Tuesday 6 April 2021

இறுதி நபியின் வாழ்வில் இறை நினைவும் பிரார்த்தனையும் – நூல் பார்வை





நூல்: இறுதி நபியின் வாழ்வில்  இறை நினைவும் பிரார்த்தனையும்

ஆசிரியர்: முஹம்மது அல் கஸ்ஸாலி

அரபியிலிருந்து தமிழாக்கம்: முனைவர் பீ.எம்.எம்.இர்ஃபான்

பதிப்பகம்:  சீர்மை, சென்னை. தொடர்பெண்: 8072123326

 

--------------------

 

“சாளரங்களும் அறைகளும் ஒளியினால் ஒளிர்கின்றன என்றால் அதற்கு காரணம் மேலே ஒளிர்ந்து கொண்டிருக்கின்ற கதிரவனின் ஒளியே என்று கருது.

 

இந்த ஒளி யாவும் என்னுடையதே, என் மீது யாருடைய ஒளியின் பிம்பங்களும் விழவில்லை: நானே  ஒளிர்ந்துக் கொண்டிருக்கின்றேன் என்று வீடும் வாசலும் கூறுமானால்…..

 

அதைக்கேட்கும் கதிரவன் கூறும் --- வழிகெட்டவனே! நான் மறைந்துவிட்டால் அப்போது தெரியும் உன் பெருமிதமெல்லாம்!”

-         மௌலானா ஜலாலுத்தீன் ரூமி)

 

 

மனிதப் புலன்களுக்கு தூலமாக தட்டுப்படாத அந்த மாபெரும் ஆற்றலிடம்  நம்பிக்கையையும் முழுச்சார்பையும் வைப்பதன் வழியாக எல்லாவித  சார்ந்திருத்தல்களிலிருந்தும் எதிர்பார்ப்புகளிலிருந்தும்  அஞ்சுவதிலிருந்தும் விடுவிக்கப்படுதல். இஸ்லாம் தரும் இத்தகைய விடுதலைதான்  உண்மையான  விடுதலைக்கான தற்சார்பிற்கான  முழுப் பொருளை அதன் ஆழ அகலங்களிலிருந்தும்  தருகின்றது..

 

ஏக இறைவனை விடுத்து அவனது படைப்புக்களை மட்டும்  வணங்குவோர், ஏக இறைவனுடன் அவனது படைப்புக்களையும் கூட்டாக்கி வணங்குவோர், எல்லாவகையான இறை வணக்கங்களையும் நிராகரிப்போர் என பலவகையினரை இவ்வுலகில் நாம் காண்கின்றோம்.

 

 ஒரு வகையில்  இவ்வகையான  பணிதல்  அல்லது  மறுதலித்தலின் வழியாக  அவர்கள் எவ்வகை விடுதலையையும் அடைவதில்லை. மாறாக தங்களையும் சக மனிதர்களையும்  மீண்டும்  மீண்டும்  ஆதிக்க வேட்கைகளை கைமுதலாகக்  கொண்டோருக்கு அடிமைப்படுத்துவதில்தான் போய் முடிகின்றனர்.

 

எவ்வித ஆற்றலுமற்ற அல்லது வரம்பிற்குட்பட்ட தற்காலிக ஆற்றலைக் கொண்ட அஃறிணை படைப்புக்களை வணங்கி வழிபடுவோர், அந்த தெய்வங்களின் சட்டங்கள் வழிகாட்டுதல்கள்  என எடுத்துக்காட்டுவதெல்லாம் அந்த படைக்கப்பட்ட தெய்வங்களின் மேல்  சில  அதிமனிதர்களால்  அதிகாரப்பசியுடையோரால் செயற்கையாக ஏற்றி வைக்கப்பட்டவைகளைதான். 

 

இவையனைத்தையும் நிராகரித்து நாத்திகத்தின் பக்கம் போவோரும் தங்களது முழு வாழ்விற்கான வழிகாட்டுதல்களை  சட்ட திட்டங்களை ஏதாவது ஒரு சக மனிதக் கோட்பாட்டாளரிடமிருந்தோ அல்லது குழுவிடமிருந்தோ அல்லது அரசிடமிருந்தோதான் பெற வேண்டியுள்ளது.  

