Monday 19 April 2021

தஹ்ரீக்குல் முஜாஹிதீன் சையத் அஹ்மத் ஷஹீத் – முதல் பாகம். நூல் பார்வை

 

 

தென்னிந்தியாவில் போர்த்துக்கீசிய  டச்சு காலனியாதிக்கத்திற்கெதிரான  குஞ்ஞாலி மரைக்காயர்களின் போராட்டத் தொடர்ச்சி,  ஆங்கிலேயருக்கெதிரான ஹைதர், திப்புவின்  போராட்டம் ஆகியவை முடிவிற்கு வரும் காலகட்டத்தில் இந்திய துணைக்கண்டத்தின்  வடபுலத்தில்  அடங்க மறுத்தலின் குரலொன்று  எழுகின்றது.



 

 

அதுதான்  சையத் அஹ்மத் ஷஹீத்  ராய்பரேலியும் அவரது தஹ்ரீக்குல் முஜாஹிதீன் இயக்கமும்.

 

 

இஸ்லாம் இறைவனால் அருளப்பட்ட நெறிதான் என்பதற்கான பல அத்தாட்சிகளில் அவ்வப்போது தோன்றும் சீர்திருத்தவாதிகளும் ( முஜத்திது ) அடங்குவர்.

 

 

அவ்வகையில் வட இந்திய புலத்தில்  பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்து போராடி ரத்த சாட்சியம் பகர்ந்து நிறைந்தவர்.  இந்திய துணைக்கண்டத்தின் சீர்திருத்த முன்னோடிகளில் முதன்மையானவரான ஷாஹ் வலிய்யுல்லாஹ் தெஹ்லவீ ( ரஹ் ) அவர்களின் சரத்தில் உதித்த மலர்.

 

 

வட இந்திய முஸ்லிம் சமூகம் தங்களது எல்லா வித நன்மைகளையும் அடையாளங்களையும் தனித்துவங்களையும் சிறப்புக்களையும் இழந்த ஓர் இனக்குழுவாக முடிவின் விளிம்பில் மடிந்து போகவிருந்த   காலம்.

 

 

நிராகரிப்பின் இணை வைப்பின் ஆழியில்  மூழ்கிப்போன முஸ்லிம் சமூகம் எனும் நிலக்கண்டத்தை தன் வலிய தோள்களில் தூக்கி நிமிர்த்தியவர் சையத் அஹ்மத் ஷஹீத் .

 

 

மராத்தாக்கள், சீக்கியர்கள், பரங்கியர் என்ற ஆதிக்க ஆற்றல்களின் வாயில்பட்டு இழிந்த அடிமைகளாக வட இந்திய முஸ்லிம் சமூகம் சீரழிந்து கிடந்தது.  இத்தகைய சீரழிவுகளின் முகவர்களாக எதிரிகளின் கைக்கூலிகளாக தொழிற்பட்ட முஸ்லிம் சமூகத்திலிருந்த துரோகிகளாலும் பெரும் சிக்கல் ஏற்பட்டிருந்தது.

 

 

வல்லோன் அல்லாஹ் சையத் அஹ்மத் ஷஹீத் அவர்களின் தலைமையிலான  தஹ்ரீக்குல் முஜாஹீதீன் படையணியினரை ஜமாஅத்தினரை உருவாக்கினான். ஆன்மீக  பௌதீக அக புற வலிமை பெற்றவர்களாக வட இந்திய முஸ்லிம் சமூகத்தை நிமிர்த்தி வைத்தனர் தஹ்ரீக்குல் முஜாஹீதீன் அமைப்பினர்.

 

 

இறை நம்பிக்கையை வலுவாகப் பற்றி பிடித்ததினால் அவர்களுக்கு   உலகப்பற்றின்மை,, வீரம், உடல் , மன வலு,  நற்குணம் ,போர்க்குணம், அறம் போன்ற தேவையான உருவாக்கக் குணங்கள் பரிசளிக்கப்பட்டன..

