Friday 16 April 2021

உண்ண மறுத்த குதிரை

 


எனது பேத்தி உம்முல் ஹைரிய்யாவிற்கு அவளது வாப்பா மின்கலனில் இயங்கும்  குதிரையொன்றை வாங்கி வந்துள்ளார்.  செவிகளில் உள்ள விசையை அழுத்தினால் வாலை மேலுங்கீழுமாக ஆட்டிக் கொண்டே அது பாடும். தன் குரலில் அல்ல, மனிதர்களின் குரலில்தான்.

 

தொடக்கத்தில் அதன் மீது ஏறி ஆடிக் கொண்டிருந்த பேத்தி இப்போது தன் விளையாட்டுப்பாணியை கொஞ்சம் மாற்றியுள்ளாள். பக்கவாட்டு சேணத்தில் ஒரு காலை வைத்துக் கொண்டே குதிரை ஓட்டப்படும். பிறகு இறங்கி அசையும் அதன் வாலை திருகுவாள். கொஞ்ச நேரம் திகைத்து நிற்கும் வால் மீண்டும் அசையும். அதன் முன்பக்கம் வந்து அதன் வாயில் ஒரு முத்தம் கொடுத்து கொஞ்சுவாள். மகிழ்ந்தவாறே அதை பார்த்துக் கொண்டிருப்பாள்.

 

இவளின் இந்தக் கூத்துகளை நான் அருகில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.  விளையாடிக்கொண்டிருந்தவள் எழும்பி பின்புறம் உள்ள நிலைப்பேழையை திறந்து நொறுவை ( சிறுகடி ) அடங்கிய தகர கலனொன்றை எடுத்து என்னருகில் வைத்தாள். எனக்கொன்றும் புரியவில்லை. நான் சும்மா இருக்கவும் அதை எடுத்துக் கொண்டு அவளின் சின்ன கண்ணும்மாவிடம் எடுத்துக் கொண்டு வைத்தாள். அவள் அதன் மூடியைத்  திறந்து பேத்தியின் கையில் கொடுத்தாள்.  கலனிற்குள்  கை விட்டு மாரி பிஸ்கிட் இரண்டை எடுத்தவள் திறந்திருந்த குதிரையின் வாயில் கொண்டு வைத்தாள். அது தின்னும் சாடை போல தெரியவில்லை. பிஸ்கட்டை இரண்டாக ஒடித்து மீண்டும் அதன் வாயில் திணித்தாள்.. ம்ஹூம். குதிரை கல் மரம்தான்.

 

மீண்டும் பிஸ்கட்டை பல துண்டுகளாக உடைத்து எனது வாயில் கொண்டு வைத்தாள். குதிரையைப்போல கட்டை மரமாக மறுக்காமல் நான் தின்று விட்டேன்.

 

குழந்தைமைக்குள்  அப்பாவும் மரக்குதிரையும் மட்டுமல்ல. எல்லாமே ஒன்றுதான்.

No comments:

Post a Comment