 

இதிலும் விதிவிலக்கு பெற்ற கட்டுடைக்கும் அராஜகவாதிகள் என தங்களைத்தாங்களே பீற்றலுடன் அழைத்துக் கொள்வோரும் எவ்வித தப்பித்தலுக்கும் வழியின்றி  தங்களுடைய மனவிருப்பங்களுக்கு கட்டுப்பட்டே ஆக வேண்டும். இந்த மன விருப்பங்களினால் பெறுவதாக கருதும் இன்பங்களுக்கு உத்திரவாதமில்லை. பல நேரங்களில் உண்மையான இன்பங்களின் உரைகல்லில் அவை எந்தப் பெறுமானத்தையும் அடைவதில்லை. கடந்த கால மன விருப்பங்களில்  பெரும்பான்மையானவை  நிகழ்கணத்தில் அபத்தமாகிப்போகும்  இடர்களைக்கொண்டவையே.

 

மனித சிந்தனைகள் அனைத்தும்  இழிவானது கேடானது என  நிராகரிப்பது இயற்கைக்கெதிரானது. இயற்கை சார்ந்த மனிதனது அறிவும் நடத்தையும் மனங்கொள்ளத்தக்கது. இயற்கையிலிருந்து பிறழும் தன்மைகள் மனிதனிடத்தில் ஏற்படும்போது அவைகள் குற்றங்களாகவும் பாவச்செயல்களாகவும் உருவாகின்றன.

 

மனித மனத்தின் உடன்பாடான இயற்கையோடு இணைந்த நல்ல சிந்தனைகளுமே  கூட  போதாமைகளையும் எல்லைகளையும் கொண்டவை என்பதை   கவனத்தில் கொள்ளாமலிருக்க இயலாது. மனிதன், தன்னிடமிருந்து அல்லது  சக மனிதனிடமிருந்து   அல்லது  தன் மனவிருப்பத்திடமிருந்து பெறும் நல்லவைகள் அனைத்தும்  வாழ்க்கையின் மேற்பரப்பில் உள்ள நடைமுறைச் சிக்கல்களை மட்டுமே தீர்க்க வல்லவை. 

 

 

அவை  மனிதனுக்குள் பொதியப்பட்டிருக்கும் ஆன்மாவின் விரிவுக்கேற்ப ஈடு கொடுக்கும்  வல்லமையற்றவை. மனித வாழ்வின் அடிக்கட்டுமான சிக்கல்களின் தேவை மிகவும் பெரியது.  அந்தத்தேவைகளை ஈடுகட்ட  சக மனிதனின் வழிகாட்டலால் இயலாது. காரணம் அவை  மிகக் குறுகியவை, மட்டிறுக்கபட்ட ஆற்றல் கொண்டவை.  இந்த சிக்கல்களையெல்லாம் புரிந்து கொள்ளாமல்  மனிதனால் சக மனிதன் மேல் திணிக்கப்படும் பெரும் விதிகள்  புதிய சிக்கல்களை உண்டுபண்ணி  தீர்க்க முடியாத ஒரு இடத்திற்குள் கொண்டு போய் மொத்த உலகையும்  உருட்டி விடும்.

 

மனிதன் தன்னைத்தானே படைத்துக் கொள்ளவில்லை. அவன்  பிறந்து உலாவி மடிந்து போகும் இந்த மண்ணுலகையும் அவன் படைக்கவில்லை. இந்த நிலவுலகின்  மேலும் கீழும் இருக்கின்ற ஆகாயங்களையும் கதிரவனையும்  பிறையையும்  ஒளிமீன் திரளையும்  பிரபஞ்சங்களையும் அவன் படைக்கவேயில்லை. அவை அவன் இங்கு பிறப்பதற்கு முன்னரே இருக்கின்றன. அவன் மடிந்து மண்ணுக்குள் உக்கி அடங்கிய பிறகும் அவை இருந்து கொண்டிருக்கின்றன.

 

 

மொத்த பிரபஞ்சங்களின்  பெருந்தோற்றங்களுக்கு முன்னால்  தூசியினுடைய  நுண் துகள்   பரிமாணம்  கூட பெறாத மனிதன் இத்தனை பரந்த வெளியிலிருந்து முற்றிலும் தன்னை துண்டித்துக் கொண்டு தனக்குத்தானே அடிமைப்படுத்தி அடிமையாகி தாழ்வதைப்போல வேறென்ன இழிவு இருக்க முடியும்? கணுக்கால் நீரில் மூழ்கி மரிக்கும் பேதைமை.

