Saturday 15 May 2021

நல்லாசிரியர்

 

 


 

 

எனது தமிழாசிரியரும் நல்லாசிரியர் விருதாளரும்  காயல்பட்டினம் வரலாற்று ஆசிரிய ஆளுமைகளில் ஒருவருமான இப்னு ஷேகுனா ( ) அபுல் பரக்காத் (72) அவர்கள் நேற்றிரவு வெள்ளிக்கிழமை 09:30 மணியளவில் 14/05/2021 இறைவனின் பால் மீண்டு விட்டார்கள்.







கடைசி நிமிடம் வரை நல்ல உடல் நலத்துடனும் சுறுசுறுப்பாகவும் இருந்திருக்கின்றார். அண்மையில்தான் அவருக்கு திருச்சிராப்பள்ளியில் கண் அறுவை சிகிச்சை நடந்து நல்லவிதம் தேறி விட்டார். அங்குதான் இறந்திருக்கின்றார்.





பெருநாள் தினம் வரை தொடர்பில் இருந்தார். மனைவியின் சிகிச்சைக்காக திருச்சிராப்பள்ளியில் இருப்பதாகவும் பெருநாளைக்குப் பிறகு ஊர் திரும்பவிருப்பதாகவும் சொன்னவர் " காயல்பட்டினத்தில் நெய்னாமார்கள் " என்ற வரலாற்று தொடரை எழுதப்போவதாகவும் தெரிவித்திருந்தார்.





நான் எல்.கே.மேல் நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்போது அவர் எனக்கு தமிழாசிரியர். அப்போது கோபக்கார இளைஞராக இருந்தார். உறுதியான் நேர் குரல். அச்சமயம் நான் தேசிய மாணவர் படையில் இருந்தேன். என்னை ' நவ் ஜவான் ' என கிண்டலடிப்பார். பள்ளி நாட்களுக்குப்பிறகு அவருடன் எந்த தொடர்பும் இல்லை.





கடந்த இரண்டு வருடங்களாக காயல்பட்டினம் வரலாறு தொடர்பாக நான் ஈடுபாடு காட்டத்தொடங்கிய போது அன்னாருடனான உறவு கிட்டத்தட்ட இருபத்தேழு வருடங்களுக்குப்பிறகு மீண்டும் மலரத்தொடங்கியது.





மறைந்த எழுத்தாளர் தோப்பில் முஹம்மது மீரான் அவர்கள், அவர்  இறப்பதற்கு முன்னர் இறுதியாக செய்த இறை நேசச் செல்வர் உமரொலி( ரஹ் ) அவர்கள் தொடர்பான ஆய்வுக்கட்டுரைக்காக தோப்பிலை  அபுல் பரக்காத் ஆசிரியர் வீட்டிற்கு முதன்முதலாக அழைத்து சென்றிருந்தேன்.

 

 

காயல்பட்டினம் நெய்னாமார்களின் பின் தோன்றல்களான கொச்சி நெய்னாமார்களுக்கும் அவர்களுடைய வேர்களை கண்டறிய ஆசிரியர் பெரும் உதவியாக இருந்தார்.

 

 

காயல்பட்டினத்தை பூர்வீகமாக கொண்ட அன்னார் பிறந்த ஊர் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை.

 

 

காயல்பட்டின இறை நேசச் செல்வர்களின் வரலாற்றுக் கண்ணிகளை அறிந்த மிக அரிய ஆட்களில் அவரும் ஒருவர்.  மறைந்த வரலாற்றாசிரியர் ஆர்.எஸ்.அபதுல்லத்தீஃப் அவர்கள் காயல்பட்டின வரலாறு தொகுப்பதற்கு ஆசிரியரின் உதவி மகத்தானது. அப்துல்லத்தீஃப் மறைந்து சரியாக ஓராண்டு நிறைவில் ஆசிரியரும் இல்லை.

 

 

தமிழ் இலக்கியங்களிலும் இஸ்லாமியத்தமிழ் இலக்கியங்களிலும் ஆழ்ந்த புலமை மிக்கவர். தமிழைப்போலவே மலையாளத்திலும் நல்ல புலமை பெற்ற ஆசிரியர் மலையாளத்தில் பட்டயமும் பெற்றிருந்தார். ஆசிரியப்பணிக்கு அப்பால் அகில இந்திய வானொலியில் அறிவிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார். அந்த காலகட்டத்தில்தான் வைக்கம் முஹம்மது பஷீர் அவர்களை தூத்துக்குடியில் வைத்து சந்தித்ததாக சொன்னார்.

 

 

அன்னாரின் வயது மூப்பை மனத்தில் கொண்டு நீங்கள் அறிந்த காயல்பட்டின வரலாற்றை தொகுங்களேன். நீங்கள் சொல்ல சொல்ல நான் எழுதுகின்றேன் என்றெல்லாம் சொல்லிப்பார்த்தேன். நேரிலும் தொலைபேசியிலும் பல முறை வற்புறுத்தினேன். அவரால் நேரம் தரவே முடியவில்லை.

