Sunday, 23 May 2021

முடி திருத்தக நினைவுகள்

 


 

முடி திருத்தி இரண்டு மாதங்களாகி விட்டது. கிளர்ச்சி மன நிலையில் எல்லா முடிகளும் அடங்க மறுத்துக் கொண்டிருந்தன. ரமழான் காலத்தில் இரண்டாம் பொது முடக்கு தொடங்கியபடியால் வீட்டுக்கு வந்து வெட்டினால் எவ்வளவு என எனக்கு தெரிந்த முடி திருத்துனரிடம் கேட்டேன். இரு நூறு ரூபாய்கள் என்றார். கடையில் போய் வெட்டினால் நூறு ரூபாய்கள்தான். பஞ்சக் காலத்தை நினைத்து “ அப்படி முடி வெட்டவே வேண்டாம்” என சும்மா இருந்து விட்டேன்.


 

வீட்டிலும் யாரும் எனக்கு  வெட்ட துணியவில்லை.  முடி வளர்த்தாவது பெருந்தொற்று சூஃபியாகி விட  வேண்டியதுதான் என ஏறக்குறைய தீர்மானித்த வேளையில்தான் தளர்வுகளில்லாத நாடடங்கிற்கான  சனி, ஞாயிறு அவகாச அறிவிப்பு வெளியாகியது.

 

கூலக்கடை பஜாரில் இன்னொரு முடி திருத்தகத்திற்கு  போனால் அங்கு கொஞ்சம் பேர் காத்திருந்தனர். “ மதியம்  வாங்க காக்கா. ஃபிரீயாகத்தான் இருக்கும்” என்றான் கடையிலுள்ள தம்பி விஜயகுமார். என் வீட்டிற்கும் அவன் கடைக்கும் கிட்டத்தட்ட ஒன்றரை இரண்டு கிலோ மீற்றர் தொலைவு என்பதால் அவனின் செல்பேசி எண்ணை வாங்கி வைத்து விட்டேன்.

 

மதியம் அழைத்தேன். “ காக்கா ஏழு பேர் காத்திருக்கின்றனர்” என்றவுடன் என் வீட்டருகிலேயே ஒருவர் இருப்பது நினைவிற்கு வந்தது.  சடவு படாமல் உடனே கிளம்பி விட்டேன். அங்கும் எனக்கு முன்னர்  மூன்று பேர் காத்திருப்போர் பட்டியலில் இருந்தனர். காத்திருந்துதானே ஆக வேண்டும். முகமூடியின் காரணமாக மூச்சு திணறுவது போலிருந்தது. எனது முறை வர எப்படியும் ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகும் போலிருந்தது.

 

சரி என அருகாமையிலுள்ள உணவகத்தில்  தேநீர் குடிப்பதற்காக சென்றேன். “பாய்! நாளய்க்கி கட தொறக்கணும்னா நகராட்சில வந்து பாஸ் வாங்கணும். சாப்பிடறதுக்கு  அனுமதி கெடயாது. பொட்டலந்தான் கொடுக்கணும். அதுவும் கடயில வச்சி கொடுக்கக் கூடாது.  தேவப்படுறவங்க  ஒங்க போன் நம்பருக்கு அடிச்சி கேக்கணும். நீங்க அவங்க விட்ல போய் கொடுக்கணும். இது கலெக்டர் உத்தரவு “ என்றவாறே கறுத்த மனிதரொருவர் தனது இரு சக்கர வண்டியில் கிளம்பினார். அவர்தான் நகராட்சி சுகாதார ஆய்வாளராம்.

 

இந்த களேபரத்தில் கடைக்காரரிடம்  தேநீர் கேட்டேன். அவர் “ டீ இல்லியே” என்றார். நான் வற்புறுத்தவும் “ கடுங்காஃபி போட்டுத் தாரேன் “ என்றவறே உடன் போட்டுத்தந்தார். என்னை சாட்டி அங்கிருந்த இன்னும் இருவருக்கும் காஃபி கிடைத்தது. கடைக்காரர்  நாளை கடை திறக்க முடியுமா? முடியாதா? என்ற தடுமாற்றத்தில் இருந்தார்.  கடையின் பின்பக்கம் அரவைப்பொறியில் நாளை காலை வடைக்கான பருப்பு ஆடிக் கொண்டிருந்தது.

 

தேநீர் குடித்துக் கொண்டிருந்த எங்களிடையே சூடான விவாதம். மூவரில் ஒருவர் தடையை ஆதரிக்க மற்றொருவர் “ ஒருத்தன் இரண்டு இட்லி  வேணுன்டு போனடிப்பான். போய் கொடுக்க ஏலுமா?” என்றார். நானும் என் பங்கிற்கு “ இந்த மாதிரி ஆவாத போவாத சட்டம்லாம் ஜனாபதியே போட்டாலும் செல்லாது “ என ஓங்கியடிக்கவும் தடையை ஆதரிப்பவர் இன்னும் கடுமையாகப் பேசினார். இதற்கிடையில் கடைக்காரர் தனது குழப்பத்தை மனைவியிடம் விலாவாரியாக எடுத்து சொல்லிக் கொண்டிருந்தார். நாங்கள் தேநீருக்கான காசை நீட்டினோம். வாங்க மறுத்து விட்டார்.

 

நாளை  மீண்டும்  நாடடங்கு  தொடங்கவிருப்பதால் மக்களின் ஓட்ட ஆட்டம் கூடுதலாகவே இருந்தது. மக்களின் அவசரத்தை பெரு நாள் தின நெரிசலுடன் ஒப்பிடவா? அல்லது இன்றே உலகம் முடியப்போகின்றது என அவர்கள் நினைத்துக் கொண்டார்கள் என எழுதுவதா?