 

 

அனைத்துலகையும் படைத்தியக்கும் மூல விசையான ஏகன் அல்லாஹ்விடமிருந்து மானுடத்திற்கான  உண்மையான விடுதலைச்செய்தியுடன் இங்கு வந்த  நபிகளார் காட்டிய பணிவின் விளைவாக பெறுபேறாக மானுடத்திற்கு ஒரு பெரும் ஆற்றலுடன் தொடர்பாடல் ஏற்படுகின்றது.

 

 

  வட்டச்சூனிய வெளியில் அந்தரமான  கையறு நிலையில்  நான் விடப்படவில்லை. நானும் என்னைப் பின்பற்றும் மொத்த  மானுடமும்  எல்லாம் வல்ல மாபெரும் அரசின் அவையில் நிற்கின்றோம். அவனது அருளும் அதிகாரமும் நிறைந்த  கண்காணிப்பு என்ற பாதுகாப்பு வலயத்திற்குள் இருக்கின்றோம்  என்ற உறுதி ததும்பும் உத்திரவாதத்தை அவர்களால் உலகிற்கு நிமிர்வுடன் அளிக்க  முடிகின்றது.

 

யா அல்லாஹ் ! உன்னைத்தவிர வேறெதன்பாலும் தேவையாகாமலும், உன்னைத்தவிர வேறெவரிடமும் பணிந்து இறைஞ்சாமலும், உன்னைத்தவிர எவருக்கும் அஞ்சிடாமலும் இருக்க உன்னிடம் அடைக்கலம் கோருகின்றேன். பொய்யுரைக்காமலும் பாவமான இடங்களை நாடாமலும் , உன்னை மறந்து மதிமயங்காமலும், எதிரிகள் எள்ளி நகையாடாமலும், தீராத நோய் பாதிக்காமலும், அவநம்பிக்கை ஏற்படாமலும், உனது அருட்கொடை விலகாமலும், உனது தண்டனை திடீரென்று இறங்கி விடாமலும்  இருக்க உன்னிடம் அடைக்கலம் கேட்கின்றேன்” ( நூல் பக்கம்: 120 ).

 

இறைவனிடமிருந்து நேரடியாக அறிவிப்பை செய்தியை நல்லுரைகளை பெறும் ஒரு தூதரின் இந்த வேண்டலில் இவ்வுலக மறுவுலக தேவைகள், ஒன்றை விட்டு ஒன்று பிரித்துப்பார்க்கவியலாத அளவிற்கு எப்படி ஒத்திசைகின்றன என்பதைப் பாருங்கள்.  நம்  சிறிய புலன்களின் வீச்செல்லைக்குள் தட்டுப்படாத காரணத்தினாலேயே இறைவனின் இருப்பை   ஆதிக்கப்பசி கொண்ட அதி மனிதர்களின்  மாயாவாத கற்பனையாக  குறுக்கிடும் பொருளற்ற முயற்சியை  நபிகளாரின் இந்த வேண்டல்  செயலிழக்கச் செய்கின்றது.

 

எல்லா தளைகளிலிருந்தும் விடுதலை அடைந்து விட்ட வெற்றியின் திளைப்பில்   தன்னை சிறை வைக்கவில்லை அண்ணலார். தன்னை அந்த செய்தியின் மையப்புள்ளியாக்கி அதையே தனக்கான பீடமாகவும் மாற்றவில்லை. தன்னை ஒரு வழிபாட்டு சிலையாகவும் உருவகிக்கவில்லை.  மாறாக,  தானும் மற்ற உயிர்களும் மொத்த பிரபஞ்சங்களும் எங்கிருந்து வந்தனரோ அந்த மையப்புள்ளிக்கு மீளும் வழியை மட்டுமே காட்டுகின்றனர் நபிகளார்.

 

இந்த மையப்புள்ளியானது   வரையறுக்கப்பட்ட ஆற்றலையுடைய  நம் எளிய புலன்களுக்கப்பால் இருப்பதினால்   மாயாவாதம் என நிராகரித்து கடக்கவியலாது. அப்படியான நிராகரிப்பென்பது பகுத்தறிவின் பெயரால் விளம்பப்படும் இன்னொரு மூட நம்பிக்கையே.

