Saturday 13 March 2021

ஒன்றே கால் வருடத்திற்குப்பிறகு சென்னை

 

2019 டிசம்பர் இறுதியில் விடுமுறைக்காக ஊருக்கு வந்து  2020 இன் தொடக்கத்தில் சென்னைக்கு  திரும்ப  திட்டமிட்டிருந்த பயணம் ஒன்றே கால் வருடத்திற்குப்பிறகுதான் சாத்தியப்படும் என அழுத்தமாக எழுதித்தீர்க்கப்பட்டிருந்திருக்கின்றது.

 

சென்னை அறைக்கென 2020 ஆம் ஆண்டுக்கான கதிரவ, பிறை மாத காட்டிகளை எடுத்து வைத்திருந்தேன். நுகராமலேயே வாடிப்போகின்ற மலரைப்போல  அவைகள் மாதங்களின் குப்பைகளாகி விட்டன.

 

பயணச்சீட்டை பதிவு பண்ணும் வரை ஒரு பதட்டம். பதிவு பண்ணிய பின் இன்னும் நான் பத்து நாட்கள் இருக்கின்றது என்ற ஆறுதல். அந்த ஆறுதலும் மூன்று நாட்கள் வரைதான். ‘ ஒரு வாரம் கூட மிச்சமில்லையே ‘ என்ற நெருக்கடி தொப்புளிலிருந்து எவ்வும். புறப்படும் தேதிக்கு இரண்டு நாட்களுக்கு  முன்னரேயே  நஞ்சைத்தின்ற எலி தண்ணீரைத் தேடி தட்டழிவதைப்போல ஒரு தொங்கோட்டம் மனத்திற்குள்.

 

இல்லாள் கட்டித்தந்த ரொட்டி, கால் கறி கட்டமுதுடன்  நிலவில் காலெடுத்து வைப்பதைப்போல  இரண்டு  நாட்களுக்கு முன்  சென்னையில்  வந்து இறங்கினேன். நான் வராவிட்டால் சென்னை மாறி விடுமா? என்ன?  எழும்பூர் ரயில் நிலையம், ஆட்டோக்காரர்களின் கண்ணும் முகவாய்க்கட்டையும் ஒத்திசைந்த சவாரி விசாரிப்பு, சங்கீதா ரெஸ்டோரண்ட், நடைபாதையின்  அமுதா அக்கா  என எல்லோருமே எல்லாமே அப்படியேதான் இருக்கின்றன  இருக்கின்றனர்.

 

மண்ணடியின் சர்பத் ராஜாவும் சலீம் ஸ்டோர் முதலாளி மட்டும்தான் கொஞ்சம் மெலிந்திருந்தனர்.  ஒரு நாளின் மூன்றில் இரண்டே முக்கால் பாகமும் மிதந்து கொண்டிருக்கும் ராஜா,  பெருந்தொற்று முடக்கில் பாவம் சர்பத்துக்கு என்ன செய்தானோ?  தன்னை நிலைப்படுத்திக் கொள்ள முடுக்கிற்குள் காலை அகட்டி அகட்டி நடந்து கொண்டிருந்தான்.

 

கட்டிடப்படிகளில் எவ்வித மாற்றமுமில்லை. முந்திய கணத்தை பிந்திய கணம் தள்ளி நகர்த்துவது  போல  பழைய ஆட்களில் இரண்டு அறைக்காரர்கள் வெளியேறி புதிய ஆட்கள் வந்திருந்தனர்.  பழைய ஆட்கள் அவர்கள் சொந்த ஊருக்குத்தான் போனார்களா? அல்லது வேறெங்காவது சுழன்று விழுந்தார்களா? யாரிடம் போய்க்கேட்க?

 

தொழில் சார்ந்த அழுத்தங்களுக்கப்பால் மூடியே கிடக்கும் அறைக்குள்  எலியார் என்ன்வெல்லாம் செய்திருப்பார் என்ற நிஜத்திற்குள் வர மறுக்கும் கற்பனைதான் மூளை முழுக்க நிரம்பியிருந்தது.