 

முடி திருத்தகத்திற்கு திரும்பினேன். அங்கு அமர்ந்த கொஞ்ச நேரத்தில் எனக்கு தெரிந்த பெரியவர் ஒருவர் முடி திருத்த வந்தார். இன்னும் கொஞ்ச நேரத்தில் அவருக்கு தெரிந்த மற்றொரு பெரியவரும் முடி திருத்த வந்து சேர்ந்தார். இரண்டு பேருமே  பல வருடங்களுக்கு முன்பு அண்டைய ஊர்களிலிருந்து பிழைப்பிற்காக காயல்பட்டினம் வந்து குடியேறியவர்கள்.

 

இரண்டு பெரியவர்களிடையே உரையாடல் தொடங்கியது. இரண்டாவதாக வந்தவர் “ நான் 1947 லே பொறந்தேன். எழுபத்திரண்டு வயசாச்சி. ( அதுதான் வருடமென்றால் அவருக்கு எழுபத்தைந்து வயதாகி விட்டது). ஒங்களுக்கு என்ன வயசு?” என எனக்கு பழக்கமான பெரியவரைப்பார்த்து அடுத்த வினா விழுந்தது.

 

“ எனக்கு எண்பத்தாறு வயசாச்சி. “ ஆனால் ஆளைப்பார்த்தால் பத்து வயது குறைவாகத்தான் மதிப்பிடுவார்கள். மாஷா அல்லாஹ் உறுதி விளைந்த நெய் ரவை  தேகம்.

 

இரண்டு பேரிடையேயும் உரையாடல் மும்முரமாகியது.

 

பெருந்தொற்று அல்லாஹ்வின் கோபப்பார்வை எனத் தொடங்கி இருவரின் உடல் நலம், வணிகம் என சுற்றி வந்த பேச்சு சிலோன் பக்கம் திரும்பியது.

 

எனக்கு பழக்கமான பெரியவர்: “  நமக்கு சிலோன்ல  நாப்பத்தொன்பது வருஷம் போச்சு”

 

“ சிலோன்ல எங்க?”

 

“ குருநேகல் மாவட்டம் “ ( ஊர் பெயர் ஏதோ சொன்னார். மறந்து விட்டது )

 

“ என்ன யாபாரம்”?

 

“ புகையிலை, பலசரக்கு மொத்த ஏபாரம்.. சிங்கள ஆக்கள்டத்தான் கொள்முதல். நாம நம்ப  நடந்தா அவனுவோ நம்மள முழுசா நம்பிருவானுவோ . நல்ல யாவாரம்”

 

“  சிலோன்லேருந்து எப்ப ஊருக்கு வந்தியோ?”

 

“  ஆயிரத்தொள்ளாயிரத்தி எண்பதொன்பதிலே “

 

“ ஏன் வந்தியோ?”

 

“ ராஜீவ் காந்தி இந்திய அமைதி காப்பு படய அனுப்புன ஒடனே அங்க இந்திய துவேஷம் கெளம்பிடுச்சி. “

 

“ காயல்பட்டினம் வந்து எத்தன வருஷம்?”

 

“ அது ஆவப்போவுதே முப்பது வருஷத்துக்கு கிட்ட “

 

அதற்குப்பிறகு நடந்த உரையாடல்கள்  துண்டு துண்டான சங்கதிகளை  நோக்கி திரும்பவே நான் முடி கலைஞரிடம் பேச்சுக் கொடுக்க தொடங்கினேன். இதற்கிடையில் எனக்கு முன்னர் முடி வெட்டிக் கொண்டிருந்த முத்தாரம்மன் கோயில் தெரு முதியவருக்கு சவரம் எல்லாம் முடிந்து எழுந்திருப்பார் எனப்பார்த்தால் அவர் தனது ஒன்றன் பின் ஒன்றாக  தனது இரு கமுக்கட்டுகளையும் தூக்கினார்.

 

எல்லாம் முடியும் தருவாயில் முடி கலைஞரைப்பார்த்து “பாய் ! லொஹர் சோறு உண்டியளா?” எனக் கேட்டேன். வருகின்ற ஆட்களின் எண்ணிக்கையை நினைத்து அப்படி கேட்டேன். அதற்கு அவர் “ காலப்பசியறே  இப்பதான் சாப்பிட்டேன்” என்றார். அவர் அதைச் சொல்லும்போது மணி நாலேகால்.

 

“ அப்போ மதிய  சாப்பாடு எப்போ?”

 

“ அதுவா  இனிமே நைட்டுக்குத்தான்”

 

எல்லாமே புரண்டல்லவா கிடக்கின்றது. முடி கலைஞர் சேரன்மகாதேவிக்காரர். காயல்பட்டினம் வந்து முப்பத்து நான்கு வருடமாகி விட்டது. இப்படி சேர்ந்தாப்போல வாடிக்கையாளர்களும் வருமானமும் இதை விட்டால் இனி எப்போது வரும்? . இன்று தொடர்பிடியாக  வயிற்றைக்காயப்போட்டு  அவர் மனித முடியை வெட்டித்தள்ளியதை அவரது பிள்ளைகள் தங்களுடைய பிள்ளைகளிடம்  கொள்ளை நோய் கால பெருஞ்செயல்களில் ஒன்றாக கைமாற்றக் கூடும்.

 

முடி வெட்டி விட்டு கண்ணாடிக்கு முன் நின்று பார்த்தேன். வழுக்குப்பாறையில் எஞ்சிய மண் படலமாக கொஞ்சம் முடி அங்கு  எஞ்சியிருந்தது.



No comments:

Post a Comment