 

 

மனித குலத்திற்கான வழிகாட்டலை அறிய இயலாத ஞானச்சிக்கலாக காட்டி அதனை மாயவாதம் என்ற  இருள் பாதாளத்திற்குள் வைத்து பூட்டுவதின் வழியாக  சராசரி மக்களின் மீதான தனது அதிகாரத்தை ஆதிக்கத்தை உறுதிப்படுத்தும்   வேலையை நபிகளார் செய்யவில்லை. எந்த சட்டங்களை தன் வழியாக இறைவன் மனித குலத்திற்கு அருளினான் என நபிகளார் சொன்னார்களோ அந்த சட்டகத்திற்கு அப்பாற்பட்ட அதி மனிதராக அவர்கள் தன்னை ஒருபோதும் நிலை நிறுத்தியதில்லை. அந்த நீதியுணர்ச்சிதான் தன் மகள் ஃபாத்திமா  களவு புரிந்தாலும் அவரையும் தண்டிப்பேன் எனக்கூற வைத்தது. இறை நீதிக்கு முன் மனிதரை ஒரே சமானமாக்கி நிறுத்தியது.

 

 

தான்  முதலில் இறைவனின் அடிமை அதன் பிறகுதான் அவனின் தூதர் என்ற மாறா உண்மையை  மிக்க பணிவுடன் உலகிற்கு முன் வைத்தவர்கள் அண்ணலார்.  தன்னை படைத்துக்காக்கும்  அனைத்து ஆற்றலையும் உடைய  அந்த  ஓரிறைக்கு அடிமைப்படுவதின் வழியாக மற்றெல்லா சார்புகளிலிருந்தும் அடிமைத்தனங்களிலிருந்தும் அச்சங்களிலிருந்தும் மொத்த மனித குலமும் விடுவிக்கப்பெறும்  அற்புத கணமானது  அந்தப்பிரகடனத்திலிருந்து சுடரிட்டுக் கொண்டே இருக்கின்றது.

 

இந்த அடிபணிதலின் வழியாகத்தான் நபிகளார், தான் பிறந்த குறைஷி உயர்குலத்தின் மேட்டிமையையும்  சக மனிதர்களின் கழுத்துக்களின் மீது கனத்துக்கிடந்த  குறைஷியரின் அதிகார நுகத்தடியையும் நொறுக்கினார்கள்.  ஆதிக்கவெறி  அதிகாரத்திற்கெதிராக மெய்ம்மையை நிலை நாட்டினார்கள்.  மேட்டிமையும் அநீதியும் அகம்பாவமும்  மண்டிய அரபுலகத் தலைமையை  தகர்த்த பின்னர் அதிகாரமும் ஆட்சியும் இறைவனுக்கு மட்டுமே என்ற பதாகையை பறக்க விட்டனர். 

 

தங்களின்  காலடியில் விழுந்த  அதிகாரத்தை எந்த தனி வர்க்கத்திற்கோ வகுப்பாருக்கோ  சாதிக்கோ அண்ணலார் தனியுடைமையாக்கிடவில்லை.  அரசனை ஆள்வோரை  கடவுளுக்கு நிகராக கருதும்  அநீதியை அந்த இடத்தில் மாற்றீடு செய்யவில்லை.  ஆட்சியாளர்கள் இறைவனின் பேராளர்கள் மட்டுமே.  ஆட்சியாளரிடத்தில் அநீதி காணப்படும்போது  வாய் மூடி மௌனித்திருக்காமல் வாளைக் கொண்டு திருத்தும் உள வலிமையை தன் குடிகளுக்கு வழங்கிச்சென்றவர்.

 

இறைவனின் ஆட்சியை புற வெளிகளில் மட்டுமில்லை மனிதர்களின் அக வெளிகளிலும் உறுதிப்படுத்தினார்கள். அதன் தலையாய அம்சம்தான் இறை நினைவும் வேட்டலும். பிறப்பிலிருந்து இறப்பு வரை, எழுந்தது முதல் உறங்கும் வரை இழப்பு, ஆதாயம், மகிழ்ச்சி, துன்பம் என அனைத்து கணங்களுக்குமான  நினைவு கூரல்கள், வேட்டல்களினால்  நிறைந்த கருவூலமானது  மானிடத்தின் முன் நபிகளாரினால்  திறந்தளிக்கப்படுகின்றது.