 

 ஓலாக்காரருக்கு துட்டை கொடுத்து  அனுப்பி விட்டு படியேறினேன். பூட்டில் துரு செவ்வெறும்பு போல ஏறியிருந்தது.  நான் எதிர்பார்த்ததில் முதல் விஷயம் நடந்து விட்டிருந்தது. மங்கள நிகழ்வுகளுக்கு தலைவாசலை திறப்பது போல  கிராதியின் கண்ணாடி தடுப்பு கால்வாசி திறந்து கிடந்தது.  பழுது நீக்க சாவி வாங்கிச்சென்ற  கொத்தனார் கனவான்கள்  என்ன எழவிற்கு அதை திறந்தார்களோ? அரை முழுக்க எலிப்புழுக்கை சிதறியிருந்தது. வெளித்தூசி என்னவோ குறைவுதான்.

 

சரி,  வழமையான பங்காளிதானே என தேற்றிக் கொண்டு  துப்புரவு பரிபாடிகளை தொடங்கினேன். வேலை நடுவே எரிவாயு உருளைகள் வைக்கப்பட்டுள்ள பாந்திற்குள் தும்பு வாரியலால் இழுத்தெடுத்தேன். அறைக்குள் புது வரவாகிடும் எலியார்களுக்கு மகனே வா என  அடைக்கலம் கொடுக்கும் பெரிய மனது பாந்து அது .

 

தரையோடு அப்பியிருந்த வண்ண விளம்பர அட்டை வந்து விழுந்தது. அதில் மேடு இறக்கத்துடன் பழுப்பும் கறுப்புமாக ஏதோ ஒட்டிக்கிடந்தது. காட்சி மயக்கத்திற்கு வேலையில்லை. தலையும் வாலும் அன்னாரின் இருப்பை உறுதிப்படுத்தின. செத்து மக்கி அட்டையுடன் ஒட்டிக் கொண்டிருந்தது. காய்ந்த ஊண் நெடியை விட நான் எதிர்பார்த்த இரண்டாம் விஷயம் முழு உறுதியுடன் நடந்தேறியதில் ஏற்பட்ட அதிர்ச்சியில் வயிறும் மூளையும் ஒத்திசைந்து  ஓங்கரித்தன.

 

கொத்தனார்  கனவான்கள் திறந்து விட்டிருந்த ராஜபாட்டையில் ஏறி அறைக்குள் வந்தவருக்கு வந்த வேலை முடிந்தவுடன் போகும் வழி மறந்து விட்டிருக்கும் போலிருக்கின்றது. அடிக்கடி வந்து போனால்தானே  திசை தெரியும்.

 

அறையில் உணவுப்பொருள் எதுவும் இல்லாத நிலையில் கிடைத்த அனைத்தையும்  கடித்து தள்ளியிருக்கின்றது. பசி தாகத்துடன் உயிர் போராட்டமும் சேர்ந்த மூர்க்கத்தில்  துணி, சணல் பை, கோரைப்பாய், பலாப்பெட்டி, ஞெகிழி வாளி, தலையணை உறை, அட்டை,காகிதம்,சாரம் என எல்லாவற்றிலும் வட்டமாக நீள் சதுரமாக  தாரகை ஒழுங்கில் என தனது பல் அரத்தை பதித்திருந்தது எலி.  இதில் சுவற்றுடன்  மர இரும்பு பேழைகள் மட்டுமே தப்பியவை.  குதற இயலா இடங்களில் தன் மல மூத்திர கழிவுகளை சிதறடித்திருந்தது.

 

எலி ரேகை பட்டவற்றில் வெளியே வீச முடிந்த பொருட்கள்  என  மூன்று  நான்கு பெரிய பைகள் அளவிற்கு சேர்ந்தன. எலி மணத்திலிருந்து மீள தேவைப்பட்டது  பண விரயத்துடன்  முழுதாக  இரண்டு நாட்களும்.