 

 

தொழுகை, இறை வேட்டல்களின் வழியாக அவர்கள் தங்களை தொடர்ந்து வலுவேற்றிக் கொண்டார்கள். இதன் விளைவாக சீக்கியர்களின் இழிவு மிகுந்த ஆட்சியிலிருந்து அல்லாஹ் வட இந்திய முஸ்லிம் சமூகத்தை விடுவித்தான். காலத்தின் துணுக்கு மூலையில் நூலாம்படையாக மாறியிருக்க வேண்டிய வட இந்திய முஸ்லிம் சமூகத்திற்குள் உயிர்க் களை ததும்பியது.

 

 

பணத்தை  வெற்று காகிதத்தாள்களாக அவர்கள் மதித்ததினால் உலகம் அவர்களது காலடியில் நாய்க்குட்டி போல பணிந்தது. போர்க்களத்திலும் எதிரிகளிடத்திலும் அறத்தைக் கடைபிடித்ததினால் அவர்களின் கண்ணியம் குன்றென உயர்ந்து நின்றது.

 

 

 

இது போன்ற பெரும் வரலாற்று நிகழ்வுகளை சுவையான தனித்தனி துணுக்குகளாக நூலாசிரியர் கோர்த்திருக்கின்றார்.

 

 

 

இந்த நூலின் வலுவின்மை என்னவென்றால் வரலாற்று  ஓட்டத்தின் மீது ஆசிரியரின் பார்வை அதீதக் கொண்டாட்டமாக கவிழ்வது ஒரு வகை  வாசிப்பு அசௌகரியத்தை  உணர்த்திக் கொண்டேயிருக்கின்றது. சில இடங்களில் தனியாள் வழி[பாட்டின் எல்லைகளை தொட்டு தொட்டு செல்கின்றது. கதிரவனுக்கு அலங்காரம் தேவையில்லை.  சையது அஹ்மது ஷஹீத் / தஹ்ரீக்குல் முஜாஹீதீன் யினரின் வரலாற்றுக் கனமொன்றே போதும்.  

 

 

அவ்வப்போதைய தேவைக்காக மலர்ந்து மணமாகி காலத்தினுள் கரைந்து நிற்கும் எல்லா அமைப்புகளும் சமூக ஓட்டங்களும் அவற்றிற்கே உரிய  வலு, வலுவின்மை, போதாமைகளைக் கொண்டிருக்கும். இறைவனிடமிருந்து வஹீயை பெற்றுக் கொண்டிருந்த சமூகங்களின் எழுச்சி வீழ்ச்சியை இறைவன் காலத்தால் பிந்திய  நமக்கு பயன்படக்கூடிய  ஆய்வாகவும் படிப்பினையாகவும் இருக்கும் விதத்தில் குர்ஆனில் பதிந்து வைத்திருக்கின்றான். பின்னர்  வரும் சமூகம் அந்த வரலாற்று ஓட்டத்தை  பகுப்பாய்வு சல்லடைக்குள் சலித்துப் பார்ப்பது என்பது  மறுக்க முடியாத தேவையாகும். 

 

 

தனது குடிமக்களை அற்ப புழுக்களாக உருமாற்றிக் கொண்டிருக்கும் இன்றைய இருண்ட இந்தியாவிற்குள் துணிவையும் நம்பிக்கையையும் விதைக்கும் நூல்.  இஸ்லாமிய களச் செயற்பாட்டாளர்கள் தவிர்க்கக் கூடாதொரு ஆவணம்.

-------------------------------------  


நூல்:  சையத் அஹ்மத் ஷஹீத்  தஹ்ரீக்குல் முஜாஹிதீன் – முதல் பாகம்

ஆசிரியர் :  சையத் அப்துர்ரஹ்மான் உமரி

 

 

வெளியீடு

 

மர்ய,ம் பப்ளிகேஷன்ஸ்

26. காவேரி நகர் இரண்டாம் தெரு

குனியமுத்தூர்

கோயம்புத்தூர்—641008

செல்: 7871611173.

1 comment:

  1. வரலாறு படிப்போம், வரலாறு படைப்போம் இன்ஷாஅல்லாஹ்

    ReplyDelete