 

இந்த  நிதிக்குவையானது  தன்னைப்படைத்த இறைவனையே மனிதன் சார்ந்திருக்க வேண்டும் என்ற மாற்றவியலாத அடிப்படையின் வழியாக தீரா ஒளிர்வை தனக்குள் பெற்றுக் கொண்டது. மிக வலிமையான நம்பிக்கையால் நிறைந்த மனத்தை மனித குலத்திற்கு பரிசளிக்கின்றது  இஸ்லாம். இந்த வலிமையான உள்ளத்தினால்  அவநம்பிக்கையால் விளையும் தற்கொலை, மனச்சிதைவு உள்ளிட்ட எல்லா துணை விளைவுகளிலிருந்தும் மனிதன் விடுதலையடைகின்றான், காக்கப்படுகின்றான்.

 

இந்த வேட்டல்களின் அடிநாதமான  இறை நம்பிக்கையை எத்தனையோ நம்பிக்கைகளின் வரிசையில் இதுவும் ஒரு நம்பிக்கை என இஸ்லாம் வைக்கவில்லை. அவற்றிற்குள் மனிதன்  நிறைவேற்ற  வேண்டிய பொறுப்புக்களையும் தவிர்க்க வேண்டிய கீழ்மைகளையும் ஒழுக வேண்டிய நற்குணங்களையும்  பிணைத்திருக்கின்றது.

 

“ யா அல்லாஹ் ! நான் அநீதம்  புரியாமலும்  என் மீது  அநீதமிழைக்கப்படாமலும் நான் வரம்பு மீறாமலும் என் மீது  பிறர் வரம்பு மீறாமலுமிருக்க   நான் உன்னிடம் அடைக்கலம் தேடுகிறேன்” ( நூல் பக்கம் :121)

 

 

 ஏக இறைவனுக்கு கட்டுப்படுபவனின்  நம்பிக்கை உலகிலுள்ள மற்றெல்லா நம்பிக்கைகளையும் விட வலிமையாவது  இந்த இடத்தில்தான். அவனது நம்பிக்கை நிறைந்த  வேட்டல்களுக்குள் மந்திர மாய்மாலச்சொற்கள் எதுவுமில்லை. இறைவனின் நாட்டமும் உலகின் மாறா பௌதீக விதிகளும் பொருந்தும் நுணுக்கத்தை  இந்த வேட்டல்கள் நினைவூட்டுகின்றன. இதனால் மனிதன் அதிர்ஷ்டங்களின், குருட்டு நம்பிக்கைகளின் பதட்டங்களிலிருந்து  தளைகளிலிருந்து  சுமைகளிலிருந்து விடுவிக்கப்படுகின்றான்.

 

ஏக இறைவனை அறிவாலும் மனத்தாலும் அறிந்துணர்ந்து நம்பும்போது உண்டாகும் அடிமைத்தனமானது உண்மையில் அது அடிமைத்தனமில்லை,  நிழலானது தன் தோற்றுவாயை சென்றடைவதைப்போன்றது. ஆன்மா தான் புறப்பட்ட இடத்தையும் அடைய வேண்டிய இலக்கையும் ஒருசேர கண்டு கொண்ட உன்னத நிலை, இந்த உன்னதம் அளிக்கும் பாதுகாப்பு உத்திரவாதத்தில் மனிதன் எல்லாவித அச்சங்களிலிருந்தும்                                                   விடுவிக்கப்படுகின்றான்.

 

மனிதன் தனது பகுத்தறிவின் அகம்பாவத்தில் இந்த உன்னத நிலையை மறுக்கும்போது அவன் பல வகையான சிறிய பெரிய அடிமைத்தனங்களுக்கும் அச்சங்களுக்கும் ஆட்பட வேண்டியிருக்கும். இதன் விளைவாகத்தான் புற மேம்பாடுகளை கொடுக்கும் அறிவியலின் வளர்ச்சி பெரும் பாய்ச்சலைக் கொண்டிருந்த போதிலும் அதனால் மனிதனின்  அகக் கொந்தளிப்பை ஒருபோதும்  சமநிலைப்படுத்தி ஆற்றுப்படுத்த இயலுவதில்லை.

 

“   ……. எழுதப்படிக்கத்தெரியாத நபியாகிய நம் தூதர்……  அவர்களை நன்மையான செயல்களைப்புரியுமாறு ஏவுவார். குற்றச் செயல்களிலிருந்து விலக்குவார்: தூய்மையானவற்றையே அவர்களுக்கு ஆகுமாக்குவார்: கெட்டவற்றை அவர்களுக்கு தடுத்து விடுவார்: அவர்களுடைய பளுவான சுமைகளையும், அவர்கள் மீதிருந்த விலங்குகளையும் இறக்கி விடுவார்: எனவே எவர்கள் அவரை மெய்யாகவே நம்பி, அவரைக் கண்ணியப்படுத்தி, அவருக்கு உதவி புரிந்து, அவருடன் அருளப்பட்டிருக்கும் ஒளிமயமானதையும் பின்பற்றுகின்றார்களோ, அவர்கள்தாம் வெற்றியடைவார்கள். ( அல் குர்ஆன் 7:157).