 

எலி விடுதலைக்கு அடுத்த நாள் அதிகாலைத்தொழுகைக்கு  வழமை போல  மஸ்ஜிதே மஃமூர் சென்றேன்.  வழமையை விட் ஆட்கள் குறைவாக வந்திருந்தனர். ஒவ்வொரு வக்திலும் வெண் புறாக்களாய் நிறையும் குர்ஆன் ஹிஃப்ழ் ( மனனம் ) பிரிவு  மாணவ  குருத்துக்களை காணவியலவில்லை  மணிப்புறாக்களற்ற மாடம்.

 

வரிசையில்  நினறு தக்பீர் கட்டியதும் மூளையை தட்டிய அடுத்த விஷயம்  இமாம் அப்துர்ரஹ்மான் ஹழ்ரத் அவர்களின் இல்லாமை.  பழவேற்காட்டுக்காரர்.  கணகணக்கும் தனித்த குரலுடைய மலர்ந்த முகத்துக்காரர். பள்ளி வளாகத்தினுள் நடக்கும்  நிகழ்ச்சிகளின் சுறுசுறுப்பான ஏற்பாட்டாளரும் கூட.  சில மாதங்களுக்கு முன் ஏற்பட்ட திடீர் உடல் நலக்குறைவில் காலத்தின் பின்னடுக்குகளுக்குள் போய் விட்டார்.

 

வழமைக்கு மாறாக ஸலாம் கொடுத்தவுடன் தொடரும் நெருக்கடிகால மன்றாட்டுகளும்  பெருந்தொற்றச்சத்தின் காரணமாக நின்று போயிருக்கும் பரஸ்பர கை கொடுத்தலும் ஒரு வகையான கலவை  அதிர்வுகளை  கிளப்பின.

 

எலித்திரவம் பட்ட  சமையல் வலந்துகளை தூய்மைப்படுத்த நேரமில்லாததால்  போகிற வழியில் சாப்பிட்டு விட்டு புத்தக கண்காட்சிக்கு போவோம் எனத் தீர்மானித்து அறையிலிருந்து புறப்பட்டாகி விட்டது.

 

மண்ணடி உடுப்பி துர்கா பவனுக்குள் ஏறி மினி மீல்ஸுக்கான வில்லை கேட்டேன். மீல்ஸெல்லாம் இல்லை. வகை சாதங்கள்தான் இருக்கின்றன என்றார் முதலாளி. . நான் போன நேரம் நண்பகல் 12:50 மணி. குழம்பிப்போய்  பரிமாறுபவரிடம் கேட்டேன். பெருந்தொற்றிலிருந்து குறைவான ஆட்களே வருகின்றனர்.  அதனால் மினி மீல்ஸ் இ;ல்லை.  தயிர், சாம்பார், கீரை சாதங்கள், வடை, காஃபி, டீ மட்டுமே இருக்கின்றன என்றார். ஒரு கீரைச்சாதமும் வடையும் சொல்லி விட்டு அவரிடம் பேச்சு போட்டேன்.

 

“இப்போது எத்தனை பேர் வேலையில் உள்ளீர்கள்?”

 

“பதினைந்து பேர்தான்”

 

“முந்தி?”

 

“முன்னே இருபத்தைந்து பேர்”

 

“அவங்கள்லாம் எங்க?”

 

“மொதலாளி அனுப்பிட்டாரு.”

 

என்னருகிலேயே நின்று கொண்டு சாம்பார் வேணுமா? சட்னி வேணுமா? என பரிமாறுபவர் கேட்டுக் கொண்டிருந்தார்.  என்னுடன் சேர்த்து மொத்தமே ஐந்து வாடிக்கையாளர்கள்தான். மற்ற ஊழியர்கள் ஒருவருக்கொருவர் முகம் பார்த்துக் கொண்டிருந்தனர்.

 

முன்பெல்லாம் ஏதாவது கூடுதலாக கேட்க வேண்டுமென்றால் ஒன்றுக்கு மூன்று தடவை ஆளைக்கூப்பிட வேண்டும். ஆட்களின் ஓசையுடன் பாத்திரங்களின் ஓசையும் சமையல் மணமும் ஒன்றையொன்று மிஞ்சிக் கொண்டிருக்கும். எல்லாம் கடந்த காலமாகியிருந்தன. அவை எப்போது திரும்ப வரும்? 2019 ஐ ஒருபோதும் எதிர்பார்க்காதீர்கள் என்கின்றனர் சமூக ஆய்வாளர்கள்.

