Tuesday 27 April 2021

இயக்குநர் தாமிரா ( எ ) காதர் மொஹிதீன்


 

பெருந்தொற்று கொரோனாவினால் இன்று  காலஞ்சென்ற   நண்பரும் திரைப்பட இயக்குநருமான   தாமிரா ( எ )  காதர் மொஹிதீன்  எங்கள் திருநெல்வேலி சீமைக்காரர். இரண்டரை வயது மூத்தவரும்  கூட.

 

ஆவணப்பட இயக்குனரும் கவிஞருமான அமீர் அப்பாஸ் மூலமாக அறிமுகமானவர். ஏழெட்டு வருடங்களுக்கு முன்பு  காயல்பட்டினம், உடன்குடி, குலசேகரபட்டினம் என ஒரு படப்பிடிப்பிற்கான  அமைவிடம் பார்ப்பதற்காக ஒரு நாள் முழுக்க சுற்றியிருக்கின்றோம்.

 

சென்னையில் அவருடன் பழகியிருக்கின்றேன். அதன் பிறகு கொஞ்ச வருடங்கள் தொடர்பில்லை. மூன்று வருடங்களுக்கு முன்பு  கடுங்கோடையில் திடீரென என்னை தொலைபேசியில் அழைத்து உங்கள் ஊரில்தான் உள்ளோம்.  திரைக்கதை தொடர்பான விவாதத்திற்காக வந்தோம். அது தொடர்பாக உங்களையும் பார்த்து விட்டு போகலாம் என்றவர்  நான்கைந்து பேர்களுடன் வந்து சேர்ந்தார். பல தலைப்புக்களில் உரையாடினோம். ஜெயமோகன் பற்றிய பேச்சு வரும்போது ‘ தனக்கு எழுத்து வசப்பட்டிடிச்சிங்கறதுக்காக எல்லாத்துலயும் கம்பு சுத்துறார் “ என்றவாறே சிரித்தார். சில மணித்துளிகளில் புறப்பட்டுச்சென்றார்  எனது புதிய வீட்டிற்கு வந்த முதல் விருந்தாளி அவர்.

 

அந்த சந்திப்பிற்கு பிறகு  அறவே தொடர்பில்லை. கடந்த ஃபிப்ரவரி  07 ஆம் தேதி  முக நூல் உள்பேழையில் என்னை அழைத்திருந்தார். செல்பேசியில் திரும்ப தொடர்பு கொண்டபோது  ‘ நான் கதையொன்றை உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்புகின்றேன். வாசித்து விட்டு சொல்லுங்கள் என்றார். அத்துடன்  நான் விற்று வரும் தின்பண்டங்களில் எங்களூர் சிறப்பு அம்சமான தம்மடை யை விலைக்கு  கேட்டார். அனுப்பி வைத்தேன். சாப்பிட்டு விட்டு பாராட்டினார். கதையை அனுப்பவில்லை, எனது அன்றைய  சூழ்நிலையில் பளு கூடுதலாக இருந்ததால் கதையை அனுப்பச் சொல்லி  நானும் அவரிடம் திரும்ப கேட்கவுமில்லை.

 

 

 இவ்வருட மார்ச் 28 ஆம் தேதி தனது முக நூலில் தான் ஒரு முஸ்லிம் என்ற காரணத்திற்காகவே தனக்கு வாடகை வீடு மறுக்கப்பட்ட தகவலை பதிவிட்டிருந்தார். பொது வெளியில் இஸ்லாமிய வெறுப்பு பற்றி கவனப்படுத்தும் உருக்கமான பதிவாக இருந்தது. அந்த பதிவின் கீழ் வெறுப்பை உமிழும் விதத்தில் தமிழ்நாட்டில் வந்து குடியேறிய  உத்திரப்பிரதேச பிராமணர் ஒருவர் கருத்துரைக்க நான் மல்லுக்கட்ட கருத்துப்போர் நீண்டது.

 

மார்ச் 29 ஆம் தேதி அதாவது அடுத்த நாள் தாமிராவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இது குறித்து உரையாடினேன்.  தனக்கு வீடு மறுத்தவர்களின் அடையாளங்களை யாரிடமும் பகிரப்போவதில்லை என்றார்.  ‘ அது போவட்டும்’ எனபதுதான் எங்களின் உரையாடலின் கடைசி வரியாக இருந்தது. அதிலிருந்து சரியாக ஒரு மாதங்கழித்து கொரோனா அவரை கொண்டு போய் விட்டது.

 

வெற்றிப்படங்களை இயக்கிய தாமிரா  முஸ்லிம் சமூகத்தின்  வாழ்வியல் ஆன்மீகக் கூறுகளை படமாக்குவதில் தீரா நாட்டங்கொண்டிருந்தார். அவர் சிறந்த சிறுகதை எழுத்தாளர். படைப்புலக முன்னோடிகளில் பலர் அவரது எழுத்தின் வாசகர்கள்.

 

கடந்த மாதம் மறைந்த திரைப்பட இயக்குனர் ஜனநாதனின் உடல் நலிவின்போது ‘ ஜனநாதன் எவ்வளவு பெரிய நம்பிக்கை... அத்தனை சீக்கிரம் இழந்துவிட முடியுமா?’ என தனது முக நூலில் நிலைத்தகவலிட்டிருந்தார் தாமிரா.

 

பெறுவதும் இழப்பதும் நம் கையில் இல்லையே  தாமிரா!!!

No comments:

Post a Comment