 

எல்லாத்திசைகளிலிருந்தும் மானுடத்தை அழுத்தும் நெருக்கடிகளிலிருந்து  விடுவிக்கும் பெரும் பொறுப்பை ஏற்றுக் கொண்ட அந்த மாமனிதர் கற்றுத்தந்திருக்கும் வேட்டல்களில்  ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதும் ஒன்று மற்றதின் நீட்சியுமான இம்மையும் மறுமையும் பிணைக்கப்பட்டிருப்பதைப்பாருங்கள்.

 

“ யா அல்லாஹ்! பயனளிக்காத அறிவிலிருந்தும் , உனக்கு அஞ்சாத உள்ளத்திலிருந்தும், நிறைவு கொள்ளாத மனத்திலிருந்தும், ஏற்றுக்கொள்ளப்படாத வேட்டலிலிருந்தும் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்” ( நூல் பக்கம் :116 )

 

“ யா அல்லாஹ் ! இயலாமை, சோம்பல், கோழைத்தனம், கருமித்தனம், தள்ளாத முதுமை, என்பவற்றிலிருந்து உன்னிடம் அடைக்கலம் கோருகின்றேன். வாழ்விலும், இறப்பிலும் ஏற்படும் சோதனையிலிருந்தும் , கடன் சுமையிலிருந்தும் மனிதர்களது அடக்குமுறையிலிருந்தும் உன்னிடம் அடைக்கலம் கோருகின்றேன்.” ( நூல் பக்கம் : 118)

 

இவ்வுலகில் நம்மை பற்றிக் கொள்ளும் சிக்கல்கள்,குறைபாடுகளை மனிதனுக்கு  அடையாளங்காட்டிடும்  இந்த வேட்டல்களானது, நெருக்கடிகளைக்  கண்டு மனிதன் கலங்கி மாய்ந்திடாமல் இருக்க “ அவையொன்றும்  இறைவனை விட பெரிதில்லை. இறைவனைத்  விஞ்சியதுமில்லை “ என்ற துணிவையும்  ஆசுவாசத்தையும் சேர்த்தே வழங்குகின்றன. இறை நம்பிக்கையின் வழியாக அவனது தன்னம்பிக்கை வலுப்படுத்தப்படுகின்றது. தன்னைச்சுற்றிய மலை போன்ற சிக்கல்களை கண்டு திகைத்து செயலற்று போகும் அவலத்திலிருந்து மனிதனை இந்த  வேட்டல்கள் வழி தொழிற்படும் இறை நம்பிக்கைதான் விடுவிக்கின்றது. “ உறுதியாக நிராகரிக்கும்  கூட்டத்தைத் தவிர (வேறுயாரும்) அல்லாஹ்வின் அருளைப்பற்றி நம்பிக்கை இழக்கமாட்டார்கள்( அல் குர்ஆன் 12:87 ). மனித  குலத்திற்கு இதை விட வேறென்ன கொடை வேண்டும்?

 

தவ்ர் குகையின் தனிமையில்  நிராயுதபாணியாய் ஆயுததாரிகளை எதிர் கொள்ளும்போதும் பத்ர் களத்தில்  பெரும் படை கொண்ட குறைஷி பட்டாளத்தின் முன் பசித்துக் களைத்திருந்த தன் தோழர்களுடன் தானும் முன் நின்ற போதும் அவர்கள் தங்களுக்கான திடத்தையும் வலுவையும் துணிவையும் இறுதியில் வாகையையும்   நித்திய ஜீவனான அல்லாஹ்வின் நினைவின் வழியாகத்தான் பெற்றுக் கொண்டார்கள்.

 

ஆயுதமேந்திய போர்த் திடலாகட்டும் பிரச்னைகள் கொடுங்காற்றாய் வீசும் வாழ்க்கை களனாகட்டும் இறை நினைவின் வழியாகவும் வேட்டல்களின் வழியாகவுமே அண்ணலார் அதைக் கடந்தார்கள்.

