Friday 16 April 2021

நமது நீட்சி

 







ரமழான் காலத்து இரவுத்தொழுகை ( கியாமுல்லைல் ) யில் எனது இளைய நண்பனின் மூத்த மகன் தொழ வைத்தான். அச்சிறுவன் முழுக்குர்ஆனையும் மனனமிட்ட ஹாஃபிழ்.


சுழித்தும் நுரைத்தும் துள்ளியும் சிலுசிலுத்தும் ஓடும் குட்டி நதிக்குள் நின்ற உணர்வு. அவனை எப்போது கண்டாலும் மௌனத்தை மட்டுமே மொழியாக கொண்டிருப்பான். என்னைக்காணும்போதெ;ல்லாம் கண் பார்வையின் துளியில் முகத்தின் சிறு அசைவில் மட்டுமே அவன் என்னை கண்டு கொண்டான் என்பதை புரிந்து கொள்ளவியலும்.


பூவின் இதழ்களை காற்று அள்ளுவது போல அவனது நாதம் குர்ஆனின் மைய துடிப்பிற்குள் அதன் முடிவற்ற ஒழுக்கிற்குள் ஊறித்திளைக்கச்செய்தது. அரபு மொழியறியாத எனக்குள் குர்ஆனின் வசனங்கள் அதற்கே உரிய நிறையுடன் விழுந்தது.


சின்னஞ்சிறு விரல்களை விலாப்பக்கம் சேர்த்துப்பிடித்தவனாக முழு தன்னம்பிக்கையுடன் வெளிப்பட்ட ஓதலில் அவனது வாப்பா, அப்பா, பூட்டியப்பா என்ற கலைத்தொடர்ச்சி மிளிர்ந்தது.


மனிதனின் இருப்பு என்பது இவ்வுலகில் மிகத் தற்காலிகமானது. எனினும் நாம் இம்மண் மேல் இல்லாமற் போனதன் பின்னரும் நாம் நமது குழந்தைகளின் வழியாக அதிலிருந்து பெருகும் தலைமுறையின் தாரை வழியாக ஏதாவது ஒரு வகையில் நாம் குரலாகவோ பார்வையாகவோ உடலுறுப்புக்களின் வழி கசியும் திறன்களாகவோ நாம் நீடிக்கப்பட்டுக் கொண்டுதானிருக்கின்றோம். நம் முன்னோர் நம் வழியாக வாழ்வதைப்போல.




No comments:

Post a Comment