து கொண்டிருந்தார்.






 




இவர் போக இங்கிருந்து இருபத்துமூன்று கிலோ மீற்றர் தொலைவுள்ள ஆழ்வார் திருநகரியிலிருந்து சவ்வு மிட்டாய் விற்கும் முதியவர்  ஒருவர் தற்சமயம் வந்து போகின்றார்.

 

அக்கம் பக்கத்து ஊர்களிலிருந்து பழங்கள் உள்ளிட்ட உணவுப்பொருட்களை விற்பதற்காக  திரியும் வணிகர்கள் மிதி வண்டிகளில் வந்து செல்கின்றனர்.

 

 

அன்றைய மிதிவண்டிகளை  அதற்கு முன்னர் இருந்த குதிரை வண்டிகளைப்போலவும் இப்போதிருக்கின்ற ஆட்டோ பைக்குகளைப்போலவும்  அலங்கரிக்கின்றனர். ஹேண்டில் இரண்டு பக்கமும்  சாலை கவனிப்பு கண்ணாடிகள், ஹெண்டில் பாரின் இரு தொங்கலிலும்  வெட்டு ரெக்ஸின் நீளத்தொங்கட்டான்கள். முன்  விளக்குக்கான உறை, ஹப்புகளில் சிவப்புடன் பல வண்ணம் தோய்ந்த  பஞ்சுருளை.  செயின் கவர்  மேல் உரிமையாளர் பெயர் முகவரியுடன் எழுதப்பட்டிருக்கும்.  அனைத்து  இலக்கணங்களும்  பொருந்தி குதிரையும் பைக்குமாக  முயங்கி  நிற்கும்  குரைக்.

 

 

பழைய அலங்காரங்கள் ஒழிந்து  சேணமற்ற குதிரையைப்போல அம்மண மொட்டையாக மிதி வண்டிகள் ஆட்களை சுமந்து சென்றுக் கொண்டுதானிருக்கின்றன. ஊரிலும் நிறைய மிதிவண்டி பழுது நீக்கும் நிலையங்கள் உள்ளன என்ற செய்தி சற்று ஆறுதலடைய வைக்கின்றது.

 

 

அன்றைக்கு காவல்துறைக்கு அஞ்சும் ஒரே விஷயம் இருவர் போனால் அபராதம், முகப்பு விளக்கு போனால் அபராதம் என்ற மிதி வண்டி மீறல்கள் மட்டுமே. கூட்டாளி ஒருவனின் பழக்கத்தில் தொற்றிய பழக்கமொன்று.  தெருவில் நிற்கும் சைக்கிளின் மணி மூடியைக் கழற்றி கூலக்கடை பஜாரில் உள்ள நாடார் பழைய இரும்பு தரக் கடையில் இருபத்தைந்து பைசாவிற்கு விற்றிருக்கின்றேன். இரு முறை செய்ததாக நினைவு.

 

அண்மையில்  எனது மிதிவண்டியை பழுது நீக்க போகும்போது இளங்காலத்து நினைவில்  பழைய மணி மூடி ஒன்றைக்கேட்டேன். என்னிடம் ஐந்து ரூபாய்களைப் பெற்றுக் கொண்டு ஒன்றைத்தந்தார் கடைக்காரர். அது என் படுக்கையறை மாடத்தில் தொங்கிக் கொண்டிருக்கின்றது.

 

என்றைக்கு பைக் வந்து சேர்ந்ததோ அன்றிலிருந்து மிதிவண்டி ஆழ் நிலை உறக்கத்திற்குள் சென்று விட்டது. வீட்டின் பின் ஓடையில் வெய்யிலையும் மழையையும் குடித்தவாறே வருடக்கணக்கில் நின்றிருந்தது.

 

பெருந்தொற்றுக்காலத்தில்தான் அதன் மீள்வருகை விதிக்கப்பட்டிருக்கும்போல. இப்போது பைக்கும்  மிதிவண்டியுமாக இரண்டுக்குமே நீதமாக இருக்கின்றேன்.

 

ஆங்கிலத்தில் பை சைக்கிள.  நல்ல தமிழில் மிதி வண்டி, , ஈரிருளி. இலங்கையில் பொதுவாக பைசக்கிள்.  மீனுக்கும் மாணிக்கத்திற்கும் துறையான மேற்கு கடற்கரையோர பேருவளையில் பெசக்கிள். எனது மூத்த மச்சியின் மொழியில் சைக்கோல். என்னெவென்றாலும் என் உறவு அல்லவா? மச்சியின் மொழியே  இப்பதிவின் தலையாகவும் ஆகி விட்டது.


No comments:

Post a Comment