 

கடைகளைப்போலவே வாடகை வீடுகளிடமும் அவற்றிற்குள் குடியிருந்த அனல் மூச்சு மனிதர்களிடமும் சொல்வதற்கு நிறைய கதைகள் இருக்கின்றன. மூன்றுமாதங்கள்,  இரண்டு மாதங்கள்,  ஒரு மாதம் என தங்களால் இயன்றளவு வாடகை தள்ளுபடி பண்ணிய கட்டிட உரிமையாளர்களும் உண்டு. “ ஒங்களுக்கு மட்டுமா எங்களுக்குந்தான் கொரோனா ஒரு பைசா பாக்கியில்லாம வாடகய கீழ வைங்க “ என தனது வீட்டு உரிமையாளர்  சொன்னதாக  நண்பர் லெப்பை சாஹிப் வழியில் கண்டு சொன்னார். நிறைய தேநீர்க்கடைக்காரர்கள்  நிலுவை வாடகை கொடுக்கவியலாமல் ஊர்களைப்பார்த்து போய் விட்டதாக ஸலீம் ஸ்டோர் உரிமையாளர் சொன்னார்.

 

எந்தக்காரணமும் சொல்லாமலேயே  வெளியே வெய்யில் ஏறியிருந்தது. நந்தனம் போவதற்காக மண்ணடி மெற்றோ  தொடர்வண்டி நிலையத்திற்கு சென்றேன். முன்புறம் இரும்பு பேழை  உள்ளிட்ட அறைக்கலன்களுக்கான கடைகளும்  பின்புறம் காவலர் குடியிருப்பாகவும் இருந்த பகுதி தற்சமயம் மெற்றோ நிலையத்துடன் நிழலும் கருணையுமற்ற வெட்ட வெளியாகி நிற்கின்றது.

 

எங்கோ அந்தகாரத்துக்குள் இறங்குவது போல் மூன்றடுக்காக நிலத்துக்குள் இறங்கி இறங்கி போக பாதாளத்திற்கு மாற்றாக நடைமேடைதான்  வந்தது.

 

நான் எனது கைப்பையில் வாடிக்கையாளருக்கான பண்ட சிப்பங்களை வைத்திருந்தேன். நுழைவாயிலில் நின்றிருந்த  பரிசோதனைக் காவலர் “ பைக்குள் என்ன? என்றார்.

 

பையை பிரித்துக் காட்டியவாறே ‘ தின்பண்டங்கள் “ என்றேன்.

 

“ என்ன சார்  தின்பண்டம்?”

 

மூளைக்குள் புகைந்தது.

 

“ திங்குற பண்டம்”

 

“ஓஹோ. போலாம் சார்”

 

தின்பண்டம் என இரண்டு முறை அந்த காவலாளி தனக்குத்தானே சொல்லிப்பார்த்துக் கொண்டார்.

 

நந்தனத்திலிருந்து கிட்டத்தட்ட இருபது நிமிடங்கள் நடக்க வேண்டியிருந்தது. மெற்றோ ரயிலின் குளிரெல்லாம் நந்தன வெய்யிலில்  உருகி விட்டது.

 

நான் அங்கு போய் சேரும்போது மதியம் ஒன்றே முக்கால்..அடுத்த நாள் கண்காட்சியின் இறுதி தினம். உள்ளே ஆட்களேயில்லை. வெய்யில் தணிந்தவுடன் ஓரளவு மக்கள் வந்தனர். வெளியே வழமை போல விலை ஏறிய உணவுப்பண்ட  அரங்குகள்.