 

 

ஆசிரியரின் வீடு அரிதினும் அரிதான அரபுத்தமிழ், அரபு, தமிழ் கையெழுத்துப்படிகளின் களஞ்சியமாகும். பெற்றுச் செல்லும்  நிறைய பேர் அவற்றைத் திரும்பத் தருவதில்லை என வருந்தினார்.

 

 

அவரிடம் என் பெயரின் முன்னொட்டான ‘ சாளை ‘ க்கான விளக்கம் கேட்டேன். அதற்கு அவர் அளித்த விளக்கம், “ பண்டைய காயல்பட்டினத் துறைமுகத்திலுள்ள பண்டகசாலைக்கு உங்களின் முன்னோர்கள்தான் பொறுப்பாளர்கள். ‘ சாலை ‘ என்றிருக்க வேண்டும். அதுவே மருவி ‘ சாளை ‘ என ஆகி விட்டது. இனிமேல் நீங்கள் ‘ சாலை ‘ என்றே போடுங்கள் என அறிவுறுத்தினார். அவரின் இந்த கூற்றை எனது சாச்சியிடமும் ( உம்மாவின் தங்கை ) கேட்டு உறுதிப்படுத்தினேன். உறுதிப்படுத்திய தகவலை சொன்னதும் மிகவும் மகிழ்ந்தார்.

 

 

ரமழானின் இறுதி பத்தில் அவருடன் தொடர்பில் இருந்த அனைவருடனும் உறவுகளை புதுப்பித்துக் கொண்டதோடு சமூக வலைத்தளத்திலும் இளைஞராகவே இயங்கிக் கொண்டிருந்தார்.

 

 

நேற்று காலை அதுதான் வெள்ளிக்கிழமை காலை அவர் தனது மகனுடனான உரையாடலில் ‘ எனது பெயரைக் குறிப்பிட்டு நினைவு கூர்ந்தவர் , ஊருக்குப் போய் நெய்னாமார் வரலற்றை எழுதி விட வேண்டும் ‘ என தன் மகனிடம் தெரிவித்திருக்கின்றார்.

 

 

காயல்பட்டினத்திலுள்ள மனைவி வீட்டிற்கு கணவன் செல்லும் நடைமுறையைப்பற்றி பேச்சு வரும்போது “ காயல்பட்டினத்தில் மட்டுமில்லை. கேரளத்திலும் அரபகத்திலும் கூட இது நடைமுறையிலிருக்கின்றது. காயல்பட்டினத்தின் காழி அலாவுத்தீன் அவர்கள்,  மாமியார் கொடுமைக்காக மருமகளை தாய் வீட்டிலேயே இருக்கும்படி ஃபத்வா கொடுத்தார்கள் என்பதெல்லாம் அபத்தம். அது வரலாற்று இடைச்செருகலும் கூட. மனைவி வீட்டிற்கு கணவன் செல்வதென்பது ஒரு சமூக பண்பாட்டு நிகழ்வு. அதை அந்தக்கண்ணோட்டத்தில் பார்ப்பதுதான் சரி.” என வலியுறுத்தினார்.  பேச்சு பிலால் பள்ளிக்கருகில் கண்டெடுக்கப்பட்ட கிறிஸ்தவர்களின் எழும்புக்கூடுகள் பற்றிக் கேட்டேன். போர்த்துக்கீசியர்கள். ஃப்ரெஞ்சுக்காலனியாதிக்க காரர்கள் அல்லது அங்கு கிறிஸ்தவர்கள் குடியிருந்து அவர்களின் உடல் எச்சங்களாகவும் கூட இருக்கலாம் என்றார்.  இதுதான் எனக்கும் அவருக்கும்  கடந்த  05 மே அன்று நடந்த  இறுதி உரையாடல். அதன் பிறகு வாட்ஸப் வழி பரிமாற்றம். கட்டாக்கடைசி செய்தியாக ரமழானுக்கு பிரியா விடை கொடுத்து பாவமன்னிப்பை வேண்டியவராக  பெருநாள் வாழ்த்து மின் பதாகையொன்றை மே 13 அன்று அனுப்பியிருந்தார்.

 

 

வெள்ளிக்கிழமை இறப்பு நேர்வது என்பது இறந்தவர்  நல்லோர் என்பதற்கான அடையாளங்களில் ஒன்று என ஹதீஸ்களில் வாசித்திருக்கின்றேன்.

 

 

வெள்ளிக்கிழமைக்கு மட்டுமில்லை ரமழானுக்கும் அவர் மேல் நிறைய அன்பு போல. போட்டி போட்டுக் கொண்டு கையோடு கூட்டிக் கொண்டு போய் விட்டனர்.

No comments:

Post a Comment