 

இறை நினைவு, வேட்டல் என்ற  ஒளிச்சிகரங்களினால் அண்ணலார்  தானும் பெற்று மனித குலத்திற்கும் வழங்கிய அடைவுகளாக பின்வருபவனவற்றை நூலாசிரியர் முஹம்மத் அல் கஸ்ஸாலி நமக்கு உணர்த்துகின்றார்:

 

--- நமக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு உடனடியான, அல்லது தாமதமானஅல்லது  இருப்பதை விட  சிறந்த  தீர்வு கிட்டுதல்.

 

--- பௌதீக முயற்சிகளை புறக்கணித்த  சோம்பல் நிலையில் மனிதரின் வேட்டல்கள் பயனளிப்பதில்லை. இந்த வழிமுறையினால் மனிதன் அதிர்ஷ்டத்தின் இருள் பிடியிலிருந்து விடுவிக்கப்படுகின்றான். செயலூக்கத்தின் பக்கம் உந்தப்படுகின்றான்.

 

---  வேட்டல்களினால் ஏற்படும் உடனடி அல்லது தாமத தீர்வுகளுக்கு முன்னர் ஓர் இறை நம்பிக்கையாளனுக்கு கை மேல் பலனாக  அவன் தன்னைச்சுற்றிய நெருக்கடிகளிலிருந்து மன விடுதலையை ஆறுதலை  உடனே பெறுகின்றான். இவற்றிலிருந்து திரளும் புதிய வலிவானது மாறாத சிக்கல்களை சிறியதாக கண்டு  கடந்து போகும் வல்லமையை அவனுக்கு வழங்குகின்றது. தானாற்றிய செயல்களினால் விளைய வேண்டியவற்றின் மேல் அதீத அபார எதிர்பார்ப்புகளின் பதட்டங்களிலிருந்தும் விடுவிக்கப்படுகின்றான்.

 

 

இஸ்லாமும் சில நம்பிக்கைகள், கொஞ்சம் சடங்குகளின் தொகுதிதான் என்ற பொது எண்ணத்தை மாற்றி ரத்தமும் சதையும் கொண்ட நடமாடும் மனிதர்களின் கொப்பளிக்கும் உணர்வுகளுடனும்  விசையெழுச்சி கொண்ட  அவனது ஆன்மாவுடன் ஒத்திசைந்து ஆற்றுப்படுத்தி படைத்தவனளவில் உயர்த்திச்செல்லும் தகுதி படைத்தது என்ற  செய்தியை தன்னுள் கொண்டுள்ள நல்லதொரு நூல்.

 

 

அட்டை, வடிவமைப்பு, நிறம், தாள் தரம் என நூல் உருவாக்கம் தரமாக இருக்கின்றது. முஹம்மத் அல் கஸ்ஸாலி அவர்களின் வீச்சை மொழியாக்கமானது  முழுமையாக வெளிப்படுத்தவில்லை. மொழியாக்கத்தின் போதாமை ஆங்காங்கே கசிகின்றது.

 

 

இறுதித்தூதரின் இறை நினைவுகள், வேட்டல்களின் அடி நாதத்தை இழையை துடிப்பை  ஆகக்  கூடிய  சாத்தியமான மொழியில் அள்ளி எடுத்திருக்கின்றார் நூலாசிரியர் முஹம்மத் அல் கஸ்ஸாலி. பெரும்பாலான இடங்களில் அவரது எழுத்து தன் இருப்பை உதிர்த்து  நபிகளாரின் இறை நினைவு, வேட்டலின்  நிரையில் நம்மால் கண்டுபிடிக்க முடியாத ஒரு இடத்தில் தன் இருப்பை அமைத்துக் கொள்கின்றது. ஒளியிலிருந்து முழு ஒளியை மட்டுமே பெற முடியும். துணுக்கு பெருஞ்சுடராய் நின்றொளிர்கின்றது.

 

நிறையும்  அமுதத்தை கொள்வதற்கு கலம் போதாது. மனித முயற்சி எத்தனை சிறந்ததாக இருந்தபோதிலும் தூதுத்துவத்தின் பெருக்கிற்கு முன்னால் அது சிறுத்து முகடு தட்டி நிற்கிறது.  அண்ணலாரின் இறை நினைவுகள், வேட்டல்கள் என்ற அந்த பெரும் ஒழுக்கை அள்ள கலங்கள் ஏந்தி தீராது. 

 

No comments:

Post a Comment