 

பாரதி புத்தகாலயத்தின்  முஹம்மது சிராஜுத்தீனைக்கண்டேன். போன வருடம் நடந்ததில் பாதியளவு விற்பனை தற்போது  நடந்துள்ளது எந்றதோடு  மக்கள் வருகை குறைவாக இருப்பதற்கான மூன்று காரணங்களை சொன்னார். வழமையாக பொங்கலையொட்டி கண்காட்சி நடக்கும். அதையொட்டி கூட்டமும் வரும். மக்கள் கையில் பணமும் புழங்கும். இந்தக்கண்காட்சி நடப்பதோ மார்ச் மாதத்தில். அடுத்ததாக பெருந்தொற்று நெருக்கடியினால் வெளியூர் வாசகர்கள் வரவில்லை. மூன்றாவதாக பள்ளிக்கூடங்கள் விடுமுறை என்பதால் அந்த கொள்முதலும் நடக்கவில்லை.

 

ஆதாயமில்லாவிட்டாலும் இழப்பு வராது என்றார் பரிசல் செந்தில்நாதன்  . எதிர் பதிப்பக உரிமையாலர்  அனுஷ் “ நல்லபடியா போய்ட்டுருக்கு. விற்பனை அபாரம்” என்றார். அவரின் அரங்கில் டீ ஷர்ட் போட்ட பெரியார்  வடிவத்திற்கு முன்னர் நின்று கொண்டு இளைஞர்கள் சிலர் தற்படம் எடுத்துக் கொண்டிருந்தனர்.

 

நான் மாதாமாதம் புத்தகம் வாங்குவதால் புதியதாக பரிசல் வெளியிட்டிருந்த எம்.என்.ராயின் ஃபாஸிஸம் நூலை  மட்டும் வாங்கிக் கொண்டேன்.

 

 நேஷனல் புக் டிரஸ்ட், சாஹித்ய அகாதமி, ஒலிபரப்பு அமைச்சகத்தின் வெளியீட்டுத்துறை அரங்குளைப்பார்த்தவுடன் கை ஊறும் என்பதால் போன வேகத்தில் வெளியே வந்து விட்டேன்.

 

புதியதாக வாங்கியவை என முப்பது புத்தகங்கள் மட்டில் வாசிக்கப்படாம கிடந்தால் என்னதான் செய்வது?

 

ஆர்.எஸ்.எஸின் வெளியீட்டுப்பிரிவான விஜயபாரதம் அரங்கில் போட்ட பத்து புத்தகங்களையே மீண்டும் மீண்டும் சுற்றி சுற்றி அடுக்கியிருந்தார்கள். ஆர்.எஸ்.எஸின் மொழிப்பிரிவான சமஸ்கிருத பாரதி  அரங்கு அருகே நடந்து செல்லும்போது. அதில் ஒரு ஊறுகாய் ஆசாமி  உள்ளடக்கமாக மூன்று பேர் தங்களுக்குள் தமிழில் பேசிக்கொண்டிருந்தனர். “ ஏங்க  ஸமஸ்கிருத பாரதினு போட்டுட்டு தமிழ்ல பேசுறீங்க?” என சன்னமாக கேட்டேன். நான் சொல்வதை உடனே சமஸ்கிருதத்தில் மொழியாக்கி அங்குள்ள பெண்ணிடம்  சொன்னார் அந்தக்கடைக்கு  பொறுப்பளராக இருந்த  இளைஞர் . கால் மேல் கால் போட்டு புத்தகம் படித்துக் கொண்டிருந்த ஊறுகாயும் தன் பங்கிற்கு அசடு வழிந்தவராக தமிழையும் சமஸ்கிருதத்தையும் இணைத்து சமஸ்கிருதத்தில் ஏதோ சொன்னார்.

 

நான் பலமுறை அந்த அரங்கு பக்கம் கடக்க வேண்டி வரும்போதெல்லாம் அந்த மூவரும் தங்கள் வேலைகளை விட்டு  சமநிலை இழந்து என்னை மட்டுமே கவனிக்கத் தொடங்கினர். அன்றைக்கு பார்த்து காவிக்கு நெருக்கமான நிறத்திலிருந்த  கதர்  பைஜாமா வேறு போட்டிருந்தேன்.

 

No comments:

Post a Comment